''அம்மா ஏங்கனு கூப்பிட்டா.. ஏன் ஏங்குறனு அப்பா கிண்டலடிப்பார்'' - கவியரசு மகள் கலைச்செல்வி
ஆ.சாந்தி கணேஷ் 24.06.2018
'நான் காவியத் தாயின் இளைய மகன்; காதல் பெண்களின் பெரும் தலைவன்' எனத் தாய்மையையும் காதலையும் தன் பாடல்களில் விதவிதமாக கொண்டாடிக் களித்த பெருங்கவிஞன், கண்ணதாசனின் பிறந்தநாள் இன்று (ஜூன் 24). கவியரசுவின் அக வாழ்க்கை, புற வாழ்க்கை இரண்டுமே திறந்த புத்தகமாக இருந்தவர். எனினும், 'உங்கள் அப்பா கண்ணதாசன் எப்படி இருந்தார்?' என்று அவர் மகள் கலைச்செல்வியிடம் கேட்டோம். அவர் பகிர்ந்தவை எல்லாமே கவியரசுவின் வெவ்வேறு முகங்களை நமக்குக் காட்டின.
*அப்பா ரொம்ப பாசக்காரர். பெத்த பிள்ளைகளான எங்க மேலே வெச்ச அதே அளவு அன்பை, தன்னுடன் பிறந்தவங்க மேலேயும் வெச்சிருந்தார். கூடப் பொறந்தவங்களுக்காக சதையையே அறுத்துக்கொடுக்கலாம்னு சொல்வார். எங்க சிவகாமி அத்தையையும் அப்பாவையும் பாசமலர்னு கேலி பண்ணுவோம். வீட்ல ஒரு விசேஷம்னா, அப்பா வாயிலிருந்து வரும் முதல் வார்த்தை, 'சிவகாமியைக் கூப்பிடுங்க' என்பதுதான். அப்பாகிட்ட எதுவுமே எதிர்பார்க்காத அத்தை. அதனால்தான் அப்பா இறந்த ஏக்கத்தினால் சில வருஷங்களிலேயே சிவகாமி அத்தையும் தவறிட்டாங்க.
* பணம், காசை பெருசா நேசிக்காதவர் அப்பா. தான் பெத்த பிள்ளைகளின் கல்யாணத்தை மட்டுமில்லாமல், கூடப் பிறந்தவங்களின் பிள்ளைகளுக்கும் அப்பாவே கல்யாணம் பண்ணிவெச்சிருக்கார். அந்த வகையில் 30 கல்யாணங்களை பண்ணிவெச்சிருககர். அதுக்காக, கட்டின வீடுகளை விற்றிருக்கார்.
* அப்பா பயங்கர ரொமான்ஸ்காரர். அப்பாவுக்குத் தலையில் எண்ணெய் வைக்கிறது, வெந்நீர் விளாவறது என எல்லாமே அம்மாதான் செய்யணும். அப்பாவுக்கு வாயைத் திறந்தாலே, 'பார்வதி... பார்வதி'தான். அம்மாவின் பெயரை செல்லமாக, பரிதி... பரிதி... என அவர் அழைக்கும் அழகே அலாதி. அப்பா கூப்பிடும்போது, வேலையால் அம்மா கவனிக்காமல் இருந்துவிட்டால், 'பார் அவதி' என்று சீண்டுவார். அம்மா 'ஏங்க' என்று அழைத்தால், 'ஏன் ஏங்கறே' என்று குறும்பாக விளையாடுவார்.
* அப்பாவுக்கு நகைச்சுவை உணர்வு ஜாஸ்தி. தெருவில் கீரைக்காரம்மா, 'அரைக்கீரை, முளைக்கீரை, சிறுகீரை' எனக் கூவிக்கொண்டு போனால், 'அரைக்கிறே, சிரிக்கிறே, ஏன் முறைக்கிறே' என இமிடேட் செய்வார். எங்க வீட்ல அடிக்கடி விசேஷம் நடந்துட்டே இருக்கும். அப்போ, பிள்ளைகள் எங்க எல்லோரையும் ஒன்று சேர்த்து, அரட்டையடிக்க ஆரம்பிச்சுடுவார். அப்பா பேசுறதைக் கேட்கறதுக்கு, சமையல்கட்டில் இருக்கிறவங்களும் வந்துடுவாங்க. 'அப்புறம் எப்படி வேலை நடக்கிறது? யார் சமைக்கிறது?'னு அத்தைகள் எங்கள் ஜாலி கச்சேரியை கலைச்சுடுவாங்க. எங்கள் சொந்தக்கார பையன் ஒருத்தன், கொழுக் மொழுக் என்று இருப்பான். அவன் அம்மாவுக்குச் சொந்த ஊர், அரிசிப்பாளையம். அப்பாவுக்கு உளுந்தூர்பேட்டை. 'அதனால்தான் பையன் அழகான இட்லி மாதிரி இருக்கான்' என்றாரே பார்க்கலாம். அப்பா சொன்னதைக் கேட்டு அந்தப் பையனும் விழுந்து விழுந்து சிரிச்சான்.
* அப்பாவுக்குப் பொம்பளைப் பிள்ளைகள் மேலே வாஞ்சை ஜாஸ்தி. 'பொம்பளை பொழுது விடிஞ்சு தூங்கக் கூடாது'னு அம்மா எழுப்பினால், அப்பாவுக்குப் பிடிக்கவே பிடிக்காது. 'பொம்பளைப் பிள்ளைக தூங்கினால் என்னவாம்? இன்னொருத்தர் வீட்டுக்குப் போற பிள்ளைக அங்கே நல்லா தூங்க முடியுமோ என்னவோ? இங்கே நல்லா தூங்கட்டும்'னு சொல்வார். நொறுக்குத் தீனி வாங்கிட்டு வந்தால், முதல்ல பொண்ணுகளுக்குத்தான் தருவார். நான் கருப்பா, களையா இருப்பேங்கிறதால் கிளியோபாட்ரா எனப் பட்டப் பெயர் வெச்சு கூப்பிடுவார்.
அப்பா இறந்தப்போ எனக்கு 18 வயசு. கல்யாணமாகி கையில் ஒரு குழந்தை இருந்துச்சு. அதனால், அப்பா இல்லைன்னாலும் அம்மா இருக்காங்களேனு தோணுச்சு. ஆனா, அப்பா இறந்து இத்தனை வருஷத்துக்கு அப்புறமும் எல்லோரும் அவரை கொண்டாடறதைப் பார்க்கும்போது, இப்பேர்ப்பட்ட மனுஷனுக்கு மகளா பிறக்க எத்தனை ஜென்மம் தவம் பண்ணேனோ எனத் தோணுது'' என நெகிழ்ச்சியாக முடிக்கிறார் கலைச்செல்வி.
No comments:
Post a Comment