Monday, April 16, 2018

மாஜி,தலைமை செயலர்,ராவ்,மந்திரி,தங்கமணி,பாய்ச்சல்dinamalar 16.04.2018

ஜெ., மரணம் தொடர்பான விசாரணை கமிஷனில், முன்னாள் தலைமை செயலர், ராமமோகன ராவ், பொய்யான தகவல்களை கூறியுள்ளார். சசிகலா குடும்ப துாண்டுதலால், அவர் தடம் மாறி பேசுகிறார். ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று, சிகிச்சை அளிக்க நாங்கள் வலியுறுத்தினோம்,'' என, தமிழக மின் துறை அமைச்சர், தங்கமணி தெரிவித்துள்ளார்.





ஜெயலலிதா மரணம் தொடர்பாக, நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையிலான கமிஷன் விசாரித்து வருகிறது. தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலர், ராமமோகன ராவ், சமீபத்தில், இந்த கமிஷனில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, 'உடல் நலக்குறைவால், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், ஜெயலலிதா சிகிச்சை பெற்றார். 2016 செப்., 28ல்,

மருத்துவமனையில், காவிரி விவகாரம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

ஆலோசனை :

கூட்டத்தில், அப்போதைய அமைச்சர்கள், பன்னீர் செல்வம், பழனிசாமி, சீனிவாசன், விஜயபாஸ்கர் மற்றும் லோக்சபா துணை சபாநாயகர், தம்பிதுரை, சுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணன், அப்போதைய அரசு ஆலோசகர், ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிலர் பங்கேற்றனர்.

'அந்தக் கூட்டத்தில், ஜெயலலிதாவை, வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று, சிகிச்சை அளிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. 'ஆனால், அமைச்சர்கள் தடையாக இருந்தனர். ஜெ., இறந்த போது, அமைச்சர்கள், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்' என, ராவ் தெரிவித்ததாக, தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், 'விசாரணை கமிஷனில், ராமமோகன ராவ், பொய்யான தகவல்களை கூறியுள்ளார்' என, மின் துறை அமைச்சர் தங்கமணி ஆவேசத்துடன் கூறியுள்ளார்.


இது தொடர்பாக, நாமக்கல்லில் நேற்று அவர் அளித்த பேட்டி: முன்னாள் தலைமை செயலர், ராமமோகன ராவ், எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். யாரையோ திருப்திப்படுத்த, தவறான தகவலை கூறுகிறார். ஜெயலலிதாவை, சிகிச்சைக்காக, வெளிநாடு அழைத்து செல்ல, நாங்கள் தடையாக இருந்ததாக, அவர் கூறுவது தவறானது.

உள்நோக்கம் :

சிகிச்சை அளிக்க, வெளிநாடு அழைத்து செல்ல வேண்டும் என, நாங்கள் வலியுறுத்தினோம்; அவர் தான், முடிவு எடுக்கவில்லை. ஜெயலலிதா இறந்த போது, நானும், அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோரும் அங்கிருந்ததாக, ராமமோகன ராவ் கூறுவதும் தவறு. அப்போது, நான், அமைச்சர் சரோஜா, சுந்தரம், எம்.பி., ஆகியோர், நாமக்கல் மாவட்டம், ஆர்.புதுப்பட்டி கோவில் விழா ஒன்றில், ஜெ., நலம் பெற யாகம் நடத்திக் கொண்டிருந்தோம். அமைச்சர் வேலுமணி, திருவனந்தபுரத்தில், அரசு தொடர்பான நிகழ்ச்சியில் இருந்தார்.

ஜெ., மரணம் அடைந்து, ஒன்றரை ஆண்டுகளுக்கு பின், ராமமோகன ராவ் இவ்வாறு கூறுவதில், அரசியல் உள்நோக்கம் உள்ளது. சசிகலாவின் குடும்ப உறுப்பினர்கள் துாண்டுதலில், அவர் தடம் மாறி பேசுகிறார். இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.

