Sunday, April 15, 2018


அனைத்து நோய்களுக்கும் சிகிச்சைபெற வசதி இல்லை: ஓய்வூதியர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் குறைபாடுகள் நீக்கப்படுமா? 



15.04.2018  dinakaran
நாகர்கோவில்: ஓய்வூதியர் காப்பீடு திட்டத்தில் குறைபாடுகளை நீக்க வேண்டும், அரசே இத்திட்டத்தை ஏற்று நடத்த வேண்டும் என்று ேகாரிக்கை வலுத்து வருகிறது. தமிழகத்தில் 2016ம் ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படி 4 லட்சத்து 78 ஆயிரத்து 581 ஓய்வூதியர்களும், 2 லட்சத்து 31 ஆயிரத்து 396 குடும்ப ஓய்வூதியர்களும் உள்ளனர். 4 ஆண்டு காலத்திற்கு இவர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை 455 கோடி ஆகும். இவர்களின் 4 ஆண்டு கால மருத்துவ காப்பீடு திட்டத்திற்காக 100 கோடி கூட செலவு செய்யப்படவில்லை என்று ஓய்வூதியர் சங்கங்கள் குற்றம்சாட்ட தொடங்கியுள்ளன. ஓய்வூதியர்களுக்கான மருத்துவ காப்பீடு யுனைடெட் இந்தியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவற்றுக்கு முழுமையான செலவு தொகை காப்பீடு நிறுவனம் மருத்துவமனைக்கு வழங்குவது இல்லை. ஓய்வூதியர்கள் கூடுதல் செலவு தொகையை செலுத்த வேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறது. பெரும்பாலான மருத்துவமனைகள் காப்பீடு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புவதில்லை. இதனால் தங்கள் வீடுகளின் அருகில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனைகளில் உடனுக்குடன் சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை பெறும் வசதி இருக்கிறது.

ஆனால் ஓய்வூதியர்கள் தங்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வழிவகை இல்லை. வெளிமாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் இல்லை. முன்பணம் இல்லாத சிகிச்சை என்பதாலேயே மருத்துவமனைகளில் அளிக்கின்ற நெருக்கடியாலும், நோயின் தீவிர தன்மையாலும் மருத்துவ செலவு தொகையை ஓய்வூதியர்கள் முன்னரே செலுத்திவிடுகின்றனர். அப்படிப்பட்ட செலவுத்தொகை ஓய்வூதியர்களுக்கு திரும்ப முழுமையாக வழங்கப்படுவது இல்லை. அடையாள அட்டை அனைவருக்கும் வழங்கப்படுவது இல்லை. மேலும் அடையாள அட்டை வழங்கும் பொறுப்பை காப்பீடு நிறுவனம் வைத்துள்ளதால் அனைவருக்கும் கிடைப்பது இல்லை என்பது போன்ற குறைபாடுகள் ஓய்வூதியதாரர்களால் பட்டியலிடப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் புதிய ஒப்பந்தம் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு 1.7.2018 முதல் 30.6.2022 வரை ஏற்படுத்தப்பட வேண்டியுள்ளது. அப்போது இந்த குறைபாடுகளை களைய வேண்டும், மருத்துவ காப்பீடு தொகை அளவை நான்காண்டு காலத்திற்கு 5 லட்சமாக உயர்த்த வேண்டும், கேன்சர் போன்ற நோய்களுக்கு 7.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று ஓய்வூதியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலர் சங்கத்தினர் அதிகாரிகளை சந்தித்து பேரணியாக வந்து மனுக்களை அளித்திருந்தனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், 'மெடிக்கல் அட்டென்டன்ஸ் சட்டப்படி மருத்துவ செலவுத்தொகை முழுவதையும் அரசோ, காப்பீட்டு நிறுவனமோக வழங்க வேண்டும். செலவு தொகை மறுக்கின்ற அங்கீகாரம் நிறுவனத்திற்கும் அரசுக்கும் இருக்க கூடாது. தற்போது நீதிமன்றத்தை நாடியே செலவுத்தொகையை பெற்றுக்கொள்ளும் நிலை ஓய்வூதியர்கள் பலருக்கும் இருக்கிறது. ஓய்வுகாலத்தில் நோய் பாதிப்பு, சிகிச்சைக்கான அலைச்சல், பண விரயம் என்பது மட்டுமின்றி நீதிமன்றத்திற்கு அலைய வேண்டிய வகையில்தான் தற்போதைய காப்பீடு திட்டம் உள்ளது. எனவேதான் தமிழக அரசே அரசு துறை ஓய்வூதியர்களின் காப்பீடு திட்டத்தை ஏற்று நடத்த வேண்டும். மருத்துவமனைகள் மற்றும் நோய்களுக்கான பட்டியலுக்கு அதற்கு மட்டுமே காப்பீடு பொருந்தும் என்று இல்லாமல் எல்லா மருத்துவமனைகளிலும் எல்லா நோய்க்கும் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும். கேன்சர், சர்க்கரை நோய், ரத்த அழுதம், டயாலிசிஸ் போன்றவற்றுக்காக மாதம்தோறும் அதிக தொகையை ஓய்வூதியர்கள் செலவு செய்கின்றனர். தமிழக அரசு இந்த வைக்கும் செலவு தொகையை காப்பீடு திட்டத்தில் அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவ குழு ஏற்படுத்த வேண்டும். அதில் காப்பீடு நிறுவனம், ஓய்வூதியர்கள் சங்க பிரதிநிதிகளும், அரசு மருத்துவர்களும் இடம்பெற வேண்டும். இதற்கு மாவட்ட கருவூல அதிகாரி வழிநடத்துபவராக இருத்தல் வேண்டும். மாதம்தோறும் கூட்டங்களை கூட்டி மருத்துவ காப்பீடு திட்டம் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். புதிய காப்பீடு திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படும்போது இந்த குறைபாடுகளை களைய வேண்டும்' என்றனர்.


Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024