Saturday, November 25, 2017

மற்றவர் பேசும் போது அதைக் கவனிக்காமல் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் நோண்டுவதும் ஒரு மன நோய் தான்!

By மாலதி சுவாமிநாதன்  |   Published on : 24th November 2017 03:18 PM  | 

நிகழ்வு 1:

“டாக்டர் கிட்ட போனீங்களே, என்ன ஆச்சு?”
“டாக்டர் ஸ்டென்ட் போட...” சொல்லி முடிப்பதற்குள்
“சரி, அது இருக்கட்டும், நயூஸ் ஆரம்பித்துவிட்டது”. (செய்திகளைப் பார்த்தபடியே கையில் இருக்கும் ஃபோனை நோண்டினார்)

நிகழ்வு 2:

அவர்: “ஹலோ, கேள்விப் பட்டேன்.”
இவர்: “அவ்வளவு வேகமா நடந்து போச்சு”(விசும்பல் சத்தம்).
அவர் : “ஆமாம், ரொம்ப கஷ்டம் தான்”.
இவர் : “உனக்குத் தான் தெரியுமே…”
அவர் : (டக் டக் என்று எதிர் முனையில் கணினி சத்தம்) ஓ!
இவர் : (கணினி சத்தம் கேட்க, உள்ளூர “ஏன் கூப்பிட்டு விட்டு, இப்படி”?) என்று தோன்கிறது.
அவர்: “ம், சொல்லு”(டைப் அடிக்கும் சத்தம் தொடர்ந்தது).
இவர்: “நான் கவனமா இருந்திருக்கலாம்”
அவர்: “... அப்புறமா” தொலைப்பேசி துண்டிக்க பட்டது.
இவர்:  (“அவரே ஃபோன் செய்து விட்டு எண்ணிடமும் ஒழுங்காகப் பேசாமல் அங்கு எதையோ டைப் செய்து கொண்டிருந்ததும் இல்லாமல் பேசும் போதே இணைப்பைத் துண்டித்துவிட்டார்!”)

இவை இரண்டுமே, நிஜ வாழ்வின் நிகழ்வுகள். இரண்டிலும்,  ஒருவர் தம்மை பற்றிக் கேட்டதால், தன் விவரத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அப்பொழுது கேட்டவர் தன் வேலையில் கவனத்தை செலுத்த, அரவணைப்பு மறுக்கப் படுகிறது. இதை பல்பணியாக்கம் (multitasking) என்ற போர்வையில் சேர்த்து விட முடியாது.

அக்கறையும், நிராகரிப்பும் நம்மால் பல விதங்களில் காட்ட முடியும். இரண்டையுமே, சைகைகளிலும், பேச்சிலும் தெரிவிப்போம்.

மற்றவர்களை நலம் கேட்கும் போது அக்கறை வெளிப்படும். பொதுவாக, மற்றவர்களைப் பரிவோடு நலம் விசாரிப்போம். அவர்களைச் சான்றவர்களை பற்றியும் கேட்போம், “எப்படி இருக்கீங்க? வீட்டில்? வேலை எல்லாம் நல்லா போய் கொண்டு இருக்கா?” என்று. இப்படிக் கேட்கும் விதத்திலேயே உறவுக்குக் கொடுக்கப்படும் இடமும், முக்கியத்துவமும் தெளிவு படுகிறது!

இதை நிராகரிப்பு கலந்த வகையிலும் காட்ட முடியும். ஒருவரைப் பார்த்ததும், நம் மனதில், “இன்றைக்கு என்ன கேட்கலாம்?” என்பதே மனதில் ஓடும். அவர்கள் எதோ தகவல் சொல்ல வர, “ஆ ஆ”, “சரி, இருக்கட்டும்”, “அதை விடு” என்று நிறுத்தி விட்டு, “எனக்கு, இதை செஞ்சிட்டு” என்று சொல்லுவது, நன்றிக்கோ, ஸாரீக்கோ இடமே இல்லை.

இன்னொரு வடிவமும் எடுப்பதும் உண்டு. ஒருவரை அழைத்து விட்டு, அவர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது, குறுஞ்செய்தி, வாட்ஸ்அப், டிவி, பார்த்துக் கொண்டு இருப்பது. அவர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள், இல்லை வேறு எங்கேயோ பார்த்துக் கொண்டு, ஈமேய்ல் டைப் அடித்தபடியோ, கேம்ஸ் ஆடியபடியோ இருக்கக் கூடும்!

“அது இருக்கட்டும்” மற்றும் “அது கிடக்கட்டும்” உடன் சேர்ந்ததே. இவை என்ன தெரிவிக்கின்றன? மற்றவரின் நிலையோ, நிலைமையைத் தெரிந்து கொள்வதோ முக்கியமில்லை என்று. அதாவது, தமக்கு வேண்டிய வேலையை முடிப்பதில் மட்டும் கவனம் செலுத்துவது. மற்றவரை ஒரு ஜீவனாகக் கருதாமல் அவர்களை வெறும் பொருட்கள் போல்க பார்ப்பது தெரிகிறது.

