Friday, May 4, 2018

ஒட்டுமொத்த இந்தியாவும் 12–ந்தேதி நடக்கப்போகும் கர்நாடக தேர்தலை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.

மே 04 2018, 03:00 AM

ஒட்டுமொத்த இந்தியாவும் 12–ந்தேதி நடக்கப்போகும் கர்நாடக தேர்தலை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. காவிரிபிரச்சினையிலும் கர்நாடக தேர்தல் நிச்சயமாக முக்கிய பங்காற்றும் என்பதால் தமிழக மக்களுக்கும் கர்நாடக தேர்தலின் முடிவு பெரிய ஆவலை உருவாக்கி உள்ளது. முதல்–மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்பதில் அதிக முனைப்புக்காட்டி வருகிறது. காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் செய்கிறார். இப்போது பிரதமர் நரேந்திரமோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கிறார். பா.ஜ.க. தலைவர் அமித்ஷா பலமுறை கர்நாடகத்தை சுற்றி வலம் வந்திருக்கிறார்.

கர்நாடகத்தில் நாங்கள் பெறப்போகும் வெற்றி தென்மாநிலங்களில் நுழைவதற்கான வாசலாக இருக்கும் என்று அமித்ஷா அறிவித்து விட்டார். மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி தலைவரான தேவகவுடா எப்படியும் ஆட்சியை பிடிக்கவேண்டும் என்று அவரும் பலகணக்குகளை போட்டு வருகிறார். 224 தொகுதிகளைக்கொண்ட கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. 224 இடங்களிலும், காங்கிரஸ் 222 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதாதளம் 201 இடங்களிலும், அதன்கூட்டணி கட்சியான பகுஜன் சமாஜ்கட்சி 18 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 19 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 14 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி 2 இடங்களிலும் போட்டியிடுகிறது. தேர்தல் கணிப்புகள், எந்தக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது, பா.ஜ.க., காங்கிரஸ் இருகட்சிகளுமே தலா 90 இடங்களை சுற்றித்தான் வெற்றிபெறும். மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி 40 இடங்களைச் சுற்றி வெற்றி பெறும். ஆக, ஒன்று தொங்கு சட்டசபை அல்லது மதசார்பற்ற ஜனதாதள ஆதரவோடுதான் எந்தக்கட்சியும் ஆட்சி அமைக்க முடியும் என்று கணிப்புகள் வெளியாகியுள்ளன. ஆனால், மதசார்பற்ற ஜனதாதள முதல்–மந்திரி வேட்பாளரான தேவகவுடாவின் மகன், முன்னாள் முதல்–மந்திரி குமாரசாமி நான் கிங்மேக்கராக இருக்கமாட்டேன். கிங்காகத்தான் இருப்பேன் என்று, முதல்–மந்திரியாகும் ஆசையை வெளிப்படுத்திவிட்டார். ஆனால், அரசியல் நோக்கர்கள் அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா. தேர்தல் முடிவு வெளிவந்தபிறகு தான் யார் கிங்காக இருக்கப்போகிறார்கள்? யார் கிங்மேக்கராக இருக்கப்போகிறார்கள்? என்பது தெரியும் என்று கூறுகிறார்கள்.

மதசார்பற்ற ஜனதாதளம் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் மங்கலாக இருக்கிறது. ஏனெனில் ராகுல்காந்தி பல இடங்களில் பேசும்போது, மதசார்பற்ற ஜனதாதளம் பா.ஜ.க.வின் ‘பி’ அணி என்று பேசியிருக்கிறார். பிரதமர் நரேந்திரமோடி கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசும்போது, தேவகவுடாவை மிகவும் புகழ்ந்து பேசினார். தேவகவுடா எப்போது டெல்லிக்கு வந்தாலும், நான் அவரை மிகவும் மரியாதையோடு வரவேற்பேன். எனது வாசலில் நின்று மட்டுமல்ல, அவரது கார்கதவை திறந்து வரவேற்பேன். அவர் போகும்போது கார்வரை சென்று வழியனுப்புவேன். ஆனால், தேவகவுடா பற்றி ராகுல்காந்தி பேசிவருவது வெட்கக்கேடானது. இவ்வாறு அவர் பேசுவது மற்றவர்களைவிட தான்–தான் மேலானவர் என்ற அவரது அகந்தையைக் காட்டுகிறது என்று பேசியிருக்கிறார். மதசார்பற்ற ஜனதாதளத்தோடு கூட்டணி வைத்து பா.ஜ.க.தான் ஆட்சி அமைக்குமா? அல்லது காங்கிரஸ் ஆட்சிஅமைக்குமா? என்பதுதான் அரசியல் உலகில் இப்போது பரபரப்பான எதிர்பார்ப்பாக இருக்கிறது. 15–ந்தேதி நடைபெறும் ஓட்டு எண்ணிக்கையின் முடிவில்தான் கர்நாடகத்தில் யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள்? என்ற பரபரப்புக்கு விடை கிடைக்கும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024