- நமது நிருபர் -

Related Tags மாஜி தலைமை செயலர் ராவ் மந்திரி தங்கமணி பாய்ச்சல்


மாவட்ட செய்திகள்

சேலம் ஜங்சன் வழியாக செல்லும் ரெயில்கள் இயக்கத்தில் மாற்றம்



சேலம் ஜங்சன் வழியாக செல்லும் ரெயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 16, 2018, 04:15 AM
சூரமங்கலம்,

இது தொடர்பாக சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சேலம் ரெயில்நிலையம் அருகே உள்ள போடி நாயக்கன்பட்டி, ஆண்டிப்பட்டி, அண்ணாநகர் பகுதிகளை சேலம் நகரத்துடன் இணைக்கும் சிறிய நீர்வழிப்பாலத்தை மாற்றி, பெரிய தரை கீழ்பாலமாக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள நீர்வழிப்பாதை மழைநீர் வடிகாலுக்கு அமைக்கப்பட்டு இருந்தாலும் பொதுமக்கள் அதை ரெயில் தடத்தை கீழே கடக்க பயன் படுத்தி வந்துள்ளனர்.

ஆனாலும், மழை காலத்தில் அங்கே பெருமளவு நீர் தேங்குவதால், அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுவதுடன், ரெயில்தடத்தின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும் வாய்ப்பு உள்ளது. மேலும், இந்த சிறுபாலம் சேலம் ரெயில்நிலையத்தின் மிக அருகில் 1 கி.மீ. தூரத்தில் இருப்பதால், பெருமளவு ரெயில் இயக்கம் பாதிக்கப்படும் காரணத்தால், இதனை இடித்து அகலப்படுத்தும் அல்லது மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட இயலவில்லை.

போடிநாயக்கன்பட்டி, ஆண்டிப்பட்டி, அண்ணா நகர் பகுதிகளில் வசிக்கும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன் பெறும் வகையில், இந்த பகுதிகளை சேலம் நகரத்துடன் இணைக்கும் வகையிலும், சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா, பன்னீர்செல்வம் எம்.பி. ஒத்துழைப்புடன், தெற்கு ரெயில்வே தலைமையக அதிகாரி களுடன் கலந்தாலோசித்தார். பின்னர் அவர், அந்த இடத்தில் பஸ், லாரி போன்ற பெரிய வாகனங்கள் கூட வந்து செல்லும் அளவுக்கு ஒரு பெரிய தரை கீழ்பாலத்தை கட்ட பணிகளை இன்று (திங்கட் கிழமை) தொடங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த பெரிய அளவிலான மெகா பிளாக் என்றழைக்கப்படும் பணிகளால், பயணிகள் ரெயில்களின் இயக்கம் இன்று முதல் வருகிற 20-ந் தேதி வரை பெரும் மாற்றங்களுக்கு உள்ளாவதுடன், சரக்கு ரெயில்களின் இயக்கம் இன்று மற்றும் 20-ந் தேதி முழுமையாக நிறுத்தப்படும். இந்த காலக்கட்டத்தில் 26 கான்கிரீட் கூடுகள் செய்யப்பட்டு ரெயில்தடத்தின் கீழ் நிறுவப்பட உள்ளன.

இந்த பணிகள் நடைபெறுவதன் மூலம் சுமார் 50 ஆண்டுகளாக வைக்கப்பட்டு வந்த போடிநாயக்கன்பட்டி, ஆண்டிப்பட்டி, அண்ணாநகர் பகுதி மக்களின் வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டு, அப்பகுதியை சேலம் நகரத்துடன் இணைக்க உதவும். இந்த தரை கீழ்பாலப் பணிகள் ரூ.2.83 கோடி திட்ட மதிப்பீட்டில், பன்னீர்செல்வம் எம்.பி., வெங்கடாசலம் எம்.எல்.ஏ. மற்றும் தமிழக அரசு, சேலம் மாநகராட்சியின் நிதி பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
மாநில செய்திகள்

அதிகாரிகளின் ஆசைக்கு இணங்க மாணவிகளை கட்டாயப்படுத்திய பேராசிரியை ‘வாட்ஸ்-அப்’பில் ஆடியோ பரவியதால் பணியிடை நீக்கம்



அதிகாரிகளின் ஆசைக்கு இணங்க வேண்டும் என்று 4 மாணவிகளை பேராசிரியை கட்டாயப் படுத்தும் பேச்சு ‘வாட்ஸ்- அப்’பில் பரவியது. இதனைத்தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஏப்ரல் 16, 2018, 04:00 AM

