Wednesday, May 3, 2017

‘கூல்ட்ரிங்ஸ் குடிக்கும்போதெல்லாம் அந்த ஞாபகம்தானே வரும்..!’ - வடிவேலுவின் வெயில் காமெடிகள்

விக்னேஷ் சி செல்வராஜ்


கத்திரி வெயில் அதிகாரப்பூர்வமா ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே வெயில் கொளுத்த ஆரம்பிச்சிடுச்சு. வீட்டை விட்டு வெளியே போனால், திரும்பி வரும்போது மெரினா பீச்ல இருக்கிற கண்ணகி சிலை கலருக்கு மாறிடுவோம் போல... அப்படி இருக்கு வானிலை. அப்படித் தகிக்கும் இந்தக் கோடையை கொஞ்சம் சுமூகமாகக் கடக்க இந்த வடிவேலு, கவுண்டமணி, செந்தில் போன்ற மகான்கள் நமக்குத் துணையாக இருப்பார்கள். கோடை வெயிலுக்கு இதமாக இந்த சம்மர் ஸ்பெஷல் காமெடிகள் சிலவற்றைப் பார்க்கலாம்...



ஷ்ஷப்பா... என்னா வெயிலு

பார்த்திபன், முரளி ஆகியோர் நடித்த 'வெற்றிக்கொடி கட்டு' திரைப்படத்தில் வடிவேலுவின் காமெடி டிராக் அசத்தலாக இருக்கும். குடும்பச் சுமைகளைக் குறைப்பதற்காக வெளிநாட்டு வேலைக்குச் செல்ல நினைத்தவர்கள் ஏஜென்ட்களால் ஏமாற்றப்பட, பார்த்திபன் வீட்டுக்கு முரளியும், முரளி வீட்டுக்குப் பார்த்திபனும் மாற்றி மாற்றி உதவுவதற்காகச் செல்வார்கள். பார்த்திபன் சென்ற முரளி ஊரில்தான் நம்ம வைகைப்புயலின் என்ட்ரி. துபாய் ரிட்டர்ன் மைனராக சில்க் ஜிப்பா போட்டு ஊர்க்காரர்களை என்டர்டெயின் செய்வார். அவர் பார்த்திபனிடம் சிக்கிக்கொண்டு சின்னாபின்னமாகும் காட்சிகள் நகைச்சுவைக்கு கியாரண்டி. பெஞ்சமினிடம் மாட்டிக்கொண்ட பின்னர், தூரத்தில் பார்த்திபனைப் பார்த்ததும் துணிமணிகளை எல்லாம் கழற்றிவீசிவிட்டு வந்த பாதையிலேயே திரும்பவும் ஓடிப்போய் பஸ்ஸில் ஏறிக் கிளம்பும் காட்சிகள் எல்லாம் அதகளம்தான். #வெயிலுக்கு காட்டன் சட்டை போடணும்!

வீடு பத்தி எரிஞ்சா பயர் சர்வீஸு... வயிறு பத்தி எரிஞ்சா எளநி சர்வீஸு..!

கவுண்டமணி - செந்தில் - வடிவேலு என நகைச்சுவை மும்மூர்த்திகளும் இணைந்து நடித்த 'கோயில்காளை' படம் கோடைகால காமெடிக்கு இன்னுமொரு உதாரணம். வெயில்காலத்தில், சூரியன் நம் தலையில் ஸ்ட்ரா போட்டு நீரை உறிஞ்ச, ஜில்லுனு எதையாவது குடிச்சாதான் சூடு தணியும். கோடைகாலத்தில் சூரியனின் இம்சையைக் குறைத்து வெயிலுக்கு ஈடுகொடுக்க இளநீர்க்கடை போடுவார் கவுண்டமணி. குலைகுலையாய் இளநீரை இறக்கி, மரத்தடியில் போட்டு விற்பார்கள். அந்தக் காட்சியில்தான், தன்னிடம் சிக்கிக்கொண்ட ஒருவரிடம், 'அவன் அவன் ஒன்னுக்கு வரலைன்னு வருத்தப்படுறான். இவனுக்கு எளநியில தண்ணி வரலையாம்' எனும் அரும்பெரும் தத்துவத்தைச் சொல்வார் கவுண்டமணி. அப்புறம் செந்திலும், வடிவேலும் கூட்டுச்சதித் திட்டம் தீட்டி கயிறு போட்டுக் கவுண்டமணியில் இளநீரைத் திருடி சீப் ரேட்டுக்கு விற்று, மாட்டிக் கொள்வார்கள். 'தண்ணி இல்லாம பின்னே... எளநியில என்ன தயிரா இருக்கும்..?', 'நாங்க மட்டும் என்ன எளநிய ஆலமரத்துல இருந்தா புடுங்குறோம்..?' போன்ற நினைத்தாலே குலுங்கிச் சிரிக்கவைக்கும் வசனங்களும் இந்தப் படத்தில் இருப்பவை. அந்தக் காட்சியை கீழே பார்க்கலாம்.

