Sunday, September 16, 2018

இனிப்பு தேசம் 22: மனசு இனிக்கச் சாப்பிடுவோம்…

Published : 15 Sep 2018 16:10 IST

மருத்துவர் கு. சிவராமன்





இரவு விருந்துப் பழக்கம், கடந்த இரு தலைமுறைகளில் பற்றிக்கொண்ட புதுப் பழக்கம். இந்தப் பழக்கம் நம் நலத்திலும் மனத்திலும் நிறையவே தீங்குகளை விதைத்துவிட்டது. சனிக்கிழமை இரவு தமிழகத்தின் அத்தனை நகர்ப்புறத்து உள்வட்ட சாலைகள், குறிப்பாக, உணவு விடுதிகள் உள்ள சாலைகளில் பயணிக்க வழியின்றி, ‘பார்க்’ செய்யப்பட்ட வாகனங்களால் நிரம்பி வழிகின்றன.

அன்று இனக்குழுக்களாகத் திரிந்தபோது, இரவில் நிலவொளியில் கள்ளருந்தி ஆடிக் களித்த வரலாறிருந்தால்கூட, அந்த வாழ்க்கையின் உடலுழைப்பையும் அப்போதிருந்த தேக வன்மையையும் இப்போதைய நம் உடலோடு கனவிலும் ஒப்பிட்டுப் பார்க்க இயலாது.

இரவு உணவு என்பது ‘இயலாதவன் உணவு போல’ நலிந்து, குறைவாக இருக்க வேண்டும் என்பது நம் மரபு சொன்ன உணவு விதி. ஆனால், ‘இரவுதான் களிப்புக்கான நேரம் உள்ள பொழுது’ என சந்தை நாகரிகம் மொத்தமாய் நம்மை மாற்றிவிட்டது. சிறு, எளிய உணவாக இருக்க வேண்டிய இரவு உணவு, பேருண்டியாய், அதிக கலோரி உணவாக மாறிப்போனது. இனிப்பு நோயின் பெருக்கத்துக்கு மிக முக்கியக் காரணம் இது.

இரவில் எதைச் சாப்பிடலாம்?

அநேகமாக, சாப்பிட்டு ஒரு மணி நேரத்தில் படுக்கப் போகும் பழக்கமுள்ளோருக்கு இரவு உணவு முதலில் குறைந்த கலோரியைத் தருவதாக இருக்க வேண்டும். இரவு, சந்திரனுடைய ஆட்சி. உடல் பிரபஞ்சத்தின் குளிர்ச்சியிலிருந்து தன்னைப் பாதுகாக்க, சற்று வெம்மையாகத் தன்னை வைத்திருக்கும் நேரம். அப்போது நாம் சாப்பிடும் உணவு கண்டிப்பாகக் கூடுதல் வெம்மையைக் கொடுத்துவிடக் கூடாது. கூடுதல் குளிர்ச்சியையும் கொடுக்கக் கூடாது.

கொள்ளுப்பயறு, எண்ணெய்யில் பொரித்தது, கோழிக்கறி, பரோட்டா இவை கொஞ்சம் சூட்டைத் தருபவை. தர்பூசணிப்பழம், வெள்ளைப்பூசணிக் கூட்டு, நீர்க்காய்கறிகள், புளிப்பான பழங்கள் போன்றவை குளிர்ச்சியைத் தருபவை. இரண்டுமே ஆகாது. வெம்மையும் குளிர்ச்சியும் அளவாய்த்தரும் இட்லி ஆகச் சிறந்தது.

அதுவும் குறிப்பாக வெள்ளை அரிசி இட்லிக்குப் பதிலாய், சிறுதானியமான குதிரைவாலியில் செய்த இட்லி சிறந்தது. தானியங்களை அரைத்து மாவாக்கிவிட்டால் அது முழு தானிய உணவு அளவுக்குச் சிறந்தது இல்லை என்றாலும், பிற ‘ரெடி டு ஈட்’ உணவு வகைகளைக் காட்டிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே.

