Saturday, November 25, 2017

தர்மமும் அதர்மமும்

By இடைமருதூர் கி. மஞ்சுளா  |   Published on : 24th November 2017 01:22 AM

முதலீடோ, மூலதனமோ இல்லாத ஒரே தொழில் பிச்சை எடுக்கும் தொழில்தான். முன்பெல்லாம் கோயில், தேவாலயம், தர்கா முதலிய புனிதத் தலங்களில் மட்டும்தான் பிச்சைக்காரர்கள் இருப்பார்கள். ஆனால், இன்றைக்கு எல்லா இடங்களிலும் சுற்றித் திரிவதுடன், சாலையில் சிக்னலுக்காக நின்றுகொண்டிருக்கும்போதுகூடப் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


அரசரும் புலவருமான அதிவீரராம பாண்டியன் என்பவர், இழிசெயலாக இருந்தாலும் 'கல்வி' கற்பதற்காக பிச்சைகூட எடுக்கலாம் (வெற்றிவேற்கை -35) என்று பாடிவைத்ததன் காரணம், கல்வி அறிவு பெறுவதன் அவசியத்தை வலியுறுத்தத்தான்.
சில மாற்றுத்திறனாளிகள்கூட ஏதாவது ஒரு பொருளை விற்பனை செய்து, தன்மானத்தோடு வாழ்ந்து வரும்போது, எந்தவித உடற்குறைபாடும் இல்லாதவர்கள்கூட இப்போது பிச்சை எடுப்பதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. 


கிராமப் புறங்களில் விவசாயம் அழிந்து வருவதால், பிழைப்புத் தேடி நகர்ப்புறங்களுக்கு வருபவர்கள் அதிகமாகி இருக்கிறார்கள். அவர்களுக்கு இங்கேயும் வேலை கிடைக்காத நிலையில், பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுகிறார்கள்; அல்லது ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
உள்ளூர்க்காரர்களைவிட, வெளியூர்க்காரர்கள்தான் எல்லா நகரங்களிலும் அதிகமாகப் பிச்சை எடுப்பதாகப் புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது. சமீபத்தில், ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவர் காஞ்சிபுரத்தில் பிச்சை எடுத்ததாகப் பத்திரிகைகளில் செய்தி வெளிவந்தது நினைவிருக்கலாம். மிகவும் பின்தங்கிய ஜார்க்கண்ட், பிகார் உள்ளிட்ட வடமாநிலங்களிலிருந்து தென்னிந்தியாவிலுள்ள நகரங்களுக்குப் பிச்சை எடுப்பதற்காகவே பலர் வருகிறார்கள்.
கேட்டால் வியப்பாக இருக்கும்! இலங்கையைப் பொருத்தவரை ஒரு பிச்சைக்காரரின் சராசரி ஒரு நாள் வருமானம் ரூ.4,000 முதல் 5,000 வரையாம். இது குறித்து தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் ஒருவர் மேற்கொண்ட ஓர் ஆய்வில் இதைத் தெரிவித்துள்ளார்.
வளைகுடா நாடுகளில் பிச்சை எடுக்கும் தொழில் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். ரமலான் பண்டிகையையொட்டி அந்நாட்டு சுற்றுலாத்துறை 360 பிச்சைக்காரர்களைக் கைது செய்துள்ளது. 


பிச்சைக்காரர் ஒருவர், துபையில் ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தது கண்டு காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரித்ததில், 'பிச்சை எடுப்பதன் மூலம் தனக்கு அதிக அளவில் பணம் கிடைப்பதால் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்ததாக' அந்தப் பணக்காரப் பிச்சைக்காரர் கூறியுள்ளார்.


