Wednesday, May 3, 2017

கரூர் குஸ்தி... மருத்துவக் கல்லூரி மல்லுக்கட்டு!
துரை.வேம்பையன்


‘‘எனக்கு நல்ல பேர் கிடைத்துவிடும் என தம்பிதுரையும் விஜயபாஸ்கரும் அஞ்சுகிறார்கள்’’ - செந்தில்பாலாஜி

‘‘நிலத்தின் ரேட்டை ராக்கெட் வேகத்தில் ஏற்றுவதுதான் செந்தில்பாலாஜியின் திட்டம்’’ - விஜயபாஸ்கர்

‘கரூர் அரசு மருத்துவக் கல்லூரியை எங்கே அமைப்பது?’ என்பதில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் இந்நாள் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் நடக்கும் மல்லுக்கட்டு யுத்தத்தில் மாவுக்கட்டு போடாததுதான் குறை. இந்த கரூர் குஸ்தி, ஆளுங்கட்சியின் கோஷ்டிப் பூசலை அப்பட்டமாக்கியிருக்கிறது.

அரசின் முடிவை எதிர்த்து ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வே கோதாவில் குதித்திருக்கிறார். ‘குப்புச்சிப்பாளையத்தில் மருத்துவக் கல்லூரி அமைய வேண்டும்’ என உயர் நீதிமன்றம் வரை போய் உண்ணாவிரதத்துக்கு அனுமதி வாங்கியிருக்கும் அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ செந்தில்பாலாஜியிடம் பேசினோம்.



“நான் அமைச்சராக இருந்தபோது, 12.8.2014 அன்று கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க அறிவிப்பு வெளியிட்டார் அம்மா. மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை கொண்டுவர முயற்சி செய்தேன். குப்புச்சிப்பாளையத்தில் அமைக்க, 25 ஏக்கர் நிலமும் பெறப்பட்டு 229.46 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்து, அடிக்கல்லும் நாட்டினார் அம்மா. இந்தச் சமயத்தில் அறிவிக்கப்பட்ட புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு திறப்பு விழாவே நடத்திவிட்டார்கள். ஆனால், கரூரில் இதுவரை பணிகள் தொடங்கவில்லை. இதற்குக் காரணம் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும்தான். குப்புச்சிப்பாளையத்தில் இருந்து காந்தி கிராமம் அருகே உள்ள சணப்பிரட்டிக்கு திட்டத்தை மாற்றிவிட்டார்கள். அந்த இடத்தின் பரப்பு, 15 ஏக்கர்தான். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க குறைந்தபட்சம் 25 ஏக்கர் நிலம் வேண்டும். அதோடு, சணப்பிரட்டி இடம் நகராட்சிக்கு சொந்தமானது. கரூர் நகர பாதாள சாக்கடை திட்டத்துக்காக உள்ள இடம். அங்கே போய்வர சரியான போக்குவரத்து வசதியும் இல்லை. அதனால், அங்கே இது அமைவதை யாருமே விரும்பவில்லை. மாவட்டம் முழுக்க உள்ள அனைத்துப் பகுதிகளில் இருந்தும் நோயாளிகள் வந்துபோக ஏற்றது, குப்புச்சிப்பாளையம்தான்.

இது குப்புச்சிப்பாளையத்தில் அமைந்தால், எனக்கு நல்ல பேர் கிடைத்துவிடும் என்பதால்தான் அவர்கள் இடத்தை மாற்றத் துடிக்கிறார்கள். தம்பிதுரை, விஜயபாஸ்கர் ஆகியோரின் மக்கள் விரோதப்போக்கை மக்களிடம் அம்பலப்படுத்துவோம்” என்றார் ஆவேசமாக.

போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் என்ன சொல்கிறார்? அவரிடம் பேசினோம். ‘‘கரூரில் உள்ள மக்கள், வர்த்தகர் சங்கம் என யாரிடம் வேண்டுமானாலும் கேளுங்கள். ஒருவராவது, ‘குப்புச்சிப்பாளையத்தில் அமைக்கணும்’ எனச் சொன்னால்... நாங்கள் ஒதுங்கிக்கொள்கிறோம். கரூர் நகர மக்களுககு மட்டுமில்லை... செந்தில்பாலாஜியின் அரவக்குறிச்சி தொகுதி மக்களுக்கும், மருத்துவமனைக்கு வந்துபோக சணப்பிரட்டிதான் வசதி. குப்புச்சிப்பாளையம், கரூர் நகரத்தில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தூரம். சரியான போக்குவரத்து வசதிகளும் இல்லை.

அவர் கொண்டுவந்த திட்டம் என்பதால், தவறான இடத்தில் அமைக்கத் துடிக்கும் அவரின் செயலை இப்போது அமைச்சராக இருக்கும் நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. அம்மா அடிக்கல் நாட்டியபோதே, செந்தில்பாலாஜியின் சுயநலம் புரிந்து, சணப்பிரட்டிக்கு திட்டத்தை மாற்றினார்கள். ஆனால், அந்த உண்மையை அவர் மறைக்கப் பார்க்கிறார். இப்போது உள்ள அரசியல் அசாதாரண சூழலைப் பயன்படுத்தி, ஆட்சியில் இருப்பவர்களை மிரட்டி, தான் நினைத்த காரியத்தை அடையத் துடிக்கிறார். சுயநலத்துக்காக மக்களுக்குச் சிரமம் தரக்கூடிய இடத்தில் அமைக்க நினைப்பதை, மனசாட்சியுள்ள நாங்கள் எப்படி பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியும்?

குப்புச்சிப்பாளையம் அருகேதான் அவரின் சொந்த ஊரான ராமேஸ்வரப்பட்டி இருக்கிறது. அங்கே அவரும், அவருக்கு வேண்டியவர்களும், தி.மு.க-வினர் சிலரும் பல ஏக்கர் நிலங்களை வாங்கிப் போட்டிருக்கிறார்கள். அவற்றின் ரேட்டை ராக்கெட் வேகத்தில் ஏற்றத்தான், அங்கே மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அமைக்கத் துடிக்கிறார்கள். அவரின் இந்த விபரீத எண்ணம் புரியாமல், அவருடன் உண்ணாவிரதம் இருக்க முயன்ற முன்னாள் எம்.எல்.ஏ சுப்ரமணியன் உள்ளிட்ட பலரும் இப்போது செந்தில்பாலாஜியின் கபட நாடகத்தைப் புரிந்துகொண்டு, ஒதுங்கிவிட்டார்கள். அண்ணன் தம்பிதுரை பெயரையும் இதில் இழுத்து, தேவையில்லாமல் அரசியல் செய்கிறார் செந்தில்பாலாஜி. தலையால் தண்ணீர் குடித்தாலும், செந்தில்பாலாஜி நினைக்கிற, மக்கள் விரும்பாத குப்புச்சிப்பாளையத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைய ஒருபோதும் விடமாட்டோம்” என்றார் அமைச்சர் அதிரடியாக!

- துரை.வேம்பையன்
படங்கள்: நா.ராஜமுருகன்
மணமகன் வைத்த செக்! திருப்பியடித்த மணமகள்! 

ராகினி ஆத்ம வெண்டி மு.

மணமகளின் கல்வித் தகுதியை சோதிக்க மணமகன் நடத்திய தேர்வில் அவரே ஃபெயில் ஆன கதையை கேட்டதுண்டா?




உத்தரப்பிரதேச மாநிலம் மணிப்பூரி கிராமத்தில் பெற்றோர்கள் நிச்சயித்த திருமணத்தில் இந்த அட்ராசிட்டி அரங்கேறியுள்ளது. நம்ம மாப்பிள்ளை +2 வரையில் படித்தவர். ஆனால், கல்யாணப் பொண்ணு வெறும் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்பதால் மாப்பிள்ளை வீட்டு அதிகாரம் கொஞ்சம் தூக்கலாகவே இருந்துள்ளது.

