Friday, May 4, 2018

சேலத்தில் பரவும் மர்மக்காய்ச்சல் மீண்டும் தலை தூக்குது டெங்கு

Added : மே 04, 2018 04:58

சேலம் மாவட்டம், சங்க கிரி, இடைப்பாடி பகுதியில், மர்ம காய்ச்சல் பரவி வருவதால், மீண்டும், 'டெங்கு' அச்சம் உருவாகிஉள்ளது. 'சுகாதாரத் துறையினர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில், கடந்த ஆண்டு, டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவியது; 63 பேர் உயிரிழந்தனர். அதிலும், குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர்.தற்போது, சேலம் மாவட்டம், சங்ககிரி, இடைப்பாடி பகுதியில், மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால், பொதுமக்களிடையே பீதி அதிகரித்துள்ளது.

எனவே, காலம் கடந்த பின், தடுப்பு நடவடிக்கை எடுக்காமல், முன்னெச்சரிக்கையாக, துப்புரவு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.சேலம் சுகாதாரத் துறை துணை இயக்குனர், பூங்கொடி கூறியதாவது:கடந்த ஆண்டு, ஒன்றியத்துக்கு, 100 பேர் வீதம், டெங்கு தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

காய்ச்சலின் தாக்கம் குறைந்த பின், ஆட்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. ஜனவரிக்கு பின், ஒரு பாதிப்பும் இல்லாத நிலையிலும், ஒன்றியத்துக்கு, 10 பேர் வீதம், தொடர்ந்து டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.மாநகராட்சியிலும், இதே நிலை தான் நீடிக்கிறது. சேலம் மாவட்டத்தில், இதுவரை டெங்கு பாதிப்பு கண்டறியப்படவில்லை. சங்ககிரி பகுதியில் இருப்பது சாதாரண காய்ச்சல் தான். தொடர்ந்து, டெங்கு குறித்து கண்காணித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.இரு நாட்களுக்கு முன், கடும் காய்ச்சலால், சங்ககிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு, 'டெங்கு' உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதிகாரிகள் மூடி மறைக்கின்றனர்.
- நமது சிறப்பு நிருபர் -
முதுநிலை மருத்துவ படிப்புக்கு 10 ஆயிரம் பேர் விண்ணப்பம்

Added : மே 04, 2018 07:18

சென்னை:திருத்தப்பட்ட, 'கட் ஆப்' மதிப்பெண் அடிப்படையில், முதுநிலை மருத்துவ படிப்புக்கு, 10 ஆயிரத்து, 797 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழக அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, முதுநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு, மார்ச், 26ல்,முடிவடைந்தது.அப்போது, 9,848 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கிடையில், அரசு டாக்டர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்குவது தொடர்பான, பிரச்னையில், தரவரிசை பட்டியல் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், முதுநிலை மருத்துவ படிப்புக்கான, 'கட் ஆப்' மதிப்பெண்ணை குறைத்து, மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி, 'நீட்' தேர்வு மதிப்பெண்ணில், பொது பிரிவினருக்கு, 149ல் இருந்து, 233; ஆதிதிராவிடருக்கு, 115ல் இருந்து, 218; மாற்றுத்திறனாளிகளுக்கு, 133ல் இருந்து, 2018 வரையும், 'கட் ஆப்' மதிப்பெண்ணை, தமிழக மருத்துவ கல்வி இயக்கம் அறிவித்தது.

திருத்தப்பட்ட, 'கட் ஆப்' மதிப்பெண் அடிப்படையில், தகுதியுடையோர், முதுநிலை மருத்துவ படிப்பில் சேர, மே, 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டது.இதையடுத்து, 949 பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளனர். அதனால், விண்ணப்பித்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 10 ஆயிரத்து, 797 ஆகியுள்ளது. விரைவில், தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடைபெறும்.
அக்னி வெயில் இன்று ஆரம்பம்!