அருப்புக்கோட்டை,

அதிகாரிகளின் ஆசைக்கு இணங்க வேண்டும் என்று 4 மாணவிகளை பேராசிரியை கட்டாயப் படுத்தும் பேச்சு ‘வாட்ஸ்- அப்’பில் பரவியது. இதனைத்தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

உரையாடல்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியை ஒருவர் 4 மாணவிகளுடன் செல்போனில் பேசிய பேச்சு ‘வாட்ஸ்-அப்’பில் பரவி வருகிறது. மாணவிகள் 4 பேரும் ஒன்றாக இருப்பதை உறுதி செய்துகொண்டு பேசும் அந்த பேராசிரியை, தான் சொல்லவரும் தகவல் ரகசியமாக இருக்கவேண்டியது என கூறுகிறார்.

தற்போதுதான் பல்கலைக் கழகத்தில் இருந்து வந்தேன். உயர் அதிகாரிகள் கல்லூரி மாணவிகளை சில விஷயங்களுக்காக எதிர்பார்க்கிறார்கள். பல்கலைக்கழகத்தில் என்னென்ன செய்யமுடியுமோ அதையெல்லாம் பண்ண முடியும். உங்கள் பெயர்கள் பட்டியலில் இடம்பெற நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் ரெகுலர் கிளாஸ் அட்டண்ட் பண்ணவேண்டாம். டி.என். பி.எஸ்.சி. தேர்வாக இருந்தால்கூட சரிதான். எல்லாவற்றுக் கும் ஒரு அட்ஜெஸ்ட்மெண்ட் தேவைப்படுகிறது. நீங்கள் ஓசூருக்கு வந்துவிடுங்கள்.


20 நிமிடம்

என்னைப்போல 400 பேர் இருக்கிறார்கள். உங்களுக்கு டிகிரி வாங்கிக்கொடுப்பதில் நான் கவனமாக இருக்கிறேன். நீங்கள் ஒத்துழைக்காவிட்டால் தண்டனை கொடுக்கமாட்டேன். உங்களை கைதூக்கிவிடவே அழைக்கிறேன். இந்தக்காலத்தில் இப்போது நான் பேசும் விஷயம் ரொம்ப சாதாரணம் என்பது உங்களுக்கும் தெரியும், உலகத்துக்கும் தெரியும். எனக்கும் தெரியும். இதை பாசிட்டிவாக எடுத்துக்கொள்ளுங்கள்.

இவ்வாறாக அந்த உரையாடல் உள்ளது.

மாணவிகள் இது வேண்டாம் என்று மறுத்தபோதும், அவசரப்பட்டு முடிவு எடுக்காதீர்கள். உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது, பொறுமையாக யோசித்து கூறுங்கள் எனவும் அந்த பேராசிரியை பேசியுள்ளார். சுமார் 20 நிமிடம் அந்த பேச்சு உள்ளது.

பணியிடை நீக்கம்

இந்த வாட்ஸ்-அப் உரையாடல் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து பேராசிரியையை கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

Sunday, April 15, 2018


பெண் குழந்தைகள் மீதான வன்முறை... திகைக்க வைக்கும் எக்ஸ்பிரஸ் 'ஜாமீன்'!

ஜெ.பிரகாஷ்
Chennai: 

vikatan  15.04.2018

பனிபடர்ந்த காஷ்மீரில்... எப்போதும் குண்டுச் சத்தத்துக்காக மட்டும் குரல் கொடுத்துவந்த இந்த உலகம், இப்போது பாலியல் வன்முறைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட எட்டு வயது காஷ்மீர் குழந்தைக்காகக் குரல்கொடுக்கத் தொடங்கியிருக்கிறது. பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது என்று சொல்லும் இந்த உலகில்தான், பெண் சிசுக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்துகொண்டிருக்கின்றன.

சுதந்திரமாகக்கூடச் செல்ல முடியாத நிலை!

