Monday, April 16, 2018

மாஜி,தலைமை செயலர்,ராவ்,மந்திரி,தங்கமணி,பாய்ச்சல்dinamalar 16.04.2018

ஜெ., மரணம் தொடர்பான விசாரணை கமிஷனில், முன்னாள் தலைமை செயலர், ராமமோகன ராவ், பொய்யான தகவல்களை கூறியுள்ளார். சசிகலா குடும்ப துாண்டுதலால், அவர் தடம் மாறி பேசுகிறார். ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று, சிகிச்சை அளிக்க நாங்கள் வலியுறுத்தினோம்,'' என, தமிழக மின் துறை அமைச்சர், தங்கமணி தெரிவித்துள்ளார்.





ஜெயலலிதா மரணம் தொடர்பாக, நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையிலான கமிஷன் விசாரித்து வருகிறது. தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலர், ராமமோகன ராவ், சமீபத்தில், இந்த கமிஷனில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, 'உடல் நலக்குறைவால், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், ஜெயலலிதா சிகிச்சை பெற்றார். 2016 செப்., 28ல்,

மருத்துவமனையில், காவிரி விவகாரம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

ஆலோசனை :

கூட்டத்தில், அப்போதைய அமைச்சர்கள், பன்னீர் செல்வம், பழனிசாமி, சீனிவாசன், விஜயபாஸ்கர் மற்றும் லோக்சபா துணை சபாநாயகர், தம்பிதுரை, சுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணன், அப்போதைய அரசு ஆலோசகர், ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிலர் பங்கேற்றனர்.

'அந்தக் கூட்டத்தில், ஜெயலலிதாவை, வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று, சிகிச்சை அளிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. 'ஆனால், அமைச்சர்கள் தடையாக இருந்தனர். ஜெ., இறந்த போது, அமைச்சர்கள், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்' என, ராவ் தெரிவித்ததாக, தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், 'விசாரணை கமிஷனில், ராமமோகன ராவ், பொய்யான தகவல்களை கூறியுள்ளார்' என, மின் துறை அமைச்சர் தங்கமணி ஆவேசத்துடன் கூறியுள்ளார்.


இது தொடர்பாக, நாமக்கல்லில் நேற்று அவர் அளித்த பேட்டி: முன்னாள் தலைமை செயலர், ராமமோகன ராவ், எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். யாரையோ திருப்திப்படுத்த, தவறான தகவலை கூறுகிறார். ஜெயலலிதாவை, சிகிச்சைக்காக, வெளிநாடு அழைத்து செல்ல, நாங்கள் தடையாக இருந்ததாக, அவர் கூறுவது தவறானது.

உள்நோக்கம் :

சிகிச்சை அளிக்க, வெளிநாடு அழைத்து செல்ல வேண்டும் என, நாங்கள் வலியுறுத்தினோம்; அவர் தான், முடிவு எடுக்கவில்லை. ஜெயலலிதா இறந்த போது, நானும், அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோரும் அங்கிருந்ததாக, ராமமோகன ராவ் கூறுவதும் தவறு. அப்போது, நான், அமைச்சர் சரோஜா, சுந்தரம், எம்.பி., ஆகியோர், நாமக்கல் மாவட்டம், ஆர்.புதுப்பட்டி கோவில் விழா ஒன்றில், ஜெ., நலம் பெற யாகம் நடத்திக் கொண்டிருந்தோம். அமைச்சர் வேலுமணி, திருவனந்தபுரத்தில், அரசு தொடர்பான நிகழ்ச்சியில் இருந்தார்.

ஜெ., மரணம் அடைந்து, ஒன்றரை ஆண்டுகளுக்கு பின், ராமமோகன ராவ் இவ்வாறு கூறுவதில், அரசியல் உள்நோக்கம் உள்ளது. சசிகலாவின் குடும்ப உறுப்பினர்கள் துாண்டுதலில், அவர் தடம் மாறி பேசுகிறார். இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.

- நமது நிருபர் -

Related Tags மாஜி தலைமை செயலர் ராவ் மந்திரி தங்கமணி பாய்ச்சல்


No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024