Monday, June 25, 2018

மாவட்ட செய்திகள்

சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக படுத்திருக்கும் மாடுகள்




  ஸ்ரீபெரும்புதூர்-சிங்கபெருமாள் கோவில் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக படுத்திருக்கும் மாடுகள் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஜூன் 25, 2018, 04:00 AM
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர்-சிங்கபெருமாள் கோவில் 6 வழி சாலையில் தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த நிலையில் ஒரகடம், மாத்தூர், வல்லக்கோட்டை போன்ற பகுதிகளில் மாடுகள் அதிகமாக சுற்றி திரிகின்றது.

மேலும் வல்லக்கோட்டை அருகே சாலையை ஆக்கிரமித்து சாலையின் நடுவிலே அதிகமாக மாடுகள் பொதுமக்களுக்கு இடையூறாக படுத்துக்கொள்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடனும் செல்கின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தலையங்கம்

எல்லா ஆசிரியர்களும் இவரைப்போல ஆகவேண்டும்





கடந்த வாரத்தில் தந்தி டி.வி.யில் காட்டப்பட்ட ஒருகாட்சி, எல்லோருடைய மனதையும் உருக்குவதாகவும், ஆசிரியர் பணிமீது அபரிமிதமான மரியாதையை ஏற்படுத்துவதாகவும் அமைந்தது.

ஜூன் 25 2018, 03:00 ஆசிரியர் பணி பகவானுக்கு இணையான பணி. அந்தவகையில், தன் பெயரிலும் பகவான் என்பதைக்கொண்ட ஒரு ஆசிரியர் திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே உள்ள வெளியகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். தன்னிடம் படிக்கும் மாணவ–மாணவிகள் அனைவரையும் பகவான் பக்தர்களை காத்து அரவணைப்பதுபோல, மிக அன்பொழுக பழகி, ஆங்கில மொழியை சாதாரண கிராம, ஏழை–எளிய மாணவர்களும் கற்றுக்கொள்ளும் வகையில் எளிதாக சொல்லிக்கொடுத்தவர். அந்த பள்ளிக்கூட மாணவர்களை ஆங்கில பாடத்தில் நூறு சதவீதம் தேர்ச்சி பெறவைத்தார். அவர் திருத்தணி அருகே உள்ள அருங்குளம் என்ற ஊரிலுள்ள பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். மாணவ–மாணவிகள் அனைவரும் தன் குடும்பத்தில் ஒருவரை பிரிவதுபோல, சோகக்கடலில் மூழ்கி பணிவிடுவிப்பு வாங்கவந்த ஆசிரியர் பகவானை வெளியே செல்லவிடாமல் சுற்றி வளைத்துக்கொண்டு, ‘நீங்கள் போகக்கூடாது, போகக்கூடாது’ என்று கதறி அழுததும், தன் மாணவ செல்வங்களின் கண்ணீரைப்பார்த்து, ஆசிரியர் பகவானும் கண்ணீர் வடித்ததும் தந்தி டி.வி.யில் பார்த்தவர்கள் கண்களில் எல்லாம் கண்ணீரை வரவழைத்தது. இப்போது கல்வித்துறை அவரது இடமாறுதலை 10 நாட்கள் நிறுத்திவைத்திருக்கிறது.

இந்தியா முழுவதும் ஆசிரியர் பகவான்மீது, மாணவர்கள் கொண்டிருந்த இந்த அன்புசெயல் பெரிய நெகிழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது. சமூக வலைதளங்களில் பலர் பாராட்டுகிறார்கள். தமிழகத்துக்கே ஆசிரியர் பகவானின் செயல் பெருமைத்தேடி தந்துவிட்டது. மாணவர்களின் விருப்பத்திற்கிணங்க ஆசிரியர் பகவானை இன்னும் சில ஆண்டுகள் அதேப்பள்ளிக்கூடத்தில் பணிபுரிய கல்வித்துறை உத்தரவிடவேண்டும். ‘ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி’ என்பார்கள். இந்திய சமுதாயம் எப்போதுமே ஆசிரியர்களை உச்சபீடத்தில் வைத்து உச்சிமுகர்ந்து இருக்கிறது. அவர்களை தாங்கள் வணங்கும் தெய்வங்களின் வரிசையில் வைத்து போற்றிருக்கிறது. ‘ஆண்டவனும், ஆசானும் என் வீட்டுக்கு ஒன்றாக வந்தால், நான் ஆசானையே முதலில் வரவேற்பேன்’ என்றார் 15–ம் நூற்றாண்டில் வாழ்ந்த சமயநல்லிணக்க துறவி கபீர்.

எத்தனையோ பணிகள் இருந்தாலும், இரண்டு பணிகளை மட்டும் தெய்வீக பணிகள் என்று கூறுகிறோம். ஒன்று மருத்துவப்பணி, மற்றொன்று ஆசிரியர் பணி. மருத்துவப்பணி ஒருவரை பிணமாகாமல் காப்பாற்றுகிறது. ஆசிரியர் பணி நடைபிணமாகாமல் காக்கிறது என்கிறார் இறையன்பு. கல்வி கசப்பாவதும், கற்கண்டாவதும் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களைப் பொருத்தே அமைகிறது. எல்லா ஆசிரியர்களுமே இன்சொல்லோடும், பரிவோடும் கற்றுத்தரும் சூழலை மட்டும் உருவாக்கிவிட்டால், கல்வி என்னும் காட்டாறு அனைத்துப்பள்ளங்களையும் நிரப்பி கட்டாந்தரைகளையும் சோலைகளாக ஆக்கிவிடும். தன்னிடம் படிக்கும் பள்ளிக்கூட மாணவர்களின் அன்பைப்பெற்ற ஆசிரியர் பகவானின் இந்தசெயல், எல்லா ஆசிரியர்களாலும் பின்பற்றப்படவேண்டிய செயலாகும். மாணவர்கள் அனைவருமே விருட்சமாகும் விதைகள்தான். அவர்கள் வளர்வதற்கு கல்வி மட்டுமல்ல, கற்றுத்தருபவரின் நேசமும் முக்கியம். அந்தவகையில், ஒருபக்கம் கற்றுக்கொடுக்கும் ஆற்றல், மறுபக்கம் மாணவர்கள்மீது கொண்ட அன்பு. இவை அனைத்தையும் ஒருங்கே பெற்ற ஆசிரியர் பகவான்போல, ஆற்றலையும், குணநலன்களையும் ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயம் பெறவேண்டும். ஒரு பகவான் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பள்ளிக்கூட ஆசிரியர்கள் பகவான்களாக மிளிரவேண்டும்.