இதில், மற்றவர்களை தமக்கு பயனுள்ள “பொருளாக” மட்டும் கருதுவார்கள். இப்படிச் செய்வதை “ஆப்ஜெக்டிஃபிக்கேஷன்” (objectification) என்று சொல்வார்கள். இதில் சுயநலம் தெரியும், மற்றவர்களைப் பற்றிய சிந்தனை மிகக் குறைவாக இருக்கும். இவர்களைப் பொருத்த வரை உறவைத் தராசில் போட்டு, ஏதேனும் உபயோகமாக இருக்கும் என்று எண்ணினால் மட்டும் உறவைத் மதிப்பார்கள் .

இப்படிச் செய்வோருடன், மற்றவர்கள் உறவு வைத்துக் கொள்வது பல வகைகளில் இருக்கும். சிலர் இவர்களிடம் உள்ள வேறு நல்ல குணாதிசயங்களினால் இதைப் பொறுத்து கொள்வார்கள். இவர்களிடமிருந்து தமக்கு வேறு ஏதாவது செய்து கொள்வதாலும், இந்த உறவினால் மற்றவரிடம் தம்மை உச்ச நிலையில் காட்டிக் கொள்வதற்கும்  “ஜால்ரா”வாக மாறி விடுவார்கள். வேறு சிலர் இப்படிப்பட்ட உறவை முறித்து விடுவார்கள், சிலருக்குத் தாங்க முடியாததால் மன உளைச்சலுக்கு ஆளாகலாம்.

பல சமயங்களில் நாம் மற்றவரைப் பற்றி சிந்திக்காமலேயே, அவர்களைப் பொருளாக அணுகி விடுகிறோம். நிராகரிப்பதோ, ஒரு பொருளாக கருதுவதோ நமக்குப் பிடிக்காது. பல நேரங்களில், பணிபுரியும் சிப்பந்திகளை ஒரு மனிதராகப் பார்க்க மாட்டோம், அவர்கள் செய்யும் வேலையே அவர்களின் அடையாளமாக நாம் பார்ப்போம். இதுவும் நிராகரிப்பு தான். “வசூல் ராஜா” திரைப்படத்தில் ஒரு வயதானவர் இதைத் தான் ஆணி அடித்தார் போல் தெரிவிப்பார் “நாற்பது வருஷமா வேலை செய்கிறேன், என் பேர் கூடத் தெரியாது”.

அக்கறையோடு இருப்பது இதமாக இருந்தாலும் பின் ஏன் நிராகரிப்பு செய்கிறார்கள்? மற்றவர்கள் அலட்சியப் படுத்துவது, ஒதுக்கி வைப்பதைப் பார்த்து தானும் அதேபோல் இருக்க வேண்டும் என்று எண்ணிச் செய்து வருவார்கள்.

“வைக்க வேண்டிய இடத்தில் வைக்கணும்” என்ற எண்ணம் உள்ளவர்களாகச் செயல்படுபவர்கள் வேறுபாடு காட்டும் மனப்பான்மையைக் காட்டுகிறது. அடிமைகளை வைத்தே வாழ்க்கையை ஓட்ட எண்ணுபவர்கள். உறவுகளை தன் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மட்டும் வைத்துக் கொள்வார்கள். சமநிலையில் இருக்க அஞ்சி இப்படிச் செய்வதும் உண்டு.

ஏதோ ஒரு இழப்பைச் சந்தித்திருக்கலாம் அதனாலேயே அக்கறை காட்ட அஞ்சி நடக்க, நிராகரிப்பே அவர்களின் குணமாகிவிடும்.

தெளிவு இல்லாமல், தன்னுறுதி இல்லாததால் இப்படிச் செய்வதும் உண்டு. இதை மறைக்கவே தன்னை உயர்ந்தவராகக் காட்டுவதாக நினைத்து ஆணவம் என்ற ஆடை அணிவார்கள். இவை எல்லாமே நிராகரிப்பின் பல தோற்றங்கள். தன்னைச் சிறிய வட்டத்துக்குள் சுருக்கி வைத்துக் கொள்கிறார்கள்.

டாம் டூம் என இருப்பதும், அதிகாரம் செய்வதால் மட்டும் வெல்ல முடியும் என்று நம்புவதால் பலர் இப்படிச் செய்வார்கள். இவையும், நிராகரிப்பதும்,  பாதுகாப்பின்மையைக் காட்டுகிறது.

மாற வேண்டும் என்றால், வேறு வழி தெரியாமலேயே இருக்கிறோமா இல்லை வழிகளை அரிந்தும் பின் பற்ற மறுப்பதால் இப்படி எல்லாம் செய்கிறோமா என்று சிந்தித்தால், விடை கிடைக்கலாம்!

