Friday, November 3, 2017


நாமக்கல் ஆஞ்சநேயர் அபிஷேக முன்பதிவு


நாமக்கல்: நாமக்கல், ஆஞ்சநேயர் கோவிலில், 2018க்கான, தினசரி அபிஷேகத்திற்கு, நவ., 5ல் முன்பதிவு துவங்கவுள்ளது. நாமக்கல், ஆஞ்சநேயர் கோவில் மூலவருக்கு, தினமும் காலை, 9:00 மணிக்கு, 1,008 வடை மாலை சாத்தப்படும். பின், சுவாமிக்கு அபி ேஷகம் செய்யப்படும். தற்போது, ஐந்து கட்டளைதாரர்கள் இணைந்து, அபிேஷகம் செய்யலாம். அதற்கு, தினசரி, ஐந்து பேர் முன்பதிவு செய்யலாம். ஒருவருக்கு கட்டணமாக, 6,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
வரும், 2018க்கான முன்பதிவு, 5 முதல் துவங்குகிறது. முழு தொகையையும் செலுத்துபவர்களுக்கு மட்டும் ரசீது வழங்கப்படும்; உபயதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதே போல், தங்கத் தேர், புஷ்பங்கி மற்றும் வெண்ணை காப்பு அலங்காரம் போன்றவற்றுக்கு, தனித்தனியாக முன்பதிவு நடக்கிறது.
நரசிம்ம சுவாமி திருக்கல்யாணம், ஒவ்வொரு மாதமும், குறிப்பிட்ட நாட்களில் நடக்க உள்ளது. இதற்கு, 2,500 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளவேண்டும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கங்கைகொண்டசோழபுரம் கோவிலில் 3,825 கிலோ அரிசியில் அன்னாபிஷேகம்!

 கங்கைகொண்டசோழபுரம் கோவிலில் 3,825 கிலோ அரிசியில் அன்னாபிஷேகம்!
பெரம்பலுார்:கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில், இன்று, அன்னாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது.

அரியலுார் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் கிராமத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில், 1,000 ஆண்டுகளுக்கு முன், ராஜராஜசோழன் மகன் ராஜேந்திர சோழனால், போர் வெற்றியின் அடையாளமாக கட்டப்பட்டது. இக்கோவில் உலக பிரசித்தி பெற்றது; புராதன சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது. கோவிலில் உள்ள சிவலிங்கம், 60 அடி சுற்றளவும், 13.5 அடி உயரமும் கொண்டதாகும்,ஒவ்வொரு ஆண்டும், ஐப்பசி பவுர்ணமி தினத்தன்று, 75 கிலோ எடை உள்ள, 51 மூட்டை என, 3,825 கிலோ அரிசியால் சாதம் சமைத்து, காலை, 9:00 மணி முதல், கோவிலில் உள்ள பிரகதீஸ்வரர் லிங்கத்திற்கு அபிஷேகம் துவங்கி, மாலை, 6:00 மணிக்கு தீபாராதனை நடைபெறும்.

லிங்கத்தின் மேல் சாத்தப்படும், ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையை பெறுகிறது, இதனால், ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.இந்த ஆண்டும் இன்று அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது. லிங்கத்தின் மேல் சாத்தப்பட்ட அன்னம் இரவு, 9:00 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். 

மீதமுள்ள சாதம், ஏரி, குளங்களில் மீன்களுக்கு உணவாக அளிக்கப்படும். நாளை, மூலவருக்கு ருத்ரா பிஷேகமும் நடைபெற உள்ளது.

சித்தா டாக்டர்கள் கைது வேண்டாம் : கலெக்டர்களுக்கு அரசு அறிவுறுத்தல்
'சித்தா டாக்டர்களை, போலி டாக்டர்கள் என கைது செய்யக்கூடாது. அவர்கள், அலோபதி சிகிச்சை அளித்தால், துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கலாம்' என, மாவட்ட கலெக்டர்களுக்கு, சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. அலோபதி மருத்துவத்தில், டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல்களை குணப்படுத்த, மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த, சித்த மருத்துவத்தில், நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு வழங்கப்படுகிறது.

நிலவேம்பு குடிநீர் : இந்நிலையில், 'இந்திய மருத்துவ முறை டாக்டர்கள், காய்ச்சல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடாது; நோயாளிகளை, அலோபதி டாக்டர்களிடம் பரிந்துரைக்க வேண்டும்' என, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை, ஜூலையில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை திரும்ப பெறக்கோரி, ஆயுஷ் டாக்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 
இதுகுறித்து, ஆயுஷ் டாக்டர்கள் நல சங்க தலைவர், செந்தமிழ்செல்வன் கூறியதாவது:
இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் சட்டம், 1970ன், 17வது பிரிவில், சித்தா டக்டர்கள் அலோபதி மருத்துவம் அளிக்க அனுமதி உள்ளது. மேலும், டெங்கு போன்ற காய்ச்சலுக்கு, அலோபதியில் மருந்துகள் இல்லாத நிலையில், சித்தா தான் கைகொடுத்துள்ளது. சித்த மருத்துவமான நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு போன்றவற்றை, அலோபதி டாக்டர்கள் தருகின்றனர். அவர்களை, போலி டாக்டர்கள் என, கைது செய்யவில்லை. தமிழக அரசு, ஒருதலை பட்சமாக செயல்படுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில், எங்களுக்கு உரிமைகள் இருந்தும், எங்களை வஞ்சிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

