Friday, April 20, 2018

பதவி ஆசையே காரணம்: கல்லூரி பேராசிரியை பரபரப்பு வாக்குமூலம்

By DIN | Published on : 20th April 2018 01:43 AM

 மதுரை காமராஜர் பல்கலை.யில் பதிவாளர் பதவி பெற்றுத் தருவதாக அப் பல்கலைக்கழகத்தின் உயர் அதிகாரிகள் சிலர் ஆசைகாட்டியதால்தான், மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியதாக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலா தேவி போலீஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு உதவி பெறும் தனியார் கலைக் கல்லூரி கணிதத் துறை உதவி பேராசிரியையான நிர்மலா தேவி, அக்கல்லூரி மாணவிகள் 4 பேரிடம் செல்லிடப்பேசி மூலம் பாலியல் பேரம் பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் போலீஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் கூறியதாவது:

நிர்மலா தேவிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த அவர், அருப்புக்கோட்டையில் தங்கியுள்ளார். சென்னை பல்கலை.யில் முனைவர் பட்டப்படிப்பில் சேர்ந்த அவர், பின்னர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு அதை மாற்றி ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, ஏற்கெனவே அருப்புக்கோட்டை கல்லூரியில் படித்து தற்போது காமராஜர் பல்கலைக்கழகத்தில் கலை-வரலாறு துறையில் முனைவர் பட்டம் பெற்ற ஒருவருடன் நிர்மலா தேவிக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் மூலமாக வணிக வேளாண்மை துறையில் பணிபுரியும் உதவி பேராசிரியர், தொலை நிலைக் கல்வி இயக்ககத்தின் உயர் அதிகாரி மற்றும் ஆங்கிலத் துறை உதவி பேராசிரியர் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த மார்ச் 5 ஆம் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு புத்தாக்கப் பயிற்சிக்கு வந்த நிர்மலா தேவிக்கு, பல்கலைக்கழக தங்கும் விடுதியில் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த பல்வேறு அதிகாரிகள் நிர்மலா தேவியை சந்தித்துள்ளனர்.

இந்நிலையில்தான் இரண்டாம் நிலையில் உள்ள அதிகாரி ஒருவர் நிர்மலா தேவியிடம் முனைவர் பட்ட வழிகாட்டி மற்றும் பதிவாளர் பதவி வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதற்காக கல்லூரி மாணவிகளை அழைத்து வருமாறு கூறியுள்ளார். அதை நம்பிதான் மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியதாக நிர்மலா தேவி கூறியுள்ளார். தன்னிடம் போதிய அளவு பணம் இருந்தும், பதவிக்காக இந்த நிலைக்கு சென்று விட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அருப்புக்கோட்டை கல்லூரியில் நிர்வாகம் செய்வது தொடர்பாக மூன்று கோஷ்டிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒரு கோஷ்டிதான், தன்னை தேவைக்கு பயன்படுத்திவிட்டு, தனக்கு எதிராக ஆடியோவை வெளியிட்டுள்ளதாகவும் நிர்மலா தேவி கூறியுள்ளார். நான் மாணவிகளிடம் ஏற்கெனவே பலமுறை செல்லிடபேசியில் பேசியுள்ளேன். ஆனால், கடைசியாக என்னை சிக்க வைப்பதற்காக பேசி அந்த ஆடியோவை வெளியிட்டுள்ளனர் என நிர்மலா தேவி கூறி வேதனைப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

நிதி நிர்வாகக் குளறுபடி!


By ஆசிரியர் | Published on : 20th April 2018 01:33 AM

  கடந்த மூன்று நாட்களாக இந்தியாவின் பல மாநிலங்களில் வங்கிகளின் பணம் வழங்கு இயந்திரங்கள் (ஏடிஎம்) பல இயங்காத, அல்லது, பணம் இல்லாத நிலை காணப்படுகிறது. குறிப்பாக, ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், மத்தியப் பிரதேசம், பிகார் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான பணத் தட்டுப்பாட்டை எதிர்கொள்கின்றன. 'எங்களை நம்புங்கள், பணத்தட்டுப்பாடு இல்லை' என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி சுட்டுரை மூலம் தெரிவிக்க வேண்டிய அளவுக்கு நிலைமை மோசமாகி இருக்கிறது.

