Saturday, November 4, 2017

தடம் மாறியது வானிலை:  தடுமாறியது வானிலை மையம்!
மழை கணிப்பில் தடுமாறிய சென்னை வானிலை மையம், வரும் நாட்களில் விழிப்புடன் செயல்படவேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.




சென்னை வானிலை மையம், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலங்கானா மற்றும் கேரளாவுக்கான மண்டல மையமாக செயல்படுகிறது. டில்லியில் உள்ள, இந்திய வானிலை மைய பொது இயக்குனருக்கு அடுத்த பதவியான, துணை பொது இயக்குனர் பதவியில், சென்னையில் ஒரு அதிகாரி பணியாற்றுகிறார்.அவருக்கு கீழ், ஒன்பது இயக்குனர்கள் பணியாற்றுகின்றனர்.

இவர்களில், புயல் எச்சரிக்கை மையத்தின் இயக்குனராக இருப்பவரே, தினசரி வானிலை எச்சரிக்கையை, ஊடகங்களுக்கு அளிப்பது வழக்கம். அந்த வகையில், சென்னை வானிலை மைய, புயல் எச்சரிக்கை மைய இயக்குனர், பாலச்சந்திரன், தினமும் ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கிறார். இந்த தகவலே, பொது மக்களை சென்றடைகிறது. இதில், முக்கியமான பருவ மழை காலத்தில், ஒவ்வொரு நாளும், நண்பகல், 12:00 மணி அளவில், மழை தகவல் வெளியிடப்படுகிறது. தற்போது, வட கிழக்கு பருவ மழை தீவிரமான நேரத்திலும், தினமும் ஒரு முறை மட்டுமே தகவல்களை வெளியிடுகின்றனர்.

அதனால், நண்பகல்,12மணிக்கு பின், வானிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் குறித்து, பொது மக்களுக்கு தகவல் கிடைப்பதில்லை.இந்த ஆண்டு, பருவ மழை துவங்கிய நிலையில், அக்., 29 முதல், சென்னை வானிலை மையத்தின் கணிப்புகள் தவறுகின்றன. குறிப்பாக, அக்., 31ல், 'சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில், கன மழை வரும்' என, அறிவிக்கப்பட்டது. ஆனால், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வெயிலும், டெல்டா மாவட்டங்களில் மழையுமாக நிலைமை மாறியது.

இந்த குளறுபடியின் உச்சகட்டமாக, நேற்று முன்தினம், வானிலை மையம் சார்பில், தமிழக தெற்கு கடலோர மாவட்டங்களுக்கு, கன மழை எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால், சென்னை உள்ளிட்ட வடக்கு கடலோர மாவட்டங்களில், மழை வெளுத்து கட்டியது. கன மழை பெய்யும் என, வானிலை மையத்தால் கூறப்பட்ட தென் மாவட்டங்களில், நேற்று முன்தினம், சராசரியாக, 2 செ.மீ.,க்குள் மட்டுமே மழை பெய்தது.

இந்த குளறுபடியால்,சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட மக்கள், வெள்ள பாதிப்பில் சிக்கி, கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். மழை குறித்த கணிப்பு தவறியதற்கு, மேக கூட்டங்கள் நகர வழியின்றி, அங்கும் இங்கும் மாறி வந்ததே காரணம் என, வானிலை மையம் அறிவித்துள்ளது. அப்படி என்றால், இயற்கை மாற்றத்திற்கு ஏற்ப,

நேற்று முன்தினம் பிற்பகலில், முந்தைய அறிவிப்புகளை மாற்றி, புதிய அறிவிப்பு வெளியிட்டு இருக்கலாம். அதன் வாயிலாக, அரசு தரப்பில் அவசர எச்சரிக்கை விடப்பட்டிருக்கும்.

ஆனால், எந்த அறிவிப்பும் இல்லாமல், அடை மழையை அமைதியாக வேடிக்கை பார்த்தபடி இருந்ததால், பொது மக்கள் அதிர்ச்சியில் தவித்தனர்.இனிவரும் காலங்களில், பருவ மழை, புயல் அல்லது இயற்கை மாற்றங்களின் போது, வழக்கமான முறையில் இயங்காமல், வானிலை மாற்றத்தை, உடனுக்குடன் வெளியிடும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

தேவைப்பட்டால், அவசர தகவல்களை, உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மாறாக, மறுநாள் ஊடக சந்திப்பு நேரம் வரும் வரை காத்திருந்தால், அதற்குள் அனைத்து பாதிப்புகளும் ஏற்பட்டு விடும் என்கின்றனர் மக்கள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024