கோதுமை உணவு வகைகள், உடற்சூட்டைத் தரக்கூடியவை. குறிப்பாக மைதா சேர்ந்த உணவு வகைகள். குறைவான அளவில் முழு, பட்டை தீட்டாத கோதுமை உணவை எடுப்பதை (வாரம் ஒரு நாள் போல) ஏற்றுக்கொள்ளலாம். அதையும் கோதுமை ரவை கிச்சடி (பல காய்கறிகளுடன்) என எடுப்பது நல்லது. வேகவைத்த காய்கறிகளுடன், கொஞ்சமாய் ஞவரை அரிசிச் சோறு, மோரும் வெங்காயமும் சேர்த்த கம்பங்கூழ், முடக்கறுத்தான் தோசை, பாலக் கீரை போட்ட புல்கா சப்பாத்தி என இரவு உணவு இருப்பது சிறப்பு.

எந்தத் தானிய மாவாக இருந்தாலும், கூடவே நிறைய நார்ச்சத்துள்ள வேகவைத்த காய்கறியைச் சேர்க்கும்போது, இரவில், தானியத்தின் சர்க்கரை, ரத்தத்தில் வேகமாகக் கலக்காது.

இரவு உணவுக்குப் பின்னர்?

இரவு உணவுக்குப் பின், மெல்ல ஒரு குறு நடை (20-30 நிமிடங்கள்) நடப்பது நன்று. சாப்பிட்ட பின் வாழைப்பழம் சாப்பிடுவது, ‘டெஸர்ட்’ எனச் சொல்லி, உணவுக்குப் பின்னர் பழத்துண்டுகள், இனிப்பு, ஐஸ்கிரீம் போன்றவற்றைச் சாப்பிடுவது நல்லதல்ல. பழங்களை உணவுக்கு முன்னதாக மாலை 6-7 மணி போல சாப்பிட்டுவிடுவது நல்லது. அதிலும் மா, பலா, வாழை இரவில் கண்டிப்பாக வேண்டாம்.

சர்க்கரை வியாதியின் வலியில்லா மாரடைப்புகள் பெரும்பாலும் அதிகாலையில் ஏற்படுவதற்கு, இரவில் சாப்பிடும் மதுவும் பெருவிருந்தும் மிக முக்கியக் காரணம். விசேஷ நிகழ்வுகளில் அவசியமில்லாத, அளவற்ற இனிப்புகளுடன் கொண்டாடப்படுவது இங்கே பெருகிக்கொண்டிருக்கிறது.

இலையில் மூன்று இனிப்பைப் பரிமாறுவதும், பெருவாரியான உணவைத் தூர எறிவதும் நாம் சமூகத்துக்குச் செய்யும் பெருங்குற்றம். வளர்ந்த ஒரு நாட்டில், ஒரு நாள் தூர எறியும் உணவின் அளவு சகாரா பாலைவனத்தைச் சுற்றியுள்ள 21 ஏழை நாடுகளின் ஒரு வருட உணவாம்!

விருந்தில் வீட்டுச் சாப்பாடு!

சர்க்கரை நோயாளிகள், ‘பஃபே’ உணவை இரவில் தவிர்ப்பது நல்லது. கொடுத்த காசுக்கு அல்லது செய்த மொய்க்கு எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் என 15 வகையில் ஒவ்வொன்றிலும் ஒரு கரண்டி என எடுத்தாலும் முடிவில் கூட்டிக் கழித்துப் பார்த்தால், நாம் சாப்பிட்டிருப்பது சுமார் 1,100 கலோரியைத் தாண்டியிருக்கும். இனிப்பு நோயர், திருமணத்துக்குப் போனால், ‘நல்லா இருங்க’ என மணமக்களிடம் கைகுலுக்கிவிட்டு, சமர்த்தாக வீட்டில் வந்து சாப்பிடுவது சாலச் சிறந்தது.

கடற்கரை வரை இருசக்கர வாகனத்தில், மனைவியுடன் காதல் நிரம்பப் பயணித்து, சற்று அலையோடு விளையாடி, காற்றோடு உறவாடி, கொஞ்சம் கடல் மணலில் ஓடி, கடைசியாக வீட்டில் சுட்ட சோளப் பணியாரத்தை, கெட்டியான காரச் சட்னியோடு தொட்டுச் சாப்பிட்டுப் பாருங்கள்… அடடா, ஏகத்துக்கு இனிக்கும். ரத்தத்தில் இல்லை, மனத்தில் மட்டும். ஆம் நண்பர்களே… விருந்தில் இனிக்க வேண்டியது நா அல்ல. மனசு!

(தொடரும்)

கட்டுரையாளர், சித்த மருத்துவர்
தொடர்புக்கு: herbsiddha@gmail.com

மனசு போல வாழ்க்கை 23: லயிப்பதே மனதின் சிக்கலுக்கு சிகிச்சை!

