Friday, November 3, 2017


சித்தா டாக்டர்கள் கைது வேண்டாம் : கலெக்டர்களுக்கு அரசு அறிவுறுத்தல்
'சித்தா டாக்டர்களை, போலி டாக்டர்கள் என கைது செய்யக்கூடாது. அவர்கள், அலோபதி சிகிச்சை அளித்தால், துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கலாம்' என, மாவட்ட கலெக்டர்களுக்கு, சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. அலோபதி மருத்துவத்தில், டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல்களை குணப்படுத்த, மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த, சித்த மருத்துவத்தில், நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு வழங்கப்படுகிறது.

நிலவேம்பு குடிநீர் : இந்நிலையில், 'இந்திய மருத்துவ முறை டாக்டர்கள், காய்ச்சல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடாது; நோயாளிகளை, அலோபதி டாக்டர்களிடம் பரிந்துரைக்க வேண்டும்' என, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை, ஜூலையில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை திரும்ப பெறக்கோரி, ஆயுஷ் டாக்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 
இதுகுறித்து, ஆயுஷ் டாக்டர்கள் நல சங்க தலைவர், செந்தமிழ்செல்வன் கூறியதாவது:
இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் சட்டம், 1970ன், 17வது பிரிவில், சித்தா டக்டர்கள் அலோபதி மருத்துவம் அளிக்க அனுமதி உள்ளது. மேலும், டெங்கு போன்ற காய்ச்சலுக்கு, அலோபதியில் மருந்துகள் இல்லாத நிலையில், சித்தா தான் கைகொடுத்துள்ளது. சித்த மருத்துவமான நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு போன்றவற்றை, அலோபதி டாக்டர்கள் தருகின்றனர். அவர்களை, போலி டாக்டர்கள் என, கைது செய்யவில்லை. தமிழக அரசு, ஒருதலை பட்சமாக செயல்படுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில், எங்களுக்கு உரிமைகள் இருந்தும், எங்களை வஞ்சிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

போலி டாக்டர்கள் : சுகாதாரத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: டெங்கு காய்ச்சலுக்கு, சித்தா டாக்டர்கள் உள்ளிட்ட, ஆயுஷ் டாக்டர்கள் சிகிச்சை அளிக்கலாம்; அவர்களை, போலி டாக்டர்கள் என, கைது செய்யக்கூடாது. அவர்கள், அலோபதி சிகிச்சை அளித்தால், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, மருத்துவ கவுன்சிலுக்கு பரிந்துரைக்க வேண்டும் என, மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சித்தா டாக்டர்கள், அலோபதி சிகிச்சை அளித்தால், நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024