Sunday, June 24, 2018

மனசு போல வாழ்க்கை 24: மாறட்டும் மனம்

Published : 01 Sep 2015 11:56 IST

டாக்டர். ஆர். கார்த்திகேயன்







பெற்றோர்களுக்கு எப்போதும் தங்கள் குழந்தைகள் மீது அளவற்ற அன்பு. அதனால் விரைவில் “சுற்றியுள்ள உலகம் மோசமாகி வருகிறது. நம் காலம் போல எதுவும் இல்லை. இவர்கள் என்ன ஆவார்களோ?” என்ற எண்ணத்துக்குப் போய்விடுவார்கள்.

“இந்தக் காலத்துல குழந்தை வளத்தறது பெரிய வேலை!” என்பார்கள். என்ன பிரச்சினை என்று கேட்பதற்கு முன்னே பெரிய பட்டியல் வந்து விழும்.

மாற்றத்தின் தெளிவு

“ நேரத்துக்கு எழுந்துக்கறது கிடையாது. சதா செல்போன் நோண்டறது. பெரியவங்ககிட்ட பயமோ மரியாதையோ கிடையாது. சொந்தக்காரங்க பத்தின எண்ணமும் கிடையாது. எல்லாத்துலயும் ஆயிரம் சாய்ஸ் வேணும். எதுலயும் திருப்தி கிடையாது. சாப்பிடறது எல்லாம் ஜங்க் ஃபுட் தான். செலவு பத்தி கவலையே கிடையாது.

ஒரு அஞ்சு நிமிஷம் முகம் கொடுத்துப் பேச முடியாது. நினைச்ச மாதிரிதான் எல்லாம் நடக்கணும்னு நினைக்கிறாங்க. சின்ன விஷயத்துக்குக் கூட இடிஞ்சு போயிடறாங்க. இவங்கெல்லாம் நாளைக்கு எப்படி அட்ஜஸ்ட் பண்ணிக் குடும்பம் நடத்துவாங்களோ? நினைச்சாலே பயமா இருக்கு!”

இந்தக் கவலையில் நிறைய நிஜங்களும் நியாயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், காலத்தின் மாற்றம் பற்றிய தெளிவு முதலில் வேண்டும்.

எல்லாக் காலத்திலும் பிள்ளைகள் பொறுப்பற்றவர்களாகப் பக்குவமற்றவர்களாகத் தான் பெற்றோர்களுக்கும் பெரியவர்களுக்கும் தெரிவார்கள். அதே போல உலகில் வரும் மாற்றங்களைப் பயத்தோடும் சந்தேகத்தோடும் அணுகுவது வயதானவர்களின் இயல்பு. உலகில் ஏற்படும் மாற்றங்கள் எதுவும் நல்லதல்ல என்று வயதானவர்கள் நினைக்கக் காரணம் தங்கள் அறிவும் அதிகாரமும் ஆட்டம் கண்டு விடுமோ என்ற அச்சம்தான்.

மாற்றத்தின் பயம்

மாற்றம் வெளியிலிருந்து வருகையில் எதிர்ப்பதும், அவை நல்லதில்லை, நிலைக்காது என்று ஆருடம் சொல்வதும் என்றும் நடந்து வருபவை தான்.

“உலகில் கம்ப்யூட்டர்கள் கொஞ்சம்தான் பயன்படும் ” என்று 50-களில் பேசினார்கள். பேசுகிற முதல் திரைப்படம் வந்த போது, “இந்த நடிகர்களை யார் பேசச்சொன்னது, நடித்தால் போதாது?” என்றார்கள். ரயில் வண்டியைப் பார்த்துப் பயந்து ஏற மறுத்தவர்கள் நம் ஆட்கள்.

கிரஹாம் பெல் தொலைபேசிக்கான தனது காப்புரிமையை விற்க நினைத்த போது, “ஒலியைக் கடத்தும் இந்தக் கருவியால் எந்த வியாபாரப் பலனும் இல்லை” என்று மறுத்தன பிரபல நிறுவனங்கள். தாமஸ் ஆல்வா எடிசன் எதிர்ப்புகளையும், வழக்குகளையும், துரோகங்களையும், தோல்விகளையும் கண்டவர். அடிப்படைக் காரணம், எல்லா மாற்றங்களையும் உலகத்தினர் என்றும் பயத்தோடு எதிர்த்ததுதான்.

சாதகங்கள் பாதகங்கள் இரண்டையும் மாற்றங்கள் ஏற்படுத்தும். ஒன்றை அனுபவிக்கும்போது இலவச இணைப்பாய் மற்றதும் கூடவே வரும். கால்குலேட்டர் வந்தது. பெரிய கணக்குகள் சுலபமாய்த் தவறில்லாமல் கைக்குள் வந்தது. மனக் கணக்கு போய்விட்டது. என் பாட்டி காலத்தில் அனைவருக்கும் மனக் கணக்கு தெரியும். என் பெற்றோர் காலத்திலேயே அது வழக்கொழிந்துவிட்டது.

இந்தத் தொடர்ச்சியில் தான் இன்றைய தொழில்நுட்பத்தையும் அது ஏற்படுத்திய வாழ்வியல் மாற்றங்களைப் பார்க்க வேண்டும்.

கொடுத்தது நாம்தானே!

ரயில் டிக்கெட் வாங்க அரை நாள் லீவு போட்டுவிட்டுக் கியூவில் நின்ற பெற்றோருக்கு இன்று உட்கார்ந்த இடத்தில் செல்போனில் இருக்கைகள் பதிவு செய்யப்படுகின்றன. தொழில்நுட்பம் என்பது பூதம் போல. நீங்கள் சொல்வதையும் செய்யும். சொல்லாததையும் செய்யும். எல்லாப் பரிமாற்றங்களும் செல்போனில் நடக்க ஆரம்பித்தால், அப்புறம் நேரத்துக்கு வெளியில் போய்க் காத்திருப்பது குறையத்தானே செய்யும்?

எல்லாக் கியூவிலும் நின்று நின்று பொறுமையும் சகிப்புத்தன்மையும் வந்தது முன்பு. கேட்டது அனைத்தும் உடனே கிடைக்கையில் காத்திருத்தல் எப்படிச் சாத்தியமாகும்? பொறுமையும் மனப்பக்குவமும் எப்படிக் கிடைக்கும்? பிறரிடம் கை நீட்டி கடன் வாங்குவது கேவலம் என்று இருந்த சமூகம் கடன் அட்டையில் காலம் தள்ளுகையில் எப்படிப் பழைய நல்ல பண்புகளைத் தூக்கிப் பிடிக்க முடியும்?

இன்று நம் பிள்ளைகள் வாழும் வாழ்க்கை முறை அனைத்தும் நாம் அருளியவை. எல்லாவற்றையும் கொடுத்துவிட்டுப் பிள்ளைகளை நோவதால் என்ன பலன்?

ஒவ்வொரு அறைக்கும் ஒரு டி.வி. பீட்சா, மாத தவணையில் வண்டி, வீடியோ விளையாட்டுக்கள், விலை உயர்ந்த உடைகள், டி.வியில் பார்த்து, வீட்டுக்குப் பயன்படாப் பொருட்களையும் கூட தருவித்தது நாம். அவர்கள் அனுபவிக்கையில் ஏற்படும் எதிர்மறை விளைவுகளுக்கும் நாம் தானே பொறுப்பேற்க வேண்டும்!