Published : 25 Aug 2015 12:06 IST

டாக்டர். ஆர். கார்த்திகேயன்

 



மன வளம்தான் மண் வளத்தை தீர்மானிக்கிறது. இயற்கையை வணங்கும் மனம் இயற்கையோடு இசைந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும். இயற்கையைப் பயன்படுத்த நினைக்கும் மனம் இயற்கையை விலக்கி செயற்கையான வாழ்க்கையை நாடிச்செல்லும். காடுகள் அழிந்ததும் கட்டடங்கள் பெருகியதும் மனிதரின் மன மாற்றங்களினால்தானே!

மன விகாரம்

புற உலகில் நீங்கள் காணும் மாற்றங்கள் யாவும் அக உலகில் நிகழ்ந்த மாற்றங்களினால்தான். நீங்கள் பார்க்கும் அனைத்தும் நீங்கள் உருவாக்கியவை. அல்லது பிறர் உருவாக்கும்போது நீங்கள் சம்மதம் தெரிவித்தவை. நேரடியாகவோ மறைமுகமாகவோ உங்கள் பங்கு உள்ளதை உணருங்கள். அதனால் எதையும் குறை சொல்வதில் பயன் இல்லை.

“எல்லாம் மோசம்; எதுவும் சரியில்லை” என்று சொல்வதும் ஒரு மன விகாரம்தான். உலகில் அனைத்தும் உள்ளது. எதைப் பார்ப்பது, என்ன செய்வது என்பதெல்லாம் நம்மிடம்தானே உள்ளது?

மாற்றி யோசி

என் நண்பர் ஒருவர் இளையராஜாவின் தீவிர ரசிகர், என்னைப் போலவே. இளையராஜாவின் அதிகம் பிரபலமாகாத அற்புத பாடல்கள் நிறைய உள்ளன என்று ஒருநாள் பேசினோம். பின் ஒரு 20, 25 பாடல்களை பட்டியல் போட ஆரம்பித்தோம். ஒரு பத்து நிமிடத்தில் இளையராஜாவின் இசை சாம்ராஜ்யத்தில் முழுவதுமாக நனைந்தோம். எல்லாம் கற்பனையில் தான். எல்லா பாடல்களையும் கேட்ட திருப்தி.

அவர் ஒரு பிரச்சினை பற்றி விவாதிக்க வந்தவர் அவர் எழுந்து போகும்போதும் அந்தப் பிரச்சினை எள்ளளவும் குறைவில்லை. ஆனாலும் உற்சாகமாக கிளம்பிப்போனார் அவர். இது தான் மனதின் செயல்பாடு.

மிக மோசமான மன நிலையிலும் எண்ணத்தை திசை திருப்பி ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடியும். உற்சாகப்படுத்திக்கொள்ள முடியும். மாற்றி யோசிக்க முடியும். முயற்சிதான் முக்கியம். பிரச்சினை முடிந்த பின்தான் ஆறுதல் கிடைக்க வேண்டும் என்றால் இந்த உலகில் யார் நிம்மதியாக நடமாட முடியும்? அப்படியே ஒரு பிரச்சினை முடிந்தாலும் அடுத்தது வராமல் போய்விடுமா என்ன?

இசையும் கவிதையும் ஓவியமும் விளையாட்டும் மனிதனை எந்த நேரத்திலும் இளக வைக்க உதவுகின்றன. மனம் ஒன்றிச் செய்யும் எந்த செயலும் மனக்கவலையிலிருந்து விடுதலை அளிக்கக் கூடியவை. இதை இப்படிக் கூட புரிந்துகொள்ளலாம்: மனக் கவலையிலிருந்து விடுதலை பெற ஏதாவது ஒரு செயலை மனம் ஒன்றிச் செய்தாலே போதும்! இதைத் தான் ‘mindfulness’ என்று புத்த மதம் சொல்கிறது. மனம் லயித்துச் செய்யும் காரியம் மனதின் சிக்கலுக்கு சிகிச்சை!

உழைப்பின் பயன்

ஒரு பிரச்சினை மனதை எதிர்மறையாகக் குவிக்கிறது. அதைச் சிதறடிக்க ஒரு சிறு நேர்மறை விஷயம் போதும். ஒரு குழந்தையின் சிரிப்போ, நகைச்சுவை துணுக்கோ, அந்நியரின் அர்த்தமற்ற செய்கையோ கூட போதும். அது பிரச்சினையிலிருந்து உங்கள் மனதை நொடிப்பொழுதில் வெளியே கொண்டு வந்து விடும்.