Added : மே 04, 2018 05:53

சென்னை:அக்னி நட்சத்திரம் என்ற, கத்திரி வெயில், இன்று துவங்குகிறது. வரும், 28ம் தேதி வரை, வெயில் வாட்டும். இந்த காலத்தில், இயல்பான அளவை விட, குறைந்தபட்சம், 3 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு வெப்பநிலை உயரும் என, கணிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை மைய அறிவிப்பின்படி, இன்று கடலோரம் அல்லாத, மற்ற உள் மாவட்டங்களில், சில இடங்களில், சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளது. வேலுார், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சி, பெரம்பலுார், கரூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில், 42 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகும்.

நேற்று காலை, 8:30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், சிவகங்கையில், 13 செ.மீ., மழை கொட்டியுள்ளது. கோவை, பீளமேடு, 4; நிலக்கோட்டை, பாலக்கோடு, சமயபுரம், பெரியகுளம், திண்டுக்கல், குன்னுார், கோத்தகிரி, கடவூர், திண்டுக்கல், மேலுார், 3; வாடிப்பட்டி, பெரியநாயக்கன் பாளையம், மணப்பாறை, கொடைக்கானல், ஆண்டிபட்டி, விளாத்திகுளம், திருபுவனம், தாராபுரம், மேட்டுப்பாளையம், நத்தம், உதகமண்டலம், தாளவாடி, உடுமலைப்பேட்டை, 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 மையங்களில் ‘நீட்’ தேர்வு நடக்கிறது மாணவ, மாணவிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள்




மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு தமிழகத்தில் 10 மையங்களில் நாளை மறுதினம் நடக்கிறது. ‘நீட்’ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மே 04, 2018, 04:30 AM
சென்னை,

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் 2018-19-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை (‘நீட்’) சி.பி.எஸ்.இ. (மத்திய கல்வி வாரியம்) நடத்துகிறது.

அந்தவகையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு நாளைமறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்த தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இது தமிழக மாணவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். தேர்வு மையங்கள் ஒதுக்கீடு கணினி மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இதில் மாற்றம் செய்ய முடியாது என்று சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு சி.பி.எஸ்.இ. ஒதுக்கீடு செய்த தேர்வு மையங்களில் தான் தமிழக மாணவர்கள் தேர்வு எழுதவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

‘நீட்’ தேர்வுக்காக தமிழகத்தில் சென்னை, கோவை, காஞ்சீபுரம், மதுரை, நாமக்கல், சேலம், திருவள்ளூர், திருச்சி, நெல்லை மற்றும் வேலூர் ஆகிய 10 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ‘நீட்’ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கும். ஆனால் மாணவர்கள் 9.30 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் இருக்க வேண்டும். 9.30 மணிக்கு பின்னர் தேர்வு மையத்துக்குள் வரும் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். ‘நீட்’ இணையதள பக்கத்தில் உள்ள நேரம் எல்லா மையங்களிலும் பின்பற்றப்பட உள்ளது.

‘நீட்’ தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அந்த விவரங்கள் வருமாறு:-

* வெற்று அல்லது எழுதிய காகிதங்கள், ஜாமெட்ரி மற்றும் பென்சில் பாக்ஸ் எடுத்துச்செல்லக்கூடாது.

* பிளாஸ்டிக் பை, கால்குலேட்டர், அளவுகோல், பரீட்சை அட்டை, பென் டிரைவ், ரப்பர், எலக்ட்ரானிக் பேனா, பேனா, ஸ்கேனர் எடுத்துச்செல்லக்கூடாது.

* கைப்பை, மணிபர்ஸ், பெல்ட், தொப்பி, கைக்கடிகாரம், கண்ணாடி, கேமரா, உலோக பொருட்கள், சாப்பிடும் உணவுகள், தண்ணீர் பாட்டில் அனுமதி கிடையாது.