நாம் அவர்களிடம் எதிர்பார்க்கும் ஒவ்வொரு விஷயத்திலும் ஒன்றுக்கு ஒன்று முரணான விஷயத்தை எதிர்பார்க்கிறோம். அதை நீங்களே புரிந்து கொள்ளாத போது எப்படி உங்கள் பிள்ளைகள் புரிந்து கொள்ள முடியும்?

ஒப்படைத்தலே வழி!

முன்பெல்லாம் மாமியார்- மருமகள் சண்டைகளின் காலம். அடுத்த தலைமுறையில் கணவன் மனைவி சண்டை தான் பிரதானம். இன்று பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் சண்டை. ஆக, உறவுச்சிக்கல்கள் என்றும் இல்லாமல் இல்லை.

என்ன செய்யலாம்? உங்களின் நேற்றைய கனவுகளை அவர்களின் நாளைய கற்பனைகள் மேல் திணிக்காதீர்கள். அவர்களுக்கான நேரத்தையும் இடைவெளியையும் கொடுத்து விட்டு, கண்ணியமாக விலகியிருங்கள். அவர்கள் வாழ்க்கையை அவர்கள் மட்டும் தான் தீர்மானிக்கப் போகிறார்கள். தடுமாறுகையில் பின்னாலிருந்து தாங்குவதற்கு நான் இருக்கிறேன் என்று மட்டும் உணர்த்துங்கள். உங்கள் எதிர்பார்ப்புகளை முழுவதுமாக வெளியேற்றுங்கள். இதனால் உங்களுக்கு ஏற்படும் மன நெருக்கடிகளை என்றாவது சாவகாசமாகப் பேசுங்கள். புரிய வையுங்கள். பணிய வைக்க நினைக்காதீர்கள்.

அவர்கள் மாறணும் என்றால் அதற்கு நீங்கள் முன் மாதிரியாக இருங்கள். கோபப்படாதே என்று அறிவுரை சொல்வதற்குப் பதில் நீங்கள் கோபப்படாமலிருங்கள். “யோகா செய்” என்று அறிவுரை செய்வதை விட நீங்கள் செய்து காட்டுங்கள்.

உங்கள் பிள்ளையை நீங்கள் மட்டும் தான் காக்க வேண்டும் என்ற மமதையிலிருந்து வெளியே வாருங்கள். உங்கள் பிள்ளையை உண்மையில் காக்கும் சக்தி ஒன்று உண்டு. அதனிடம் ஒப்படைப்பதுதான் சிறந்த வழி.

நம்புபவர்கள் அதை இறைமை என்பர். மற்றவர்கள் அதை இயற்கை என்பர்.

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

`என் மகனைக் காப்பாத்தின அந்த 11 பேர்தான் எனக்கு சாமி!'' - நெகிழும் தாய்




துரை.வேம்பையன்


RAJAMURUGAN N   vikatan  26.06.2018


``மூளையில் கட்டிவந்து, தினமும் 10 தடவையாவது வலிப்பு வந்து மயங்கி விழுந்துருவான் என் மகன். பலமா அடிபடும். குணப்படுத்த லட்சக்கணக்குல செலவாகும்னு தெரிஞ்சதும், எங்களை ஆஸ்பத்திரியிலேயே அம்போன்னு விட்டுட்டு என் புருஷன் போயிட்டார். `என் மகனைக் காப்பாத்துங்க'னு கும்பிடாத சாமி இல்லை.



அரசாங்கத்துக்கிட்ட உதவி கேட்டு நாயா பேயா அலைஞ்சேன். கடை கடையாக ஏறி என் புள்ளையைக் காப்பாத்த பிச்சை கேட்டேன். என் கையில் காறி உமிழ்ந்தவங்கதான் அதிகம். போக்கில்லாமல் நின்னப்போதான், நடமாடும் சாமிகளா இந்த11 பிள்ளைகளும் வந்தாங்க. 'நாங்க இருக்கிறோம்'னு 3 லட்சம் வரை செலவு செஞ்சு என் மகனைக் காப்பாத்தியிருக்காங்க. இவங்க இல்லைன்னா, என் மகனை எமனுக்கு தாரை வார்த்திருப்பேன்" எனப் பொங்கிவரும் கண்ணீரை முந்தானையால் துடைத்தவாறு பேசுகிறார் காஞ்சனா.



கரூர் மாவட்டம், வெங்கமேடு அருகே உள்ள குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் காஞ்சனா. இவரின் 23 வயது மகன் விஜயகுமார். 20 வருடங்களாக மூளையில் ஏற்பட்ட கட்டியால் பாதிக்கப்பட்டிருந்தார். சாலையில், பேருந்தில் எனத் திடீர் திடீரென வலிப்பு வந்து விழுந்திருக்கிறார். அரசு மருத்துவமனையில் காண்பித்திருக்கிறார்கள்.

  "இங்கே இவருக்கு வைத்தியம் பார்க்க முடியாது. தனியார் மருத்துவமனையில்தான் பார்க்க முடியும். அதற்கு பல லட்சம் செலவாகும்" என்று சொல்லியிருக்கிறார்கள். 'பல லட்சம் செலவாகும்' என்றதும் விஜயகுமாரின் தந்தை மோகன், 5 வருடங்களுக்கு முன்பு சென்றவர்தான், திரும்பி வரவே இல்லை.



அடுத்து நடந்த சம்பவங்களைச் சொல்கிறார் காஞ்சனா, ''சொந்த வீடும் கிடையாது. நான் கூலி வேலைக்குப் போய் கால் வயித்துக் கஞ்சி குடிச்சோம். என் கஷ்டத்தைப் பார்த்துட்டு மகனும் அப்பளம் பேக்கிங் பண்ற வேலைக்குப் போனான். ஆனால், அங்கே அடிக்கடி மயங்கி விழவே,வேலையைவிட்டு அனுப்பிட்டாங்க. 5 வருஷமா நிலைமை மோசமாயிட்டு. அடிக்கடி மயங்கி விழுவான். விழற இடத்துல கல்லு கிடந்தா அடிபட்டு ரத்தம் கொட்டும். அதனால், இவன் பக்கத்துல ஆள் இருந்துகிட்டே இருக்கணும். அதனால், நானும் சரியா வேலைக்குப் போகமுடியலை. வீட்டு வாடகை கொடுக்கமுடியலை. வீட்டு ஓனர் வந்து நாக்கை புடுங்கிற மாதிரி கேள்விகேட்பார்.

