Sunday, April 22, 2018

சேலம், தர்மபுரியில் வெயில் அதிகரிக்கும்

Added : ஏப் 22, 2018 01:21

மேட்டூர்: ''சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்,'' என, வானிலை ஆய்வுத்துறை இயக்குனர், பாலச்சந்திரன்கூறினார்.

சேலம் மாவட்டம், மேட்டூரில், பாலச்சந்திரன் அளித்த பேட்டி: காவிரி நீர்பிடிப்பு பகுதியில், பருவ மழை சீராக பெய்வதில்லை. ஆண்டுதோறும் பெய்யும் மழை அளவு ஏற்றத் தாழ்வாக இருப்பதால், எவ்வளவு மழை பெய்யும் என்பதை, தெளிவாக கணிக்க முடியவில்லை.தமிழகத்தின், சராசரி வடகிழக்கு பருவமழையளவு, 44 செ.மீ., நடப்பாண்டு, அதே அளவில் இயல்பான மழை பெய்ய வாய்ப்புள்ளது.தமிழகத்தில், அதிகபட்சமாக, 42 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. நடப்பாண்டு, மே மாதம், 1 டிகிரி அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, கடல்பரப்பிலிருந்து துாரத்திலுள்ள, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.நீர்வரத்து அதிகரிப்பு

தமிழகம் - கர்நாடகா எல்லையிலுள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதியில், பெய்து வரும் மழையால், கடந்த, 19ல், 48 கன அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று முன்தினம், 407 கன அடியாகவும், நேற்று, 685 கன அடியாகவும் அதிகரித்தது.நேற்று, தமிழக எல்லை, பிலிகுண்டுலுகாவிரியாற்றில், வினாடிக்கு, 1,200 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இதனால், கூடுதல் நீர்வரத்து, மேலும் இரு நாட்கள் நீடிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அணை நீர்மட்டம், 35.40 அடி; நீர் இருப்பு, 9.84 டி.எம்.சி., இருந்தது.
'அவசரப்பட்டுட்டோமோ...' : தினகரன் ஆட்கள் அதிருப்தி

Added : ஏப் 22, 2018 00:22

dinamalar

தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களில் பலர், 'அவசரப்பட்டு விட்டோமோ' என, விரக்தியில் உள்ளனர். அ.தி.மு.க.,வில் இருந்து, தினகரன் ஓரம் கட்டப்பட்டதும், 18 எம்.எல்.ஏ.,க்கள், தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தனர். கட்சியும், ஆட்சியும், தினகரன் கட்டுப்பாட்டிற்கு வரும் என்ற எதிர்பார்ப்பில், ஆர்வமுடன் சென்றனர். ஆனால், எதிர்பார்த்தபடி தினகரன் அணிக்கு, எம்.எல்.ஏ.,க்கள் பலம் கிடைக்கவில்லை. ஆதரவு தெரிவித்த, 18 எம்.எல்.ஏ.,க்களும், அதிரடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

அதை எதிர்த்து, அவர்கள் நீதிமன்றம் சென்றனர். வழக்கு விசாரணை முடிந்து, தீர்ப்புக்காக காத்திருக்கிறது. மாதங்கள் கடந்த நிலையில், அரசியல் நிலவரம் மாறிவிட்டது. தினகரன், தனி கட்சி துவங்கி விட்டார். அ.தி.மு.க.,வை, முதல்வரும், துணை முதல்வரும், முழுமையாக பிடித்து விட்டனர். கட்சியும், ஆட்சியும், அவர்களிடம் உள்ளதால், நிர்வாகிகள் எல்லாம், தினகரன் பக்கம் செல்லும் எண்ணத்தை கைவிட்டனர்.தாமதமாக, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் மட்டுமே, ஆதரவு தெரிவித்தனர். அவர்களின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. ஆனால், எம்.எல்.ஏ., பதவி பறிபோகவில்லை. எம்.எல்.ஏ.,க்களுக்கான சம்பள உயர்வு, 2017 ஜூலை முதல் அமலுக்கு வந்துள்ளது. அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், புதிய சம்பளத்துடன், நிலுவைத் தொகையையும் பெற்றுள்ளனர்.