* மோதிரம், காதணி, மூக்குத்தி, சங்கிலி, ஹேர் கிளிப், தலை முடியில் மாட்டும் பெரிய ரப்பர், வளையல் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளது.

* செல்போன், புளூடூத், ஹெட்செட், மைக்ரோபோன், பேஜர் கொண்டு செல்ல அனுமதி கிடையாது.

* வெளிர் நிறத்திலான அரைக்கை ஆடைகள் அணிந்து வர வேண்டும். அதில் பெரிய பொத்தான், பேட்ஜ், பூ போன்றவை இடம் பெறக்கூடாது.

* சல்வார் மற்றும் பேண்ட் அணிந்து வரவேண்டும். குறைந்த உயரத்திலான செருப்புகள் மட்டுமே அணிய வேண்டும். மூடப்பட்ட நிலையில் இருக்கும் காலணிகளுக்கு, ஷூ-க்கு அனுமதி கிடையாது.

* தேர்வு எழுத வரும் மாணவர்கள் பொருட்களை வைப்பதற்கு எந்த ஏற்பாடும் செய்யப்பட்டிருக்காது.

* கலாசாரம் மற்றும் நம்பிக்கை சார்ந்த ஆடைகளை அணியும் மாணவர்கள் காலை 8.30 மணிக்கே தேர்வு மையத்திற்குள் இருக்க வேண்டும்.

* சேலை அணிந்து வரக்கூடாது.

மேற்கண்ட விதிமுறைகளை பின்பற்றப்படாத மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்த இந்தியாவும் 12–ந்தேதி நடக்கப்போகும் கர்நாடக தேர்தலை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.

மே 04 2018, 03:00 AM

ஒட்டுமொத்த இந்தியாவும் 12–ந்தேதி நடக்கப்போகும் கர்நாடக தேர்தலை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. காவிரிபிரச்சினையிலும் கர்நாடக தேர்தல் நிச்சயமாக முக்கிய பங்காற்றும் என்பதால் தமிழக மக்களுக்கும் கர்நாடக தேர்தலின் முடிவு பெரிய ஆவலை உருவாக்கி உள்ளது. முதல்–மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்பதில் அதிக முனைப்புக்காட்டி வருகிறது. காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் செய்கிறார். இப்போது பிரதமர் நரேந்திரமோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கிறார். பா.ஜ.க. தலைவர் அமித்ஷா பலமுறை கர்நாடகத்தை சுற்றி வலம் வந்திருக்கிறார்.

கர்நாடகத்தில் நாங்கள் பெறப்போகும் வெற்றி தென்மாநிலங்களில் நுழைவதற்கான வாசலாக இருக்கும் என்று அமித்ஷா அறிவித்து விட்டார். மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி தலைவரான தேவகவுடா எப்படியும் ஆட்சியை பிடிக்கவேண்டும் என்று அவரும் பலகணக்குகளை போட்டு வருகிறார். 224 தொகுதிகளைக்கொண்ட கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. 224 இடங்களிலும், காங்கிரஸ் 222 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதாதளம் 201 இடங்களிலும், அதன்கூட்டணி கட்சியான பகுஜன் சமாஜ்கட்சி 18 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 19 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 14 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி 2 இடங்களிலும் போட்டியிடுகிறது. தேர்தல் கணிப்புகள், எந்தக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது, பா.ஜ.க., காங்கிரஸ் இருகட்சிகளுமே தலா 90 இடங்களை சுற்றித்தான் வெற்றிபெறும். மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி 40 இடங்களைச் சுற்றி வெற்றி பெறும். ஆக, ஒன்று தொங்கு சட்டசபை அல்லது மதசார்பற்ற ஜனதாதள ஆதரவோடுதான் எந்தக்கட்சியும் ஆட்சி அமைக்க முடியும் என்று கணிப்புகள் வெளியாகியுள்ளன. ஆனால், மதசார்பற்ற ஜனதாதள முதல்–மந்திரி வேட்பாளரான தேவகவுடாவின் மகன், முன்னாள் முதல்–மந்திரி குமாரசாமி நான் கிங்மேக்கராக இருக்கமாட்டேன். கிங்காகத்தான் இருப்பேன் என்று, முதல்–மந்திரியாகும் ஆசையை வெளிப்படுத்திவிட்டார். ஆனால், அரசியல் நோக்கர்கள் அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா. தேர்தல் முடிவு வெளிவந்தபிறகு தான் யார் கிங்காக இருக்கப்போகிறார்கள்? யார் கிங்மேக்கராக இருக்கப்போகிறார்கள்? என்பது தெரியும் என்று கூறுகிறார்கள்.