இந்தியாவிலுள்ள ஏறத்தாழ 2 லட்சம் வங்கிப் பணம் வழங்கு இயந்திரங்களில், 12 விழுக்காடு இயந்திரங்களின் சேவை முடங்கியிருக்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமை போதுமான அளவு ரொக்கப் பணம் இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. பல பணம் வழங்கு இயந்திரங்கள் புதிய நோட்டுக்களுக்கு ஏற்றாற்போல மாற்றப்படுவதாலும், குறிப்பிட்ட பகுதிகளுக்கு ரொக்கப் பணத்தை கொண்டு சேர்க்க முடியாததாலும்தான் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கக்கூடும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதே நேரத்தில், கூடுதலான அளவு நோட்டுகளை அச்சடிப்பதற்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருக்கிறது என்று நிதியமைச்சகத்தின் வங்கிச் செயலாளர் தெரிவிக்கிறார்.

நாளொன்றுக்கு 500 கோடி ரூபாய் அளவுக்கு அச்சிடப்படும் ரூபாய் 500 நோட்டுகள், ரூ.2500 கோடியாக அதிகரித்திருப்பதாக அவர் தெரிவிக்கிறார். பணத்தை குறிப்பிட்டப் பகுதிகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் அனுப்பித் தர முடியாததுதான் காரணம் என்றும், அரசிடம் ரூ.1.75 லட்சம் கோடி மதிப்பிலான ரொக்கப் பணம் கையிருப்பில் இருக்கிறது என்றும் தெரிவிக்கும்போது, எதற்காக புதிய நோட்டுகளை அச்சடிப்பது ஐந்து மடங்கு அதிகரிக்கப்பட்டிருக்கிறது என்பதன் காரணம் விளங்கவில்லை.

பொருளாதார விவகாரச் செயலர் சுபாஷ் கர்க், பணத் தட்டுப்பாட்டுக்கு இன்னொரு விளக்கத்தைத் தருகிறார். இந்தியாவில் ரூ.18.4 லட்சம் கோடி அளவில் நோட்டுகள் ஏப்ரல் 6-ஆம் தேதி நிலையில் புழக்கத்தில் இருப்பதாகவும், இது கடந்த 2016 நவம்பர் மாதம் செலாவணி செல்லாததாக்கப்பட்டதற்கு முந்தைய நிலைக்கு வந்துவிட்டதாகவும் கூறுகிறார். கடந்த மாதம் திடீரென்று ரொக்கப் பணத்துக்கான தேவை அதிகரித்துவிட்டதாகவும், சாதாரணமாக மாதம் ரூ.20,000 கோடி தேவைக்குப் பதிலாக, ரூ.45,000 கோடியாக தேவை உயர்ந்துவிட்டதாகவும், அதுதான் பணத் தட்டுப்பாட்டுக்குக் காரணமாக இருக்கக்கூடும் என்று விளக்கம் அளித்திருக்கிறார் சுபாஷ் கர்க். இந்த விளக்கங்களெல்லாம், தற்போது ஏற்பட்டிருக்கும் ரொக்கப் பண நெருக்கடிக்கு தெரிவிக்கப்படும் சமாளிப்புகளே அல்லாமல், உண்மையான காரணங்களாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
கடந்த மார்ச் 31, 2018-இல் மக்களிடம் புழக்கத்தில் இருக்கும் ரொக்கப் பணத்தின் அளவு ரூ.17.5 லட்சம் கோடி என்றும், பொருளாதார வளர்ச்சி அடிப்படையிலான தேவை 19.4 லட்சம் கோடி என்றும் தெரிவிக்கிறது பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வுப் பிரிவு மதிப்பீடு. இடைவெளியாக காணப்படும் ரூ.1.9 லட்சம் கோடியில் எண்ம பரிவர்த்தனை ரூ.1.2 லட்சம் கோடியாக இருக்கும்பட்சத்தில், ரூ.70,000 கோடி ரொக்கப் பணத் தட்டுப்பாடு காணப்படும் என்றும், அதுதான் இந்தப் பிரச்னைக்கான காரணம் என்றும் தெரிவிக்கிறது. ரிசர்வ் வங்கி கூறுவது சரியா, பாரத ஸ்டேட் வங்கி கூறுவது சரியா?
வேறு பல காரணங்களும் இதற்காக முன் வைக்கப்படுகின்றன. பொருளாதார வளர்ச்சி அதிகரித்திருப்பது, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற இருக்கும் தேர்தல்கள் இவையெல்லாம் காரணமாக குறிப்பிடப்படுகின்றன.

