Monday, April 16, 2018


திணறல்!

ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாமல் ஆந்திர அரசு...
நிதி பற்றாக்குறை, மென்பொருள் பிரச்னையால் சிக்கல் 

dinamalar 16.04.2018

அமராவதி : ஆந்திர அரசில் நிலவும் நிதிப் பற்றாக்குறை மற்றும் மென்பொருள் கோளாறால், ஒரு மாதத்துக்கும் மேல், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பில்களுக்கு, பணம் செலுத்தும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது; ஆந்திர அரசில் பணியாற்றும், 7.9 லட்சம் ஊழியர்களில், 22 ஆயிரம் பேர், மார்ச் மாத சம்பளத்தை, இன்னும் பெற முடியாமல் சிரமப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.





ஆந்திராவில், தெலுங்கு தேசத் தலைவர், சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். ஆந்திராவில் இருந்து, தெலுங்கானா மாநிலம் பிரிந்ததை அடுத்து, அமராவதியில் புதிய தலைநகரை நிர்மாணிக்கும் பணியில், முதல்வர், சந்திரபாபு நாயுடு தீவிரம் காட்டி வருகிறார். இம்மாநிலத்தில், போலாவரம் நீர் பாசன திட்டம் உள்ளிட்ட மேலும் பல பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில், மத்திய அரசிடம் இருந்து போதிய நிதி வந்து சேராததால், ஆந்திர அரசு, கடும் நிதி பற்றாக்குறையில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், ஆந்திர அரசின் நிதித்துறை தொடர்பான மென்பொருளில் ஏற்பட்ட கோளாறால், பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பில்களுக்கு, குறித்த நாளில் பணம் அளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஆந்திராவில், 7.9 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் உள்ளனர். இவர்களுக்கு, ஒவ்வொரு மாத முடிவில் சம்பளம் அல்லது ஓய்வூதியம், அவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டு விடும். ஆனால், ஆந்திர அரசில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடி மற்றும் மென்பொருள் பிரச்னையால், கடந்த மாதம், குறித்த நாளில், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு வழக்கமான நாளில் சம்பளம் தரப்படவில்லை.

தீவிர முயற்சி :

மென்பொருள் கோளாறால், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களில் பெரும்பாலானோருக்கு, இம்மாதம், 7ம் தேதி தான் சம்பளம் தரப்பட்டுள்ளது. அதிலும், 22 ஆயிரம் அரசு ஊழியர்கள் இன்னும் சம்பளம் கிடைக்காமல் சிரமப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. மென்பொருளில் ஏற்பட்டுள்ள கோளாறை சரி செய்ய, நிதித்துறை அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து, ஆந்திர நிதித் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிற்பட்ட மாவட்டங்கள் மேம்பாட்டு நிதியுதவி திட்டத்தின் கீழ், போலாவரம் திட்டத்துக்கு, மத்திய அரசிடம் இருந்து, 3,000 கோடி ரூபாய் வர வேண்டும். மத்திய அரசு தரவேண்டிய நிதியுதவி தாமதமாகி வருவதால், ஆந்திர அரசின் நிதி இருப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், 8,000 கோடி ரூபாய் நிதியை, மத்திய அரசு, பல்வேறு காரணங்களை கூறி நிறுத்தி வைத்துள்ளது.

மாநில அரசு, சமீபத்தில், விரிவான நிதி மேலாண்மை தொழில்நுட்ப நடைமுறையை அமல்படுத்தியது. இத்திட்டம், ஒருங்கிணைந்த பணப் பட்டுவாடா கட்டமைப்பை உருவாக்கும்.

பாதிப்பு :

இருப்பினும், இந்த மென்பொருள் கட்டமைப்பை பயன்படுத்த, ஆந்திர அரசு ஊழியர்களுக்கு போதிய பயிற்சி வழங்கப்படவில்லை. பழைய மென் பொருளில் இருந்து, புதிய மென்பொருளுக்கு மாறுவதில் சில நடைமுறை பிரச்னைகள் ஏற்பட்டு உள்ளன; அவை சரி செய்யப்பட வேண்டும். இதனால், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு, சம்பளம் செலுத்தும் பணி முடங்கியது. ஆந்திர அரசின் பல திட்ட பணிகளுக்கான பணப் பட்டுவாடாவும், பாதிக்கப்பட்டுள்ளது.

ஜனவரியில், 175 சட்டசபை தொகுதிகளில், கலாசார நிகழ்ச்சிகள், அரசு சார்பில் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்ற கலைஞர்களுக்கு, இதுவரை சம்பளம் தரப்படவில்லை. அந்த கலைஞர்களுக்கு, தலா, 1,000 ரூபாய் கூட தர முடியாதது வருந்தத்தக்க விஷயம்.

கலாசார நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கலைஞர்களுக்கு, ஆந்திர அரசு, மூன்று கோடி ரூபாய் சம்பள பாக்கி வைத்து உள்ளது. சம்பளம் இன்றி வேலை செய்ய, பெரும்பாலான நடன ஆசிரியர்கள் மறுத்துவிட்டனர். இதனால், குச்சுபுடி நடனத்தை மக்களிடம் சென்றடையச் செய்யும் மாநில அரசின் திட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மகிழ்ச்சியில் ஜெகன்; பீதியில் சந்திரபாபு :



ஆந்திர அரசு, விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகளை தீர்ப்பதில் தோல்வி அடைந்து விட்டதாக கூறி, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர், ஜெகன்மோகன் ரெட்டி, மாநிலம் தழுவிய யாத்திரை மேற்கொண்டுள்ளார். சமீபத்தில், அவரது யாத்திரை, விஜயவாடாவுக்கு வந்தபோது, ஆயிரக்கணக்கான பொதுமக்களும், தொண்டர்களும் திரண்டு, வரவேற்பு அளித்தனர். இதுவரை, 1,780 கி.மீ., யாத்திரையை நிறைவு செய்துள்ள ஜெகன், மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், யாத்திரை செல்லும் வகையில், அதன் வழித்தடத்தை அமைத்துள்ளார். ஒவ்வொரு இடத்திலும் பேசும்போது, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து பெற்றுத் தருவதில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தோல்வி அடைந்து விட்டதாக வலியுறுத்தி வருகிறார். அவரது பேச்சுக்கு, ஆந்திர மக்களிடையே, பலத்த வரவேற்பு கிடைத்துள்ளதாலும், அவரைக் காண, ஏராளமான கூட்டம் கூடுவதாலும், சந்திரபாபு நாயுடு கலக்கம் அடைந்துள்ளார். இந்த பிரச்னையை சமாளிக்கும் வகையிலேயே, மத்திய அரசுக்கு எதிராக, 20ம் தேதி, உண்ணாவிரத போராட்டத்துக்கு, சந்திரபாபு ஏற்பாடு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024