இவனைக் கொன்னுபுட்டு நானும் நாண்டுகிட்டு செத்துடலாம்னு தோணும். ஆனால், `சாவுறதுக்கா பொறந்தோம்'னு மனசை மாத்திக்குவேன். 'இன்னும் சில மாதங்களில் ஆபரேஷன் பண்ணாட்டி கை கால் விளங்காம போயிரும். மூளை செயலிழந்து போயிரும். ஆபரேஷனுக்கு 2 லட்சம் ரூபாய் வரை செலவாகும்'னு டாக்டர்கள் சொல்லிட்டாங்க.



எனக்கு உலகமே இருண்டாப்புல இருந்துச்சு. 10 ரூபா கொடுத்து உதவவே ஆளில்லாதப்போ 2 லட்சத்துக்கு எங்கே போறது. ராத்திரியில தூங்காம அழுதுகிட்டிருப்பேன். 'இவனைக் காப்பாத்துங்க சாமீகளா'னு எல்லா கோயில்களுக்கும் போய்வந்தேன். எந்தச் சாமிக்கும் இரக்கம் வரலை. மாவட்டக் கலெக்டருக்கு வாரா வாரம் மனு கொடுத்தேன். என் கஷ்டம் எந்த ஆபீஸரையும் எட்டலை. வேற வழியில்லாமல்தான் கடை, ஹோட்டல், தொழிற்சாலை எனப் படிகள் ஏறி நிலைமையச் சொன்னேன்.

`எத்தனை பேரு இப்படி கிளம்பி இருக்கீங்க. இந்தப் பொழப்புக்கு வேற தொழில் செய்யலாம்'னு சுடுசொற்களை வீசினாங்க. சிலர் காறி துப்பி இருக்காங்க. மனசு சுக்குநூறா உடைஞ்சு போகும். 'ஏன்டா சாமிகளா, ஏழ்மையையும் கொடுத்து, இப்படி லட்ச ரூபாய் நோயையும் கொடுத்தீங்க'னு அழுவேன். அப்படி கடைகடையா போனப்போதான், சலீம் என்கிறவர் கடையில சாதிக் அலியைப் பார்த்தேன். என் நிலைமையைக் கேட்டு, கண்ணீரைத் துடைச்சார். அவரோடு இருக்கிற 10 நண்பர்களோடு சேர்ந்து என் பிள்ளையைக் காப்பாத்தினார்.

இனி நான் எந்தச் சாமியையும் கும்பிடப் போறதில்லை. அந்த 11 பிள்ளைகளையும் காலம் முழுக்க கும்பிடுவேன். அவங்க மட்டும் இல்லைன்னா நானும் என் பையனும் தற்கொலை பண்ணிட்டிருந்திருப்போம். நாங்க செத்த இடத்துல புல் பூண்டு முளைச்சிருக்கும்" என்றபோதே வெடித்து அழுகிறார் காஞ்சனா.



அவரை தேற்றிய 'இணைந்த கைகள்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாதிக் அலி, "எனக்குச் சொந்த ஊர் திருவண்ணாமலை. 10 வருஷத்துக்கு முன்னாடி கரூர் வந்தேன். எங்க அண்ணன் கம்பெனியில இருந்தேன். அண்ணி காமிலா மூலமா, கம்பெனியில் வேலை பார்க்கும் நடராஜன் என்பவரின் பேத்தி அட்சயாவுக்கு இதயத்தில் ஓட்டை இருக்கிறதைத் தெரிஞ்சுக்கிட்டோம். சமூக வலை

தளங்கள் மூலம் நிதி திரட்டி, நாலே கால் லட்ச ரூபாய் செலவு செலவில் ஆபரேஷன் செஞ்சு காப்பாத்தினோம். தொடர்ந்து, பசுபதிபாளையத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி மகள் கிருத்திகாவுக்கும் இதய ஆபரேஷனுக்கு சமூக வலைதளங்கள் மூலம் 5 லட்சம் வரை நிதி திரட்டினோம். பிறகு, 'இணைந்த கைகள்' என அறக்கட்டளை ஆரம்பிச்சு தொடர்ந்து உதவி செய்ய நினைச்சோம். நான், என் அண்ணன் சலீம், அண்ணி காம்லா, வினோத்குமார், கண்ணன், பிரபு, முருகேசன், கார்த்திக், கயல்விழி, தமிழ்மகள், தேவகி, திவ்யா என 11 பேர் இணைந்தோம். அப்படித்தான் காஞ்சனா அம்மாவைச் சந்திச்சோம்.

திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயகுமாரை காண்பிச்சோம். 'உடனே ஆபரேஷன் பண்ணலைன்னா சிக்கல். 3 லட்சம் வரை செலவாகும்'னு சொன்னாங்க. விஜயகுமார் பற்றி சமூக வலைதளங்களில் பதிவு போட்டோம். நிதி கிடைச்சதும் ஆபரேஷன் பண்ணினோம். இப்போ ரெண்டு வருஷங்களுக்கு மாத்திரை சாப்பிடச் சொல்லியிருக்காங்க. அந்தச் செலவையும் நாங்களே ஏற்றுள்ளோம். நான் நாலு வயசா இருக்கும்போது, வைத்திய செலவுக்கு 400 இல்லாம எங்க அப்பா ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டார். அந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாதுன்னுதான் இப்படி நண்பர்கள் இணைந்து முடிஞ்ச வரை செய்யறோம். எல்லாமே நல்ல உள்ளங்களின் கருணையாலும் அவங்களின் உதவியாலும் நடக்குது. நோயில் வாடும், இயலாதவர்களின் கண்ணீரைத் துடைக்க எப்பவும் தயாராகவே இருக்கோம்'' என்கிறார்.

வறியவர்களின் கண்ணீரைத் துடைக்கும் கரங்களே தெய்வீக கரங்கள். வாழ்த்துகள் நண்பர்களே!
டோல் பூத் இல்லாத வழி... பார்க் செய்த இடம்.... கூகுள் மேப்ஸில் ஒளிந்திருக்கும் வசதிகள்! #GoogleMaps


ம.காசி விஸ்வநாதன்  24.06.2018

GoogleMaps... ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் இதை உபயோகிக்காமல் இருந்திருக்கமாட்டீர்கள். அதுவும் சென்னை போன்ற பெரிய ஊர்களுக்கு வருபவர்களுக்கு இந்த மேப்ஸ் ஒரு வரப்பிரசாதம். ஒரு இடம் எங்கு இருக்கிறது, அங்கு எப்படி செல்வது, போகும் வழியில் எவ்வளவு டிராபிக் இருக்கிறது, அந்த வழியில் போக எவ்வளவு நேரம் ஆகும் போன்ற பல வசதிகளை தாண்டி இன்னும் பல பலனுள்ள வசதிகள் கூகுள் மேப்ஸில் ஒளிந்துள்ளன.

