Saturday, November 25, 2017

உயிரே போகும் நிலை வந்தாலும் இழக்கக் கூடாதது எதை?
Published on : 23rd November 2017 04:59 PM 

ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.

ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்து விட்டார்.

அதைக் கண்டதும் விவேகானந்தரும், அவரது நண்பரும் துணுக்குற்றனர்.

மனைவியைத் தூக்க நண்பர் முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கி விட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.

பாய்ந்து வந்த மாடு, கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது. அதைக் கண்ட நண்பர் பின்னங்கால் பிடறியில் அடிக்க, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினார். மாடும் விடாமல் அவரைத் துரத்தியது.

அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடி வந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப் போட்டனர்.

விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார்.

அங்கு வந்த நண்பருக்கோ ஒரே ஆச்சரியம். அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார்.

சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது? என்று கேட்டார் நண்பர்.

அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், 'நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒருவித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது' என்று முடித்தார்.

உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.

உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியத்தை விடாதே ! நீ சாதிக்க பிறந்தவன் துணிந்து நில் , எதையும் வெல்.

– சுவாமி விவேகானந்தர்

No comments:

Post a Comment

‘Indian doctors and healthcare professionals are a class apart’

‘Indian doctors and healthcare   professionals are a class apart’ Tamil Nadu Governor R.N. Ravi handing over a degree to a graduand at the c...