எர்ணாகுளம் - மாவூர் பகுதியின் அருகேயுள்ள குற்றிக்காட்டூர் ஜும்மா பள்ளி வாசலில் 70 வயதான முதியவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாராம். அவர் வைத்திருந்த கைப்பையில் இருந்து 80 ஆயிரம் மற்றும் தபால் அலுவலகத்தில் 13 லட்சம் ரூபாய்க்கான சேமிப்புக் கணக்கு விவரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 


பிச்சை எடுத்த பத்து வயது சிறுமியை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் பிடித்து விசாரித்ததில், 'தலைநகரில் (தில்லி) பிச்சைக்காரர்களை வைத்து வியாபாரம் செய்யும் ஒரு முதலாளியால் தான் கடத்தி வரப்பட்டதாகவும், தினமும் பிச்சை எடுப்பதை அவரிடம் கொடுக்க வேண்டும் என்றும், தான் பணக்கார வீட்டுப் பெண்' என்றும் அவள் கூறியிருக்கிறாள்.
அந்த முதலாளியைக் கண்டுபிடித்து விசாரித்ததில், தன்னிடம் வேலை பார்க்கும் பிச்சைக்காரர்கள் மூலம், நாள் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் சம்பாதிப்பதாக அவர் காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டிருக்கிறார். 


தலைநகர் தில்லியில், பிச்சைக்காரர்களை வைத்துத் தொழில் செய்யும் நூற்றுக்கும் மேற்பட்ட குழுக்கள் இருப்பதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது.
பிச்சைக்காரர்கள் மீது எல்லோரும் இரக்கப்படுவார்கள் என்பதால், இந்தத் தொழிலை காரணம் காட்டி பல சட்டவிரோதமான செயல்கள் எல்லா நகரங்களிலும் நடக்கின்றன. குறிப்பாக, இந்தியாவில் - தமிழ்நாட்டில் அதிகம் இதில் ஈடுபட்டு வருகின்றனர் என்று கூறப்படுகிறது.
மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில்தான் அதிக அளவில் பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். பிச்சைக்காரர்களே இல்லாத தேசமாக இந்தியாவை ஆக்கமுடியுமா என்று பலரும் கனவு கண்டு கொண்டிருந்த வேளையில்தான், 'சென்னையிலாவது அவர்களை இல்லாமல் செய்வோம்' என்று கூறி, 2010 -இல் தீவிரமாகக் களம் இறங்கியது சென்னை மாநகராட்சி.


சட்ட விரோதமான செயல்களுக்குத் துணைபோகும் பிச்சைக்காரர்கள், மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் அநாதைகள் என 748 பேரை இனங்கண்டு, பிடித்த சென்னைப் பெரு மாநகராட்சி, அவர்களில் மனநலம் பாதிக்கப்பட்டோரை நீதிமன்ற அனுமதியுடன் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்கும், சிலரை அவர்களின் உறவினர்களிடமும், உடல்நலம் பாதித்தவர்களை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளிலும், அநாதைகளை ஆதரவற்றோர் இல்லங்களிலும் சேர்த்துள்ளது. 


வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக, மீண்டும் சென்னையில் பிச்சைக்காரர்களும், மனநலம் பாதிக்கப்பட்டோரும், ஆதரவற்றோரும் அதிக அளவில் சுற்றித்திரிவதாகவும், பொதுமக்களுக்குத் தொல்லை கொடுப்பதாகவும் சமூகநல அமைப்புகள் மூலம் தொடர்ந்து புகார்கள் இப்போது மீண்டும் எழுந்திருக்கின்றன. 


'தருமமிகு சென்னை' என்று பெருமிதப்பட்டுப் பாடினார் அருட்பிரகாச வள்ளலார். சென்னையில் மீண்டும் தருமம் செழிக்க வேண்டுமென்றால், 2010-இல் சென்னை மாநகராட்சியால் நல்லது நடந்ததுபோல மீண்டும் நல்லது நடந்தால் மட்டுமே, இது உண்மையான 'தருமமிகு சென்னை' யாகும்.

No comments:

Post a Comment

‘Indian doctors and healthcare professionals are a class apart’

‘Indian doctors and healthcare   professionals are a class apart’ Tamil Nadu Governor R.N. Ravi handing over a degree to a graduand at the c...