உறவை மதிப்பவர்கள் தான் என்ன செய்து கொண்டிருந்தாலும் தன் நேரத்தை மற்றவருடன் செலவிடுவார்கள். அக்கறை உள்ளவர்களை அடையாளம் கண்டு கொள்வது மிகச் சுலபம். இவர்கள் சைகையால் வரவேற்பார்கள், கண்களைப் பார்த்து பேசுவார்கள். மற்றவருடன் இருக்கும் நேரம் தன் வேலையை அந்த நிமிடத்திற்கு நிறுத்தி வைத்துக் கொள்வார்கள். இதை க்வாலிடி டைம் என்றும் சொல்லலாம், இதனாலேயே சுமுகமான சூழல் உண்டாகும், கேட்பதற்கும், பேசுவதற்கும்!

அக்கறை காட்டுவதா? நிராகரிப்பதா?

மாலதி சுவாமிநாதன்
மனநல மற்றும் கல்வி ஆலோசகர்
malathiswami@gmail.com
இதுதான் ரஜினி ஸ்டைல்! ஆறிலிருந்து அறுபத்தி ஏழு வரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

By உமா பார்வதி  |   Published on : 23rd November 2017 03:50 PM

ரஜினிகாந்த் என்ற பெயருக்கு தமிழ்நாட்டில் ஒரு வசீகர சக்தி இருக்கிறது என்று அனைவரும் அறிந்த உண்மை. சாதாரண மனிதராக தம்வாழ்வைத் தொடங்கிய சிவாஜிராவ் கெய்க்வாட் சூப்பர் ஸ்டார் ரஜினியாக உயர்ந்தது சமகால சரித்திரம். நடிப்பில் சொந்த வாழ்க்கையில் ஆன்மிகத்தில் என ஒவ்வொரு விஷயத்திலும் வெற்றிக் கொடி கட்டி பவனி வரும் ரஜினி அரசியலில் நுழைவதில் மட்டும் மதில் மேல் பூனையாக பல ஆண்டுகாலம் தடுமாறி வருவது ஏன்? இதற்கும் அரசியல் தான் காரணம் என்றாலும் ரஜினியின் காரணம் என்னவாக இருக்கக் கூடும்?

தன்னிகரற்ற நடிகராக ரஜினி

சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும் கோடிக்கணக்கான ரசிகர்களின் அன்புக்குப் பாத்திரமாவது என்பதும் மாயாஜாலத்தில் நடப்பது இல்லை. அதற்குத் தேவை கடுமையான உழைப்பும், தீவிரமாக நம்பும் ஒன்றில் முற்றிலுமாக தன்னை இழப்பதினாலும்தான் ஒருவர் அத்தகைய பெருமையை அடைய முடியும். நடிக்க வந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் கேரவனில் ஓய்வெடுக்க மாட்டாராம் ரஜினி. காலை வந்தவர், மாலை வரை படப்பிடிப்பு முடியும் வரையில் ஷூட்டிங் ஸ்பாட்டில்தான் இருப்பார். மதிய இடைவேளையில் அங்கேயே சிறிது நேரம் புத்தகம் படிப்பார் அல்லது ஓய்வெடுப்பார் ரஜினி.

‘எவன் ஒருவனும் உன்னை விரும்பிவிட்டால், அதை அடைவதில் இருந்து அவனை உலகின் எந்தச் சக்தியாலும் பிரிக்க முடியாது’ எனும் விவேகானந்தரின் பொன்மொழியை தனது வீட்டு வரவேற்பறையில் பதித்துள்ளார். ரஜினிகாந்தால் தான் விரும்பியதை எளிதில் சாதிக்க முடிந்தது. அதற்கான வழிமுறைகளை தானே கண்டடைந்தவர் அவர். தேர்ந்த நடிப்புத் திறனுடன், அதைப் பன்மடங்கு மெருகேற்றக் கூடிய ஜிமிக்ஸ் தெரிந்தவர். ‘எந்திரன்’ படத்தில் ஒரே பாடலில் 100 விதமான ஸ்டைல்களில் தோன்றுகிறார் ரஜினி. ஒவ்வொரு தோற்றத்துக்கும் ஒவ்வொரு உடை என இந்த ஒரு பாடலில் மட்டும் மொத்தம் 100 விதமான உடைகளில் வருகிறார். ஒரே சமயத்தில் ஒரே படத்தில் ரஜினியால் இது நடிப்பு என்ற தெரியும்படியான நடிப்பையும், அதே சமயம் இயல்பாகவும் எதார்த்தமாகவும் பாவனைகளையும் வெளிப்படுத்தி நடிக்க முடியும். ரஜினி ரசிகர்கள் கூட பிரித்துணர முடியாத நுணுக்கம் அது.

எந்த அளவுக்கு தனது கதாபாத்திரத்தை உயர்த்தி காட்ட முடியுமோ அதன் உச்சத்துக்கு சென்று நியாயம் செய்வார் ரஜினி. போலவே உணர்ச்சிப் பிழம்பான காட்சிகளில் இயல்பான நடிப்பால் உருக்கமாக நடித்து கண்கலங்கச் செய்துவிடும் திறமையானவர் ரஜினி. உதாரணத்துக்கு தளபதி படத்தின் பல காட்சிகளை சொல்லலாம். அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் எனில், ‘சின்னத் தாயவள் தந்த ராசாவே, முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே’ பாடல் காட்சியில் நடிப்பின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தி இருப்பார் ரஜினி.