அதே அதிகாரத்துடன் மணமகளுக்கு எழுத படிக்க வருமா என மணமகன் ஒரு சின்ன ஹிந்தி டெஸ்ட் நடத்தியுள்ளார். இதில், நூற்றுக்கு நூறு பெற்று மணமகள் பாஸாக, போனால் போகிறது என திருமணத்துக்கு ஓகே சொல்லியுள்ளார் மணமகன்.

அடுத்து இதே டெஸ்ட் மணமகனுக்கும் நடத்த வேண்டுமென கல்யாணப்பொண்ணு திருப்பியடிக்க, இந்த ட்விஸ்ட்டை சற்றும் எதிர்பார்க்காத மணமகன் கொஞ்சம் ஜெர்க் ஆனாலும் பரிட்சைக்கு சம்மதம் தெரிவித்தார். ஹிந்தியில் ஐந்தே ஐந்து வார்த்தைகளுக்கு ‘ஸ்பெல்லிங்’ டெஸ்ட் வைத்தார் மணமகள்.

பாஸ் மார்க்காவது எடுத்துவிடுவார் என சுற்றமும் நட்பும் காத்திருந்தனர். ஆனால், திருமண வீட்டார் சற்றும் எதிர்பார்க்காதவாறு மாப்பிள்ளை 'பிரகஸ்பதி' எடுத்த மதிப்பெண் என்ன தெரியுமா... ‘பூஜ்ஜியம்’. அடுத்து என்ன, இரு வீட்டாரும் எவ்வளவோ சமாதானங்கள் கூறினாலும், மாப்பிள்ளைக்கு ‘கெட் அவுட்’ சொல்லிவிட்டார் அந்த 'கெத்து' மணப்பெண்.

நாட்டிலேயே முதன்முறையாக, வெளிமாநிலப் பணியாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு : கேரள அரசு முடிவு!


பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், பலர் தங்களது சொந்த ஊரை விட்டுவிட்டு, வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில்தான் பணிபுரிந்துவருகின்றனர். பொதுவாக, மாநில அரசுகளின் காப்பீடு என்பது, அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே என இருந்துவருகிறது. இந்த நிலையில், நாட்டிலேயே முதல்முறையாக, கேரளாவில் பணிபுரியும் வெளி மாநிலத்தவர்களுக்கும் காப்பீட்டுத் திட்டத்தை, அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

Kerala Goverment


கேரளாவில், சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளி மாநிலத்தவர்கள் பணிபுரிந்துவருகின்றனர். அதன்படி, அங்கு குறிப்பிடப்பட்ட சில மருத்துவமனைகளில் ரூ.15,000 வரை மருத்துவ சிகிச்சை பெறும் காப்பீட்டுத் திட்டத்தை, மாநில அரசு கொண்டுவர உள்ளது. அதேபோல, விபத்துகளில் உயிரிழக்கும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு, தலா ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்கவும் திட்டமிட்டுள்ளது.

கேரள அரசு இதற்காக, 10 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. விரைவில் இந்தத் திட்டம் அமலுக்கு வர உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், கேரளாவில் பணிபுரியும் வெளி மாநிலத்தவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நோக்கியாவின் ஆண்ட்ராய்டு போன்கள், ஜூன் மாதம் ரிலீஸ்! 

இரா. குருபிரசாத்

இந்தியாவில், ரீ-என்ட்ரி கொடுக்கும் பணியில் நோக்கியா நிறுவனம் தற்போது பிஸியாகியுள்ளது. குறிப்பாக, இந்த முறை ஆண்ட்ராய்டுடன் என்ட்ரி ஆவதால், எதிர்பார்ப்புகள் ஏகத்துக்கும் எகிறியுள்ளன. இந்த நிலையில், சீனாவில் நோக்கியா 6 ஆண்ட்ராய்டு போன்களின் விற்பனை, ஆன்லைனில் நொடிப் பொழுதில் விற்றுத் தீர்ந்தன. இதையடுத்து, இந்தியாவில் நோக்கியா எப்போது ரிலீஸ் ஆகும்? என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஒரு குட் நியூஸ்!






