Saturday, November 25, 2017

மற்றவர் பேசும் போது அதைக் கவனிக்காமல் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் நோண்டுவதும் ஒரு மன நோய் தான்!

By மாலதி சுவாமிநாதன்  |   Published on : 24th November 2017 03:18 PM  | 

நிகழ்வு 1:

“டாக்டர் கிட்ட போனீங்களே, என்ன ஆச்சு?”
“டாக்டர் ஸ்டென்ட் போட...” சொல்லி முடிப்பதற்குள்
“சரி, அது இருக்கட்டும், நயூஸ் ஆரம்பித்துவிட்டது”. (செய்திகளைப் பார்த்தபடியே கையில் இருக்கும் ஃபோனை நோண்டினார்)

நிகழ்வு 2:

அவர்: “ஹலோ, கேள்விப் பட்டேன்.”
இவர்: “அவ்வளவு வேகமா நடந்து போச்சு”(விசும்பல் சத்தம்).
அவர் : “ஆமாம், ரொம்ப கஷ்டம் தான்”.
இவர் : “உனக்குத் தான் தெரியுமே…”
அவர் : (டக் டக் என்று எதிர் முனையில் கணினி சத்தம்) ஓ!
இவர் : (கணினி சத்தம் கேட்க, உள்ளூர “ஏன் கூப்பிட்டு விட்டு, இப்படி”?) என்று தோன்கிறது.
அவர்: “ம், சொல்லு”(டைப் அடிக்கும் சத்தம் தொடர்ந்தது).
இவர்: “நான் கவனமா இருந்திருக்கலாம்”
அவர்: “... அப்புறமா” தொலைப்பேசி துண்டிக்க பட்டது.
இவர்:  (“அவரே ஃபோன் செய்து விட்டு எண்ணிடமும் ஒழுங்காகப் பேசாமல் அங்கு எதையோ டைப் செய்து கொண்டிருந்ததும் இல்லாமல் பேசும் போதே இணைப்பைத் துண்டித்துவிட்டார்!”)

இவை இரண்டுமே, நிஜ வாழ்வின் நிகழ்வுகள். இரண்டிலும்,  ஒருவர் தம்மை பற்றிக் கேட்டதால், தன் விவரத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அப்பொழுது கேட்டவர் தன் வேலையில் கவனத்தை செலுத்த, அரவணைப்பு மறுக்கப் படுகிறது. இதை பல்பணியாக்கம் (multitasking) என்ற போர்வையில் சேர்த்து விட முடியாது.

அக்கறையும், நிராகரிப்பும் நம்மால் பல விதங்களில் காட்ட முடியும். இரண்டையுமே, சைகைகளிலும், பேச்சிலும் தெரிவிப்போம்.

மற்றவர்களை நலம் கேட்கும் போது அக்கறை வெளிப்படும். பொதுவாக, மற்றவர்களைப் பரிவோடு நலம் விசாரிப்போம். அவர்களைச் சான்றவர்களை பற்றியும் கேட்போம், “எப்படி இருக்கீங்க? வீட்டில்? வேலை எல்லாம் நல்லா போய் கொண்டு இருக்கா?” என்று. இப்படிக் கேட்கும் விதத்திலேயே உறவுக்குக் கொடுக்கப்படும் இடமும், முக்கியத்துவமும் தெளிவு படுகிறது!

இதை நிராகரிப்பு கலந்த வகையிலும் காட்ட முடியும். ஒருவரைப் பார்த்ததும், நம் மனதில், “இன்றைக்கு என்ன கேட்கலாம்?” என்பதே மனதில் ஓடும். அவர்கள் எதோ தகவல் சொல்ல வர, “ஆ ஆ”, “சரி, இருக்கட்டும்”, “அதை விடு” என்று நிறுத்தி விட்டு, “எனக்கு, இதை செஞ்சிட்டு” என்று சொல்லுவது, நன்றிக்கோ, ஸாரீக்கோ இடமே இல்லை.

இன்னொரு வடிவமும் எடுப்பதும் உண்டு. ஒருவரை அழைத்து விட்டு, அவர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது, குறுஞ்செய்தி, வாட்ஸ்அப், டிவி, பார்த்துக் கொண்டு இருப்பது. அவர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள், இல்லை வேறு எங்கேயோ பார்த்துக் கொண்டு, ஈமேய்ல் டைப் அடித்தபடியோ, கேம்ஸ் ஆடியபடியோ இருக்கக் கூடும்!

“அது இருக்கட்டும்” மற்றும் “அது கிடக்கட்டும்” உடன் சேர்ந்ததே. இவை என்ன தெரிவிக்கின்றன? மற்றவரின் நிலையோ, நிலைமையைத் தெரிந்து கொள்வதோ முக்கியமில்லை என்று. அதாவது, தமக்கு வேண்டிய வேலையை முடிப்பதில் மட்டும் கவனம் செலுத்துவது. மற்றவரை ஒரு ஜீவனாகக் கருதாமல் அவர்களை வெறும் பொருட்கள் போல்க பார்ப்பது தெரிகிறது.

இதில், மற்றவர்களை தமக்கு பயனுள்ள “பொருளாக” மட்டும் கருதுவார்கள். இப்படிச் செய்வதை “ஆப்ஜெக்டிஃபிக்கேஷன்” (objectification) என்று சொல்வார்கள். இதில் சுயநலம் தெரியும், மற்றவர்களைப் பற்றிய சிந்தனை மிகக் குறைவாக இருக்கும். இவர்களைப் பொருத்த வரை உறவைத் தராசில் போட்டு, ஏதேனும் உபயோகமாக இருக்கும் என்று எண்ணினால் மட்டும் உறவைத் மதிப்பார்கள் .