நெகிழ்ச்சி, உருக்கம், கண்ணீர், மகன் என்று சொல்ல முடியாத இயலாமை, தாயின் கூந்ததிலிருந்து உதிரும் ஒற்றை மல்லிப் பூவை, கையில் ஏந்து பார்த்தல் என ரஜினி அப்பாடலைக் காண்பவரின் இதயத்தை தனது நடிப்பால் வென்றிருப்பார். இதுதான் ரஜினியின் தனித்தன்மை. அவரது உடல்மொழி, வேகம், நடை, மேனரிஸம் மற்றும் ஸ்டைல் அவரின் வெற்றியின் முக்கிய காரணிகள்.

தனது கதாபாத்திரத்தின் மனநிலை மாற்றங்களை மிகத் துல்லியமாக நடிப்பில் பிரதிபலிக்கும் ஒருசில கதாநாயகர்களுள் ரஜினியும் ஒருவர் எனலாம். மேலும் இந்தியாவில் மட்டுமல்லாமல் ஜப்பான், கொரியா, சீனா என உலக நாடுகள் பலவற்றில் ரஜினிக்கு ரசிகர்கள் உள்ளனர். ஃபெண்டாஸ்டிக் ஃபெஸ்ட் என்று அமெரிக்காவின் முக்கியமான திரைப்பட விழாவில் பாட்சா இந்த ஆண்டு திரையிடப்பட்டு அமெரிக்க ரசிகர்களின் பலத்த பாராட்டுக்களை பெற்றது. அவரது ஒரு படத்தின் குறைந்தபட்ச வர்த்தகம் ரூ 200 கோடி.
உயிரே போகும் நிலை வந்தாலும் இழக்கக் கூடாதது எதை?
Published on : 23rd November 2017 04:59 PM 

ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.

ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்து விட்டார்.

அதைக் கண்டதும் விவேகானந்தரும், அவரது நண்பரும் துணுக்குற்றனர்.

மனைவியைத் தூக்க நண்பர் முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கி விட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.

பாய்ந்து வந்த மாடு, கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது. அதைக் கண்ட நண்பர் பின்னங்கால் பிடறியில் அடிக்க, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினார். மாடும் விடாமல் அவரைத் துரத்தியது.

அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடி வந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப் போட்டனர்.

விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார்.

அங்கு வந்த நண்பருக்கோ ஒரே ஆச்சரியம். அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார்.

சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது? என்று கேட்டார் நண்பர்.

அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், 'நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒருவித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது' என்று முடித்தார்.

உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.

உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியத்தை விடாதே ! நீ சாதிக்க பிறந்தவன் துணிந்து நில் , எதையும் வெல்.

– சுவாமி விவேகானந்தர்
தர்மமும் அதர்மமும்

By இடைமருதூர் கி. மஞ்சுளா  |   Published on : 24th November 2017 01:22 AM

முதலீடோ, மூலதனமோ இல்லாத ஒரே தொழில் பிச்சை எடுக்கும் தொழில்தான். முன்பெல்லாம் கோயில், தேவாலயம், தர்கா முதலிய புனிதத் தலங்களில் மட்டும்தான் பிச்சைக்காரர்கள் இருப்பார்கள். ஆனால், இன்றைக்கு எல்லா இடங்களிலும் சுற்றித் திரிவதுடன், சாலையில் சிக்னலுக்காக நின்றுகொண்டிருக்கும்போதுகூடப் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


அரசரும் புலவருமான அதிவீரராம பாண்டியன் என்பவர், இழிசெயலாக இருந்தாலும் 'கல்வி' கற்பதற்காக பிச்சைகூட எடுக்கலாம் (வெற்றிவேற்கை -35) என்று பாடிவைத்ததன் காரணம், கல்வி அறிவு பெறுவதன் அவசியத்தை வலியுறுத்தத்தான்.
சில மாற்றுத்திறனாளிகள்கூட ஏதாவது ஒரு பொருளை விற்பனை செய்து, தன்மானத்தோடு வாழ்ந்து வரும்போது, எந்தவித உடற்குறைபாடும் இல்லாதவர்கள்கூட இப்போது பிச்சை எடுப்பதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. 