வரும் ஜூன் மாதம், நோக்கியா ஆண்டராய்டு போன்கள் இந்தியாவில் வெளியாக உள்ளன. நோக்கியா 6, நோக்கியா 5, நோக்கியா 3 ஆகிய மூன்று ஆண்டராய்டு போன்களும், ஜூனில்தான் ரிலீஸ் ஆகின்றன. அதேபோல நோக்கியாவின் லெஜென்ட் போன் மாடலான 3310 போனும், ஜூனில் என்ட்ரி கொடுக்கிறது.

குறிப்பாக, சில மாற்றங்களுடன் 3310 வெளியாக உள்ளது. இந்திய மதிப்பில் நோக்கியா 3 போன் ரூ.12,400, நோக்கியா 6 போன் ரூ.19,000, நோக்கியா 5 போன் ரூ. 15,700-க்கு விற்பனைக்கு வர உள்ளன. அதேபோல 3310 போன், 4,900 ரூபாய்க்கு விற்பனைக்கு வர உள்ளதாகக் கூறப்படுகிறது.

#Alert - சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திரம், வருகின்ற 4-ம் தேதி துவங்குகிறது! 

இரா. குருபிரசாத்

பருவமழை பொய்த்ததால், இந்தியா முழுவதும் இந்தாண்டு கடுமையான வறட்சி நிலவுகிறது. குறிப்பாக, தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும், வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் மழை இல்லாததால், தமிழகத்தில், இந்தாண்டு கடந்த ஜனவரி மாதம் முதலே கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது.

குறிப்பாக, கடந்த மாதம் முதல் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், வேலூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் 100 பாரன்ஹீட்டுக்கும் மேலாக வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். வெப்பச்சலனம் காரணமாக, நேற்று கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்தது.



ஆனாலும் சென்னை, நெல்லை, சேலம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான வெயில் நிலவியது. அதேபோல் வட மாநிலங்களிலும் கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில், கத்தரி வெயில் என்று கூறப்படும் அக்னி நட்சத்திரம் வருகின்ற 4-ம் தேதி (நாளை மறுநாள்) துவங்குகிறது. இதற்கிடையே, வருகின்ற 7-ம் தேதி வரை, தமிழகத்தில் இதே நிலை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘கூல்ட்ரிங்ஸ் குடிக்கும்போதெல்லாம் அந்த ஞாபகம்தானே வரும்..!’ - வடிவேலுவின் வெயில் காமெடிகள்

விக்னேஷ் சி செல்வராஜ்


கத்திரி வெயில் அதிகாரப்பூர்வமா ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே வெயில் கொளுத்த ஆரம்பிச்சிடுச்சு. வீட்டை விட்டு வெளியே போனால், திரும்பி வரும்போது மெரினா பீச்ல இருக்கிற கண்ணகி சிலை கலருக்கு மாறிடுவோம் போல... அப்படி இருக்கு வானிலை. அப்படித் தகிக்கும் இந்தக் கோடையை கொஞ்சம் சுமூகமாகக் கடக்க இந்த வடிவேலு, கவுண்டமணி, செந்தில் போன்ற மகான்கள் நமக்குத் துணையாக இருப்பார்கள். கோடை வெயிலுக்கு இதமாக இந்த சம்மர் ஸ்பெஷல் காமெடிகள் சிலவற்றைப் பார்க்கலாம்...



ஷ்ஷப்பா... என்னா வெயிலு

பார்த்திபன், முரளி ஆகியோர் நடித்த 'வெற்றிக்கொடி கட்டு' திரைப்படத்தில் வடிவேலுவின் காமெடி டிராக் அசத்தலாக இருக்கும். குடும்பச் சுமைகளைக் குறைப்பதற்காக வெளிநாட்டு வேலைக்குச் செல்ல நினைத்தவர்கள் ஏஜென்ட்களால் ஏமாற்றப்பட, பார்த்திபன் வீட்டுக்கு முரளியும், முரளி வீட்டுக்குப் பார்த்திபனும் மாற்றி மாற்றி உதவுவதற்காகச் செல்வார்கள். பார்த்திபன் சென்ற முரளி ஊரில்தான் நம்ம வைகைப்புயலின் என்ட்ரி. துபாய் ரிட்டர்ன் மைனராக சில்க் ஜிப்பா போட்டு ஊர்க்காரர்களை என்டர்டெயின் செய்வார். அவர் பார்த்திபனிடம் சிக்கிக்கொண்டு சின்னாபின்னமாகும் காட்சிகள் நகைச்சுவைக்கு கியாரண்டி. பெஞ்சமினிடம் மாட்டிக்கொண்ட பின்னர், தூரத்தில் பார்த்திபனைப் பார்த்ததும் துணிமணிகளை எல்லாம் கழற்றிவீசிவிட்டு வந்த பாதையிலேயே திரும்பவும் ஓடிப்போய் பஸ்ஸில் ஏறிக் கிளம்பும் காட்சிகள் எல்லாம் அதகளம்தான். #வெயிலுக்கு காட்டன் சட்டை போடணும்!