தினகரன் ஆதரவு, மூன்று எம்.எல்.ஏ.,க்களும், புதிய சம்பள உயர்வை பெற்றுள்ளனர். ஆனால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட, 18 எம்.எல்.ஏ.,க்களுக்கு, இரண்டரை மாத நிலுவைத் தொகை மட்டும் வந்துள்ளது; மாதச் சம்பளம் இல்லை.அதேபோல், தினகரன் துவங்கிய கட்சியில், ஒரு சிலருடைய ஆதிக்கம் அதிகமாக உள்ளது. மற்றவர்களுக்கு முக்கியத்துவம் இல்லை. இதனால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்களில் பலர், அவசரப்பட்டு விட்டோமோ என்ற, விரக்தியில் உள்ளனர். அவர்களிடம், 'நீதிமன்ற வழக்கு சாதகமாக வரும். அப்போது, நிலுவை தொகையை முழுமையாக பெறலாம்' என, ஆறுதல் கூறி சமாதானப்படுத்தி உள்ளனர்.

- நமது நிருபர் -
ரஜினி, கமல் புறக்கணிப்பு விஜயகாந்த் விரக்தி

Added : ஏப் 22, 2018 00:21

தனக்கு நடந்த பாராட்டு விழாவில், ரஜினி, கமல் பங்கேற்காததால், விஜயகாந்த் கடும் விரக்தி அடைந்துள்ளார்.தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த், சினிமாவுக்கு வந்து, 40 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதற்காக, காஞ்சிபுரம் மாவட்ட தே.மு.தி.க., சார்பில், விஜயகாந்திற்கு பாராட்டு விழா, 15ம் தேதி, படப்பை அருகே நடந்தது.விழாவில் பங்கேற்க வரும்படி, திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோருக்கு, அழைப்பு விடப்பட்டிருந்தது. விஜயகாந்த் மைத்துனர், சுதீஷ், மாநில நிர்வாகி பார்த்தசாரதி, காஞ்சிபுரம் மாவட்ட செயலர், முருகேசன் ஆகியோர், நேரடியாக சென்று, இதற்கான அழைப்பிதழை வழங்கினர்

.அதையேற்று, திரையுலகில், விஜயகாந்திற்கு நெருக்கமான மற்றும் அவரால் ஆதாயம் அடைந்த பலரும், விழாவில் பங்கேற்றனர்.கட்சி துவங்கிய பின், விஜயகாந்திற்கு எதிராக அரசியல் செய்த, நடிகர் சரத்குமார், இவ்விழாவில் பங்கேற்று, ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். விஜயகாந்துடன் அவ்வளவாக நட்பு வைத்து கொள்ளாத நடிகர்கள், சத்யராஜ், நாசர் உள்ளிட்டோரும், மேடை ஏறி, வாயார வாழ்த்தினர்.ஜெ., இறப்புக்கு முன், விஜயகாந்தை சந்திப்பதை, திரையுலகினர் பலரும் தவிர்த்து வந்தனர். இப்போது, எதிர்பாராத பலரும், விழாவிற்கு வந்து வாழ்த்தியதால், விஜயகாந்த் மகிழ்ச்சி அடைந்தார். அதேநேரத்தில், விழாவில், ரஜினி, கமல் பங்கேற்பர் என, விஜயகாந்த் பெரிதும் எதிர்பார்த்தார்.

 இதன் வாயிலாக, அரசியல் பரபரப்பை ஏற்படுத்தலாம் என, கணக்கு போட்டார்.அவர்களின் வருகையை எதிர்பார்த்து, ஆவலுடன் காத்திருந்தார். ஆனால், இருவரும் விழாவில் பங்கேற்பதை தவிர்த்து விட்டனர். இதனால், விஜயகாந்த் கடும் விரக்தி அடைந்துஉள்ளார்.இதுகுறித்து, தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், ரஜினி அல்லது கமலுடன் இணைந்து தேர்தலை சந்திக்க, விஜயகாந்த் விரும்பினார். ஆனால், இருவரும் விழாவில் பங்கேற்கவில்லை. இது, விஜயகாந்தை அதிகம் பாதித்துள்ளது.கட்சி துவங்கிய பின், கமல், நட்பின் அடிப்படையில் விஜயகாந்தை சந்தித்தார். ஆனால், ரஜினி, இதுவரை சந்திக்கவில்லை. விஜயகாந்தின் திரையுலக சாதனையை பாராட்டவும் இல்லை. இதுபற்றி, தன் நண்பர் களிடம், விஜயகாந்த் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இவ்வாறு தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.

