Friday, April 20, 2018


நீட் தேர்வுக்கூடங்களை மாற்ற இயலாது: சிபிஎஸ்இ அறிவிப்பு


By DIN | Published on : 20th April 2018 01:38 AM

 எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு கூடங்களை மாற்ற இயலாது என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சிபிஎஸ்இ நீட் தேர்வு இயக்குநரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:

நீட் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்த பிறகு மாணவர்கள் தரப்பில் இருந்து சில கோரிக்கைகள் வந்துள்ளன. அதன்படி, தாங்கள் முதல் தேர்வாக குறிப்பிட்டிருந்த நகரத்தில் தங்களுக்கு தேர்வுக்கூடம் அளிக்கப்படவில்லை என பலரும், தேர்வு நடைபெறும் நகரத்தை தவறாக தேர்வு செய்துவிட்டதாக பலரும் கூறி, தங்களுக்கு தேர்வு நடைபெறும் நகரங்களை மாற்றித் தரும்படி கோரியுள்ளனர்.
ஏற்கெனவே, தேர்வு அறிவிக்கையில் தெரிவித்த விதிகளின்படி, எந்தக் காரணத்தைக் கொண்டும் தேர்வு நகரங்கள், தேர்வுக் கூடங்கள் மாற்றப்படாது. ஏனென்றால், நீட் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன.

மேலும், தேர்வு எழுதும் நகரங்கள் கணினி மூலமாகவே ஒதுக்கப்பட்டன. அதில் மனித தலையீடுகள் எதுவும் நிகழவில்லை. எனவே, தேர்வுக்கூடத்தை மாற்ற இயலாது. இதுதொடர்பாக தேர்வர்களின் கோரிக்கைகளுக்கு தனித்தனி பதில்களும் அனுப்பப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024