வீடு பத்தி எரிஞ்சா பயர் சர்வீஸு... வயிறு பத்தி எரிஞ்சா எளநி சர்வீஸு..!

கவுண்டமணி - செந்தில் - வடிவேலு என நகைச்சுவை மும்மூர்த்திகளும் இணைந்து நடித்த 'கோயில்காளை' படம் கோடைகால காமெடிக்கு இன்னுமொரு உதாரணம். வெயில்காலத்தில், சூரியன் நம் தலையில் ஸ்ட்ரா போட்டு நீரை உறிஞ்ச, ஜில்லுனு எதையாவது குடிச்சாதான் சூடு தணியும். கோடைகாலத்தில் சூரியனின் இம்சையைக் குறைத்து வெயிலுக்கு ஈடுகொடுக்க இளநீர்க்கடை போடுவார் கவுண்டமணி. குலைகுலையாய் இளநீரை இறக்கி, மரத்தடியில் போட்டு விற்பார்கள். அந்தக் காட்சியில்தான், தன்னிடம் சிக்கிக்கொண்ட ஒருவரிடம், 'அவன் அவன் ஒன்னுக்கு வரலைன்னு வருத்தப்படுறான். இவனுக்கு எளநியில தண்ணி வரலையாம்' எனும் அரும்பெரும் தத்துவத்தைச் சொல்வார் கவுண்டமணி. அப்புறம் செந்திலும், வடிவேலும் கூட்டுச்சதித் திட்டம் தீட்டி கயிறு போட்டுக் கவுண்டமணியில் இளநீரைத் திருடி சீப் ரேட்டுக்கு விற்று, மாட்டிக் கொள்வார்கள். 'தண்ணி இல்லாம பின்னே... எளநியில என்ன தயிரா இருக்கும்..?', 'நாங்க மட்டும் என்ன எளநிய ஆலமரத்துல இருந்தா புடுங்குறோம்..?' போன்ற நினைத்தாலே குலுங்கிச் சிரிக்கவைக்கும் வசனங்களும் இந்தப் படத்தில் இருப்பவை. அந்தக் காட்சியை கீழே பார்க்கலாம்.

பச்சைல ஒரு எளநி... செகப்புல ஒரு எளநி சாம்பிள் கொடு

வெயிலில் அலைந்து திரியும் வடிவேலுவுக்கு ரோட்டோரத்தில் அல்வா வாசுவின் எளநிக்கடையைப் பார்த்ததும் உச்சி குளிரும். ஆனால், அஞ்சு ரூபாய் மட்டுமே சட்டையின் உள்பாக்கெட்டில் வைத்திருப்பவருக்கு 'அவன் என்ன விலை சொன்னா நமக்கென்ன... நம்ம விலைக்கு அவனைக் கொண்டு வந்துருவோம்...' எனக் கங்கணம் கட்டிக்கொண்டு பேச்சுவார்த்தையில் குதிப்பார். அரிசிக்கடையில் ஏப்பம் விட்ட பழக்கத்தில் வழக்கம்போல இங்கேயும் நம்ம ஆள் எளநி சாம்பிள் கேட்க, அரிவாளை ஓங்குவார் அல்வா வாசு. அப்புறம் வடிவேலு வாயாலேயே வியாபாரத்தை முடித்து ஓசியிலேயே எளநியையும் குடித்து விடுவார். அப்போது அவர் சொன்ன அட்ரஸை தான் இன்னும் இளநீர்க்கடை வாசு தேடிக் கொண்டிருக்கிறாராம். தென்னந்தோப்பு, வத்தலகுண்டு, வாடிப்பட்டி ரோடு, வாணியம்பாடி தெரு, சென்னை-13, சேலம் - 21.