ஒருகாலத்தில் கள்ளிப்பாலுக்கு இரையான பெண் குழந்தைகள், அடுத்து தாயின் கருவறையிலேயே அழிக்கப்பட்டன. ஆனால், அதைவிடக் கொடுமை... இன்று பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுப் பலிகடாவாக்கப்படுகின்றன. இதையெல்லாம் தினம் பார்க்கும் இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தந்தையான ஒரு சாமான்யர், “பெண் குழந்தைகள் பிறப்பது தவறா அல்லது அவர்கள் இந்தச் சமுதாயத்தில் வளர்வது தவறா”என்று கேள்வி கேட்கிறார், வேதனையுடன். ஆம், அவர் சொல்வதில் உண்மை இருக்கத்தானே செய்கிறது. இன்றைய குழந்தைகளைப் பொறுத்தவரை ஏதோ ஒருவகையில் பெரும்பாலும் உடல், உணர்வு, பாலியல்ரீதியான தொந்தரவுகளை அதிகம் சந்திக்கின்றனர். பள்ளிக்கு, பக்கத்து வீட்டுக்கு என அவர்கள் சுதந்திரமாகக்கூடச் செல்ல முடியாத நிலையல்லவா இன்று உருவாகிவிட்டது. இல்லையில்லை, பாதுகாப்புடன் அல்லவா அழைத்துச் செல்லக்கூடிய நிலை வளர்ந்திருக்கிறது?



பெண்களையே மிரட்டுகிற உலகம்!

ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிய காலம்போய்... பெண் விடுதலைக்கு எதிராகப் போராடிய காலம்போய்... இன்று பெண் சிசுக்களுக்கு நிகழ்த்தப்படும் வன்முறைக்கு எதிராகப் போராடும் காலம் வந்துவிட்டது. ஓடும் பேருந்தில் நிர்பயாவுக்கு ஏற்பட்ட கதியையே இன்னும் மறக்காமல் இருக்கும் நாம், தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்களால் இன்னும் பல நிர்பயாக்களை இழந்துகொண்டிருக்கிறோம் என்பதுதானே உண்மை. பாலியல் சீண்டல்களால் இன்னும் எத்தனையோ பெண்கள் கொடுமைகளை அனுபவித்துக்கொண்டிருப்பதும், அழிந்துகொண்டிருப்பதும் வெளியில் தெரிவதில்லை. பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியில் சொல்லத் தயங்குவது ஒருபுறம் என்றால், அப்படிப் பாதிக்கப்பட்ட பெண்களையே மிரட்டுகிற உலகம் இன்னொருபுறம்.

ஓட்டைவிழும் சட்டங்கள்!

“இப்போதிருக்கும் சட்டங்களே போதும். அதுவே, கடுமையானவை” என்கிறார்கள் வழக்கறிஞர்கள். ஆனால், அதன்மூலம் நீதிபெறுவதற்குள் பாதிக்கப்பட்ட பெண்ணும், அந்தப் பெண்ணின் குடும்பத்தினரும் எந்த அளவுக்குப் பாதிக்கிறார்கள் என்பதற்கு உத்தரப்பிரதேசத்தில் தற்போது நடந்திருக்கும் சம்பவமே ஓர் உதாரணம். சட்டங்கள் கடுமையாய் இருந்து என்ன பலன்? பல சட்டைகளின் அதிகாரம் கொடிகட்டிப் பறப்பதால்தானே சட்டங்களிலும் ஓட்டை விழுகிறது. அதன் விளைவுதான், இமயம்முதல் குமரிவரை நிர்பயாக்களும், ஹாசினிகளும் பலிகடாவாக்கப்படுகின்றனர்.



தப்பிவிடும் பாலியல் குற்றவாளிகள்!

வெளிநாடுகளில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை, ‘இவன் ஒரு பாலியல் குற்றவாளி. உளவியல்ரீதியாகப் பாதிப்புடையவன். இவனிடம் இருந்து எச்சரிக்கையாக இருங்கள்’ எனப் பொது இடங்களில் விளம்பரம் செய்வார்கள். இல்லையேல், அதுபோன்று தீங்கிழைத்தவனைப் பொதுஇடத்தில் கட்டிவைத்துக் கல்லால் அடித்துக் கொல்வார்கள். ஆனால், இங்கு பெரும்பாலான பாலியல் குற்றவாளிகள் தண்டனையே பெறாமல் தப்பிவிடுகிறார்கள். இதற்குக் காரணம் என்ன? உடனே விசாரணை நடத்தித் தீர்ப்பு வழங்காததால்தானே? குற்றத்தின் தன்மையைப் பொறுத்து, மூன்று ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு அளிக்கலாம். அதிகபட்சம் ஓராண்டுக்குள் வழக்கின் விசாரணையை முடித்துத் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்கிறது பாக்ஸோ. குற்றங்கள் மட்டுமே பெருகி நிற்கும் இந்தியாவில், குறைந்த அளவில்கூடப் பாலியல் வழக்குகளுக்கு தீர்ப்புகள் வழங்கப்படவில்லை என்பதுதானே உண்மை. கடந்த 2015-ம் ஆண்டு, இந்தியாவில் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகள் 14,913-ஆகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

சிறுமிகளின் எண்ணிக்கை!