- நமது நிருபர் -
இணையவழி மின் கட்டண வசதி ரத்து

Added : ஏப் 22, 2018 02:30 |

சென்னை: 'விருதுநகர் உட்பட, ஐந்து நகரங்களில் வசிக்கும் நுகர்வோர்கள், இணையதளத்தில் மின்கட்டணத்தை செலுத்த முடியாது' என, மின் வாரியம் அறிவித்துள்ளது.தமிழகத்தில், மின் கட்டணத்தை, மின் வாரிய கட்டண மையங்கள், இணையதளம், 'மொபைல் ஆப்' என்ற செயலி வாயிலாகவும், அரசு இ - சேவை மையங்கள், தபால் நிலையங்களிலும் செலுத்தலாம்.இந்நிலையில், 'விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், திருவள்ளூர், திருத்தணி, வேலுார், ஆற்காடு ஆகிய நகரங்களில், 'சர்வரில்' பராமரிப்பு பணி நடப்பதால், அங்குள்ள நுகர்வோர்கள், இணையதளத்தில் மின் கட்டணத்தை செலுத்த முடியாது' என, மின் வாரியம் தெரிவித்துள்ளது.
'பேறு கால விடுமுறையும் பணி நாட்களே'

Added : ஏப் 22, 2018 00:36

சென்னை: 'முதுநிலை மருத்துவ படிப்பில் சேர, பேறு கால விடுமுறையையும் பணி நாட்களாக கருதி, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனு தாக்கல் : அறந்தாங்கியை சேர்ந்த, டாக்டர் அருணா, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த, டாக்டர் நித்தியலட்சுமி, பாளையங்கோட்டையை சேர்ந்த, டாக்டர் ஆனந்தநாராயணி உள்ளிட்ட, அரசு டாக்டர்கள் தாக்கல் செய்த மனு: முதுநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான தகுதி பற்றி, ௨௦௧௮ மார்ச், ௧௫ல், சுகாதாரத் துறை விளக்க குறிப்பேடு வெளியிட்டது.அதில், 'அரசு பணியில் இருக்கும் டாக்டர்கள், குறைந்தபட்சம், இரண்டு ஆண்டுகள் தொடர் பணியில் இருந்திருக்க வேண்டும்; ஈட்டிய விடுப்பு, பேறு கால விடுப்பு உள்ளிட்ட விடுப்புகள், அதில் வராது' என, கூறப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளில், பேறு கால விடுப்பு எடுத்த, பெண் டாக்டர்கள் யாரும், முதுநிலை மருத்துவ படிப்பில் சேர முடியாது; இது, சட்ட விரோதமானது. பேறு கால விடுப்பு, சட்டப்படியான உரிமை. குறிப்பிட்ட நாட்கள் பணியாற்றியதற்காக, ஈட்டிய விடுமுறை அளிக்கப்படுகிறது. இது, எங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமை.எனவே, முதுநிலை மருத்துவ படிப்பில், மாணவர்கள் சேர்க்கைக்கான புதிய நிபந்தனைகளை, ரத்து செய்ய வேண்டும். எங்கள்விண்ணப்பங்களை ஏற்று, பரிசீலிக்கும்படி உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுக்களை, நீதிபதிகள்,எச்.ஜி.ரமேஷ், எம்.தண்டபாணி அடங்கிய,'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில்,மூத்த வழக்கறிஞர், பி.வில்சன், வழக்கறிஞர்,வி.சுப்ரமணியன், அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல், எஸ்.டி.எஸ்.மூர்த்தி, சிறப்பு பிளீடர், சி.முனுசாமி, மருத்துவ கவுன்சில் சார்பில், வழக்கறிஞர், வி.பி.ராமன் ஆஜராகினர்.