கூல்ட்ரிங்ஸ் குடிக்கும்போதெல்லாம் அந்த ஞாபகம்தானே வரும்..!

கோடைகாலத்துக்கும் சோடாவுக்கும் எக்கச்சக்கத் தொடர்புகள் உண்டு. வெயிலுக்கு ஆற்றமாட்டாமல் கூல்ட்ரிங்ஸ் கடைக்குப்போன வடிவேலுவுக்கும், பின்னாட்களில் அரசியல் களத்தில் வைகைப்புயலை வறுத்தெடுத்த சிங்கமுத்துவுக்கும் பகையை மூட்டியதில் இந்த கூல்ட்ரிங்ஸ் கடை ஓனருக்கும், கடைக்கு முன்னால் இருந்த குப்பைத்தொட்டிக்கும் ரொம்பவே பங்கு உண்டு. ஒரு மிடறு கூல்ட்ரிங்க்ஸ் குடித்தவர், அதை வைத்துவிட்டு விஷாலுக்கு போன் போட்டு விபரம் சொல்வதற்குள் கூல்ட்ரிங் பாட்டில் காணாமல் போயிருக்கும். அதேநேரம், சிங்கமுத்து அதே போன்ற பாட்டிலை எடுத்து வாயில் கவிழ்த்துக் கொண்டிருப்பார். அது தான் வாங்கி வைத்திருந்த பாட்டில் என நினைத்து வடிவேலு வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிவிட, அப்புறம் தான் தெரிய அந்த கூல்ட்ரிங்ஸ் பாட்டில் கை தவறிக் குப்பைத் தொட்டிக்குள் விழுந்து கிடப்பது தெரியவரும். பிறகு, பேசிய பேச்சுக்குக் கிடைத்த பின்விளைவு இன்னும் மோசம்... ஷ்ஷப்பா..! என்னா வெயிலு..?
10 ஆயிரம் அமெரிக்கர்களைப் பணிக்கு எடுக்கிறது இன்ஃபோசிஸ்! ஏன்?

எம்.குமரேசன்


இந்தியாவில் உள்ள இன்ஃபோசிஸ் நிறுவனம், இரண்டு ஆண்டுகளில் 10 ஆயிரம் அமெரிக்கர்களைப் பணிக்கு அமர்த்துகிறது.



`ஹெச் 1பி விசா' எண்ணிக்கையை அமெரிக்கா குறைத்ததையடுத்து, இந்திய நிறுவனங்களுக்கு இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய ஐ.டி நிறுவனங்களின் 60 சதவிகித வாடிக்கையாளர்கள், வட அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் . ஐரோப்பிய நாடுகளில் 20 சதவிகித வாடிக்கையாளர்களும் மற்ற நாடுகளில் 20 சதவிகித வாடிக்கையாளர்களும் உள்ளனர். சுமார் 150 பில்லியன் டாலர் அளவில் டர்ன்ஓவர் கொண்ட இந்திய ஐ.டி நிறுவனங்கள், வெளிநாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்காக, இங்கு இருந்து ஐ.டி ஊழியர்களை அனுப்புவதை வழக்கமாகக்கொண்டிருக்கின்றன. இந்திய ஐ.டி நிபுணர்கள் ஆயிரக்கணக்கானோர், வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர்.

இந்திய ஐ.டி துறைக்குச் சரிவை ஏற்படுத்தும் வகையில், ஹெச்.பி-1 விசா எண்ணிக்கையைக் குறைத்தது அமெரிக்க அரசு. இதனால், இந்திய ஐ.டி நிபுணர்கள் அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று பணிபுரியும் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகள்கூட இந்திய ஐ.டி நிபுணர்களுக்கு விசா வழங்குவதைக் குறைக்கத் தொடங்கிவிட்டன. இதன் எதிரொலியாக, 'விப்ரோ' போன்ற பெரிய நிறுவனங்கள்கூட சுமார் 600 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.

