Friday, May 4, 2018

தேசிய செய்திகள்

வருகிற 8-ந் தேதிக்குள் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க வேண்டும் கர்நாடகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு




வருகிற 8-ந் தேதிக்குள் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகத்துக்கு உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு, இந்த உத்தரவை மதிக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தது. #SupremeCourt

மே 04, 2018, 05:45 AM

புதுடெல்லி,

காவிரி பிரச்சினை தொடர்பான மேல் முறையீட்டு மனுக் களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தமிழகத்துக்கு கர்நாடகம் வழங்கவேண்டிய நீரின் அளவை குறைத்ததோடு, நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை செயல்படுத்த ‘ஸ்கீம்’ (வரைவு செயல் திட்டம்) ஒன்றை 6 வாரத்துக்குள் ஏற்படுத்துமாறு கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.

சுப்ரீம் கோர்ட்டு விதித்த 6 வார கால கெடு முடியும் வரை அமைதி காத்த மத்திய அரசு, மார்ச் மாத இறுதியில் சுப்ரீம் கோர்ட்டில் “ஸ்கீம்” என்பதற்கு விளக்கம் கோரியும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கூறப்பட்டுள்ள செயல்திட்டத்தை அமல்படுத்த மேலும் 3 மாதங் கள் அவகாசம் கேட்டும் மனு ஒன்றை தாக்கல் செய்தது.

அதே சமயம், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்தாத மத்திய அரசு மீது தமிழக அரசு கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இதேபோல் புதுச்சேரி அரசும் வழக்கு தொடர்ந்தது.

இது தொடர்பான மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு காவிரி நீர் பங்கீடு குறித்து வரைவு செயல்திட்ட அறிக்கைகளை மே 3-ந் தேதிக் குள் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்ய மேலும் 10 நாட்கள் அவகாசம் கேட்டார்.

அவர் வாதாடுகையில் கூறியதாவது:-

வரைவு செயல்திட்டம் தயாராகி விட்டது. அது மத்திய மந்திரிசபையின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டு உள்ளது. பிரதமரும் மற்ற மந்திரிகளும் கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளதால் வரைவு செயல் திட்டத்தின் மீது மத்திய மந்திரிசபையின் ஒப்புதலை பெறுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

மேலும் கர்நாடக முதல்- மந்திரி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், காவிரி மேலாண்மை வாரியம் தொழில் நுட்ப வல்லுனர் களை கொண்டு அமைக்கப்படாமல் கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர்வளத்துறை அமைச்சர்களை கொண்டு உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கிறார். இதனாலும் வரைவு செயல் திட்டம் தாமதமாகி வருகிறது. எனவே, வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்ய மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேகர் நாப்டே, வக்கீல் ஜி.உமாபதி ஆகியோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சேகர் நாப்டே வாதாடுகையில் கூறியதாவது:-

கோர்ட்டுக்கு நாங்கள் வெளிப்படையாகவே தெரிவிக்கிறோம். கர்நாடக மாநிலத்தில் வருகிற 12-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடியும் வரை இப்படி அடிக்கடி கால அவகாசம் கோரி மத்திய அரசு எங்களை தொடர்ச்சியாக ஏமாற்ற முயற்சிக்கிறது.

மத்திய அரசு இப்படி அடிக்கடி கால அவகாசம் கோருவது அவர்களுடைய பாரபட்சமான அணுகுமுறையை காட்டுகிறது. ஒரு பொதுவான விஷயத்தில் மத்திய அரசு இப்படி ஒரு தரப்புக்கு சாதகமாக செயல்படுவது நாட்டில் சட்டரீதியான ஆட்சிமுறையை முடிவுக்கு கொண்டு வரும் ஆபத்து உள்ளது. இது கூட்டாட்சி தத்துவத்துக்கும் எதிரான அணுகுமுறை ஆகும். கர்நாடக சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டே மத்திய அரசு இப்படி நடந்து கொள்கிறது. இது மிகவும் தவறானதாகும்.

கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், 4 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அதற்கு, அக்டோபர் 4-ந் தேதிக்குள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போதைய அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி கோர்ட்டில் உறுதி அளித்தார்.

அப்போது அட்டார்னி ஜெனரல் அளித்த வாக்குறுதி உண்மையின் அடிப்படையில் அளிக்கப்பட்டது அல்ல என்று நாங்கள் கருதலாமா? இது குறித்து தமிழக மக்களுக்கு நாங்கள் என்ன கூறுவது? மத்திய அரசு தேவையற்ற அரசியல் விளையாட்டில் ஈடுபட்டு வருகிறது. இது கூட்டாட்சி தத்துவத்தை கேள்விக்குறியாக்கும் நடவடிக்கையாகும். காவிரி தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வெளியிட்டு 2 மாதங்களாகி விட்டன. ஆனால் தமிழகத்துக்கு அதனால் இதுவரை எந்த பயனும் கிடைக்காமல் பார்த்துக் கொள்கிறது மத்திய அரசு. தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவையும் கர்நாடகம் மதிப்பது கிடையாது.

இவ்வாறு சேகர் நாப்டே கூறினார்.

அப்போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா குறுக்கிட்டு, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டிய தண்ணீரின் அளவு என்ன? என்று கேட்டார்.