இந்தியாவைப் பொருத்தவரை மாநில சட்டப்பேரவைக்களுக்கான தேர்தல் ஆண்டுதோறும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அதன் காரணமாக ரொக்கப் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது என்கிற வாதம் ஏற்புடையதாக இல்லை.
அரசும், ரிசர்வ் வங்கியும் செலாவணி செல்லாததாக்கப்பட்டதைத் தொடர்ந்து எதிர்பார்த்த அளவு எண்ம பரிமாற்றம் நடைபெறாமல் போனது வேண்டுமானால் ரொக்கப் பணத் தட்டுப்பாட்டுக்கு காரணமாக இருக்கக் கூடும். கடந்த 2017 மார்ச்சில் ரூ.154.09 லட்சம் கோடியாக இருந்த எண்ம பரிமாற்றம், 2018 பிப்ரவரியில் ரூ.114.12 லட்சம் கோடியாக குறைந்துவிட்டிருக்கிறது. எண்ம பரிமாற்றங்களுக்கு சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் மக்கள் ரொக்கப் பரிமாற்றத்திற்கு மீண்டும் மாறத் தொடங்கியிருப்பதில் வியப்பில்லை.

18 மாதங்களுக்கு முன்பு செலாவணி செல்லாததாக்கப்பட்டபோது அளவுக்கு அதிகமாக ரொக்கப் பணம் புழக்கத்தில் உள்ளதாகவும், அதுதான் கணக்கில் காட்டப்படாத கருப்புப் பணத்துக்குக் காரணம் என்றும் கூறப்பட்டது. அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை மக்கள் கருப்புப் பணமாக பதுக்கி வைக்கிறார்கள் என்பதால்தான் அதிக மதிப்புள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாததாக்கப்பட்டன. அதற்குப் பதிலாக ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதும், புழக்கத்தில் இருக்கும் ரொக்கப் பணத்தின் மதிப்பு பழைய நிலைக்கே உயர்ந்துவிட்டிருப்பதும், செலாவணி செல்லாததாக்கப்பட்ட முடிவே, தேவையற்றதோ என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது.

ரூபாயின் மதிப்பும் குறையக்கூடாது, ரூபாய் நோட்டுக்குத் தட்டுப்பாடும் ஏற்படக்கூடாது. இவை இரண்டும் கண்காணிக்கப்படாமல் இருந்தால் அரசு மக்களின் நம்பிக்கையை இழந்துவிடும் என்பது வரலாற்று உண்மை. மத்திய அரசின் நிதி நிர்வாகத்தில் குளறுபடி காணப்படுகிறது என்பதும், வங்கித் துறை கண்காணிக்கப்படாமலும் முறைபடுத்தப்படாமலும் இருக்கிறது என்பதும் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. இது தொடர்ந்தால் அரசு நம்பகத்தன்மையை இழந்துவிடும்!

எம்பிபிஎஸ் படிப்பை முடித்த தார்ச்சாலை தொழிலாளி: சொந்த ஊர் திரும்பியவருக்கு உற்சாக வரவேற்பு

By DIN | Published on : 20th April 2018 01:30 AM

சாலை பணியில் ஈடுபட்ட முருகானந்தம் - 27.6.12 தினமணி செய்தியில் பிரசுரமானது. (உள்படம்) டாக்டர் முருகானந்தம்.