கிராமப் புறங்களில் விவசாயம் அழிந்து வருவதால், பிழைப்புத் தேடி நகர்ப்புறங்களுக்கு வருபவர்கள் அதிகமாகி இருக்கிறார்கள். அவர்களுக்கு இங்கேயும் வேலை கிடைக்காத நிலையில், பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுகிறார்கள்; அல்லது ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
உள்ளூர்க்காரர்களைவிட, வெளியூர்க்காரர்கள்தான் எல்லா நகரங்களிலும் அதிகமாகப் பிச்சை எடுப்பதாகப் புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது. சமீபத்தில், ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவர் காஞ்சிபுரத்தில் பிச்சை எடுத்ததாகப் பத்திரிகைகளில் செய்தி வெளிவந்தது நினைவிருக்கலாம். மிகவும் பின்தங்கிய ஜார்க்கண்ட், பிகார் உள்ளிட்ட வடமாநிலங்களிலிருந்து தென்னிந்தியாவிலுள்ள நகரங்களுக்குப் பிச்சை எடுப்பதற்காகவே பலர் வருகிறார்கள்.
கேட்டால் வியப்பாக இருக்கும்! இலங்கையைப் பொருத்தவரை ஒரு பிச்சைக்காரரின் சராசரி ஒரு நாள் வருமானம் ரூ.4,000 முதல் 5,000 வரையாம். இது குறித்து தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் ஒருவர் மேற்கொண்ட ஓர் ஆய்வில் இதைத் தெரிவித்துள்ளார்.
வளைகுடா நாடுகளில் பிச்சை எடுக்கும் தொழில் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். ரமலான் பண்டிகையையொட்டி அந்நாட்டு சுற்றுலாத்துறை 360 பிச்சைக்காரர்களைக் கைது செய்துள்ளது. 


பிச்சைக்காரர் ஒருவர், துபையில் ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தது கண்டு காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரித்ததில், 'பிச்சை எடுப்பதன் மூலம் தனக்கு அதிக அளவில் பணம் கிடைப்பதால் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்ததாக' அந்தப் பணக்காரப் பிச்சைக்காரர் கூறியுள்ளார்.


எர்ணாகுளம் - மாவூர் பகுதியின் அருகேயுள்ள குற்றிக்காட்டூர் ஜும்மா பள்ளி வாசலில் 70 வயதான முதியவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாராம். அவர் வைத்திருந்த கைப்பையில் இருந்து 80 ஆயிரம் மற்றும் தபால் அலுவலகத்தில் 13 லட்சம் ரூபாய்க்கான சேமிப்புக் கணக்கு விவரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 


பிச்சை எடுத்த பத்து வயது சிறுமியை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் பிடித்து விசாரித்ததில், 'தலைநகரில் (தில்லி) பிச்சைக்காரர்களை வைத்து வியாபாரம் செய்யும் ஒரு முதலாளியால் தான் கடத்தி வரப்பட்டதாகவும், தினமும் பிச்சை எடுப்பதை அவரிடம் கொடுக்க வேண்டும் என்றும், தான் பணக்கார வீட்டுப் பெண்' என்றும் அவள் கூறியிருக்கிறாள்.
அந்த முதலாளியைக் கண்டுபிடித்து விசாரித்ததில், தன்னிடம் வேலை பார்க்கும் பிச்சைக்காரர்கள் மூலம், நாள் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் சம்பாதிப்பதாக அவர் காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டிருக்கிறார். 


தலைநகர் தில்லியில், பிச்சைக்காரர்களை வைத்துத் தொழில் செய்யும் நூற்றுக்கும் மேற்பட்ட குழுக்கள் இருப்பதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது.
பிச்சைக்காரர்கள் மீது எல்லோரும் இரக்கப்படுவார்கள் என்பதால், இந்தத் தொழிலை காரணம் காட்டி பல சட்டவிரோதமான செயல்கள் எல்லா நகரங்களிலும் நடக்கின்றன. குறிப்பாக, இந்தியாவில் - தமிழ்நாட்டில் அதிகம் இதில் ஈடுபட்டு வருகின்றனர் என்று கூறப்படுகிறது.
மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில்தான் அதிக அளவில் பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். பிச்சைக்காரர்களே இல்லாத தேசமாக இந்தியாவை ஆக்கமுடியுமா என்று பலரும் கனவு கண்டு கொண்டிருந்த வேளையில்தான், 'சென்னையிலாவது அவர்களை இல்லாமல் செய்வோம்' என்று கூறி, 2010 -இல் தீவிரமாகக் களம் இறங்கியது சென்னை மாநகராட்சி.


சட்ட விரோதமான செயல்களுக்குத் துணைபோகும் பிச்சைக்காரர்கள், மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் அநாதைகள் என 748 பேரை இனங்கண்டு, பிடித்த சென்னைப் பெரு மாநகராட்சி, அவர்களில் மனநலம் பாதிக்கப்பட்டோரை நீதிமன்ற அனுமதியுடன் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்கும், சிலரை அவர்களின் உறவினர்களிடமும், உடல்நலம் பாதித்தவர்களை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளிலும், அநாதைகளை ஆதரவற்றோர் இல்லங்களிலும் சேர்த்துள்ளது. 


வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக, மீண்டும் சென்னையில் பிச்சைக்காரர்களும், மனநலம் பாதிக்கப்பட்டோரும், ஆதரவற்றோரும் அதிக அளவில் சுற்றித்திரிவதாகவும், பொதுமக்களுக்குத் தொல்லை கொடுப்பதாகவும் சமூகநல அமைப்புகள் மூலம் தொடர்ந்து புகார்கள் இப்போது மீண்டும் எழுந்திருக்கின்றன. 