சேரும் இடங்களுக்கு நடுவில் நிறுத்தங்கள் சேர்க்கலாம்:




பல நேரங்களில் ஓர் இடத்திற்கு செல்லும் முன் நாம் பல இடங்களுக்கு போய்விட்டு செல்லவேண்டியது இருக்கும். இதற்கு ஒவ்வொரு முறையும் சேரும் இடம் புறப்படும் இடம் கொடுக்கவேண்டிய நிலை வரும். உண்மையில் அப்படிதான் செய்யவேண்டும் என்றில்லை. நீங்கள் சேரும் இடத்துடன் அங்கு செல்லும் முன் செல்லவேண்டிய நிறுத்தங்களையம் கூகுள் மேப்ஸில் குறிப்பிட்டு வழி அறியமுடியும். அதற்கு செல்ல வேண்டிய இடத்தை டைப் செய்துவிட்டு அதன் அருகில் இருக்கும் 3 புள்ளிகள் கொண்ட மெனு பட்டனை அழுத்தினால் "Add Stop" என்ற ஆப்ஷன் வரும். அதை க்ளிக் செய்து புதுப்புது இடைநிறுத்தங்களை சேர்த்துக்கொள்ளலாம்.

கார் பார்க் செய்யப்பட்ட இடத்தை சேவ் செய்யலாம்:




இந்தக் கார்களையும் பைக்குகளையும் பெரிய பார்க்கிங் ஏரியாக்களில் பார்க் செய்துவிட்டு நாம் படும்பாடு பெரும்பாடாக இருக்கும். இந்தப் பிரச்னையை சமாளிக்கவும் ஒரு வசதி கூகுள் மேப்ஸில் உண்டு. கூகுள் மேப்ஸ் அப்பை ஓபன் செய்தவுடன் நீங்கள் இருக்கும் இடத்தை காட்டும் பட்டன் வலதுபுறத்தில் கீழ்இருக்கும். அதை கிளிக் செய்தால் மேப்பில் நீங்கள் தற்போது இருக்கும் புள்ளி என்னவென்று தெரியவரும். அந்த புள்ளியை கிளிக் செய்தால் "save your parking" என்ற ஆப்சன் மூன்றாவதாக வரும். அதை கிளிக் செய்தால் நீங்கள் தற்போது இருக்கும் இடம் பார்க் செய்த இடமாக சேவ் செய்யப்படும். பின்பு பார்க்கிங் லொகேஷன் என்று தேடினாலே அந்த இடம் எங்கு இருக்கிறது என்று மேப்ஸ் காட்டும். இதை உபயோகித்த பின் அகற்றிவிடமுடியும்.

டோல் பூத் இல்லாத வழி:

ஒரு நீண்டதூரப் பயணம் செல்லவேண்டும் என்றால் கண்டிப்பாக நடுவில் ஏதேனும் டோல் பூத்துக்கு கப்பம் கட்டி தான் ஆக வேண்டும். ஆனால் அவை இல்லாமல் நீங்கள் செல்லவேண்டிய இடத்திற்கு எப்படி செல்லலாம் என்று சொல்லும் மாற்றுவழிகளை மேப்ஸில் பார்க்கமுடியும். இதற்கும் சேரும் இடத்தை டைப் செய்துவிட்டு அதே 3 புள்ளிகள் கொண்ட மெனு பட்டனை அழுத்தினால் "Route Options" என்ற ஆப்சன் இருக்கும் அதை செலக்ட் செய்து "Avoid tolls" என்று கொடுத்தால் டோல் பூத்களை தவிர்க்கும் வழிகளை கூகுள் உங்களுக்குத் தரும்.

தற்போது இருக்கும் இடத்தை உடனுக்குடன் பகிரலாம்:




பெற்றோர்களுக்கு என்றுமே அவர்களது குழந்தைகள் மேல் ஒருவித பாதுகாப்பு உணர்வு இருக்கும். அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை அவ்வப்போது கேட்டு உறுதிசெய்துகொள்வர். கல்லூரிப்பருவத்தைக் கடந்துவிட்டாலும் பெற்றோர்க்கு அவர்கள் குழந்தைதான். ஆனால் அடிக்கடி பெற்றோர்கள் இப்படி அவர்கள் மீது அக்கறை காட்டுவதும் அவர்களுக்கு பிடிக்காது. இப்படி தொடர்புகொள்ளாமலே அவர்கள் இருக்கும் இடத்தை மேப்ஸ் மூலம் பெற்றோர் தெரிந்துகொள்ளமுடியும். இதற்கு கூகுள் மேப்ஸ் அப்பில் இடதுபக்கம் இருக்கும் 3 கோடுகள் கொண்ட மெனுவை செலக்ட் செய்யவும். அதில் "Share Location" என்ற ஆப்சன் இருக்கும். அதன்பின் வரும் விண்டோவில் "Get Started" என்ற பட்டனை கிளிக் செய்யவும். அதில் எவ்வளவு நேரத்திற்கு உங்கள் இடத்தை பகிரவேண்டுமென்பதை குறிப்பிட்டு உங்கள் கூகுள் காண்டாக்ட்ஸில் இருக்கும் யாரிடமும் உங்களது தற்போதைய இடத்தை ஷேர் செய்யலாம். இதன்மூலம் நீங்கள் எங்கு வந்துகொண்டு இருக்கிறீர்கள் என்று உடனுக்குடன் அறிந்துகொள்ளமுடியும். இதை தேவையில்லாதபோது ஆஃப் செய்துகொள்ளலாம்.

மற்ற வசதிகள்:

உங்கள் பழைய பயணங்கள் என்னவென்று பார்ப்பது, போகவேண்டிய வழியில் இயங்கும் பொது போக்குவரத்து விவரங்களை அறிவது, காலெண்டரில் இருக்கும் நிகழ்வுகளுடன் மேப்ஸை சிங்க் செய்வது, இருக்கும் இடத்தின்அருகில் இருக்கும் வசதிகளை அறிவது, மால் போன்ற பெரிய இடங்களுக்குள் வழிகள் கண்டுபிடிப்பது, ஒரு குறிப்பிட்ட ஏரியாவின் மேப்பை மட்டும் பதிவிறக்கம் செய்வது, தேவைப்பட்டால் கேப் புக் செய்வது என இன்னும் பல வசதிகள் கூகுள் மேப்ஸில் உள்ளது. பொறுமையாக ஒரு நாள் கூகுள் மேப்ஸ் அப்பை சுற்றிபார்த்தால் இன்னும் பல நல்ல பயனுள்ள விஷயங்கள் உங்களுக்கு மாட்டும்.

''அம்மா ஏங்கனு கூப்பிட்டா.. ஏன் ஏங்குறனு அப்பா கிண்டலடிப்பார்'' - கவியரசு மகள் கலைச்செல்வி


ஆ.சாந்தி கணேஷ்  24.06.2018


'நான் காவியத் தாயின் இளைய மகன்; காதல் பெண்களின் பெரும் தலைவன்' எனத் தாய்மையையும் காதலையும் தன் பாடல்களில் விதவிதமாக கொண்டாடிக் களித்த பெருங்கவிஞன், கண்ணதாசனின் பிறந்தநாள் இன்று (ஜூன் 24). கவியரசுவின் அக வாழ்க்கை, புற வாழ்க்கை இரண்டுமே திறந்த புத்தகமாக இருந்தவர். எனினும், 'உங்கள் அப்பா கண்ணதாசன் எப்படி இருந்தார்?' என்று அவர் மகள் கலைச்செல்வியிடம் கேட்டோம். அவர் பகிர்ந்தவை எல்லாமே கவியரசுவின் வெவ்வேறு முகங்களை நமக்குக் காட்டின.