'பாதை வகுத்த பின்பு... பயணம் நடத்தி விடு' என்ற தலைப்பில் எம்பிபிஎஸ் கட் ஆப் 199.5 எடுத்த ஏழை மாணவர் முருகானந்தம், வறுமை காரணமாக தார்ச் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது தினமணியில் கடந்த 27.6.2012 அன்று சிறப்பு செய்தியாக வெளியானது.

இதையடுத்து, உதவும் உள்ளமுடையோர் பலரும் முன்வந்து அளித்த நிதியுதவியுடன், எம்பிபிஎஸ் படிப்பை முடித்து டாக்டராகி சொந்த ஊர் திரும்பிய முருகானந்தத்துக்கு அனைத்துத் தரப்பினரும் அளித்த வரவேற்பும், பாராட்டும் நெஞ்சை நெகிழச் செய்வதாய் அமைந்துள்ளது.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பேரூராட்சிக்குள்பட்ட லிங்கத்தடி கிராமத்தைச் சேர்ந்தவர் இ. பக்கிரிசாமி. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். விவசாயக் கூலித் தொழிலாளியான இவருக்கு லாப்டி (உழவனின் நில உரிமை இயக்கம்) அளித்த சிறிய அளவிலான ஓட்டு வீடு மட்டுமே சொந்தம்.

இவரது மகன் முருகானந்தம், தலைஞாயிறு அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தபோது, தாயார் காலமாகிவிட, அந்த இக்கட்டான மனநிலையிலும் பொதுத் தேர்வெழுதி 2010-இல் பத்தாம் வகுப்பில் 451 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதலாவது மாணவனாகத் திகழ்ந்தார்.

அதோடு மட்டுமல்லாமல், மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றதால், அப்போதைய தலைமையாசிரியர் நரேந்திரன் உதவியுடன், ஆதிதிராவிடர் நலத்துறையின் பரிந்துரையில் பட்டுக்கோட்டை லாரல் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 முடித்தார். முருகானந்தத்தின் கடின உழைப்பின் பலனாக 2012-ஆம் ஆண்டு பிளஸ்-2 தேர்வு முடிவில் 1,140 மதிப்பெண் பெற்றார். மேலும், கட்-ஆப் மதிப்பெண் 199.5 பெற்று தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கான பட்டியலில் 4-ஆம் இடத்தையும், பொதுப் பிரிவில் 83-ஆம் இடத்தையும் பிடித்தார்.

மருத்துவம் பயில வாய்ப்புப் பிரகாசமாக இருந்த போதிலும், குடும்பச் சூழல் காரணமாக கூலிவேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார். கட்-ஆப் பட்டியல் வெளியான நாளில் ஓடாச்சேரி கிராமத்தில் சாலை அமைக்கும் பணியில் முருகானந்தம் ஈடுபட்டிருந்தார். இது கடந்த 27.7.2012-இல் தினமணியில் சிறப்புச் செய்தியாக புகைப்படத்துடன் வெளியானது.

உதவிய உள்ளங்கள்: இந்த செய்தி வெளியான அன்றைய தினமே பல்வேறு தரப்பினரும் திருச்சி தினமணி அலுவலகம் உள்ளிட்ட அதன் கிளை அலுவலகங்களையும், செய்தியாளர்களையும் தொடர்புகொண்டு முருகானந்தத்துக்கு உதவ முன்வந்தனர்.

