Saturday, November 4, 2017


போலி சான்றிதழ்: தலைமை ஆசிரியை 'சஸ்பெண்ட்'






தஞ்சாவூர்: தஞ்சை அருகே, போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து, 20 ஆண்டுகளாக பள்ளியில் பணியாற்றிய பெண் தலைமை ஆசிரியை, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அடுத்த நரியனுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், தலைமை ஆசிரியையாக பணியாற்றியவர் கிறிஸ்டினாள் பேபி, 50.
பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த இவர், பழங்குடியின ஜாதி சான்றிதழ் கொடுத்து, 1997ம் ஆண்டு ஆசிரியர் பணியில் சேர்ந்து, 20 ஆண்டு களாக பணிபுரிந்தது தெரிந்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம், கிறிஸ்டினாள் பேபியை, கல்வி துறை அதிகாரிகள், சஸ்பெண்ட் செய்தனர்.

போக்குவரத்து நெரிசல் : விமானங்கள் தாமதம்



சென்னை: சென்னையில் நேற்று, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், சென்னையில் இருந்து, பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்கள், ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், நேற்று முன்தினம் மாலை முதல், கனமழை பெய்தது. அதனால், சாலைகளில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், விமான பைலட்டுகள், பணிப்பெண்கள் மற்றும் பயணியர், குறிப்பிட்ட நேரத்திற்கு விமான நிலையத்திற்கு வந்தடைய முடியவில்லை. இதனால், சென்னையில் இருந்து சிங்கப்பூர், கோலாலம்பூர், துபாய் உள்ளிட்ட, 18 வெளிநாட்டு விமானங்கள். டில்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும், 24 உள்நாட்டு விமானங்கள் என, 42 விமான சேவைகள், அரை மணி நேரம் முதல், ஒரு மணிநேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.

தடம் மாறியது வானிலை:  தடுமாறியது வானிலை மையம்!
மழை கணிப்பில் தடுமாறிய சென்னை வானிலை மையம், வரும் நாட்களில் விழிப்புடன் செயல்படவேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.




சென்னை வானிலை மையம், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலங்கானா மற்றும் கேரளாவுக்கான மண்டல மையமாக செயல்படுகிறது. டில்லியில் உள்ள, இந்திய வானிலை மைய பொது இயக்குனருக்கு அடுத்த பதவியான, துணை பொது இயக்குனர் பதவியில், சென்னையில் ஒரு அதிகாரி பணியாற்றுகிறார்.அவருக்கு கீழ், ஒன்பது இயக்குனர்கள் பணியாற்றுகின்றனர்.

இவர்களில், புயல் எச்சரிக்கை மையத்தின் இயக்குனராக இருப்பவரே, தினசரி வானிலை எச்சரிக்கையை, ஊடகங்களுக்கு அளிப்பது வழக்கம். அந்த வகையில், சென்னை வானிலை மைய, புயல் எச்சரிக்கை மைய இயக்குனர், பாலச்சந்திரன், தினமும் ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கிறார். இந்த தகவலே, பொது மக்களை சென்றடைகிறது. இதில், முக்கியமான பருவ மழை காலத்தில், ஒவ்வொரு நாளும், நண்பகல், 12:00 மணி அளவில், மழை தகவல் வெளியிடப்படுகிறது. தற்போது, வட கிழக்கு பருவ மழை தீவிரமான நேரத்திலும், தினமும் ஒரு முறை மட்டுமே தகவல்களை வெளியிடுகின்றனர்.

அதனால், நண்பகல்,12மணிக்கு பின், வானிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் குறித்து, பொது மக்களுக்கு தகவல் கிடைப்பதில்லை.இந்த ஆண்டு, பருவ மழை துவங்கிய நிலையில், அக்., 29 முதல், சென்னை வானிலை மையத்தின் கணிப்புகள் தவறுகின்றன. குறிப்பாக, அக்., 31ல், 'சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில், கன மழை வரும்' என, அறிவிக்கப்பட்டது. ஆனால், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வெயிலும், டெல்டா மாவட்டங்களில் மழையுமாக நிலைமை மாறியது.