போலி டாக்டர்கள் : சுகாதாரத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: டெங்கு காய்ச்சலுக்கு, சித்தா டாக்டர்கள் உள்ளிட்ட, ஆயுஷ் டாக்டர்கள் சிகிச்சை அளிக்கலாம்; அவர்களை, போலி டாக்டர்கள் என, கைது செய்யக்கூடாது. அவர்கள், அலோபதி சிகிச்சை அளித்தால், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, மருத்துவ கவுன்சிலுக்கு பரிந்துரைக்க வேண்டும் என, மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சித்தா டாக்டர்கள், அலோபதி சிகிச்சை அளித்தால், நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

மின் விபத்தால் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க, அலட்சியமாக செயல்படும் பொறியாளர்களை, மின் வாரியம், 'டிஸ்மிஸ்' செய்ய முடிவு செய்துள்ளது.



புதிய மின் இணைப்புக்கு லஞ்சம், பணியில் அலட்சியம் உள்ளிட்ட, ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் ஊழியர்கள், பொறியாளர்கள் மீது, மின் வாரியம், இடமாறுதல், 'சஸ்பெண்ட்' ஆகிய நடவடிக்கைகளை எடுக்கிறது. சஸ்பெண்ட் செய்யும் நபர், அரசியல் சிபாரிசுடன், சில தினங்களில், மீண்டும் பணியில் சேர்ந்து விடுகிறார். இதனால், நடவடிக்கை என்பது, கண்துடைப்பு நாடகமாக இருப்பதாக, மக்கள் கருதுகின்றனர்.

சென்னை, கொடுங்கையூரில், நேற்று முன்தினம் நடந்த மின் விபத்தில் சிக்கி,

இரு சிறுமியர் உயிரிழந்தது, பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.அதற்கு காரணமான, மூன்று பொறியாளர்கள், ஐந்து ஊழியர்களை, மின் வாரியம் சஸ்பெண்ட் செய்தது. இதற்கு, பலரும் எதிர்ப்பு தெரிவித்து, 'டிஸ்மிஸ்' செய்யும்படி, அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
சென்னை, தலைமை செயலகத்தில், கொடுங்கையூர் மின் விபத்து தொடர்பாக, மின் துறை அமைச்சர், தங்கமணி மற்றும் மின் வாரிய அதிகாரிகளுடன், நேற்று, முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதில், மின் விபத்தால் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க, அலட்சியமாக செயல்படும் பொறியாளர்களை, 'டிஸ்மிஸ்' செய்ய, மின் வாரியத்திற்கு, அரசு தரப்பில் ஒப்புதல் அளித்ததாக தெரிகிறது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தண்டனைகள் கடுமையாக இருந்தால் தான், தவறுகள் குறையும். ஆனால், மின் வாரியத் தில், சஸ்பெண்ட் செய்யும் நபர், ஆட்சியாளர் களின் உதவியுடன், இரு தினங்களில்

வேலைக்கு வந்து விடுகிறார். அந்த விபரம், பலருக்கு தெரியாது.இதனால், வழக்கம்போல் பலர் அலட்சியமாக உள்ளனர். இதனால், வாரியத்திற்கு அவப்பெயர் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, மின் விபத்தால் உயிரிழப்பு ஏற்பட காரணமாகும் பொறியாளர், ஊழியர்கள் மீது, உச்சபட்ச தண்டனையாக, 'டிஸ்மிஸ்' செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

அறிக்கை கேட்கிறது ஐகோர்ட்:

சென்னை, கொடுங்கையூரில், மழைநீரில் மின் வினியோக பெட்டி மூழ்கி இருந்தது. அதில் ஏற்பட்ட மின் கசிவால், மழைநீரில் மின்சாரம் பாய்ந்தது. இது தெரியாமல், மழைநீரில் நடந்து சென்ற, பாவனா மற்றும் யுவஸ்ரீ என்ற சிறுமியர், மின்சாரம் தாக்கி, பரிதாபமாக உயிரி ழந்தனர். இந்த சம்பவம் குறித்து, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், வழக்கறிஞர், ஜார்ஜ் வில்லியம்ஸ் முறையிட்டார்.

இதையடுத்து, 'அரசு என்ன நடவடிக்கை எடுத்து உள்ளது?' என, முதல் பெஞ்ச் கேள்வி எழுப்பியது. அதற்கு, சிறப்பு பிளீடர், ராஜகோபாலன், ''மின் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என, 8 பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர். பலியான சிறுமியரின் குடும்பத்துக்கு, இழப்பீடு வழங்கப்படுகிறது,'' என்றார். 