ஒரு கணவனும் மனைவியும் பெரிதாக சண்டை போட்டுக் கொண்டிருக்க, அழைப்பு மணி கேட்கிறது. கணவன் முகத்தை சரி செய்து கொண்டு போய் பார்க்கிறான். அடுத்த வீட்டு தம்பதி பொழுது போகாமல், அரட்டை அடிக்க இங்கு உரிமையாக கதவைத் தட்டுகிறார்கள். முகம் கழுவி வந்த மனைவி பிரமாதமாக உபசரிக்கிறாள். கணவனும் எதுவும் நடக்காதது போல மிக உற்சாகமாக நடந்து கொள்கிறான். சில நிமிடங்களில் சமூக உறவுகளுக்காக சொந்த சோகம் கிடப்பில் போடப்படுகிறது. இதுதான் நிஜம்.

இதில் இன்னொரு உண்மையும் பொதிந்துள்ளது. சமூக உறவுகள் நிறைய உள்ளவர்களுக்கு சொந்த சோகங்களை கையாள்வது எளிமையாகிறது. அதே போல உடல் உழைப்பு அதிகம் இருந்தாலும் மன உளைச்சல் அதிகம் தங்காது.

சந்தோஷமாக நடி

ஒரு இந்திப் படத்தில் வந்த உரையாடல் இது.

“நான் என் கணவனை பிரிய முடிவு செய்து பெட்டியைக் கட்டி வைத்து விட்டு அவனிடம் சொல்லிவிட்டுப் போகத் தயாராக இருந்தேன்”

“அப்புறம் என்னாயிற்று?”

“அவன் வருவதற்குள் தூங்கிப்போய்விட்டேன். மறு நாள் எழுகையில் மனம் மாறிவிட்டது!”

இப்படித்தான் பல தீவிர முடிவுகள் கூட அற்பக் காரணங்களால் கலைக்க கூடியவை. கோபத்தில், பயத்தில், அவசரத்தில் நாம் எடுக்க நினைக்கும் முடிவுகளைச் சற்று தள்ளிப் போட்டால் பக்குவமான முடிவுகள் எடுக்க முடியும்.

சரியான மன நிலையில் இல்லாத போது முடிவுகள் எடுக்காமல் இருப்பது புத்திசாலித்தனம். அந்த மன நிலையிலிருந்து தற்காலிகமாக வெளியே வர எடுக்கும் முயற்சிகள் கூட நல்ல பலன் தரும்.

சந்தோஷமாக இருக்க வழி சந்தோஷமாக இருப்பது போல நடிப்பது கூடத்தான். Fake it till you Make it!

பெரும் பிரச்சினையா? அதே எண்ணமாக இருக்கிறதா? ஏதாவது செய்ய முடியுமா என்று பாருங்கள். முடிந்தால் செய்யுங்கள். செய்வதற்கு எதுவுமில்லை; என்ன நடக்கப்போகிறது என்று பார்ப்பது மட்டும்தான் வேலை என்றால் முதலில் மனதை திசை திருப்புங்கள்.

மனமும் நிலா போலதான்

பெரிதாக எதுவும் செய்ய முடியாவிட்டாலும் பிடித்ததைச் செய்யுங்கள். பழைய அலமாரியை சுத்தம் செய்யுங்கள். முடி வெட்டிக்கொள்ளுங்கள். நிறைய நேரம் நிதானமாக குளியுங்கள். வண்டி ஓட்டும் போது பாட்டு பாடிக்கொண்டே செல்லுங்கள். காமெடி சீன் பாருங்கள். நீண்ட நாட்கள் பேசாத நண்பரிடம் பேசுங்கள். யூ டியூப் அல்லது டெட் வீடியோ பாருங்கள். தனி வாகனத்தில் செல்வோர் பொது வாகனத்தில் சென்று வாருங்கள். சுடோகு போடுங்கள். இது வரை செய்யாத ஏதாவது செய்யப்பாருங்கள். மனம் மாறும்.