இந்தியாவில், அதுவும் தமிழகத்தில் இதுபோன்ற ஒரு வழக்கில் குற்றவாளிக்கு 37 நாள்களில் ஜாமீன் கிடைத்துவிடுகிறது. ஏன், ஹாசினி வழக்கில் சம்பந்தப்பட்ட தஷ்வந்துக்குக்கூட விரைவாகவே நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படியிருந்தால், நீதி எப்படி நிலைநாட்டப்படும் என்பதே சாமான்யர்களின் கேள்வியாக இருக்கிறது. இதைவிடக் கொடுமை, பாதிக்கப்படும் சிறுமிகளின் குடும்பம் ஏழையாய் இருந்துவிட்டால் போதும், அவர்களின் கதி அதோ கதிதான். இந்த அவலநிலை இந்தியாவில் தவிர, வேறெங்கும் இல்லை. அதனால்தான், “இன்றைய டிஜிட்டல் இந்தியாவில் சிதைத்துக் கொல்லப்படும் சிறுமிகளின் எண்ணிக்கையைவிட, சீண்டலுக்கு ஆளாக்கப்பட்டு அதைச் சொல்லாமல் இருக்கும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகம்” என்கிறார்கள், சமூக ஆர்வலர்கள்.



“உரிய நீதி கிடைக்கும்!”

“பதவியில் இருப்போரும், பணத்திமிறில் இருப்போரும் இதுபோன்ற தவறுகளைச் செய்துவிட்டு, அவர்களைப் பயமுறுத்தி வைப்பதுதான் இதற்கு முக்கியக் காரணம்” என்று அவர்கள் மேலும் விளக்கம் கொடுக்கின்றனர். “வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளிலும் பெண்களின் பங்களிப்பை உறுதிசெய்வது ஒவ்வோர் இந்தியரின் கடமையாகும்”என்று கடந்த பிப்ரவரி மாதம், ‘மான் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் உரையாற்றியிருந்தார் பிரதமர் மோடி. அவர் சொல்லி இரண்டு மாதங்கள்கூடக் கடக்காத நிலையில் அவருடைய கட்சி, ஆட்சி செலுத்தும் அதிக மக்கள்தொகை கொண்ட உத்தரப்பிரதேசத்தில்தான்... அவர் கட்சியைச் சார்ந்த எம்.எல்.ஏ-வாலேயே ஒரு பெண் துன்புறுத்தப்பட்டிருக்கிறார். அவருடைய தந்தை சிறைக்கு இழுத்துச் செல்லப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இது ஒருபுறமிருக்க... மறுபுறம் காஷ்மீரில் அந்தக் குழந்தை சிதைக்கப்பட்டிருக்கிறாள். இதைக் கண்டு கொதித்தெழும் பெண்கள் அமைப்பினர், “பிரதமர் மோடி விரும்பும் டிஜிட்டல் இந்தியா இதுதானா” என்று கேள்வி எழுப்புகின்றனர். “பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டிப்பாகத் தண்டிக்கப்படுவார்கள். நமது குழந்தைகளுக்கு உரிய நீதி கிடைக்கும்” என்று அழுத்தமாய்ப் பதில் தருகிறார் மோடி. ஆனாலும், எல்லா வழக்குகளிலும்... விசாரணைகள் எப்போதும்போல் அலட்சியமாகவும்... ஆளும் அதிகாரத்துக்குச் சாதகமாகவுமே இருக்கின்றன.

