Wednesday, May 3, 2017

10 ஆயிரம் அமெரிக்கர்களைப் பணிக்கு எடுக்கிறது இன்ஃபோசிஸ்! ஏன்?

எம்.குமரேசன்


இந்தியாவில் உள்ள இன்ஃபோசிஸ் நிறுவனம், இரண்டு ஆண்டுகளில் 10 ஆயிரம் அமெரிக்கர்களைப் பணிக்கு அமர்த்துகிறது.



`ஹெச் 1பி விசா' எண்ணிக்கையை அமெரிக்கா குறைத்ததையடுத்து, இந்திய நிறுவனங்களுக்கு இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய ஐ.டி நிறுவனங்களின் 60 சதவிகித வாடிக்கையாளர்கள், வட அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் . ஐரோப்பிய நாடுகளில் 20 சதவிகித வாடிக்கையாளர்களும் மற்ற நாடுகளில் 20 சதவிகித வாடிக்கையாளர்களும் உள்ளனர். சுமார் 150 பில்லியன் டாலர் அளவில் டர்ன்ஓவர் கொண்ட இந்திய ஐ.டி நிறுவனங்கள், வெளிநாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்காக, இங்கு இருந்து ஐ.டி ஊழியர்களை அனுப்புவதை வழக்கமாகக்கொண்டிருக்கின்றன. இந்திய ஐ.டி நிபுணர்கள் ஆயிரக்கணக்கானோர், வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர்.

இந்திய ஐ.டி துறைக்குச் சரிவை ஏற்படுத்தும் வகையில், ஹெச்.பி-1 விசா எண்ணிக்கையைக் குறைத்தது அமெரிக்க அரசு. இதனால், இந்திய ஐ.டி நிபுணர்கள் அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று பணிபுரியும் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகள்கூட இந்திய ஐ.டி நிபுணர்களுக்கு விசா வழங்குவதைக் குறைக்கத் தொடங்கிவிட்டன. இதன் எதிரொலியாக, 'விப்ரோ' போன்ற பெரிய நிறுவனங்கள்கூட சுமார் 600 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.

இந்த நெருக்கடியைச் சமாளிக்க, இன்ஃபோசிஸ் நிறுவனம் வேறு வழிகளைப் பின்பற்ற முடிவுசெய்துள்ளது. வழக்கமாக, க்ளையன்ட் சர்வீஸ் செய்ய இந்தியர்கள் அமெரிக்கா செல்லும் முறையைத் தவிர்க்கும் முடிவுதான் அது. அதற்குப் பதிலாக, அந்தப் பணியைச் செய்ய அமெரிக்க ஐ.டி நிபுணர்களையே பணிக்கு எடுக்க முடிவுசெய்துள்ளது. மொத்தம் 10 ஆயிரம் அமெரிக்கப் பணியாளர்களை இன்ஃபோசிஸ் நிறுவனம் பணிக்கு அமர்த்தப்போகிறது. இவர்களையே financial services, manufacturing, healthcare, retail and energy போன்ற பிரிவுகளில் பணியாற்றவைக்கவும் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக, இண்டியானாவில் இன்ஃபோசிஸ் முதல் தொழில்நுட்ப மையத்தை அமைக்கிறது. மேலும், மூன்று நகரங்களில் விரைவில் தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இரு மாதங்களுக்கு முன்பு `இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி போன்ற நிறுவனங்கள், ஹெச் 1 பி விசா பெறுவதில் முறைகேட்டில் ஈடுபடுகின்றன' என அமெரிக்கா குற்றம்சாட்டியது. மேலும், `லாட்டரி முறையில் அதிக ஹெச்1 பி விசாக்களைப் பெறும்வகையில், அதிக விண்ணப்பங்களை அனுப்புகிறது' எனவும் அமெரிக்கா குறை கூறியிருந்தது. ஒவ்வோர் ஆண்டும் 85 ஆயிரம் ஹெச் 1 பி விசாக்களை இந்தியாவுக்கு ஒதுக்குகிறது அமெரிக்கா. இதில் 65 ஆயிரம் விசாக்கள் ஐ.டி ஊழியர்களுக்கும், அமெரிக்காவில் உயர்கல்வி பயின்றவர்களுக்கு 20 ஆயிரம் விசாக்களும் வழங்கப்படுகின்றன. 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை, இன்ஃபோசிஸ், டாடா நிறுவனங்கள் சேர்ந்து 7,504 ஹெச் 1 பி விசாக்களைப் பெற்றிருக்கின்றன. மொத்த விசாக்களில் இது 8.8 சதவிகிதம்.

இதுகுறித்து இன்ஃபோசிஸ் தலைமைச் செயல் அதிகாரி விஷால் சிக்கா கூறுகையில், ''அமெரிக்கர்களுக்குப் பணி வழங்க, இண்டியானாவில் ஆகஸ்ட் மாதம் முதல் தொழில்நுட்ப மையம் செயல்படத் தொடங்குகிறது. ஐ.டி. தொழில்நுட்பத்தை, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லவேண்டியக் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். சர்வதேச வல்லுநர்களுடன் மண்ணின் மைந்தர்களும் இணைந்து பணியாற்றுவது வர்த்தகரீதியில் ஆரோக்கியமான விஷயம்'' எனத் தெரிவித்துள்ளார்.

  இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக விஷால் சிக்கா பொறுப்பேற்ற பிறகு, கடந்த இரு ஆண்டுகளில் ஏற்கெனவே இரண்டு ஆயிரம் அமெரிக்கர்களைப் பணிக்கு எடுத்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் உள்ள 2,500 கல்வி மையங்களில் 1,34,000 மாணவர்களுக்கும் 2,500 ஆசிரியர்களுக்கும் இன்ஃபோசிஸ் அறக்கட்டளை பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024