மதசார்பற்ற ஜனதாதளம் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் மங்கலாக இருக்கிறது. ஏனெனில் ராகுல்காந்தி பல இடங்களில் பேசும்போது, மதசார்பற்ற ஜனதாதளம் பா.ஜ.க.வின் ‘பி’ அணி என்று பேசியிருக்கிறார். பிரதமர் நரேந்திரமோடி கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசும்போது, தேவகவுடாவை மிகவும் புகழ்ந்து பேசினார். தேவகவுடா எப்போது டெல்லிக்கு வந்தாலும், நான் அவரை மிகவும் மரியாதையோடு வரவேற்பேன். எனது வாசலில் நின்று மட்டுமல்ல, அவரது கார்கதவை திறந்து வரவேற்பேன். அவர் போகும்போது கார்வரை சென்று வழியனுப்புவேன். ஆனால், தேவகவுடா பற்றி ராகுல்காந்தி பேசிவருவது வெட்கக்கேடானது. இவ்வாறு அவர் பேசுவது மற்றவர்களைவிட தான்–தான் மேலானவர் என்ற அவரது அகந்தையைக் காட்டுகிறது என்று பேசியிருக்கிறார். மதசார்பற்ற ஜனதாதளத்தோடு கூட்டணி வைத்து பா.ஜ.க.தான் ஆட்சி அமைக்குமா? அல்லது காங்கிரஸ் ஆட்சிஅமைக்குமா? என்பதுதான் அரசியல் உலகில் இப்போது பரபரப்பான எதிர்பார்ப்பாக இருக்கிறது. 15–ந்தேதி நடைபெறும் ஓட்டு எண்ணிக்கையின் முடிவில்தான் கர்நாடகத்தில் யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள்? என்ற பரபரப்புக்கு விடை கிடைக்கும்.
தேசிய செய்திகள்

வருகிற 8-ந் தேதிக்குள் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க வேண்டும் கர்நாடகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு




வருகிற 8-ந் தேதிக்குள் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகத்துக்கு உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு, இந்த உத்தரவை மதிக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தது. #SupremeCourt

மே 04, 2018, 05:45 AM

புதுடெல்லி,

காவிரி பிரச்சினை தொடர்பான மேல் முறையீட்டு மனுக் களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தமிழகத்துக்கு கர்நாடகம் வழங்கவேண்டிய நீரின் அளவை குறைத்ததோடு, நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை செயல்படுத்த ‘ஸ்கீம்’ (வரைவு செயல் திட்டம்) ஒன்றை 6 வாரத்துக்குள் ஏற்படுத்துமாறு கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.

சுப்ரீம் கோர்ட்டு விதித்த 6 வார கால கெடு முடியும் வரை அமைதி காத்த மத்திய அரசு, மார்ச் மாத இறுதியில் சுப்ரீம் கோர்ட்டில் “ஸ்கீம்” என்பதற்கு விளக்கம் கோரியும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கூறப்பட்டுள்ள செயல்திட்டத்தை அமல்படுத்த மேலும் 3 மாதங் கள் அவகாசம் கேட்டும் மனு ஒன்றை தாக்கல் செய்தது.