மதி என்றால் நிலா என்றும் பொருள். மனம் என்றும் பொருள். மனமும் நிலா போலத்தான். வளரும். தேயும். முழுதாக இருக்கும். ஒன்றுமில்லாமல் போகும். ஒரு நாள் இருப்பது போல மறு நாள் இருப்பதில்லை. இந்த நிலையில்லாத தன்மையை புரிந்து கொண்டால் விதியை மதியால் வெல்வது சாத்தியமே!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com


அடங்கா மாணவர்கள்; தீர்வா தண்டனைகள்?

Published : 11 Sep 2018 12:34 IST

முகமது ஹுசைன் 




பொதுவெளியில் மாணவர்களின் அத்துமீறல்களும் வன்முறைகளும் எந்த அளவு கண்டிக்கத்தக்கதோ அதே அளவு கண்டிக்கத்தக்கது தண்டனை என்ற பெயரில் அவர்களுக்குப் பொதுவெளியில் கொடுக்கப்படும் அவமானங்களும். தண்டனையின் நோக்கம் தவறின் வீரியத்தைக் குறித்த புரிதலை உண்டாக்குவதும்தான்.

அந்தப் புரிதல் மீண்டும் அந்தத் தவறைச் செய்யாதபடி மாணவரை மேம்படுத்தும். இங்கே பெரும்பாலான தண்டனைகள் புரிதலுக்குப் பதில் அவமானத்தையும் பயத்தையும் அளிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. 18 வயது மாணவனைக் குற்றவாளி என்று பொதுவெளியில் அறிமுகப்படுத்துவதும் அடித்து உதைத்து அவமானப்படுத்துவதும், அதற்குப் பின்னான அவன் வாழ்வை அழித்துவிடாதா? அவனை ஒரு முழுநேர குற்றவாளி ஆக்கிவிடாதா?


‘பஸ் டே’யா ‘வன்முறை நாளா’?

பஸ் டே என்ற பெயரில் மாணவர்கள் அரங்கேற்றும் வன்முறைகள் சென்னை வாசிகள் அறிந்த ஒன்று. 2011-ல் நடந்த ’பஸ் டே’ சம்பவத்தின்போது நிகழ்த்தப்பட்ட வன்முறையின்போது, கல்லூரிக்குள் புகுந்து மாணவர்களைக் காவல்துறை தாக்கியது. கடந்த ஜூன் 18 அன்று கொண்டாடப்பட்ட ‘பஸ் டே’யில் சில மாணவர்கள் மொட்டை அடிக்கப்பட்டு காவல்துறையால் அவமானப்படுத்தப்பட்டனர்.

பத்தாண்டுகளுக்கு முன்பு சென்னையில் ஒரு பூங்காவில் இருந்த இளம் ஜோடிகள் எல்லாம் கைதுசெய்யப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டனர். மாணவிகள் மட்டும் அவர்களுடைய பெற்றோர்களிடம் எச்சரித்து ஒப்படைக்கப்பட்டனர். இன்று அந்த மாணவிகளின் நிலையோ அந்த ஆண்களின் நிலையோ என்ன என்பது யாருக்கும் தெரியாது.

வைரலான வீடியோ?

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 31 அன்று மாநகரப் பேருந்தில் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கையில் இரண்டடி நீளப் பட்டாக்கத்தியுடன் படிக்கட்டுகளில் பயணித்துள்ளனர். படியில் தொங்கியபடி தாங்கள் படிக்கும் கல்லூரிக்கு ‘ஜே’ என்று கோஷமிட்டபடி அவர்கள் பயணித்துள்ளனர். மேலும், சாலையில் சென்றோரை மிரட்டும் வகையில் சாலையில் பட்டாக்கத்தியைத் தீட்டியபடி தீப்பொறி பறக்கச் சென்றுள்ளனர். இந்த நிகழ்வின் காணொலி வாட்ஸ் அப்பில் வைரலாகப் பரவியது.

தொடரும் அவமானங்கள்

காவல்துறை, 5 மாணவர் களைக் கைதுசெய்தது. கைதுக்குப் பின் அந்த மாணவர்கள், அவர்களுடைய பெற்றோர்களால் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் உணர்வுரீதியாகவும் தாக்கப்பட்டனர். அவர்கள் அழுது அரற்றினர். அவர்கள் மன்னிப்புக் கேட்டுக் கெஞ்சிக் கதறினர். இவை கேமராவின் அகன்ற விழிகளுக்கு முன்பாக அரங்கேறின.

