Friday, November 3, 2017


கங்கைகொண்டசோழபுரம் கோவிலில் 3,825 கிலோ அரிசியில் அன்னாபிஷேகம்!

 கங்கைகொண்டசோழபுரம் கோவிலில் 3,825 கிலோ அரிசியில் அன்னாபிஷேகம்!
பெரம்பலுார்:கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில், இன்று, அன்னாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது.

அரியலுார் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் கிராமத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில், 1,000 ஆண்டுகளுக்கு முன், ராஜராஜசோழன் மகன் ராஜேந்திர சோழனால், போர் வெற்றியின் அடையாளமாக கட்டப்பட்டது. இக்கோவில் உலக பிரசித்தி பெற்றது; புராதன சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது. கோவிலில் உள்ள சிவலிங்கம், 60 அடி சுற்றளவும், 13.5 அடி உயரமும் கொண்டதாகும்,ஒவ்வொரு ஆண்டும், ஐப்பசி பவுர்ணமி தினத்தன்று, 75 கிலோ எடை உள்ள, 51 மூட்டை என, 3,825 கிலோ அரிசியால் சாதம் சமைத்து, காலை, 9:00 மணி முதல், கோவிலில் உள்ள பிரகதீஸ்வரர் லிங்கத்திற்கு அபிஷேகம் துவங்கி, மாலை, 6:00 மணிக்கு தீபாராதனை நடைபெறும்.

லிங்கத்தின் மேல் சாத்தப்படும், ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையை பெறுகிறது, இதனால், ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.இந்த ஆண்டும் இன்று அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது. லிங்கத்தின் மேல் சாத்தப்பட்ட அன்னம் இரவு, 9:00 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். 

மீதமுள்ள சாதம், ஏரி, குளங்களில் மீன்களுக்கு உணவாக அளிக்கப்படும். நாளை, மூலவருக்கு ருத்ரா பிஷேகமும் நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment

news today 23.10.1024