இந்த நெருக்கடியைச் சமாளிக்க, இன்ஃபோசிஸ் நிறுவனம் வேறு வழிகளைப் பின்பற்ற முடிவுசெய்துள்ளது. வழக்கமாக, க்ளையன்ட் சர்வீஸ் செய்ய இந்தியர்கள் அமெரிக்கா செல்லும் முறையைத் தவிர்க்கும் முடிவுதான் அது. அதற்குப் பதிலாக, அந்தப் பணியைச் செய்ய அமெரிக்க ஐ.டி நிபுணர்களையே பணிக்கு எடுக்க முடிவுசெய்துள்ளது. மொத்தம் 10 ஆயிரம் அமெரிக்கப் பணியாளர்களை இன்ஃபோசிஸ் நிறுவனம் பணிக்கு அமர்த்தப்போகிறது. இவர்களையே financial services, manufacturing, healthcare, retail and energy போன்ற பிரிவுகளில் பணியாற்றவைக்கவும் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக, இண்டியானாவில் இன்ஃபோசிஸ் முதல் தொழில்நுட்ப மையத்தை அமைக்கிறது. மேலும், மூன்று நகரங்களில் விரைவில் தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இரு மாதங்களுக்கு முன்பு `இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி போன்ற நிறுவனங்கள், ஹெச் 1 பி விசா பெறுவதில் முறைகேட்டில் ஈடுபடுகின்றன' என அமெரிக்கா குற்றம்சாட்டியது. மேலும், `லாட்டரி முறையில் அதிக ஹெச்1 பி விசாக்களைப் பெறும்வகையில், அதிக விண்ணப்பங்களை அனுப்புகிறது' எனவும் அமெரிக்கா குறை கூறியிருந்தது. ஒவ்வோர் ஆண்டும் 85 ஆயிரம் ஹெச் 1 பி விசாக்களை இந்தியாவுக்கு ஒதுக்குகிறது அமெரிக்கா. இதில் 65 ஆயிரம் விசாக்கள் ஐ.டி ஊழியர்களுக்கும், அமெரிக்காவில் உயர்கல்வி பயின்றவர்களுக்கு 20 ஆயிரம் விசாக்களும் வழங்கப்படுகின்றன. 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை, இன்ஃபோசிஸ், டாடா நிறுவனங்கள் சேர்ந்து 7,504 ஹெச் 1 பி விசாக்களைப் பெற்றிருக்கின்றன. மொத்த விசாக்களில் இது 8.8 சதவிகிதம்.

இதுகுறித்து இன்ஃபோசிஸ் தலைமைச் செயல் அதிகாரி விஷால் சிக்கா கூறுகையில், ''அமெரிக்கர்களுக்குப் பணி வழங்க, இண்டியானாவில் ஆகஸ்ட் மாதம் முதல் தொழில்நுட்ப மையம் செயல்படத் தொடங்குகிறது. ஐ.டி. தொழில்நுட்பத்தை, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லவேண்டியக் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். சர்வதேச வல்லுநர்களுடன் மண்ணின் மைந்தர்களும் இணைந்து பணியாற்றுவது வர்த்தகரீதியில் ஆரோக்கியமான விஷயம்'' எனத் தெரிவித்துள்ளார்.

  இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக விஷால் சிக்கா பொறுப்பேற்ற பிறகு, கடந்த இரு ஆண்டுகளில் ஏற்கெனவே இரண்டு ஆயிரம் அமெரிக்கர்களைப் பணிக்கு எடுத்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் உள்ள 2,500 கல்வி மையங்களில் 1,34,000 மாணவர்களுக்கும் 2,500 ஆசிரியர்களுக்கும் இன்ஃபோசிஸ் அறக்கட்டளை பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.

Dismissal from service should be reserved for grave misconduct: SC

Dismissal from service should be reserved for grave misconduct: SC The Supreme Court ruled that dismissal from service should be imposed on...