'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்கள், அரசு டாக்டர்களாக உள்ளனர். தொலைதுார, கடினமான பகுதிகளில், இரண்டு ஆண்டுகள் பணியாற்றி உள்ளனர்.பேறு கால விடுமுறையையும் சேர்த்து, இரண்டு ஆண்டுகள் பணி முடித்த மனுதாரர்கள், கூடுதல் மதிப்பெண்கள் பெற உரிமை உள்ளது.பெண்களின் நலன்களை பாதுகாக்க, பேறு கால விடுமுறை மற்றும் இதர சலுகைகளை அரசு வழங்குகிறது.

கூடுதல் மதிப்பெண் : பெண்களுக்கு சலுகைகள் வழங்கும் நோக்கம் இருக்கும் போது, அந்த நோக்கத்தை, அரசு டாக்டர்களுக்கு பறித்துவிடக்கூடாது. எனவே, கூடுதல் மதிப்பெண்கள் பெற, மனுதாரர்களுக்கு உரிமை உள்ளது. கூடுதல் மதிப்பெண்வழங்குவதற்காக, பேறு கால விடுமுறையை, பணி நாட்களாக பரிசீலிக்கும்படி உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.
லஞ்சமாக, 'சில்லி சிக்கன்' : பெண் எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'

Added : ஏப் 22, 2018 01:19 

லக்னோ: வழக்குப் பதிவு செய்ய லஞ்சமாக, பீஸா மற்றும் சில்லி சிக்கன் கேட்ட, பெண் சப் - இன்ஸ்பெக்டர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.உத்தர பிரதேச மாநிலத்தில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.உ.பி., மாநிலம், ஹன்ஸ்கன்ச் நகரில், ஓட்டல் நடத்துபவர், ரோஷித் பெரி. இவர், தன்னிடம், 7,000 ரூபாயை, ஒருவர் ஏமாற்றி விட்டதாக, போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்.இந்த புகாரை பதிவு செய்ய லஞ்சமாக, சாப்பாடு அனுப்ப வேண்டும் என, பெண் சப் - இன்ஸ்பெக்டர், சுமித்ரா தேவி நிர்ப்பந்தம் செய்துள்ளார். அவர் கேட்டதை சப்ளை செய்த ரோஷித் பெரி, பின், வழக்குப் பதிவு நகல் வாங்க, ஸ்டேஷனுக்கு வந்தார். ஆனால், பீஸா, சில்லி சிக்கன்' கொடுத்தால்தான், வழக்குப் பதிவு நகல் தர முடியும் என, சுமித்ரா தேவி அடம்பிடித்துள்ளார்.இதை வீடியோவாக பதிவு செய்த ரோஷித் பெரி, சமூக ஊடகங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ, இணையதளத்தில் காட்டுத் தீ போல் பரவியது.இது தொடர்பாக விசாரணை நடத்திய உயரதிகாரிகள், சுமித்ரா தேவியை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டனர்.

சென்னையில் முதல் முறையாக ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 69

Added : ஏப் 22, 2018 00:38

சென்னை: சென்னையில், முதல் முறையாக, ஒரு லிட்டர் டீசல் விலை, 69 ரூபாயை தாண்டியுள்ளது. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை உயர்வால், உள்நாட்டில், பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக, டீசல் விலை, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில், 2014 மே, 13ல், முதல் முறையாக, ஒரு லிட்டர் டீசல் விலை, 60 ரூபாயை தாண்டி, அதாவது, 60.50 ரூபாய்க்கு விற்பனையானது.பின், அதன் விலை, 59 ரூபாய்க்கு கீழ் குறைந்த நிலையில், 2016 ஜன., 16ல், 62.48 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியது. மீண்டும், டீசல் விலை, 60 ரூபாய்க்கு கீழ் சரிவடைந்தது.இந்நிலையில், 2017 ஏப்., 12ல், ஒரு லிட்டர் டீசல், 60 ரூபாயை தாண்டி, 60.50 ரூபாயாக இருந்தது. தொடர்ந்து, உயர்ந்து வந்த டீசல் விலை, தற்போது, முதல் முறையாக, சென்னையில், லிட்டர், 69 ரூபாயை தாண்டி, 69.06 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.



NEWS TODAY 29.06.2026