இந்த குளறுபடியின் உச்சகட்டமாக, நேற்று முன்தினம், வானிலை மையம் சார்பில், தமிழக தெற்கு கடலோர மாவட்டங்களுக்கு, கன மழை எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால், சென்னை உள்ளிட்ட வடக்கு கடலோர மாவட்டங்களில், மழை வெளுத்து கட்டியது. கன மழை பெய்யும் என, வானிலை மையத்தால் கூறப்பட்ட தென் மாவட்டங்களில், நேற்று முன்தினம், சராசரியாக, 2 செ.மீ.,க்குள் மட்டுமே மழை பெய்தது.

இந்த குளறுபடியால்,சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட மக்கள், வெள்ள பாதிப்பில் சிக்கி, கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். மழை குறித்த கணிப்பு தவறியதற்கு, மேக கூட்டங்கள் நகர வழியின்றி, அங்கும் இங்கும் மாறி வந்ததே காரணம் என, வானிலை மையம் அறிவித்துள்ளது. அப்படி என்றால், இயற்கை மாற்றத்திற்கு ஏற்ப,

நேற்று முன்தினம் பிற்பகலில், முந்தைய அறிவிப்புகளை மாற்றி, புதிய அறிவிப்பு வெளியிட்டு இருக்கலாம். அதன் வாயிலாக, அரசு தரப்பில் அவசர எச்சரிக்கை விடப்பட்டிருக்கும்.

ஆனால், எந்த அறிவிப்பும் இல்லாமல், அடை மழையை அமைதியாக வேடிக்கை பார்த்தபடி இருந்ததால், பொது மக்கள் அதிர்ச்சியில் தவித்தனர்.இனிவரும் காலங்களில், பருவ மழை, புயல் அல்லது இயற்கை மாற்றங்களின் போது, வழக்கமான முறையில் இயங்காமல், வானிலை மாற்றத்தை, உடனுக்குடன் வெளியிடும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

தேவைப்பட்டால், அவசர தகவல்களை, உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மாறாக, மறுநாள் ஊடக சந்திப்பு நேரம் வரும் வரை காத்திருந்தால், அதற்குள் அனைத்து பாதிப்புகளும் ஏற்பட்டு விடும் என்கின்றனர் மக்கள்.

மூன்றாவது முறையாக 'வாட்ஸ் ஆப் அவுட்!'


தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில், 'வாட்ஸ் ஆப்' செயலி நேற்று திடீரென, செயலிழந்தது. நேற்று மதியம், 1:00 மணி முதல், தமிழகம் உட்பட, பல மாநிலங்களில், 'வாட்ஸ் ஆப்' செயலி, ஒரு மணி நேரம் திடீரென செயலிழந்தது. தகவல்களை அனுப்ப முடியாமலும், பார்க்க முடியாமலும், பல ரும் அவதிப்பட்டனர். அந்த வருத்தத்தை, 'பேஸ்புக்' பக்கத்தில், ஒருவர் பின் ஒருவராக பகிர துவங்கியதே, இப்பிரச்னைக்கு காரணம் என, தெரிய வந்தது. பாகிஸ்தான், ஜெர்மனி உள்ளிட்ட உலகின் பல நாடுகளிலும், வாட்ஸ் ஆப் செயல்படவில்லை. ஒருவழியாக, பிற்பகல், 2:00 மணிக்கு பின் செயல்பட துவங்கியதும், 'வாட்ஸ் ஆப்' ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். இந்த ஆண்டு, மே மற்றும் ஆக., மாதங்களிலும், இது போல், வாட்ஸ் ஆப், திடீரென செயலிழந்தது.

