Wednesday, May 3, 2017

கரூர் குஸ்தி... மருத்துவக் கல்லூரி மல்லுக்கட்டு!
துரை.வேம்பையன்


‘‘எனக்கு நல்ல பேர் கிடைத்துவிடும் என தம்பிதுரையும் விஜயபாஸ்கரும் அஞ்சுகிறார்கள்’’ - செந்தில்பாலாஜி

‘‘நிலத்தின் ரேட்டை ராக்கெட் வேகத்தில் ஏற்றுவதுதான் செந்தில்பாலாஜியின் திட்டம்’’ - விஜயபாஸ்கர்

‘கரூர் அரசு மருத்துவக் கல்லூரியை எங்கே அமைப்பது?’ என்பதில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் இந்நாள் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் நடக்கும் மல்லுக்கட்டு யுத்தத்தில் மாவுக்கட்டு போடாததுதான் குறை. இந்த கரூர் குஸ்தி, ஆளுங்கட்சியின் கோஷ்டிப் பூசலை அப்பட்டமாக்கியிருக்கிறது.

அரசின் முடிவை எதிர்த்து ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வே கோதாவில் குதித்திருக்கிறார். ‘குப்புச்சிப்பாளையத்தில் மருத்துவக் கல்லூரி அமைய வேண்டும்’ என உயர் நீதிமன்றம் வரை போய் உண்ணாவிரதத்துக்கு அனுமதி வாங்கியிருக்கும் அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ செந்தில்பாலாஜியிடம் பேசினோம்.



“நான் அமைச்சராக இருந்தபோது, 12.8.2014 அன்று கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க அறிவிப்பு வெளியிட்டார் அம்மா. மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை கொண்டுவர முயற்சி செய்தேன். குப்புச்சிப்பாளையத்தில் அமைக்க, 25 ஏக்கர் நிலமும் பெறப்பட்டு 229.46 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்து, அடிக்கல்லும் நாட்டினார் அம்மா. இந்தச் சமயத்தில் அறிவிக்கப்பட்ட புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு திறப்பு விழாவே நடத்திவிட்டார்கள். ஆனால், கரூரில் இதுவரை பணிகள் தொடங்கவில்லை. இதற்குக் காரணம் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும்தான். குப்புச்சிப்பாளையத்தில் இருந்து காந்தி கிராமம் அருகே உள்ள சணப்பிரட்டிக்கு திட்டத்தை மாற்றிவிட்டார்கள். அந்த இடத்தின் பரப்பு, 15 ஏக்கர்தான். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க குறைந்தபட்சம் 25 ஏக்கர் நிலம் வேண்டும். அதோடு, சணப்பிரட்டி இடம் நகராட்சிக்கு சொந்தமானது. கரூர் நகர பாதாள சாக்கடை திட்டத்துக்காக உள்ள இடம். அங்கே போய்வர சரியான போக்குவரத்து வசதியும் இல்லை. அதனால், அங்கே இது அமைவதை யாருமே விரும்பவில்லை. மாவட்டம் முழுக்க உள்ள அனைத்துப் பகுதிகளில் இருந்தும் நோயாளிகள் வந்துபோக ஏற்றது, குப்புச்சிப்பாளையம்தான்.

இது குப்புச்சிப்பாளையத்தில் அமைந்தால், எனக்கு நல்ல பேர் கிடைத்துவிடும் என்பதால்தான் அவர்கள் இடத்தை மாற்றத் துடிக்கிறார்கள். தம்பிதுரை, விஜயபாஸ்கர் ஆகியோரின் மக்கள் விரோதப்போக்கை மக்களிடம் அம்பலப்படுத்துவோம்” என்றார் ஆவேசமாக.

போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் என்ன சொல்கிறார்? அவரிடம் பேசினோம். ‘‘கரூரில் உள்ள மக்கள், வர்த்தகர் சங்கம் என யாரிடம் வேண்டுமானாலும் கேளுங்கள். ஒருவராவது, ‘குப்புச்சிப்பாளையத்தில் அமைக்கணும்’ எனச் சொன்னால்... நாங்கள் ஒதுங்கிக்கொள்கிறோம். கரூர் நகர மக்களுககு மட்டுமில்லை... செந்தில்பாலாஜியின் அரவக்குறிச்சி தொகுதி மக்களுக்கும், மருத்துவமனைக்கு வந்துபோக சணப்பிரட்டிதான் வசதி. குப்புச்சிப்பாளையம், கரூர் நகரத்தில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தூரம். சரியான போக்குவரத்து வசதிகளும் இல்லை.

அவர் கொண்டுவந்த திட்டம் என்பதால், தவறான இடத்தில் அமைக்கத் துடிக்கும் அவரின் செயலை இப்போது அமைச்சராக இருக்கும் நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. அம்மா அடிக்கல் நாட்டியபோதே, செந்தில்பாலாஜியின் சுயநலம் புரிந்து, சணப்பிரட்டிக்கு திட்டத்தை மாற்றினார்கள். ஆனால், அந்த உண்மையை அவர் மறைக்கப் பார்க்கிறார். இப்போது உள்ள அரசியல் அசாதாரண சூழலைப் பயன்படுத்தி, ஆட்சியில் இருப்பவர்களை மிரட்டி, தான் நினைத்த காரியத்தை அடையத் துடிக்கிறார். சுயநலத்துக்காக மக்களுக்குச் சிரமம் தரக்கூடிய இடத்தில் அமைக்க நினைப்பதை, மனசாட்சியுள்ள நாங்கள் எப்படி பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியும்?

குப்புச்சிப்பாளையம் அருகேதான் அவரின் சொந்த ஊரான ராமேஸ்வரப்பட்டி இருக்கிறது. அங்கே அவரும், அவருக்கு வேண்டியவர்களும், தி.மு.க-வினர் சிலரும் பல ஏக்கர் நிலங்களை வாங்கிப் போட்டிருக்கிறார்கள். அவற்றின் ரேட்டை ராக்கெட் வேகத்தில் ஏற்றத்தான், அங்கே மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அமைக்கத் துடிக்கிறார்கள். அவரின் இந்த விபரீத எண்ணம் புரியாமல், அவருடன் உண்ணாவிரதம் இருக்க முயன்ற முன்னாள் எம்.எல்.ஏ சுப்ரமணியன் உள்ளிட்ட பலரும் இப்போது செந்தில்பாலாஜியின் கபட நாடகத்தைப் புரிந்துகொண்டு, ஒதுங்கிவிட்டார்கள். அண்ணன் தம்பிதுரை பெயரையும் இதில் இழுத்து, தேவையில்லாமல் அரசியல் செய்கிறார் செந்தில்பாலாஜி. தலையால் தண்ணீர் குடித்தாலும், செந்தில்பாலாஜி நினைக்கிற, மக்கள் விரும்பாத குப்புச்சிப்பாளையத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைய ஒருபோதும் விடமாட்டோம்” என்றார் அமைச்சர் அதிரடியாக!

- துரை.வேம்பையன்
படங்கள்: நா.ராஜமுருகன்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024