இவர்களில், தோப்புத்துறை ஆரிப்பா குழுமத்தின் தலைவர் சுல்தானுல் ஆரிப்பின் ரூ.25 ஆயிரம், அப்போது மக்களவை உறுப்பினராக இருந்த தற்போதைய தமிழக அமைச்சர் ஓ.எஸ். மணியன் ரூ.50 ஆயிரம், முருகானந்தம் படித்த பட்டுக்கோட்டை லாரல் பள்ளி நிர்வாகம்- ஆசிரியர்கள் இணைந்து ரூ.50 ஆயிரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது தவிர திருச்சி ஒப்பந்ததாரர் சங்கம், வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகப் பணியாளர்கள் என மேற்கொண்டு பலரும் உதவ முன்வந்தனர். லாப்டி இயக்கத் தலைவர் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், முருகானந்தத்தின் வீட்டுக்கே நேரடியாகச் சென்று உதவ முன்வந்தார். இன்னும் சிலர் முழு செலவினங்களையும் ஏற்று படிக்க வைக்க முன்வந்ததும் நன்றியோடு கூட நினைவுக் கூரப்படுகிறது.

இதன் பலனாக சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முருகானந்தம் எம்பிபிஎஸ் சேர்ந்தார்.

சாதாரண ஏழை கூலித் தொழிலாளி மகனாக சென்னை சென்ற அவர், 6 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஒரு டாக்டராக அண்மையில் (ஞாயிற்றுக்கிழமை) சொந்த ஊர் திரும்பினார். இதையொட்டி, அவருக்கு பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டாக்டர் முருகானந்தனுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பும், பாராட்டும் நெஞ்சை நெகிழச் செய்வதாக அமைந்தது.

விழாவுக்கு சமூக ஆர்வலர் சோமு இளங்கோ தலைமை வகித்தார். அமைச்சர் ஓ.எஸ். மணியன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று முருகானந்தத்தை பாராட்டியதோடு, அவர் உயர் படிப்புகளைத் தொடர்ந்து படிக்கவும், அதற்குத் தேவையான உதவிகளை செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
முருகானந்தத்துக்கு பத்தாம் வகுப்பில் பாடம் நடத்தி, பின்னர் மாவட்டக் கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்று அண்மையில் ஓய்வுபெற்ற நரேந்திரன், லாரல் பள்ளி உதவி தலைமையாசிரியர் ராசேந்திரன், வகுப்பாசிரியர் சோமு, அனைத்துக் கட்சி பிரமுகர்கள், வணிகர்கள், அரசு அலுவலர்கள், ஓய்வுபெற்ற அலுவலர்கள் என பலரும் வாழ்த்தினர். கிராம மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

திக்கற்று நின்றபோது திசைகாட்டிய தினமணி விழாவில் ஏற்புரை நிகழ்த்திய டாக்டர் முருகானந்தம் கூறியது:

அப்பா, அம்மா, 3 சகோதரிகள் என எனது குடும்பத்தினர் வறுமையைப் பொருட்படுத்தாமல் அளித்த ஊக்கத்தால்தான் என்னால் படிக்க முடிந்தது. எம்பிபிஎஸ் படிக்க விருப்பமும், வாய்ப்பும் இருந்தும் குடும்பச் சூழ்நிலையால் திக்கற்று நின்ற எனக்கு தினமணி திசைக்காட்டியாக இருந்ததையும், தினமணி செய்திக்குப் பின்னர் எனது வாழ்வில் திருப்புமுனை ஏற்பட்டதையும் உணர்கிறேன்.

ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்வதன் மூலம், நான் எம்பிபிஎஸ் படிக்க பல்வேறு நிலைகளில் உதவியாக இருந்தவர்கள் அனைவருக்கும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்றார் டாக்டர் முருகானந்தம்.

நீட் தேர்வுக்கூடங்களை மாற்ற இயலாது: சிபிஎஸ்இ அறிவிப்பு


By DIN | Published on : 20th April 2018 01:38 AM

 எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு கூடங்களை மாற்ற இயலாது என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சிபிஎஸ்இ நீட் தேர்வு இயக்குநரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:

நீட் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்த பிறகு மாணவர்கள் தரப்பில் இருந்து சில கோரிக்கைகள் வந்துள்ளன. அதன்படி, தாங்கள் முதல் தேர்வாக குறிப்பிட்டிருந்த நகரத்தில் தங்களுக்கு தேர்வுக்கூடம் அளிக்கப்படவில்லை என பலரும், தேர்வு நடைபெறும் நகரத்தை தவறாக தேர்வு செய்துவிட்டதாக பலரும் கூறி, தங்களுக்கு தேர்வு நடைபெறும் நகரங்களை மாற்றித் தரும்படி கோரியுள்ளனர்.
ஏற்கெனவே, தேர்வு அறிவிக்கையில் தெரிவித்த விதிகளின்படி, எந்தக் காரணத்தைக் கொண்டும் தேர்வு நகரங்கள், தேர்வுக் கூடங்கள் மாற்றப்படாது. ஏனென்றால், நீட் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன.