சடுதியில் அவர்களின் கெஞ்சல் வாட்ஸ் அப்பில் பரவியது. “அவனுங்க எல்லாம் மாணவர்களே இல்லை, பொறுக்கிப்பசங்க, பஸ்ஸுல பாட்டுப் பாடறது, புட் போர்டு அடிக்குறது, வம்பு பண்றது இதுதான் அவங்க வேலை. படிக்கிற வயசுலேயே கத்திய தூக்குற இவனுங்களை எல்லாம் போலீஸ் சும்மா விடக் கூடாது” என்பதே அதைப் பார்த்த பலரின் கருத்தாக எதிரொலித்தது. மாணவர்களின் அத்துமீறல்களும் அதற்காகப் பொதுவெளியில் அவர்கள் அவமானப்படுத்தப்படுவதும் இன்றும் தொடர்வதை இந்த இரண்டு வீடியோக்கள் உணர்த்துகின்றன.

மாணவர்களின் பிரச்சினை என்ன?

சிறு வயது முதலே குழந்தைகள் பார்க்கும் கார்ட்டூன் தொடர்களும் திரைப்படங்களும் பலம் மிகுந்தவனையே நாயகனாகச் சித்திரிக்கின்றன. சண்டைக் காட்சி இல்லாத படம் அவர்களுக்குச் சலிப்பூட்டுவதாக இருக்கிறது. தன்னை நாயகனாக மாற்றுவதற்கு, அறிவுக்குப் பதிலாக அவன் பலத்தையே நம்புகிறான்.


பிருந்தா ஜெயராமன்

அபாயகரமான கூட்டணி

கல்லூரிப் பருவத்தில் மாணவர் களுக்குப் பெரும்பாலும், குடும்பத்தைவிட நண்பர்களே பிரதானமாகிவிடுகிறார்கள். நட்புக்காக எதையும் செய்ய அவர்கள் துணிகிறார்கள். ஒரு மாணவர் கல் எறிந்தால், மற்ற மாணவர்களும் கல் எறிகிறார்கள். ’நாயகனாக மாற வேண்டும்’ என்ற உந்துதலும் ’நட்பே பிரதானம்’ என்ற நிலைப்பாடும் ’குழு மனப்பான்மையும்’ மிகவும் அபாயகரமான கூட்டணி’ என்கிறார் மனநல மருத்துவர் பிருந்தா ஜெயராமன்.

“17, 18 வயதுகளில் இருக்கும் மாணவனுக்கு முன் பகுதி மூளை (Prefrontal Cortex) முழுமையாக வளர்ச்சி பெற்று இருக்காது. இதனால் எதையும் அலசி ஆராய்ந்து முடிவு எடுக்கும் பக்குவமும் தெளிவும் அவர்களிடம் இருப்பதில்லை. அதேநேரம் அவர்களுக்கு மூளையில் இருக்கும் Amygdala முழுமையாக வளர்ச்சி பெற்று இருக்கும். இதனால் அவர்கள் எப்போதும் உணர்ச்சிப் பிழம்பாக இருப்பார்கள். உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் எதையும் யோசிக்காமல் அவர்கள் செயல்படுவதன் காரணம் இதுதான்” என்கிறார் அவர்.

யார் தவறு இது?

சரி, தவறு என்று எதையுமே முழுமையாக முத்திரைகுத்திவிட முடியாது. நேற்று குற்றமாகக் கருதப் பட்டது இன்று சட்டரீதியாக நியாயமாக நிறுவப்படும்போது உலகம் அதைக் காலப்போக்கில் அங்கீகரிக்கும், ஏற்றுக்கொள்ளும். ஆக எது சரி, எது தவறு என்பதைச் சூழலே தீர்மானிக்கிறது.

அப்படியிருக்க, ஒரு சிறுவனை, இளைஞனைக் குற்றவாளி எனச் சொல்லிப் பொதுவெளியில் அசிங்கப்படுத்துவதும் முத்திரை குத்துவதும் எந்த வகையில் நியாயம்? இந்தச் செயல் அந்த மாணவனை நிஜக் குற்றவாளியாக்கிவிடும் ஆபத்து கொண்டது. சிறார் சீர்திருத்தப் பள்ளிக்குச் சென்று திரும்பியவர்களின் இன்றைய நிலை இதைத்தான் சொல்கிறது.

