Sunday, April 22, 2018

'பேறு கால விடுமுறையும் பணி நாட்களே'

Added : ஏப் 22, 2018 00:36

சென்னை: 'முதுநிலை மருத்துவ படிப்பில் சேர, பேறு கால விடுமுறையையும் பணி நாட்களாக கருதி, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனு தாக்கல் : அறந்தாங்கியை சேர்ந்த, டாக்டர் அருணா, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த, டாக்டர் நித்தியலட்சுமி, பாளையங்கோட்டையை சேர்ந்த, டாக்டர் ஆனந்தநாராயணி உள்ளிட்ட, அரசு டாக்டர்கள் தாக்கல் செய்த மனு: முதுநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான தகுதி பற்றி, ௨௦௧௮ மார்ச், ௧௫ல், சுகாதாரத் துறை விளக்க குறிப்பேடு வெளியிட்டது.அதில், 'அரசு பணியில் இருக்கும் டாக்டர்கள், குறைந்தபட்சம், இரண்டு ஆண்டுகள் தொடர் பணியில் இருந்திருக்க வேண்டும்; ஈட்டிய விடுப்பு, பேறு கால விடுப்பு உள்ளிட்ட விடுப்புகள், அதில் வராது' என, கூறப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளில், பேறு கால விடுப்பு எடுத்த, பெண் டாக்டர்கள் யாரும், முதுநிலை மருத்துவ படிப்பில் சேர முடியாது; இது, சட்ட விரோதமானது. பேறு கால விடுப்பு, சட்டப்படியான உரிமை. குறிப்பிட்ட நாட்கள் பணியாற்றியதற்காக, ஈட்டிய விடுமுறை அளிக்கப்படுகிறது. இது, எங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமை.எனவே, முதுநிலை மருத்துவ படிப்பில், மாணவர்கள் சேர்க்கைக்கான புதிய நிபந்தனைகளை, ரத்து செய்ய வேண்டும். எங்கள்விண்ணப்பங்களை ஏற்று, பரிசீலிக்கும்படி உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுக்களை, நீதிபதிகள்,எச்.ஜி.ரமேஷ், எம்.தண்டபாணி அடங்கிய,'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில்,மூத்த வழக்கறிஞர், பி.வில்சன், வழக்கறிஞர்,வி.சுப்ரமணியன், அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல், எஸ்.டி.எஸ்.மூர்த்தி, சிறப்பு பிளீடர், சி.முனுசாமி, மருத்துவ கவுன்சில் சார்பில், வழக்கறிஞர், வி.பி.ராமன் ஆஜராகினர்.

'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்கள், அரசு டாக்டர்களாக உள்ளனர். தொலைதுார, கடினமான பகுதிகளில், இரண்டு ஆண்டுகள் பணியாற்றி உள்ளனர்.பேறு கால விடுமுறையையும் சேர்த்து, இரண்டு ஆண்டுகள் பணி முடித்த மனுதாரர்கள், கூடுதல் மதிப்பெண்கள் பெற உரிமை உள்ளது.பெண்களின் நலன்களை பாதுகாக்க, பேறு கால விடுமுறை மற்றும் இதர சலுகைகளை அரசு வழங்குகிறது.

கூடுதல் மதிப்பெண் : பெண்களுக்கு சலுகைகள் வழங்கும் நோக்கம் இருக்கும் போது, அந்த நோக்கத்தை, அரசு டாக்டர்களுக்கு பறித்துவிடக்கூடாது. எனவே, கூடுதல் மதிப்பெண்கள் பெற, மனுதாரர்களுக்கு உரிமை உள்ளது. கூடுதல் மதிப்பெண்வழங்குவதற்காக, பேறு கால விடுமுறையை, பணி நாட்களாக பரிசீலிக்கும்படி உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024