அதே சமயம், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்தாத மத்திய அரசு மீது தமிழக அரசு கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இதேபோல் புதுச்சேரி அரசும் வழக்கு தொடர்ந்தது.

இது தொடர்பான மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு காவிரி நீர் பங்கீடு குறித்து வரைவு செயல்திட்ட அறிக்கைகளை மே 3-ந் தேதிக் குள் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்ய மேலும் 10 நாட்கள் அவகாசம் கேட்டார்.

அவர் வாதாடுகையில் கூறியதாவது:-

வரைவு செயல்திட்டம் தயாராகி விட்டது. அது மத்திய மந்திரிசபையின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டு உள்ளது. பிரதமரும் மற்ற மந்திரிகளும் கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளதால் வரைவு செயல் திட்டத்தின் மீது மத்திய மந்திரிசபையின் ஒப்புதலை பெறுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

மேலும் கர்நாடக முதல்- மந்திரி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், காவிரி மேலாண்மை வாரியம் தொழில் நுட்ப வல்லுனர் களை கொண்டு அமைக்கப்படாமல் கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர்வளத்துறை அமைச்சர்களை கொண்டு உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கிறார். இதனாலும் வரைவு செயல் திட்டம் தாமதமாகி வருகிறது. எனவே, வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்ய மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேகர் நாப்டே, வக்கீல் ஜி.உமாபதி ஆகியோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சேகர் நாப்டே வாதாடுகையில் கூறியதாவது:-

கோர்ட்டுக்கு நாங்கள் வெளிப்படையாகவே தெரிவிக்கிறோம். கர்நாடக மாநிலத்தில் வருகிற 12-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடியும் வரை இப்படி அடிக்கடி கால அவகாசம் கோரி மத்திய அரசு எங்களை தொடர்ச்சியாக ஏமாற்ற முயற்சிக்கிறது.

மத்திய அரசு இப்படி அடிக்கடி கால அவகாசம் கோருவது அவர்களுடைய பாரபட்சமான அணுகுமுறையை காட்டுகிறது. ஒரு பொதுவான விஷயத்தில் மத்திய அரசு இப்படி ஒரு தரப்புக்கு சாதகமாக செயல்படுவது நாட்டில் சட்டரீதியான ஆட்சிமுறையை முடிவுக்கு கொண்டு வரும் ஆபத்து உள்ளது. இது கூட்டாட்சி தத்துவத்துக்கும் எதிரான அணுகுமுறை ஆகும். கர்நாடக சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டே மத்திய அரசு இப்படி நடந்து கொள்கிறது. இது மிகவும் தவறானதாகும்.

கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், 4 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அதற்கு, அக்டோபர் 4-ந் தேதிக்குள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போதைய அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி கோர்ட்டில் உறுதி அளித்தார்.

அப்போது அட்டார்னி ஜெனரல் அளித்த வாக்குறுதி உண்மையின் அடிப்படையில் அளிக்கப்பட்டது அல்ல என்று நாங்கள் கருதலாமா? இது குறித்து தமிழக மக்களுக்கு நாங்கள் என்ன கூறுவது? மத்திய அரசு தேவையற்ற அரசியல் விளையாட்டில் ஈடுபட்டு வருகிறது. இது கூட்டாட்சி தத்துவத்தை கேள்விக்குறியாக்கும் நடவடிக்கையாகும். காவிரி தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வெளியிட்டு 2 மாதங்களாகி விட்டன. ஆனால் தமிழகத்துக்கு அதனால் இதுவரை எந்த பயனும் கிடைக்காமல் பார்த்துக் கொள்கிறது மத்திய அரசு. தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவையும் கர்நாடகம் மதிப்பது கிடையாது.

இவ்வாறு சேகர் நாப்டே கூறினார்.

அப்போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா குறுக்கிட்டு, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டிய தண்ணீரின் அளவு என்ன? என்று கேட்டார்.

