Sunday, June 24, 2018

டோல் பூத் இல்லாத வழி... பார்க் செய்த இடம்.... கூகுள் மேப்ஸில் ஒளிந்திருக்கும் வசதிகள்! #GoogleMaps


ம.காசி விஸ்வநாதன்  24.06.2018

GoogleMaps... ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் இதை உபயோகிக்காமல் இருந்திருக்கமாட்டீர்கள். அதுவும் சென்னை போன்ற பெரிய ஊர்களுக்கு வருபவர்களுக்கு இந்த மேப்ஸ் ஒரு வரப்பிரசாதம். ஒரு இடம் எங்கு இருக்கிறது, அங்கு எப்படி செல்வது, போகும் வழியில் எவ்வளவு டிராபிக் இருக்கிறது, அந்த வழியில் போக எவ்வளவு நேரம் ஆகும் போன்ற பல வசதிகளை தாண்டி இன்னும் பல பலனுள்ள வசதிகள் கூகுள் மேப்ஸில் ஒளிந்துள்ளன.

சேரும் இடங்களுக்கு நடுவில் நிறுத்தங்கள் சேர்க்கலாம்:




பல நேரங்களில் ஓர் இடத்திற்கு செல்லும் முன் நாம் பல இடங்களுக்கு போய்விட்டு செல்லவேண்டியது இருக்கும். இதற்கு ஒவ்வொரு முறையும் சேரும் இடம் புறப்படும் இடம் கொடுக்கவேண்டிய நிலை வரும். உண்மையில் அப்படிதான் செய்யவேண்டும் என்றில்லை. நீங்கள் சேரும் இடத்துடன் அங்கு செல்லும் முன் செல்லவேண்டிய நிறுத்தங்களையம் கூகுள் மேப்ஸில் குறிப்பிட்டு வழி அறியமுடியும். அதற்கு செல்ல வேண்டிய இடத்தை டைப் செய்துவிட்டு அதன் அருகில் இருக்கும் 3 புள்ளிகள் கொண்ட மெனு பட்டனை அழுத்தினால் "Add Stop" என்ற ஆப்ஷன் வரும். அதை க்ளிக் செய்து புதுப்புது இடைநிறுத்தங்களை சேர்த்துக்கொள்ளலாம்.

கார் பார்க் செய்யப்பட்ட இடத்தை சேவ் செய்யலாம்:




இந்தக் கார்களையும் பைக்குகளையும் பெரிய பார்க்கிங் ஏரியாக்களில் பார்க் செய்துவிட்டு நாம் படும்பாடு பெரும்பாடாக இருக்கும். இந்தப் பிரச்னையை சமாளிக்கவும் ஒரு வசதி கூகுள் மேப்ஸில் உண்டு. கூகுள் மேப்ஸ் அப்பை ஓபன் செய்தவுடன் நீங்கள் இருக்கும் இடத்தை காட்டும் பட்டன் வலதுபுறத்தில் கீழ்இருக்கும். அதை கிளிக் செய்தால் மேப்பில் நீங்கள் தற்போது இருக்கும் புள்ளி என்னவென்று தெரியவரும். அந்த புள்ளியை கிளிக் செய்தால் "save your parking" என்ற ஆப்சன் மூன்றாவதாக வரும். அதை கிளிக் செய்தால் நீங்கள் தற்போது இருக்கும் இடம் பார்க் செய்த இடமாக சேவ் செய்யப்படும். பின்பு பார்க்கிங் லொகேஷன் என்று தேடினாலே அந்த இடம் எங்கு இருக்கிறது என்று மேப்ஸ் காட்டும். இதை உபயோகித்த பின் அகற்றிவிடமுடியும்.

டோல் பூத் இல்லாத வழி:

ஒரு நீண்டதூரப் பயணம் செல்லவேண்டும் என்றால் கண்டிப்பாக நடுவில் ஏதேனும் டோல் பூத்துக்கு கப்பம் கட்டி தான் ஆக வேண்டும். ஆனால் அவை இல்லாமல் நீங்கள் செல்லவேண்டிய இடத்திற்கு எப்படி செல்லலாம் என்று சொல்லும் மாற்றுவழிகளை மேப்ஸில் பார்க்கமுடியும். இதற்கும் சேரும் இடத்தை டைப் செய்துவிட்டு அதே 3 புள்ளிகள் கொண்ட மெனு பட்டனை அழுத்தினால் "Route Options" என்ற ஆப்சன் இருக்கும் அதை செலக்ட் செய்து "Avoid tolls" என்று கொடுத்தால் டோல் பூத்களை தவிர்க்கும் வழிகளை கூகுள் உங்களுக்குத் தரும்.

தற்போது இருக்கும் இடத்தை உடனுக்குடன் பகிரலாம்:




பெற்றோர்களுக்கு என்றுமே அவர்களது குழந்தைகள் மேல் ஒருவித பாதுகாப்பு உணர்வு இருக்கும். அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை அவ்வப்போது கேட்டு உறுதிசெய்துகொள்வர். கல்லூரிப்பருவத்தைக் கடந்துவிட்டாலும் பெற்றோர்க்கு அவர்கள் குழந்தைதான். ஆனால் அடிக்கடி பெற்றோர்கள் இப்படி அவர்கள் மீது அக்கறை காட்டுவதும் அவர்களுக்கு பிடிக்காது. இப்படி தொடர்புகொள்ளாமலே அவர்கள் இருக்கும் இடத்தை மேப்ஸ் மூலம் பெற்றோர் தெரிந்துகொள்ளமுடியும். இதற்கு கூகுள் மேப்ஸ் அப்பில் இடதுபக்கம் இருக்கும் 3 கோடுகள் கொண்ட மெனுவை செலக்ட் செய்யவும். அதில் "Share Location" என்ற ஆப்சன் இருக்கும். அதன்பின் வரும் விண்டோவில் "Get Started" என்ற பட்டனை கிளிக் செய்யவும். அதில் எவ்வளவு நேரத்திற்கு உங்கள் இடத்தை பகிரவேண்டுமென்பதை குறிப்பிட்டு உங்கள் கூகுள் காண்டாக்ட்ஸில் இருக்கும் யாரிடமும் உங்களது தற்போதைய இடத்தை ஷேர் செய்யலாம். இதன்மூலம் நீங்கள் எங்கு வந்துகொண்டு இருக்கிறீர்கள் என்று உடனுக்குடன் அறிந்துகொள்ளமுடியும். இதை தேவையில்லாதபோது ஆஃப் செய்துகொள்ளலாம்.

மற்ற வசதிகள்:

உங்கள் பழைய பயணங்கள் என்னவென்று பார்ப்பது, போகவேண்டிய வழியில் இயங்கும் பொது போக்குவரத்து விவரங்களை அறிவது, காலெண்டரில் இருக்கும் நிகழ்வுகளுடன் மேப்ஸை சிங்க் செய்வது, இருக்கும் இடத்தின்அருகில் இருக்கும் வசதிகளை அறிவது, மால் போன்ற பெரிய இடங்களுக்குள் வழிகள் கண்டுபிடிப்பது, ஒரு குறிப்பிட்ட ஏரியாவின் மேப்பை மட்டும் பதிவிறக்கம் செய்வது, தேவைப்பட்டால் கேப் புக் செய்வது என இன்னும் பல வசதிகள் கூகுள் மேப்ஸில் உள்ளது. பொறுமையாக ஒரு நாள் கூகுள் மேப்ஸ் அப்பை சுற்றிபார்த்தால் இன்னும் பல நல்ல பயனுள்ள விஷயங்கள் உங்களுக்கு மாட்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 30.12.2024