இதுபோன்ற குற்றங்கள் நாட்டில் தொடர்ந்து பெருகுமானால், “பெண்கள் வெறும் அலங்காரத்தோடு திருப்தியடைவதால், விடுதலை வேட்கை பிறப்பது அரிது” என்ற தந்தை பெரியாரும், “பெண்மீது ஆண் திணித்திருக்கிற எல்லாக் கோட்பாடுகளையும் மீறாதவரை பெண்ணுக்கு விடுதலையே இல்லை” என்று எழுதிய அண்ணல் அம்பேத்கரும் மீண்டும் பிறக்க வேண்டிய காலம் வெகுதூரத்தில் இல்லை.



சிங்கப்பூர் விலங்குத் தோட்டப் பனிக்கரடி Inuka கருணைக்கொலை செய்யப்படலாம் 

12/4/2018 14:29 Update: 12/4/2018 15:10

சிங்கப்பூர் விலங்குத் தோட்டப் பனிக்கரடி Inuka-வின் உடல்நலம் குன்றிவருவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மூட்டுவலி, பற்கள் தொடர்பான பிரச்சினைகள் ஆகியவற்றுடன் எப்போதாவது காதில் கிருமித்தொற்று ஏற்படுவதால் Inuka சிரமப்படுவதாகக் கூறப்பட்டது.

மூப்படைவதால் Inukaவின் தசைகள் செயல் இழந்துவருகின்றன. அது நடப்பதில் சிரமத்தை எதிர்நோக்குகிறது.

இம்மாதக் கடைசியில் அதற்கு கூடுதல் உடல்நலப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

தீவிர சிகிச்சைக்குப் பிறகும் Inuka-வின் உடல்நலம் முன்னேறாவிட்டால், கருணைக்கொலை செய்ய முடிவெடுக்கப்படலாம்.

பொதுவாக மனிதப் பராமரிப்பில் இருக்கும் பனிக்கரடிகளின் சராசரி-ஆயுள் 25 ஆண்டு என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் Inuka-வின் தற்போதைய வயது 27.

ஏப். 16-இல் தாம்பரம் - கொச்சுவேலி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்


15.04.2018

சென்னை: பயணிகளின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தாம்பரம் - கொச்சுவேலி இடையே திங்கள்கிழமை (ஏப். 16) முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்தது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை தாம்பரத்தில் இருந்து திங்கள்கிழமை (ஏப்.16) மாலை 5.30-க்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் அடுத்த நாள் (செவ்வாய்க்கிழமை) காலை 11.45-க்கு கொச்சுவேலி சென்றடையும்.

இந்த சிறப்பு ரயிலில் 20 இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் இணைக்கப்படும். செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், விருதுநகர், சாத்தூர், திருநெல்வேலி, நாகர்கோவில் டவுன், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.

Dailyhunt

அனைத்து நோய்களுக்கும் சிகிச்சைபெற வசதி இல்லை: ஓய்வூதியர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் குறைபாடுகள் நீக்கப்படுமா? 



15.04.2018  dinakaran
நாகர்கோவில்: ஓய்வூதியர் காப்பீடு திட்டத்தில் குறைபாடுகளை நீக்க வேண்டும், அரசே இத்திட்டத்தை ஏற்று நடத்த வேண்டும் என்று ேகாரிக்கை வலுத்து வருகிறது. தமிழகத்தில் 2016ம் ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படி 4 லட்சத்து 78 ஆயிரத்து 581 ஓய்வூதியர்களும், 2 லட்சத்து 31 ஆயிரத்து 396 குடும்ப ஓய்வூதியர்களும் உள்ளனர். 4 ஆண்டு காலத்திற்கு இவர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை 455 கோடி ஆகும். இவர்களின் 4 ஆண்டு கால மருத்துவ காப்பீடு திட்டத்திற்காக 100 கோடி கூட செலவு செய்யப்படவில்லை என்று ஓய்வூதியர் சங்கங்கள் குற்றம்சாட்ட தொடங்கியுள்ளன. ஓய்வூதியர்களுக்கான மருத்துவ காப்பீடு யுனைடெட் இந்தியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவற்றுக்கு முழுமையான செலவு தொகை காப்பீடு நிறுவனம் மருத்துவமனைக்கு வழங்குவது இல்லை. ஓய்வூதியர்கள் கூடுதல் செலவு தொகையை செலுத்த வேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறது. பெரும்பாலான மருத்துவமனைகள் காப்பீடு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புவதில்லை. இதனால் தங்கள் வீடுகளின் அருகில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனைகளில் உடனுக்குடன் சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை பெறும் வசதி இருக்கிறது.