- நமது நிருபர் -


திண்டுக்கல்லில் வெங்காயம் கிலோ ரூ.150


திண்டுக்கல்: வறட்சி, மழை பாதிப்பால் சின்ன வெங்காயம் கிலோ விலை ரூ.150 ஐ எட்டியது. 'இலங்கைக்கு ஏற்றுமதியாவதால் விலை குறைய வாய்ப்பு இல்லை' என, வியாபாரிகள் 
தெரிவித்தனர்.கடந்த ஆண்டு நிலவிய கடும் வறட்சியால் சாகுபடி குறைந்து சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.100க்கு விற்றது. நேற்று திண்டுக்கல் மார்க்கெட்டில் கிலோ ரூ.150 ஆக விலை உயர்ந்தது.திண்டுக்கல்லில் வாரம் மூன்று நாட்கள் நடக்கும் வெங்காய மார்கெட்டிற்கு வழக்கமாக 50 கிலோ எடையில் வெங்காயம் 2 ஆயிரம் மூடைகள் வரும். தற்போது 500 மூடைகள் மட்டுமே வரத்து உள்ளது. இதனால் கிலோ ரூ. 150 ஆக உயர்ந்தது. 
மேலும் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு ஏற்றுமதியாவதால் மேலும் விலை உயர வாய்ப்பு 
உள்ளது.

கமிஷன் கடை வியாபாரி சங்கர் கூறுகையில், ''இந்த விலை உயர்வு ஒரு மாதத்திற்கு நீடிக்கும். வரத்து குறைவால் வெங்காய மார்க்கெட் களை இழந்துள்ளது. தற்போது வெங்காய நடவு ஆகிறது. மூன்றுமாதங்களுக்கு பின் விலை குறையும்''
என்றார்.

ரோட்டோரம் வீச்சு

திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம், வடமதுரை, செம்பட்டி, ஒட்டன்சத்திரம், வேடசந்துார் உட்பட பல இடங்களில் வெங்காயம் பயிரிடப்படுகிறது. இங்கு கடந்த 4 ஆண்டுகளாக கடும் வறட்சி நிலவுவதால், வெங்காயத்தை சிலர் கிணற்று பாசனம் மூலம் பயிரிட்டுள்ளனர். இவ்வாறு வெங்காயம் அறுவடை நேரத்தில் பெய்யும் மழையால் அழுகியுள்ளன.
இதனால் விவசாயிகள்அவற்றை தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் கொட்டி விட்டு செல்கின்றனர். பூதிப்புரம் விவசாயி மகாலட்சுமி கூறியதாவது: ஒரு கிலோ வெங்காயம் ரூ.120 முதல் ரூ.150ரை விற்கப்படுகிறது. அறுவடை நேரத்தில் மழையால் அழுகி விட்டது, என்றார்.

அண்ணா பல்கலை தேர்வு ரத்து இல்லை

சென்னை: 'ஏற்கனவே அறிவித்தபடி, இன்று தேர்வுகள் நடக்கும்' என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலையின் இணைப்பில், தமிழகம் முழுவதும் உள்ள, ௫௦௦க்கும் மேற்பட்ட, இன்ஜி., கல்லுாரிகளில், செமஸ்டர் தேர்வு நடந்து வருகிறது. மழை ஒருபுறம் இருந்தாலும், இதுவரை திட்டமிட்டபடி தேர்வுகள் நடந்து வந்தன.
நேற்று முன்தினம் பெய்த தொடர் கனமழையால், நேற்று தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், 'இன்று திட்டமிட்டபடி தேர்வுகள் நடக்கும்' என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

பி.எஸ்சி., நர்சிங் 9ல் கவுன்சிலிங்


சென்னை: தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டில் உள்ள, பி.எஸ்.சி., நர்சிங் படிப்பில், 759 இடங்கள் காலியாக உள்ளன. அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர்சிங்., - பி.பார்ம்., உட்பட, ஒன்பது துணை மருத்துவ படிப்புகளுக்கு, அரசு ஒதுக்கீட்டிற்கு, 8,381 இடங்கள் உள்ளன. இதற்கு, இரண்டு கட்ட கவுன்சிலிங் நடந்து முடிந்துள்ளது.
இதில், 759 காலி இடங்கள் உள்ளன. இதற்கான, மூன்றாம் கட்ட கவுன்சிலிங், சென்னை அரசு பல்நோக்கு மருத்துவமனையில், நவ., 9, 10ல், நடக்கும் என, மருத்து கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

NEWS TODAY 01.07.2026