'தருமமிகு சென்னை' என்று பெருமிதப்பட்டுப் பாடினார் அருட்பிரகாச வள்ளலார். சென்னையில் மீண்டும் தருமம் செழிக்க வேண்டுமென்றால், 2010-இல் சென்னை மாநகராட்சியால் நல்லது நடந்ததுபோல மீண்டும் நல்லது நடந்தால் மட்டுமே, இது உண்மையான 'தருமமிகு சென்னை' யாகும்.
சிகிச்சைக்கு சிகிச்சை தேவை!

By என். முருகன்  |   Published on : 24th November 2017 01:24 AM  |

நம் நாட்டின் மருத்துவர்கள், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் வேலை செய்கிறார்களா அல்லது எப்படியாவது பணம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தங்கள் மருத்துவப் பணியை செய்கிறார்களா என்ற விவாதம் உருவாகியுள்ளது.
சமீபத்தில் வெளியான 'மெர்சல்' எனும் தமிழ் திரைப்படத்தில் இது பற்றிய வசனம் ஒன்று இருந்ததை மருத்துவர் சங்கங்கள் எதிர்த்துள்ளன. ஆனால், உண்மையான கள நிலைமையை ஆராய்ந்தால், நல்ல சேவை மனப்பான்மையுடன் பணி செய்யும் மருத்துவர்கள் மிகச் சிலரும், பணம் ஈட்டுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பணி செய்யும் மருத்துவர்கள் வெகுபலரும் இருப்பது தெரியவரும்.


தனியார் மருத்துவமனைகள் மிக அதிக அளவில் தொடங்கப்பட்ட பின்னர் பணம் ஒன்றே குறிக்கோள் என்ற வியாபார நோக்கில் இதுபோன்ற மருத்துவமனைகள் செயல்படுவதால், அவற்றில் பணிபுரியும் மருத்துவர்களும் இதுபோன்ற நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள் எனலாம். இதை விரிவாகப் பார்ப்பதற்கு முன், இதுபற்றி ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த பிரபல மருத்துவர் ஒருவர் இதுபற்றிய ஒரு சிறப்பான கட்டுரையை இரண்டு ஆண்டுகளுக்கு முன் எழுதியிருந்தது கவனிக்கத்தக்கது.


அந்தக் கட்டுரையில் தனது சகாவான ஒரு மருத்துவர், கர்னூல் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் தனது மருத்துவத் தொழிலை செய்து வருவதாகவும், அவரை ஒரு நோயாளி அணுகியபோது அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும், அதற்கு ரூ.500 கட்டணம் எனவும் கூறினாராம். அந்த நோயாளி வசதி படைத்தவர் என்பதால், தன்னை ஒரு நகரத்தின் பெரிய மருத்துவமனைக்கு அனுப்பி வைக்குமாறு அந்த கிராம மருத்துவரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதற்கிணங்கிய அந்த மருத்துவர் அவரை ஒரு நகர மருத்துவமனைக்குத் தனது பரிந்துரையுடன் அனுப்பியுள்ளார். சில நாள்கள் கழித்து அந்த நகர மருத்துவமனையிலிருந்து கிராம மருத்துவருக்கு ரூ.1,000 கமிஷன் தொகையாக வந்துள்ளது. அதாவது, ஒரு நோயாளியை தங்களது பெரிய மருத்துவமனைக்குப் பரிந்துரைத்து அனுப்பியதற்கு அந்த மருத்துவருக்கு ஒரு தொகை வழங்கப்படுகிறது.


இதுபோன்று கமிஷனுக்காகப் பல மருத்துவர்களும் நோயாளிகளை பெரிய மருத்துவமனைகளுக்குப் பரிந்துரைத்து அனுப்பி வைக்கிறார்கள். தனது மருத்துவமனையில் அந்த நோயாளியின் சிகிச்சைக்கோ, அறுவை சிகிச்சைக்கோ பெறும் கட்டணத்தை விடவும், அவரைப் பெரிய மருத்துவமனைக்கு அனுப்பும்போது கிடைக்கும் கமிஷன் அதிகமானது எனும்போது, சுலபமாக சம்பாதிக்க முடிகிறது என்று நினைப்பவர்கள் இல்லாமல் இல்லை. எல்லா ஊரகப்புற மருத்துவர்களும் அப்படிப்பட்டவர்கள் அல்ல என்றாலும், இன்றைய தலைமுறை மருத்துவர்கள் மத்தியில் அத்தகைய எண்ணம் அதிகரித்து வருகிறது என்பதை அவர்கள் மனசாட்சியே சொல்லும்.


இதுபோலவே விஜயவாடாவில், கல்லீரல் சிகிச்சைக்காக ஒரு நோயாளி ஒரு மருத்துவரை சந்தித்தபோது, அவருக்கு மருத்துவம் செய்ய ரூ.2,000 ஆகும் எனக் கூறியுள்ளார். அவர் ஒரு பெரிய மருத்துவமனைக்குச் செல்ல விரும்பியதால், அவரை அப்படிப்பட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மருத்துவருக்கு அந்தப் பெரிய மருத்துவமனையால் ரூ.6,000 வழங்கப்பட்டுள்ளது.