*அப்பா ரொம்ப பாசக்காரர். பெத்த பிள்ளைகளான எங்க மேலே வெச்ச அதே அளவு அன்பை, தன்னுடன் பிறந்தவங்க மேலேயும் வெச்சிருந்தார். கூடப் பொறந்தவங்களுக்காக சதையையே அறுத்துக்கொடுக்கலாம்னு சொல்வார். எங்க சிவகாமி அத்தையையும் அப்பாவையும் பாசமலர்னு கேலி பண்ணுவோம். வீட்ல ஒரு விசேஷம்னா, அப்பா வாயிலிருந்து வரும் முதல் வார்த்தை, 'சிவகாமியைக் கூப்பிடுங்க' என்பதுதான். அப்பாகிட்ட எதுவுமே எதிர்பார்க்காத அத்தை. அதனால்தான் அப்பா இறந்த ஏக்கத்தினால் சில வருஷங்களிலேயே சிவகாமி அத்தையும் தவறிட்டாங்க.

  * பணம், காசை பெருசா நேசிக்காதவர் அப்பா. தான் பெத்த பிள்ளைகளின் கல்யாணத்தை மட்டுமில்லாமல், கூடப் பிறந்தவங்களின் பிள்ளைகளுக்கும் அப்பாவே கல்யாணம் பண்ணிவெச்சிருக்கார். அந்த வகையில் 30 கல்யாணங்களை பண்ணிவெச்சிருககர். அதுக்காக, கட்டின வீடுகளை விற்றிருக்கார்.

* அப்பா பயங்கர ரொமான்ஸ்காரர். அப்பாவுக்குத் தலையில் எண்ணெய் வைக்கிறது, வெந்நீர் விளாவறது என எல்லாமே அம்மாதான் செய்யணும். அப்பாவுக்கு வாயைத் திறந்தாலே, 'பார்வதி... பார்வதி'தான். அம்மாவின் பெயரை செல்லமாக, பரிதி... பரிதி... என அவர் அழைக்கும் அழகே அலாதி. அப்பா கூப்பிடும்போது, வேலையால் அம்மா கவனிக்காமல் இருந்துவிட்டால், 'பார் அவதி' என்று சீண்டுவார். அம்மா 'ஏங்க' என்று அழைத்தால், 'ஏன் ஏங்கறே' என்று குறும்பாக விளையாடுவார்.

* அப்பாவுக்கு நகைச்சுவை உணர்வு ஜாஸ்தி. தெருவில் கீரைக்காரம்மா, 'அரைக்கீரை, முளைக்கீரை, சிறுகீரை' எனக் கூவிக்கொண்டு போனால், 'அரைக்கிறே, சிரிக்கிறே, ஏன் முறைக்கிறே' என இமிடேட் செய்வார். எங்க வீட்ல அடிக்கடி விசேஷம் நடந்துட்டே இருக்கும். அப்போ, பிள்ளைகள் எங்க எல்லோரையும் ஒன்று சேர்த்து, அரட்டையடிக்க ஆரம்பிச்சுடுவார். அப்பா பேசுறதைக் கேட்கறதுக்கு, சமையல்கட்டில் இருக்கிறவங்களும் வந்துடுவாங்க. 'அப்புறம் எப்படி வேலை நடக்கிறது? யார் சமைக்கிறது?'னு அத்தைகள் எங்கள் ஜாலி கச்சேரியை கலைச்சுடுவாங்க. எங்கள் சொந்தக்கார பையன் ஒருத்தன், கொழுக் மொழுக் என்று இருப்பான். அவன் அம்மாவுக்குச் சொந்த ஊர், அரிசிப்பாளையம். அப்பாவுக்கு உளுந்தூர்பேட்டை. 'அதனால்தான் பையன் அழகான இட்லி மாதிரி இருக்கான்' என்றாரே பார்க்கலாம். அப்பா சொன்னதைக் கேட்டு அந்தப் பையனும் விழுந்து விழுந்து சிரிச்சான்.



* அப்பாவுக்குப் பொம்பளைப் பிள்ளைகள் மேலே வாஞ்சை ஜாஸ்தி. 'பொம்பளை பொழுது விடிஞ்சு தூங்கக் கூடாது'னு அம்மா எழுப்பினால், அப்பாவுக்குப் பிடிக்கவே பிடிக்காது. 'பொம்பளைப் பிள்ளைக தூங்கினால் என்னவாம்? இன்னொருத்தர் வீட்டுக்குப் போற பிள்ளைக அங்கே நல்லா தூங்க முடியுமோ என்னவோ? இங்கே நல்லா தூங்கட்டும்'னு சொல்வார். நொறுக்குத் தீனி வாங்கிட்டு வந்தால், முதல்ல பொண்ணுகளுக்குத்தான் தருவார். நான் கருப்பா, களையா இருப்பேங்கிறதால் கிளியோபாட்ரா எனப் பட்டப் பெயர் வெச்சு கூப்பிடுவார்.

அப்பா இறந்தப்போ எனக்கு 18 வயசு. கல்யாணமாகி கையில் ஒரு குழந்தை இருந்துச்சு. அதனால், அப்பா இல்லைன்னாலும் அம்மா இருக்காங்களேனு தோணுச்சு. ஆனா, அப்பா இறந்து இத்தனை வருஷத்துக்கு அப்புறமும் எல்லோரும் அவரை கொண்டாடறதைப் பார்க்கும்போது, இப்பேர்ப்பட்ட மனுஷனுக்கு மகளா பிறக்க எத்தனை ஜென்மம் தவம் பண்ணேனோ எனத் தோணுது'' என நெகிழ்ச்சியாக முடிக்கிறார் கலைச்செல்வி.

அன்று `கஞ்சித்தொட்டி’... இன்று அரசு மருத்துவமனை! - சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஒரு நாள்!



அனரர்தன கௌரி


ஆர்.மகாலட்சுமி

ஆசியாவின் மிகப் பழைமையான மருத்துவமனையான ஸ்டான்லி மருத்துவமனையைப் பற்றி ஒரு பார்வை!