அதற்கு தமிழக அரசு தரப்பில், “இந்த 2 மாதங்களிலும் மாதம் ஒன்றுக்கு 2.5 டி.எம்.சி. வீதம் தண்ணீர் திறந்து விட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால் ஏப்ரல் மாதத்தில் வெறும் 1.1 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டு உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஷியாம் திவான், மோகன் கத்தார்க்கி ஆகியோரிடம், “ஏன் இப்படி குறைவான அளவில் தண்ணீர் திறக்கப்படுகிறது?” என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு கர்நாடக தரப்பில், “எங்களால் இயன்ற அளவு முறையாக தண்ணீரை திறந்து விடுகிறோம். ஆனால் வறட்சி காலங்களில் கர்நாடக மாநிலத்தின் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டிய இருக்கிறது. அதனால் அதுபோன்ற நேரங்களில் சிரமம் ஏற்படுகிறது” என்று பதில் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள் கர்நாடகத்துக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சில கருத்துகளை தெரிவித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

இதற்குள் வரைவு செயல் திட்டம் தயார் ஆகி இருக்க வேண்டும். இந்த வரைவு செயல் திட்டம் தொடர்பாக மாநில அரசுகள் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை. வரைவு செயல் திட்டம் தயாராக இல்லை என்றாலும் கர்நாடக மாநிலம், காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இதுவரை தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரை திறந்து விட்டிருக்க வேண்டும்.

அதுதான் அவர்களுடைய நல்ல நோக்கத்தை உறுதி செய்யும் செயலாக அமைந்திருக்கும். ஏற்கனவே காவிரி நடுவர் மன்றம் தமிழகத்துக்கு நிர்ணயித்த தண்ணீரின் அளவில் இருந்து நாங்கள் 14 டி.எம்.சி. தண்ணீரை குறைத்து உத்தரவு பிறப்பித்து இருக்கிறோம். மழையின் அளவு, பாசனத்துக்கான தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு தண்ணீரின் அளவு தீர்மானிக்கப்பட வேண்டும். இதனால் தான் உரிய செயல்திட்டம் தேவைப்படுகிறது. ஏற்கனவே கோடை காலத்தில் குறைந்த அளவு தண்ணீரே ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அவசர அடிப்படையில் தண்ணீரை திறந்து விடாவிட்டால் இதற்கான விளைவுகள் கடுமையாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதற்கு கர்நாடக தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஷியாம் திவான், தற்போது விசாரிக்கப்படும் கோர்ட்டு அவமதிப்புக்கான வழக்கில் கர்நாடகம் ஒரு தரப்பு அல்ல என்றும், அதனால் தங்கள் தரப்பில் பதில் அளிப்பதற்கு எதுவும் இல்லை என்றும் கூறினார்.

உடனே தமிழக அரசின் சார்பில் ஆஜரான சேகர் நாப்டே, “தமிழகத்தில் கோடையின் வெப்பம் மட்டும் கடுமையாகவில்லை. மக்களின் மனநிலையும் பெருமளவில் கொதிப்படைந்து உள்ளது. எனவே, இப்படி கால அவகாசம் கோரும் விளையாட்டை நிறுத்திக் கொண்டு மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அறிவிக்கவும் கர்நாடக மாநிலம் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்து விடவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்றார்.

அதற்கு நீதிபதிகள் பிப்ரவரி 16-ந் தேதியன்று சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு சமத்துவத்தின் அடிப்படையை மையமாக கொண்டது என்றும், தமிழகத்துக்கு உரிய தண்ணீர் முறையாக கிடைப்பதற்கு வழி வகுக்கப்படும் என்றும் கூறினார்கள்.

இதைத்தொடர்ந்து சேகர் நாப்டே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவிடாமல் மத்திய அரசை தடுப்பது அரசியல் காரணங்களா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினைகளா? என தெரியவில்லை என்று கூறியதோடு, இதுபற்றி மத்திய அரசு கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறினார். மேலும் மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்தை முறியடித்து வருவதாகவும், மத்திய அரசின் தயவில்தான் நாங்கள் வாழவேண்டி உள்ளது என்றும் கூறினார்.