இப்படிச் செய்வோருடன், மற்றவர்கள் உறவு வைத்துக் கொள்வது பல வகைகளில் இருக்கும். சிலர் இவர்களிடம் உள்ள வேறு நல்ல குணாதிசயங்களினால் இதைப் பொறுத்து கொள்வார்கள். இவர்களிடமிருந்து தமக்கு வேறு ஏதாவது செய்து கொள்வதாலும், இந்த உறவினால் மற்றவரிடம் தம்மை உச்ச நிலையில் காட்டிக் கொள்வதற்கும்  “ஜால்ரா”வாக மாறி விடுவார்கள். வேறு சிலர் இப்படிப்பட்ட உறவை முறித்து விடுவார்கள், சிலருக்குத் தாங்க முடியாததால் மன உளைச்சலுக்கு ஆளாகலாம்.

பல சமயங்களில் நாம் மற்றவரைப் பற்றி சிந்திக்காமலேயே, அவர்களைப் பொருளாக அணுகி விடுகிறோம். நிராகரிப்பதோ, ஒரு பொருளாக கருதுவதோ நமக்குப் பிடிக்காது. பல நேரங்களில், பணிபுரியும் சிப்பந்திகளை ஒரு மனிதராகப் பார்க்க மாட்டோம், அவர்கள் செய்யும் வேலையே அவர்களின் அடையாளமாக நாம் பார்ப்போம். இதுவும் நிராகரிப்பு தான். “வசூல் ராஜா” திரைப்படத்தில் ஒரு வயதானவர் இதைத் தான் ஆணி அடித்தார் போல் தெரிவிப்பார் “நாற்பது வருஷமா வேலை செய்கிறேன், என் பேர் கூடத் தெரியாது”.

அக்கறையோடு இருப்பது இதமாக இருந்தாலும் பின் ஏன் நிராகரிப்பு செய்கிறார்கள்? மற்றவர்கள் அலட்சியப் படுத்துவது, ஒதுக்கி வைப்பதைப் பார்த்து தானும் அதேபோல் இருக்க வேண்டும் என்று எண்ணிச் செய்து வருவார்கள்.

“வைக்க வேண்டிய இடத்தில் வைக்கணும்” என்ற எண்ணம் உள்ளவர்களாகச் செயல்படுபவர்கள் வேறுபாடு காட்டும் மனப்பான்மையைக் காட்டுகிறது. அடிமைகளை வைத்தே வாழ்க்கையை ஓட்ட எண்ணுபவர்கள். உறவுகளை தன் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மட்டும் வைத்துக் கொள்வார்கள். சமநிலையில் இருக்க அஞ்சி இப்படிச் செய்வதும் உண்டு.

ஏதோ ஒரு இழப்பைச் சந்தித்திருக்கலாம் அதனாலேயே அக்கறை காட்ட அஞ்சி நடக்க, நிராகரிப்பே அவர்களின் குணமாகிவிடும்.

தெளிவு இல்லாமல், தன்னுறுதி இல்லாததால் இப்படிச் செய்வதும் உண்டு. இதை மறைக்கவே தன்னை உயர்ந்தவராகக் காட்டுவதாக நினைத்து ஆணவம் என்ற ஆடை அணிவார்கள். இவை எல்லாமே நிராகரிப்பின் பல தோற்றங்கள். தன்னைச் சிறிய வட்டத்துக்குள் சுருக்கி வைத்துக் கொள்கிறார்கள்.

டாம் டூம் என இருப்பதும், அதிகாரம் செய்வதால் மட்டும் வெல்ல முடியும் என்று நம்புவதால் பலர் இப்படிச் செய்வார்கள். இவையும், நிராகரிப்பதும்,  பாதுகாப்பின்மையைக் காட்டுகிறது.

மாற வேண்டும் என்றால், வேறு வழி தெரியாமலேயே இருக்கிறோமா இல்லை வழிகளை அரிந்தும் பின் பற்ற மறுப்பதால் இப்படி எல்லாம் செய்கிறோமா என்று சிந்தித்தால், விடை கிடைக்கலாம்!

உறவை மதிப்பவர்கள் தான் என்ன செய்து கொண்டிருந்தாலும் தன் நேரத்தை மற்றவருடன் செலவிடுவார்கள். அக்கறை உள்ளவர்களை அடையாளம் கண்டு கொள்வது மிகச் சுலபம். இவர்கள் சைகையால் வரவேற்பார்கள், கண்களைப் பார்த்து பேசுவார்கள். மற்றவருடன் இருக்கும் நேரம் தன் வேலையை அந்த நிமிடத்திற்கு நிறுத்தி வைத்துக் கொள்வார்கள். இதை க்வாலிடி டைம் என்றும் சொல்லலாம், இதனாலேயே சுமுகமான சூழல் உண்டாகும், கேட்பதற்கும், பேசுவதற்கும்!

அக்கறை காட்டுவதா? நிராகரிப்பதா?

மாலதி சுவாமிநாதன்
மனநல மற்றும் கல்வி ஆலோசகர்
malathiswami@gmail.com

No comments:

Post a Comment

NEWS TODAY 28.11.2024