இந்த விவரங்களை எல்லாம் குறிப்பிட்டு, அந்தக் கட்டுரையை எழுதிய மருத்துவர், இது ஒரு நியாயமற்ற நடவடிக்கை எனத் தனது சகாக்களான மருத்துவர்களைக் கண்டித்துள்ளார். தனது பணத்தை சரியான அளவில் செலவு செய்து தரமான மருத்துவ சிகிச்சையை நோயாளிகள் பெறுகிறார்களா எனக் கேட்கிறார் அவர். 


நமது நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் 29 கோடி பேர் மருத்துவச் செலவு செய்வதால் மட்டும் ஏழ்மை நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்கிற அவரது பதிவைப் பல ஆய்வுகளும் உறுதிப்படுத்துகின்றன. இந்தக் கொடூரத்தை மருத்துவர்கள் கைவிட வேண்டும் எனவும், இந்திய மருத்துவக் கழகம் அதை உடனடியாகக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் வாதிடுகிறார்.


உடல்நலக் குறைவால் மருத்துவர்களிடம் வரும் எல்லோருக்குமே, தேவை இல்லாத மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. காரணம், இதுபோன்ற மருத்துவப் பரிசோதனைகளில் கிடைக்கும் கட்டணங்களில் ஒரு பகுதி மருத்துவர்களுக்குக் கமிஷனாக வழங்கப்படுகிறது என்பதுதான்.


சென்னையின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனை ஒன்றில் 65 வயது நோயாளி ஒருவர் சேர்க்கப்பட்டு, மூன்று நாள்கள் சிகிச்சை பெற்றுள்ளார். அவருக்கான மொத்த செலவு ரூ.1 லட்சத்து 38 ஆயிரம். நோய் குணமாகி வீட்டிற்கு வந்தபின் அவரை சந்தித்த உறவினர் ஒருவர் கூறியது ஆச்சரியமளிப்பது. அவரது நோய் மிகச் சாதாரணமான ஒன்று எனவும், அவர் உள்நோயாளியாக இருந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை எனவும் கூறியுள்ளார். சிகிச்சை பெற்றவருக்கு ஒரே அதிர்ச்சி.


அந்த உறவினர் ஒரு சிறந்த மருத்துவர். பாம்பின் கால் பாம்பறியும் என்பதுபோல, ரூ.1,38,000 ஏன் கட்டணமாக வசூலிக்கப்பட்டது என்பதை அவர் உடனே புரிந்து கொண்டுவிட்டார். உள்நோயாளியாக இருந்தவருக்கு அறை வாடகை மற்றும் மருத்துவப் பரிசோதனைக்கான செலவுகளே அதிகமாக ஆகியுள்ளன என்பதை மருத்துவரான அந்த உறவினர் விளக்கியபோதுதான் தெரிந்தது மருத்துவமனைகள் எப்படி ஏமாற்றுகின்றன என்பது.
இதைப்போலவே, மற்றுமொரு பெரிய தனியார் மருத்துவமனையில் ஒருவர் நெஞ்சு வலி எனக்கூறி உள்நோயாளியாகச் சேர்க்கப்பட்டார். எல்லா மருத்துவப் பரிசோதனைகளும் செய்யப்பட்டு, அவருக்கு இதய ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதால் 'பைபாஸ்' எனப்படும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடித்தது. ஒன்பது நாள் கழித்து குணமாகி வீடு திரும்பினார். அவருக்கான மொத்த செலவு ரூபாய் 9 லட்சத்து 40 ஆயிரம்.
அதே நேரத்தில், அவருக்குத் தெரிந்த ஒருவர் அதே அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குணமாகி, ஏழு நாள்கள் மருத்துவமனையில் இருந்து வெளியேறி உள்ளார். அவருக்கான மொத்த செலவு ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் மட்டுமே.


இது எப்படி என ரகசியமாக அந்த மருத்துவமனையில் வேலை செய்யும் ஒருவரிடம் விசாரித்தபோது, 'நீங்கள் மருத்துவமனைக்கு வந்து சேரும்போது, உங்களைப் பற்றிய விவரங்களை ஒரு படிவத்தில் பூர்த்தி செய்யச் சொல்வார்கள். உங்களுக்கு மற்ற நோயாளிகளுடன் தங்கும் பொது வார்டு வேண்டுமா அல்லது தனி அறை வேண்டுமா என்பது போன்ற கேள்விகள் இருக்கும். 


இதை நீங்கள் பூர்த்தி செய்து கொடுக்கும்போதே நீங்கள் பணக்காரரா, நடுத்தர வர்க்கத்தவரா என்பது தெரிந்துவிடும். அதை அடிப்படையாகக் கொண்டு உங்களது அறை, உணவு வகைகள் மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, அதிகக் கட்டணம் வசூலிக்கப்படும்.
உங்களுக்குத் தெரிந்த அந்த நண்பர் பொது வார்டில் தங்கி, சில பரிசோதனைகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டு, அறுவை சிகிச்சை செய்யப்படுவதால் அவருக்குக் குறைந்த செலவே ஆகியிருக்கிறது' என்கிற பதில் கிடைத்தது.