அவர் இவ்வாறு கூறியதும், உங்களுக்கு செயல்திட்டம் முக்கியமா? அல்லது தண்ணீர் முக்கியமா? என்று கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கை குறித்து மத்திய அரசிடம் கேட்டு அதுபற்றி கோர்ட்டில் வருகிற 8-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அட்டார்னி ஜெனரலுக்கு உத்தரவிட்டார்.

நேற்று வழக்கு விசாரணையின் போது முதலில் வருகிற 8-ந் தேதிக்குள் தமிழகத்துக்கு 4 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், பின்னர் 2 டி.எம்.சி. திறந்துவிடுமாறு கேட்டுக்கொண்டனர்.

அதன்பிறகு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்ட நீரின் அளவு குறித்தும், எவ்வளவு தண்ணீர் திறந்துவிடமுடியும் என்பது குறித்தும் விளக்கமான அறிக்கையை 8-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், கோர்ட்டு உத்தரவின்படி தண்ணீர் திறக்கப்படாவிட்டால் கர்நாடக தலைமைச் செயலாளர் கோர்ட்டுக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டி இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

பின்னர் வழக்கு விசாரணையை 8-ந் தேதிக்கு அவர்கள் ஒத்திவைத்தனர்.
‘நீட்’ தேர்வு மையங்களில் மாற்றம் இல்லை சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு



தமிழக மாணவர்கள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள வெளி மாநில மையங்களில் தான் ‘நீட்’ தேர்வு எழுத வேண்டும் என்றும், தேர்வுக்கு குறைந்த காலமே உள்ளதால் புதிய தேர்வு மையங்களை அமைக்க உத்தரவிட முடியாது என்றும் நேற்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. #NEET

மே 04, 2018, 05:30 AM

புதுடெல்லி,

இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வு வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த சில மாணவர்களுக்கு கேரளா மற்றும் ராஜஸ்தானில் தேர்வு மையம் ஒதுக்கி, இந்த தேர்வை நடத்தும் சி.பி.எஸ்.இ. உத்தரவிட்டு இருந்தது.

இதனை எதிர்த்து சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த வக்கீல் காளிமுத்து மயிலவன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியது. மேலும் இதனை பொது அறிவிப்பாக கருதி தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையம் தொடர்பான விவரத்தை சி.பி.எஸ்.இ. இணையதளத்தில் வெளியிடவும் உத்தரவிட்டது.

சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து சி.பி.எஸ்.இ. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணை தொடங்கியதும் ‘நீட்’ தேர்வு வரும் 6-ந் தேதியன்று நடைபெறுவதாகவும், தற்போது மிகவும் குறைந்த காலஅவகாசமே இருப்பதாலும் தேர்வு மையங்களை உடனடியாக மாற்ற முடியாது என்று சி.பி.எஸ்.சி. தரப்பில் கூறப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், குறைந்த கால அவகாசமே உள்ள நிலையில் கடைசி நேரத்தில் தேர்வு மையங்களை மாற்றி அமைத்தால் தேர்வு எழுதும் மாணவர்கள் பெரிதும் குழப்பம் அடைவார்கள் என்றும், எனவே தேர்வு மையங்களை மாற்ற தேவை இல்லை என்றும் கூறி ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

அத்துடன், மாணவர்கள் இந்த ஆண்டில் வெளி மாநிலங்களில் ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களில் தான் தேர்வு எழுத வேண்டும் என்றும், அடுத்த ஆண்டில் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் சி.பி.எஸ்.இ. உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.

இதனையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

ரகசியம் காப்போம்!

ரகசியம் காப்போம்! ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல. தினமணி செய்திச் சேவை Updated on: ...