நாமும் பொறுப்பு ஏற்போம்

மாணவர்களின் செயல்களுக்கு அவர்களை மட்டும் பொறுப்பாளராக்குவது முறையல்ல; பெற்றோரும் ஆசிரியர்களும் சமூகத்தில் இருக்கும் நாமும் அவற்றுக்குப் பொறுப்பாளர்களே. வளர்ப்பின் குறைகளும் போதிப்பின் போதாமைகளும் சமூகத்தில் நீர்த்துப்போன ஒழுக்க விதிகளும் மாணவர்களைத் தவறு செய்யத் தூண்டிவிடும் ஊக்கிகள் என்பதை நாம் மறுக்க முடியாது.

அடித்து உதைத்து அவர்களின் வாழ்வைச் சிதைப்பதற்குப் பதில், அன்புடன் அணைத்துப் பக்குவமாகப் பேசி, அவர்களின் வாழ்வை நாம் செழுமையாக்குவோம், மேன்மையாக்குவோம். நம் நாட்டின் வருங்காலத் தலைவர்களை வார்த்தெடுக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு.
வியர்வை வடிவில் வெளியேறும் ரத்தம்! - கிருஷ்ணகிரி அர்ச்சனாவுக்கு என்ன நேர்ந்தது?

ஜெ.நிவேதா

``ஐந்து நாள்கள் தொடர் கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளுக்குப் பிறகே, அவளுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என எங்களால் உறுதியாக தெரிவிக்க முடியும்" குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகநாதபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி அர்ச்சனாவுக்கு உடலிலிருந்து வியர்வை வடிவில் ரத்தம் வெளியேறும் பிரச்னை இருப்பதாகச் சொல்லப்பட்டது. உள்ளூர் மருத்துவர்களால் ரத்தம் வெளியேறுவதற்கான காரணத்தைக் கண்டறியமுடியாததால் சென்னை குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார் அர்ச்சனா.



அர்ச்சனாவின் தற்போதைய நிலை குறித்து, அவரின் தந்தை நாகராஜிடம் பேசினோம். ``ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒருதடவை அர்ச்சனாவுக்கு வியர்வை வெளியேறுறமாதிரி காது, கண், மூக்கு பகுதிகளைச் சுற்றி ரத்தம் வெளிவந்துச்சு. சில தனியார் மருத்துவமனையில காண்பிச்சோம். ஆனா, என்ன பிரச்னைன்னு கண்டுபிடிக்க முடியலை. எங்க மாவட்ட ஆட்சியர் பரிந்துரைப்படி, சென்னை குழந்தைகள் நல மருத்துவமனையில அர்ச்சனாவை புதன்கிழமை அட்மிட் பண்ணோம். அன்னைக்கு எந்தப் பிரச்னையும் இல்லாம நல்லாதான் போச்சு. அடுத்தநாள் வியாழக்கிழமை இரவுல மட்டும், பதினேழு முறை கண், காது, மூக்கு, கைன்னு உடம்போட எல்லா பக்கமுமிருந்து ரத்தம் வந்துகிட்டே இருந்துச்சு. வெள்ளிக்கிழமை காலையிலும் சிலதடவை ரத்தம் வந்துச்சு.

`இப்படி ரத்தம் வெளிவரதுனால, பாப்பாவோட உடம்புல எந்தப் பாதிப்பும் ஏற்படலை, அதனால பயப்படாதீங்க'ன்னு டாக்டர்லாம் சொல்லியிருக்காங்க. ஒருகட்டத்துல, 'ரத்தம் வந்தா நீங்களே துடைச்சுவிட்டுக்கோங்க'னு சொல்லிட்டு போய்ட்டாங்க. அவளும், ரொம்ப நார்மலா இருக்கா. நல்லா விளையாடுறா, சாப்பிடறா, தூங்குறா... இன்னைக்கு (சனிக்கிழமை) காலையிலருந்து ரத்தப் பரிசோதனை, ஸ்கேன், மூளைக்கான பரிசோதனைகள்னு சொல்லி நிறைய பரிசோதனைகள் செஞ்சாங்க. குழந்தைக்கு மட்டுமில்லாம, எனக்கு, என் மனைவிக்கு, எங்களோட மற்ற இரண்டு மகள்களுக்கும் பரிசோதனைகள் செஞ்சாங்க. எல்லாமே நார்மல்னு சொல்லிட்டாங்க. இப்பதான், ஓரளவுக்கு திருப்தியா இருக்கு. திங்கள்கிழமையும் ஏதோவொரு பரிசோதனை இருக்காம். எல்லாம் முடிஞ்சபிறகு, ரிப்போர்ட்டை பார்த்துட்டு, `பாப்பாக்கு வந்திருக்கிறது என்ன நோய்'னு உறுதியா சொல்லறதா சொல்லியிருக்காங்க. ஒவ்வொரு முறை அவ உடம்புல இருந்து ரத்தம் வரும்போதும், எங்களுக்கு உயிரே போய்டுது. ஒரே ஒரு ஆறுதல் அவளுக்கு வலி, சோர்வு, ரத்த எண்ணிக்கை குறைவுன்னு எந்தப் பிரச்னையும் இல்லை. திங்கள்கிழமைக்காக காத்திருக்கோம்" என்கிறார் ஏக்கத்துடன்.