மேலும், தேர்வு எழுதும் நகரங்கள் கணினி மூலமாகவே ஒதுக்கப்பட்டன. அதில் மனித தலையீடுகள் எதுவும் நிகழவில்லை. எனவே, தேர்வுக்கூடத்தை மாற்ற இயலாது. இதுதொடர்பாக தேர்வர்களின் கோரிக்கைகளுக்கு தனித்தனி பதில்களும் அனுப்பப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாக்டர்களுக்கு சலுகை மார்க் அரசாணை ரத்து மேல் முறையீடு செய்ய முடிவு

Added : ஏப் 20, 2018 00:21

முதுநிலை மருத்துவ படிப்பில், அரசு டாக்டர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கும் அரசாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, மேல் முறையீடு செய்ய, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.தமிழக அரசு மருத்துவ கல்லுாரிகளில், எம்.டி., - எம்.எஸ்., - எம்.டி.எஸ்., என, முதுநிலை மருத்துவ படிப்பில், 1,641 இடங்கள் உள்ளன. இதில், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு, 50 சதவீத இடங்கள் போக, மீதமுள்ள, 50 சதவீத இடங்கள், மாநில ஒதுக்கீட்டிற்கு கிடைக்கும்.இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ., விதிப்படி, மலைப்பகுதி மற்றும் கிராமப்புறங்களில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு, 'நீட்' தேர்வு மதிப்பெண்ணுடன், அவர்கள் பணியாற்றிய காலத்திற்கேற்ப, 10 முதல், 30 சதவீதம், சலுகை மதிப்பெண் வழங்கப்பட்டு வந்தது. இதற்கான அரசாணையை, தமிழக அரசு, 2017ல், வெளியிட்டது.சலுகை மதிப்பெண் வரையறையில், விதிமீறல் நடந்திருப்பதாக தொடரப்பட்ட வழக்கில், சலுகை மதிப்பெண் வழங்கும் அரசாணையை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதனால், மாநில ஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கான கவுன்சிலிங், காலதாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:முதுநிலை மருத்துவ படிப்பில், மாநில ஒதுக்கீட்டில் உள்ள, 821 இடங்களுக்கு, 9,848 பேர் விண்ணப்பித்துள்ளனர். தற்போது, சலுகை மதிப்பெண் தொடர்பான அரசாணையை, உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளதால், அரசு டாக்டர்கள் பாதிக்கப்படுவர். எனவே, தமிழக அரசு, விரைவில் மேல்முறையீடு செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -
முதியோரை நள்ளிரவில் கைது செய்த போலீசாருக்கு ரூ.5 லட்சம் அபராதம்