`தெய்வத்துக்குச் சமமானவர்கள் மருத்துவர்கள்!’ - காலம் காலமாகச் சொல்லப்படும் வாசகம். இதில் உண்மையில்லாமலில்லை. விபத்தோ, பெருநோயோ... சாவின் விளிம்பிலிருந்து மீட்டுக்கொண்டு வரும் மருத்துவர்கள் இறைவனுக்குச் சமமானவர்கள்தானே! நம்மில் ஒருவர் கோயிலுக்குக்கூட செல்லாமல் இருந்திருக்கலாம்; ஆனால், மருத்துவமனைக்குள் செல்லாமல் இருந்திருக்கவே முடியாது. சில மருத்துவமனைகளுக்கும் வரலாறு உண்டு; பாரம்பர்யப் பெருமை உண்டு. அப்படிப் பழம் பெருமையும் முக்கியத்துவமும் வாய்ந்தது சென்னை, அரசு ஸ்டான்லி மருத்துவமனை.



ஆசியாவின் மிகப் பழைமையான மருத்துவமனைகளில், ஸ்டான்லி மருத்துவமனையும் ஒன்று. 200 ஆண்டுகளுக்கும் மேல் மக்களுக்கான மருத்துவ சேவையைச் செய்துவருகிறது.வட சென்னைப் பகுதி மக்களால் ‘கஞ்சித்தொட்டி மருத்துவமனை’ என ஆரம்பத்தில் அழைக்கப்பட்டது. 1782-ம் ஆண்டில் மணியக்காரர் என்ற செல்வந்தர் ராயபுரத்தில் வசித்துவந்தார். பஞ்சம் தலைவிரித்தாடிய காலகட்டம் அது. பல இடங்களில் சிற்சில போர்களும் நடந்துகொண்டிருந்தன. போர் வீரர்களுக்கும் மக்களுக்கும் உணவளிக்க, தன்னுடைய தோட்டத்தில் ஒரு சத்திரத்தை கட்டினார் மணியக்காரர். அங்கே, பலருக்குக் கஞ்சி வழங்கினார். நாளடைவில் அந்த இடம் ‘கஞ்சித்தொட்டி’ எனப் பெயர் பெற்றது. அந்த இடத்தில் 1799-ம் ஆண்டில் ‘ஜான் அண்டர்வுட்’ என்ற மருத்துவர், சிறிய மருத்துவமனையை ஆரம்பித்தார். 1808-ம் ஆண்டில் அந்தச் சத்திரத்தையும் மருத்துவமனையையும் ஆங்கில அரசு ஏற்று நடத்தியது. பின்னர், 1910-ம் ஆண்டில் அரசுடைமையாக்கப்பட்டது. பிறகு, ‘ராயபுரம் மருத்துவமனை’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

1933-ம் ஆண்டில், அப்போது சென்னை மகாண ஆளுநராக இருந்தவர் ஜார்ஜ் ஃபிரெடரிக் ஸ்டான்லி (Sir George Frederick Stanley), இங்கே, மருத்துவக் கல்லூரியை ஆரம்பித்தார். அதன் பிறகு, ‘அரசு ஸ்டான்லி மருத்துவமனை’யாக உருமாற்றம் அடைந்தது. இப்போது, 1,661 படுக்கைகள், 61 மருத்துவர்கள், 332 செவிலியர்கள், என மிகப் பெரிய அளவில் வளர்ந்து, கம்பீரமாக நிற்கிறது. இந்த மருத்துவமனையால், தினசரி 1,585 உள்நோயாளிகளும் 5,000 வெளிநோயாளிகளும் பயனடைகின்றனர்.




மருத்துவமனை வளாகத்துக்குள் நுழைந்தோம். பலவிதமான உடல்நலப் பிரச்னைகளுடன் வருபவர்கள்; அவர்களுக்கு உதவி செய்ய உடன் வந்தவர்கள்; நோயாளிகளைப் பார்வையிட வந்தவர்கள்; பணியாளர்கள்; சிறு வியாபாரிகள்... எனக் கலவையான மனிதர்கள் கூட்டம். அங்குமிங்கும் நடந்துகொண்டும், அமர்ந்துகொண்டும், சுவரோரமாகப் படுத்துக்கொண்டும் கிடந்த மனிதர்களுக்கு இடையே நாமும் ஒருவராகக் கலந்தோம். மருத்துவமனை வாசலுக்கு முன்னால் கைகளிலும் கால்களிலும் கட்டுப்போட்டிருக்க, களையிழந்த முகத்துடன் அமர்ந்திருந்தார் ஒரு நோயாளி. அவரைப் பார்த்தபடியே உள்ளே நுழைந்தோம்.

முதலில் நாம் சென்றது வெளி நோயாளிகள் பிரிவு. ஓ.பி. சீட்டு வாங்குவதற்காக வரிசையில் ஏராளமானவர்கள் காத்திருந்தார்கள். அத்தனை முகங்களிலும் ஏதோவொரு கவலை, ஏக்கம். சீக்கிரம் மருத்துவரைப் பார்த்துவிட வேண்டும் என்கிற அவசரம் பலரிடமிருப்பது வெளிப்படையாகத் தெரிந்தது. சிலர் வரிசையில் நிற்காமல் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தார்கள்.

சிறிது நேரம் அங்கே நின்றுகொண்டிருந்துவிட்டு, தீவிர அறுவைச் சிகிச்சை வார்டு பக்கம் சென்றோம். எங்களுடன் மருத்துவமனையின் தொழில்நுட்ப பொறியாளர் (Biotechnical Engineer) ஒருவர் வந்தார். அவர் எங்களை தீவிர அறுவைச் சிகிச்சைப் பிரிவுக்குள் அழைத்துச் சென்றார். நோயாளிகளில் படுக்கையில் படுத்திருந்தார்கள். அவர்களில் பலரின் மூக்கில் செயற்கை சுவாசமளிக்கும் ஆக்சிஜனேற்றிகள் மாட்டப்பட்டிருந்தன. மார்புவரை போர்த்தியிருக்கும் கறுப்பு கம்பளியுடன், முகத்தில் சிறு சிறு காயங்களுடன், செயற்கை வாயுவைச் சுவாசித்தபடி மயக்கநிலையில் இருப்பவர்கள்தான் அநேகம். தன்னைச் சற்றி என்ன நடக்கிறது என்பதைக்கூட அறியாமல் படுத்திருந்த அவர்களைப் பார்க்கப் பார்க்க நமக்குக் கலக்கமாக இருந்தது.



இங்கே, கழுத்து மற்றும் முக சிகிச்சை, தெர்மோபிளாஸ்டி (Thermoplasty) சிகிச்சை, உமிழ்வு உயிரியல் சிகிச்சை (Excision bio spy) மூச்சுப் பெருங்குழாய் சிகிச்சை (Tracheotomy) உள்ளிட்ட பல சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. அருகிலிருந்த மற்றொரு தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு சென்றோம். அங்கே தலையில் அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட நோயாளிகள், 'பேஷன்ட்ஸ் மானிட்டர் சிஸ்டம்' (Patients monitor system) உடன் இணைக்கப்பட்ட ஊசி (Syringe pump) மற்றும் உட்செலுத்துதல் குழாய்கள் (Infusion pump) மாட்டப்பட்டு படுக்கைகளில் படுத்திருந்தார்கள். `மனிதர்களுக்குத்தான் எத்தனை உடல்நலப் பிரச்னைகள்?’ என்று மனதுக்குள் நினைத்தபடி நடந்தோம்.
விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்குச் செல்லும் வழியிலிருந்த உயரிய சிறப்பு சிகிச்சைக் கட்டடம் வரவேற்றது. அது கர்ப்பிணிப் பெண்களுக்கு சிகிச்சையளிக்கும் சிறப்புப் பிரிவு. இங்குத் தீவிரப் பிரச்னைகளோடு (Difficult case) வரும் கர்ப்பிணிகளுக்கு மட்டுமே பிரசவம் பார்க்கப்படுகிறது.