அதற்கு தமிழக அரசு தரப்பில், “இந்த 2 மாதங்களிலும் மாதம் ஒன்றுக்கு 2.5 டி.எம்.சி. வீதம் தண்ணீர் திறந்து விட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால் ஏப்ரல் மாதத்தில் வெறும் 1.1 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டு உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஷியாம் திவான், மோகன் கத்தார்க்கி ஆகியோரிடம், “ஏன் இப்படி குறைவான அளவில் தண்ணீர் திறக்கப்படுகிறது?” என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு கர்நாடக தரப்பில், “எங்களால் இயன்ற அளவு முறையாக தண்ணீரை திறந்து விடுகிறோம். ஆனால் வறட்சி காலங்களில் கர்நாடக மாநிலத்தின் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டிய இருக்கிறது. அதனால் அதுபோன்ற நேரங்களில் சிரமம் ஏற்படுகிறது” என்று பதில் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள் கர்நாடகத்துக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சில கருத்துகளை தெரிவித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

இதற்குள் வரைவு செயல் திட்டம் தயார் ஆகி இருக்க வேண்டும். இந்த வரைவு செயல் திட்டம் தொடர்பாக மாநில அரசுகள் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை. வரைவு செயல் திட்டம் தயாராக இல்லை என்றாலும் கர்நாடக மாநிலம், காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இதுவரை தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரை திறந்து விட்டிருக்க வேண்டும்.

அதுதான் அவர்களுடைய நல்ல நோக்கத்தை உறுதி செய்யும் செயலாக அமைந்திருக்கும். ஏற்கனவே காவிரி நடுவர் மன்றம் தமிழகத்துக்கு நிர்ணயித்த தண்ணீரின் அளவில் இருந்து நாங்கள் 14 டி.எம்.சி. தண்ணீரை குறைத்து உத்தரவு பிறப்பித்து இருக்கிறோம். மழையின் அளவு, பாசனத்துக்கான தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு தண்ணீரின் அளவு தீர்மானிக்கப்பட வேண்டும். இதனால் தான் உரிய செயல்திட்டம் தேவைப்படுகிறது. ஏற்கனவே கோடை காலத்தில் குறைந்த அளவு தண்ணீரே ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அவசர அடிப்படையில் தண்ணீரை திறந்து விடாவிட்டால் இதற்கான விளைவுகள் கடுமையாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதற்கு கர்நாடக தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஷியாம் திவான், தற்போது விசாரிக்கப்படும் கோர்ட்டு அவமதிப்புக்கான வழக்கில் கர்நாடகம் ஒரு தரப்பு அல்ல என்றும், அதனால் தங்கள் தரப்பில் பதில் அளிப்பதற்கு எதுவும் இல்லை என்றும் கூறினார்.

உடனே தமிழக அரசின் சார்பில் ஆஜரான சேகர் நாப்டே, “தமிழகத்தில் கோடையின் வெப்பம் மட்டும் கடுமையாகவில்லை. மக்களின் மனநிலையும் பெருமளவில் கொதிப்படைந்து உள்ளது. எனவே, இப்படி கால அவகாசம் கோரும் விளையாட்டை நிறுத்திக் கொண்டு மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அறிவிக்கவும் கர்நாடக மாநிலம் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்து விடவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்றார்.

அதற்கு நீதிபதிகள் பிப்ரவரி 16-ந் தேதியன்று சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு சமத்துவத்தின் அடிப்படையை மையமாக கொண்டது என்றும், தமிழகத்துக்கு உரிய தண்ணீர் முறையாக கிடைப்பதற்கு வழி வகுக்கப்படும் என்றும் கூறினார்கள்.

இதைத்தொடர்ந்து சேகர் நாப்டே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவிடாமல் மத்திய அரசை தடுப்பது அரசியல் காரணங்களா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினைகளா? என தெரியவில்லை என்று கூறியதோடு, இதுபற்றி மத்திய அரசு கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறினார். மேலும் மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்தை முறியடித்து வருவதாகவும், மத்திய அரசின் தயவில்தான் நாங்கள் வாழவேண்டி உள்ளது என்றும் கூறினார்.

அவர் இவ்வாறு கூறியதும், உங்களுக்கு செயல்திட்டம் முக்கியமா? அல்லது தண்ணீர் முக்கியமா? என்று கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கை குறித்து மத்திய அரசிடம் கேட்டு அதுபற்றி கோர்ட்டில் வருகிற 8-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அட்டார்னி ஜெனரலுக்கு உத்தரவிட்டார்.

நேற்று வழக்கு விசாரணையின் போது முதலில் வருகிற 8-ந் தேதிக்குள் தமிழகத்துக்கு 4 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், பின்னர் 2 டி.எம்.சி. திறந்துவிடுமாறு கேட்டுக்கொண்டனர்.

அதன்பிறகு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்ட நீரின் அளவு குறித்தும், எவ்வளவு தண்ணீர் திறந்துவிடமுடியும் என்பது குறித்தும் விளக்கமான அறிக்கையை 8-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், கோர்ட்டு உத்தரவின்படி தண்ணீர் திறக்கப்படாவிட்டால் கர்நாடக தலைமைச் செயலாளர் கோர்ட்டுக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டி இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

பின்னர் வழக்கு விசாரணையை 8-ந் தேதிக்கு அவர்கள் ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024