Added : ஏப் 19, 2018 22:58

சென்னை, வயதானவர்களை நள்ளிரவில் கைது செய்து, துன்புறுத்திய வழக்கில், டி.எஸ்.பி., உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் வசந்தா, 65. இவர், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில், தாக்கல் செய்த மனு:என் மூதாதையரின் பூர்விக சொத்து, சேலம் மாவட்டம், கொண்டையம்பள்ளியில் உள்ளது. இந்த சொத்து தொடர்பாக, எனக்கும், உறவினர்களுக்கும் இடையே பிரச்னை உள்ளது. இந்நிலையில், 2012ல், கொண்டையம்பள்ளியில் உள்ள, பூர்விக வீட்டில், நானும், என் தங்கையின் கணவர், தர்மலிங்கமும், 85, தங்கியிருந்தோம். நள்ளிரவு, 1:30 மணியளவில், சேலம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார், எங்கள் வீட்டுக்கு வந்தனர்.விசாரணைக்கு வரும்படி அழைத்தனர். காலையில் வருவதாக கூறியதை ஏற்காமல், எங்களை அடித்து துன்புறுத்தி, வலுக்கட்டாயமாக ஜீப்பில் ஏற்றினர். பின், எங்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர். எங்களுக்கு எதிராக, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட, நில அபகரிப்பு போலீஸ்காரர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு:உச்சநீதிமன்றமும், தேசிய மனித உரிமைகள் ஆணையயும், குற்ற வழக்கில் ஒருவரை கைது செய்யும் போது, பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தெளிவுபடுத்தியுள்ளது. போலீஸ் அதிகாரி மோகன்குமார் உள்ளிட்டோர், வழிமுறைகளுக்கு மாறாக, மனுதாரர் மற்றும் அவரது உறவினரின் வயதை கருதாமல், நள்ளிரவில் கைது செய்து துன்புறுத்தியுள்ளனர்.எனவே, மனுதாரருக்கு, ஐந்து லட்சம் ரூபாயை, தமிழக அரசு, நான்கு வாரத்திற்குள் அளிக்க வேண்டும். அந்த தொகையை, டி.எஸ்.பி., மோகன்குமார், இன்ஸ்பெக்டர் ராஜிடமிருந்து, தலா, இரண்டு லட்சம் ரூபாய்; எஸ்.ஐ., தங்கராஜ், பாக்கியலட்சுமி ஆகியோரிடம் இருந்து, தலா, 50 ஆயிரம் ரூபாய் என, வசூலித்துக் கொள்ளலாம். நான்கு போலீஸ் அதிகாரிகள் மீதும், குற்ற நடவடிக்கையும், துறை ரீதியான நடவடிக்கையையும், தமிழக எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
உடலில் தொங்கும் 18 கிலோ கட்டிகள்; 34 ஆண்டுகளாக தவிக்கும் மலைவாசி

Updated : ஏப் 20, 2018 00:57 | Added : ஏப் 19, 2018 23:10



  தர்மபுரி : உடலில் தொங்கும், 18 கிலோ கட்டிகளுடன், மலைக் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், 34 ஆண்டுகளாக அவதிப்படுகிறார்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, மலை கிராமமான போடாரங்காட்டைச் சேர்ந்தவர் பழனிசாமி, 46.இவருக்கு, 12 வயதில் இருந்து, தாடை, கழுத்தின் பின் பகுதி, கைகளின் மணிக்கட்டு அருகே என, எட்டு கட்டிகள் வளர துவங்கின. அதிர்ச்சியடைந்த பெற்றோர், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். மருந்து, மாத்திரைகளை டாக்டர்கள் கொடுத்தனர்.

குணமாகாமல், கட்டிகள் வளர்ந்த நிலையில், பழனிசாமிக்கு பேச்சுத்திறன் பாதிக்கப்பட்டது. உடலில் கட்டிகளுடன் பயணிக்க முடியாததால், மருத்துவ சிகிச்சைக்கு செல்ல முடியாமல் தவிக்கிறார். எந்த பணிக்கும் செல்லாத நிலையில், உதவித்தொகை கேட்டு, பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம், மனு கொடுத்தும், பலனில்லை. இந்த பிரச்னையால், பழனிசாமிக்கு திருமணமும் ஆகவில்லை. சகோதரர்கள் தயவில் வாழ்ந்து வருகிறார்.

பழனிசாமி கூறுகையில், ''மாவட்ட நிர்வாகம், உதவித்தொகை வழங்கா விட்டாலும் பரவாயில்லை; உடலில் உள்ள கட்டிகளை அகற்ற நடவடிக்கை எடுத்தால், என் சொந்தக் காலிலேயே நின்று, பிழைத்துக் கொள்வேன்,'' என்றார்.

NEWS TODAY 23.12.2025