ஆனால் ஓய்வூதியர்கள் தங்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வழிவகை இல்லை. வெளிமாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் இல்லை. முன்பணம் இல்லாத சிகிச்சை என்பதாலேயே மருத்துவமனைகளில் அளிக்கின்ற நெருக்கடியாலும், நோயின் தீவிர தன்மையாலும் மருத்துவ செலவு தொகையை ஓய்வூதியர்கள் முன்னரே செலுத்திவிடுகின்றனர். அப்படிப்பட்ட செலவுத்தொகை ஓய்வூதியர்களுக்கு திரும்ப முழுமையாக வழங்கப்படுவது இல்லை. அடையாள அட்டை அனைவருக்கும் வழங்கப்படுவது இல்லை. மேலும் அடையாள அட்டை வழங்கும் பொறுப்பை காப்பீடு நிறுவனம் வைத்துள்ளதால் அனைவருக்கும் கிடைப்பது இல்லை என்பது போன்ற குறைபாடுகள் ஓய்வூதியதாரர்களால் பட்டியலிடப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் புதிய ஒப்பந்தம் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு 1.7.2018 முதல் 30.6.2022 வரை ஏற்படுத்தப்பட வேண்டியுள்ளது. அப்போது இந்த குறைபாடுகளை களைய வேண்டும், மருத்துவ காப்பீடு தொகை அளவை நான்காண்டு காலத்திற்கு 5 லட்சமாக உயர்த்த வேண்டும், கேன்சர் போன்ற நோய்களுக்கு 7.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று ஓய்வூதியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலர் சங்கத்தினர் அதிகாரிகளை சந்தித்து பேரணியாக வந்து மனுக்களை அளித்திருந்தனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், 'மெடிக்கல் அட்டென்டன்ஸ் சட்டப்படி மருத்துவ செலவுத்தொகை முழுவதையும் அரசோ, காப்பீட்டு நிறுவனமோக வழங்க வேண்டும். செலவு தொகை மறுக்கின்ற அங்கீகாரம் நிறுவனத்திற்கும் அரசுக்கும் இருக்க கூடாது. தற்போது நீதிமன்றத்தை நாடியே செலவுத்தொகையை பெற்றுக்கொள்ளும் நிலை ஓய்வூதியர்கள் பலருக்கும் இருக்கிறது. ஓய்வுகாலத்தில் நோய் பாதிப்பு, சிகிச்சைக்கான அலைச்சல், பண விரயம் என்பது மட்டுமின்றி நீதிமன்றத்திற்கு அலைய வேண்டிய வகையில்தான் தற்போதைய காப்பீடு திட்டம் உள்ளது. எனவேதான் தமிழக அரசே அரசு துறை ஓய்வூதியர்களின் காப்பீடு திட்டத்தை ஏற்று நடத்த வேண்டும். மருத்துவமனைகள் மற்றும் நோய்களுக்கான பட்டியலுக்கு அதற்கு மட்டுமே காப்பீடு பொருந்தும் என்று இல்லாமல் எல்லா மருத்துவமனைகளிலும் எல்லா நோய்க்கும் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும். கேன்சர், சர்க்கரை நோய், ரத்த அழுதம், டயாலிசிஸ் போன்றவற்றுக்காக மாதம்தோறும் அதிக தொகையை ஓய்வூதியர்கள் செலவு செய்கின்றனர். தமிழக அரசு இந்த வைக்கும் செலவு தொகையை காப்பீடு திட்டத்தில் அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவ குழு ஏற்படுத்த வேண்டும். அதில் காப்பீடு நிறுவனம், ஓய்வூதியர்கள் சங்க பிரதிநிதிகளும், அரசு மருத்துவர்களும் இடம்பெற வேண்டும். இதற்கு மாவட்ட கருவூல அதிகாரி வழிநடத்துபவராக இருத்தல் வேண்டும். மாதம்தோறும் கூட்டங்களை கூட்டி மருத்துவ காப்பீடு திட்டம் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். புதிய காப்பீடு திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படும்போது இந்த குறைபாடுகளை களைய வேண்டும்' என்றனர்.


Dailyhunt

NEWS TODAY 23.12.2025