அதைத் தொடர்ந்து, நீதிபதிகள், 'மனித உயிர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை, அரசு உறுதி செய்ய வேண்டும். இழப்பீடு வழங்குவது உட்பட, சம்பவம் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்' என, அரசுக்கு உத்தரவிட்டனர். விசாரணை, இன்றும் தொடர்கிறது. 

- நமது நிருபர் -

டாக்டரின் பரிந்துரை சீட்டு இன்றி மருந்து விற்றால் கடை உரிமம் ரத்து!


டாக்டர்,பரிந்துரை,சீட்டு,இல்லாமல்,மருந்து,விற்றால்,கடை உரிமம்,ரத்து
'டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இன்றி, மருந்து கொடுக்கும் கடைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. 

வட கிழக்கு பருவ மழை துவங்கி உள்ளதால், காய்ச்சல், சளி, இருமல் மற்றும் தொற்றுநோய்கள் அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதற்கு, டாக்டர்களின் ஆலோசனை பெறாமல், பொதுமக்கள் தாமாக மருந்து, மாத்திரை வாங்கி உட்கொள்வதால், நோய் வீரியம் பெற்று, உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. 
உத்தரவு:

இந்நிலையில், 'டாக்டர்களின் அனுமதி சீட்டு இல்லாமல், மருந்துகள் விற்கக் கூடாது' என, சுகாதாரத் துறை அமைச்சர் உத்தரவிட்டார். ஆனாலும், மருந்து கடைகளே, நோய் பாதிப்புகளுக்கு ஏற்ப, மருந்துகளை விற்பனை செய்வது தொடர்ந்து வருகிறது.
நடவடிக்கை:

இது குறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், 52 ஆயிரம் மொத்த, சில்லரை மருந்து விற்பனை கடைகள் உள்ளன. டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இன்றி, மருந்து விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி, மருந்துகளை விற்பனை செய்யும் கடைகளின் அங்கீகாரத்தை, ரத்து செய்ய திட்டமிட்டு உள்ளோம். மருந்து கடைகளை கண்காணிக்க, குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவின் அறிக்கை அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

மத்திய அரசு ஊழியர்களின் கல்வி செலவு படி அதிகரிப்பு


புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களின், மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்விக்காக வழங்கப்படும் படியை உயர்த்தி, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின், குழந்தைகளின் கல்வி செலவுக்காக, ஒரு குறிப்பிட்ட தொகை, சிறப்பு படியாக வழங்கப்படுகிறது. 
அரசு ஊழியர்களின் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்வி செலவுக்காக, ஆண்டுக்கு, 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், அந்த தொகையை, 54 ஆயிரம் ரூபாயாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது; இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, மத்திய அரசு ஊழியர்கள், தங்கள் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்விக்காக செலவு செய்த தொகையில், 54 ஆயிரம் ரூபாய் வரை திரும்ப பெற முடியும். 
மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர் இருவரும், மத்திய அரசு ஊழியராக இருந்தால், அவர்களில் யாரேனும் ஒருவர் மட்டுமே இந்த தொகை கோரி விண்ணப்பிக்க முடியும்.

சென்னை மழை பாதிப்பு: களத்தில் இறங்க தயாராகும் இளைஞர்கள்...!


Chennai,rain,சென்னை,மழை
சென்னை: சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவ இளைஞர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் என பலர் களத்தில் இறங்க தயாராகி வருகின்றனர். 

சென்னையில் நேற்று மாலை தொடர்ந்து சுமார் 5 மணி நேரம் பெய்த கன மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு, வாகன நெரிசல் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களுக்கு பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். 

கடந்த 2015ம் ஆண்டு பெருவெள்ளத்தின் போது மக்களுக்கு உதவ நேரடியாக இளைஞர்களும், தன்னார்வலர்களும் களமிறங்கியது போல் தற்போது அது போன்ற சூழ்நிலையே நிலவுவதால் நேற்று இரவே பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவிகளை செய்ய இளைஞர்கள் களத்தில் இறங்கினர். பலர் தங்கள் சமூக வலைதளத்தில் தங்கள் வீடுகளில் இடம் இருப்பதாகவும், தேவைபடுவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் பதிவிட துவங்கினர். பலர் நிவாரண பணிகள்,பொருட்கள் சேகரிப்பது, விநியோகிப்பது குறித்தும் ஆலோசிக்க துவங்கினர். 

பல வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் சென்னை மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் நிவாரண உதவிகள் பெறப்பட்டு வருகிறது. இதற்கிடையில் நேற்று இரவு நடிகர் விஷால் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்தார். 

மேலும் இன்று பல இளைஞர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சியினர், என பலர் களத்தில் இறங்கி மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

NEWS TODAY 01.07.2026