'எமர்ஜென்ஸி வார்டு' (Emergency ward) எனும் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு... பல நோயாளிகள் முகம், கை, கால்களில் கட்டுப்போட்டு உட்கார்ந்திருந்தனர். ஒருவரை, உறவினர் ஒருவர் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றுகொண்டிருந்தார். அறைக்குள்ளே நோயாளிகளின் மௌனமும் சோகத்தைத் தாங்கிய முகங்களும் நம் மனதை கனக்கச் செய்தன. ஒருவரை ஸ்ட்ரெச்சரில் படுக்கவைத்து பணியாள் தள்ளிக்கொண்டு செல்ல, குளூக்கோஸ் பாட்டிலைக் கையில் ஏந்தியபடி கூடவே சென்றுகொண்டிருந்தார் நர்ஸ் ஒருவர். விபத்தில், அடிதடி சண்டையில் சிக்கி படுகாயம் அடைந்தவர்கள்தான் இங்கே அறுவைச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்கள்.

சற்று தூரம் நடந்து ஓர் அறையில் ஏதோ சத்தம் கேட்க எட்டிப் பார்த்தோம். உள்ளே மருத்துவர் ஒருவர், வலியால் துடித்துக்கொண்டிருந்த ஒருவரை சமாதானம் செய்து ஊசி போட்டுக்கொண்டிருந்தார். நாம் மேலும் நடந்தபோது, இன்னோர் அறையிலிருந்து அழுகைக் குரல். அங்கே பெண்மணி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார். அவரது உடலை ஸ்ட்ரெட்சரில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள் மருத்துவமனை ஊழியர்கள். அருகில், நின்றுகொண்டிருந்த உறவினர்கள் கதறியழுதது நம்மை உலுக்கியெடுத்தது.
அந்த அறைக்கு எதிரே, செயற்கை ஆக்சிஜனேற்றியை முகத்தில் மாட்டியபடி படுத்திருந்தார் நோயாளி இன்னொரு பெண். அவரின் தோற்றத்திலிருந்தே அவரின் ஏழ்மை நிலை அப்பட்டமாகத் தெரிந்தது. முகத்தில் சோகம் அப்பிக்கிடந்தது. ஆனால், இப்படிப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையிலும் ஸ்டான்லி மருத்துவமனை எந்தக் குறையும் வைப்பதில்லை என்பது அவர்களை நர்ஸும் மற்றவர்களும் நடத்தும்விதத்திலிருந்தே புரிந்தது.



'டீப் வெய்ன் த்ரோம்பாஸிஸ்' (Deep vein thrombosis) என்கிற ஆழமான நரம்பு ரத்த உறைவு, மூச்சுவிடுவதில் சிரமம், 'அனீமியா' (Anemia) எனப்படும் ரத்தசோகை உள்ளிட்ட பல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்தார் கஸ்தூரி. ``இவங்க ரத்தத்துல ஹீமோகுளோபினின் அளவு ரொம்ப கம்மியா இருக்கு...’’ என்கிறார் அவரைக் கவனித்துக்கொள்ளும் நர்ஸ். காய்ந்த சருகைப்போலப் படுக்கையில் கிடந்தார் கஸ்தூரி.

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில், பல்வேறு சிகிச்சைகளுக்குத் தேவையான எண்ணற்ற உபகரணங்கள் இருக்கின்றன. 'ரேடியோதெரபி' (Radiotherapy), 'மேக்னடிக் ரிசோனான்ஸ் ஆஞ்சியோகிராம்' (Magnetic Resonance Angiogram), 'சி.டி ஸ்கேன்' (CT Scan), டிஜிட்டல் எக்ஸ்ரே, 'காத் லேப்' (Cath lab), 'எக்ஸ்ரே' (X ray), 'அல்ட்ரா சோனோகிராஃபி' (Ultra Sonography),'மேமோகிரஃபி' (Mammography), 'டயாலிஸிஸ்' (Dialysis), 'லித்தோகிராஃபி' (Lithography), 'வென்டிலேட்டர்ஸ்' (Ventilators)... என எண்ணற்ற நவீன சிகிச்சை சாதனங்கள் இருக்கின்றன. நோயாளிகளின் வசதிக்காக மயக்கவியல், இதயம், நரம்பியல், சிறுநீரகவியல், குழந்தைகளுக்கானச் சிகிச்சை ... எனப் பல துறைகளாக பிரிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது.

இங்கு, தீவிர அறுவைச்சிகிச்சைக்காக மட்டுமே 20 ஆபரேஷன் தியேட்டர்கள் இருக்கின்றன. ஒவ்வொரு துறைக்கும் ஒரு தீவிர சிகிச்சைப் பிரிவு உண்டு. குறிப்பாக, 'வாஸ்குலர் ' (Vascular)அறுவைச்சிகிச்சை , இதய அறுவைச்சிகிச்சை (Cardiothoracic surgery), சிறுநீரக அறுவைச்சிகிச்சை (Urology), கண், காது, தொண்டைச் சம்பந்தப்பட்ட அறுவைச்சிகிச்சை (ENT), கண் அறுவைச்சிகிச்சை (Ophthalmology) என தனித்தனியாக உள்ளன. மயக்க மருத்துவத் துறையில் 36 'இசிஜி' (ECG) மெஷின்கள் இருக்கின்றன.

மேலும் சர்க்கரைநோய், யோகா, இயற்கை மருத்துவம் எனப் பல துறைகள் உள்ளன. 'நாங்கள் உங்களுக்கு உதவலாமா?' ( MAY I HELP YOU ) எனும் போர்டுக்குக் கீழே இளஞ்சிவப்பு நிறத்தில் கோட் அணிந்த பெண்கள் நோயாளிக்கு உதவுவதற்காக அமர்ந்திருக்கிறார்கள். அவர்களைப் பார்த்துக்கொண்டே மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தோம். 200 வருடப் பாரம்பர்ய மருத்துவமனை... ஸ்டான்லியின் சேவை மகத்தானது என்றே மனதுக்குப் பட்டது.

Medical PG student dies by suicide

Medical PG student dies by suicide  26.07.2026 Hyderabad: A 29-year-old postgraduate medical student died after allegedly jumping from the t...