பச்சைல ஒரு எளநி... செகப்புல ஒரு எளநி சாம்பிள் கொடு

வெயிலில் அலைந்து திரியும் வடிவேலுவுக்கு ரோட்டோரத்தில் அல்வா வாசுவின் எளநிக்கடையைப் பார்த்ததும் உச்சி குளிரும். ஆனால், அஞ்சு ரூபாய் மட்டுமே சட்டையின் உள்பாக்கெட்டில் வைத்திருப்பவருக்கு 'அவன் என்ன விலை சொன்னா நமக்கென்ன... நம்ம விலைக்கு அவனைக் கொண்டு வந்துருவோம்...' எனக் கங்கணம் கட்டிக்கொண்டு பேச்சுவார்த்தையில் குதிப்பார். அரிசிக்கடையில் ஏப்பம் விட்ட பழக்கத்தில் வழக்கம்போல இங்கேயும் நம்ம ஆள் எளநி சாம்பிள் கேட்க, அரிவாளை ஓங்குவார் அல்வா வாசு. அப்புறம் வடிவேலு வாயாலேயே வியாபாரத்தை முடித்து ஓசியிலேயே எளநியையும் குடித்து விடுவார். அப்போது அவர் சொன்ன அட்ரஸை தான் இன்னும் இளநீர்க்கடை வாசு தேடிக் கொண்டிருக்கிறாராம். தென்னந்தோப்பு, வத்தலகுண்டு, வாடிப்பட்டி ரோடு, வாணியம்பாடி தெரு, சென்னை-13, சேலம் - 21.

கூல்ட்ரிங்ஸ் குடிக்கும்போதெல்லாம் அந்த ஞாபகம்தானே வரும்..!

கோடைகாலத்துக்கும் சோடாவுக்கும் எக்கச்சக்கத் தொடர்புகள் உண்டு. வெயிலுக்கு ஆற்றமாட்டாமல் கூல்ட்ரிங்ஸ் கடைக்குப்போன வடிவேலுவுக்கும், பின்னாட்களில் அரசியல் களத்தில் வைகைப்புயலை வறுத்தெடுத்த சிங்கமுத்துவுக்கும் பகையை மூட்டியதில் இந்த கூல்ட்ரிங்ஸ் கடை ஓனருக்கும், கடைக்கு முன்னால் இருந்த குப்பைத்தொட்டிக்கும் ரொம்பவே பங்கு உண்டு. ஒரு மிடறு கூல்ட்ரிங்க்ஸ் குடித்தவர், அதை வைத்துவிட்டு விஷாலுக்கு போன் போட்டு விபரம் சொல்வதற்குள் கூல்ட்ரிங் பாட்டில் காணாமல் போயிருக்கும். அதேநேரம், சிங்கமுத்து அதே போன்ற பாட்டிலை எடுத்து வாயில் கவிழ்த்துக் கொண்டிருப்பார். அது தான் வாங்கி வைத்திருந்த பாட்டில் என நினைத்து வடிவேலு வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிவிட, அப்புறம் தான் தெரிய அந்த கூல்ட்ரிங்ஸ் பாட்டில் கை தவறிக் குப்பைத் தொட்டிக்குள் விழுந்து கிடப்பது தெரியவரும். பிறகு, பேசிய பேச்சுக்குக் கிடைத்த பின்விளைவு இன்னும் மோசம்... ஷ்ஷப்பா..! என்னா வெயிலு..?

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024