அதிகப் பணம் செலவு செய்யத் தகுதி இருப்பவர்கள் இதுபோன்ற மருத்துவமனைகளுக்குச் சென்று பணம் செலவு செய்து குணப்படுத்திக் கொள்ளலாமே, அதில் என்ன தவறு எனக் கேட்கலாம். லாப நோக்கில் மருத்துவச் செலவுகளைப் பெருக்கும் கலாசாரம் பெரிய மருத்துவமனைகளில் தொடங்கி சிறிய மருத்துவமனைகளுக்கும், மருத்துவர்கள் மத்தியிலும் ஊடுருவுகிறதே என்பதுதான் நமது கவலை.


முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை எல்லா உணவு விடுதிகளிலும் சைவ உணவு வெறும் ரூ.10 அல்லது ரூ.15 என்றுதான் இருந்தது. அது 'கஃபே'க்களும், 'விலாஸ்'களும் இருந்த காலம். 'பவன்'கள் வரத்தொடங்கி சைவ உணவுக்கான கட்டணத்தை இருமடங்காக்கிய பிறகு, எல்லா விடுதிகளும் அதே கட்டணத்தை வசூலிக்கத் தொடங்கி, இப்போது ரூ.80, ரூ.100 என்று ஆகிவிட்டிருப்பதைப் போலத்தான் இதுவும்.


பல கோடி செலவழித்துப் படிக்கிறோம், வங்கிகளில் கடன் வாங்கிப் பல கோடிகள் முதலீடு செய்து மருத்துவ சிகிச்சைக்கான உபகரணங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறோம். அதை நோயாளிகளிடம்தானே வசூலித்தாக வேண்டும் என்பதுதான் இதுபோல அடாவடியாகவும், முறைகேடாகவும் கட்டணம் வசூலிக்கும் மருத்துவர்களும், மருத்துவமனைகளும் தரும் விளக்கம். 


இவர்களால், வங்கிக் கடனில் வாங்கப்படும் விலையுயர்ந்த உபகரணங்களை, அரசு மக்களின் வரிப்பணத்தில் வாங்கி, அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்த முடியும்.
ஆனால், கிராமங்களுக்கும், ஊரகப் பகுதிகளுக்கும் சென்று வேலை பார்க்கவும், ஏழை எளியவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் எத்தனை மருத்துவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்கிற கேள்விக்கு, இன்றைய இளைய தலைமுறை மருத்துவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?


இது எங்கே போய் முடியப்போகிறது என்று தெரியவில்லை. திருவள்ளுவருக்கு இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்திருக்கிறது. அதனால்தான் எழுதினார் - பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை!
உயிர் காக்கும் 51 மருந்துகளின் விலை குறைப்பு

Added : நவ 25, 2017 05:07



புதுடில்லி: உயிர் காக்கும் 51 அத்தியாவசிய மருந்துகளுக்கான விலை, 6 சதவீதம் முதல் 53 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருந்துகள் விலையை நிர்ணயிக்கும், என்.பி.பி.ஏ., எனப்படும் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இதயநோய், புற்று நோய், மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்கள் உட்பட உயிர் காக்கும் 51 அத்தியாவசிய மருந்துகளுக்கான விலை, 6 சதவீதம் முதல் 53 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பை, மருந்து விற்பனை நிறுவனங்கள் ஏற்று, மருந்துகளின் விலையை உடனடியாக குறைக்க வேண்டும். உதாரணமாக நெஞ்சு வலியால் பாதிக்கப்படுபவர்களுக்கு, ஊசி மூலம் செலுத்தப்படும், 'அல்டிபிளாசி' விலை, 28 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அறிக்கையில், உயிர்காக்கும் 36 வகையான மருந்துகளுக்கு அதிகபட்ச விலையை நிர்ணயித்தும், 15 உயிர்காக்கும் மருந்துகளின் விலையை மாற்றி அமைத்தும் என்.பி.பி.ஏ., அறிவித்துள்ளது.

அஞ்சலக கணக்கு; ஆதார் கட்டாயம்

Added : நவ 25, 2017 03:44

 


சென்னை : அஞ்சலக சேமிப்பு வங்கி வாடிக்கையாளர்கள், டிச., 31க்குள் தங்களின் ஆதார், மொபைல் போன் எண் விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இது குறித்த அஞ்சல்துறை அறிவிப்பு: மத்திய அரசு உத்தரவுப்படி, டிச., 31க்குள், அஞ்சலக கணக்குகளுடன் ஆதார், மொபைல் எண்களை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்திய அஞ்சல்துறை, இதற்கான பணியை தீவிரப்படுத்தி உள்ளது. எனவே, இந்திய அஞ்சலக சேமிப்பு வங்கி வாடிக்கையாளர்கள், தங்கள் ஆதார் அட்டை நகலுடன், மொபைல் போன் எண், அஞ்சல கணக்கு எண்ணை குறிப்பிட்டு, அஞ்சலகத்திலோ, தபால்காரர்களிடமோ சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

NEWS TODAY 07.07.2026