   அர்ச்சனாவின் நிலை குறித்து குழந்தைகள் நல மருத்துவமனையின் இயக்குநர் அரசர் சீராலரிடம் பேசினோம். ``அர்ச்சனா இப்போது கண்காணிப்பில் (Observation) இருக்கிறாள். ஐந்து நாள்கள் தொடர் கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளுக்குப் பிறகே, அவளுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து எங்களால் உறுதியாக தெரிவிக்க முடியும். சிலருக்கு வியர்வை வெவ்வேறு நிறத்தில் வெளிவரும். க்ரோம்ஹிட்ரோஸிஸ் (Chromhidrosis) என்ற பிரச்னையாக இது இருக்குமோ என்றும் பரிசோதிக்கிறோம். 'த்ரோபாஸ்டினியா' (Thrombasthenia) என்ற பாதிப்பாக இது இருக்கலாம் என கிருஷ்ணகிரியில் சிகிச்சை செய்த சிலர் தெரிவித்துள்ளார்கள். எனவே, அதற்கான பரிசோதனைகளையும் செய்ய இருக்கிறோம். அனைத்துப் பரிசோதனைகளும் முடிந்த பிறகு, அடுத்த வார தொடக்கத்தில் என்ன பாதிப்பு என்று உறுதிசெய்யப்படும்" என்றார்.



நம் முதல் நண்பன்... இன்னும் நம்முடன் நட்போடு இருக்கிறாரா?!

சக்தி தமிழ்ச்செல்வன்

இப்போதும் நமக்கு மனதில் ஏதாவது குழப்பங்கள் வரும் போது, நாம் முதலில் அழைப்பது நமக்கு நெருக்கமான நண்பருக்கு தானே.



தனிமை நிரம்பிய
ஆண்களின்
பிற்பகுதி வாழ்க்கையில்
நண்பர்கள் தருகிற
வெளிச்சத்தை
வேறு யாராலும் தர முடிவதில்லை!

- வண்ணதாசன்.

உங்கள் வாழ்வின் சிறுபிராயத்தில் அறிமுகமான உங்களின் முதல் நண்பனை/தோழியை உங்களுக்கு நினைவிருக்கிறதா? எந்தக் கனவுகளும், எதிர்பார்ப்புகளும், வாழ்வு குறித்த பயமுமற்ற அந்தச் சிறுவயதில் உங்களின் எல்லா முழுமுதற் சேட்டைகளிலும் உடனிருந்த அந்த நண்பன், இப்போது உங்களுடன் தொடர்பில் இருக்கிறாரா? சிலருக்கு தொடர்பில் இருக்கலாம். பலருக்கும் அந்த நண்பனின் பெயர் சட்டென நினைவில் வராமலிருக்கலாம்.




சமூக வலைதளங்களின் சாத்தியங்கள் அதிகமாகிவிட்ட இந்தக் காலகட்டத்திலும், அவரை உங்களால் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கலாம். அந்த நண்பரைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாமல்கூடபோயிருக்கலாம். காலத்தின் பயணத்தில் பின்னோக்கி விரையும் மரங்களைப்போல பல உறவுகள் கணநேரத்தில் மறைந்துவிடும் துர்ப்பாக்கியமான காலமிது.

பால்யத்தில் தொடங்கிய உறவுகளின் கண்ணி, காலத்தால் அறுபடாமல் பத்திரப்படுத்திவைத்திருக்கும் வரம்பெற்ற பாக்கியவான்கள் வெகுசிலரே. சக்கரம் கட்டிக்கொண்டு காலம் விரைகையில் யதேர்சையாக `ஹேய்... நீ அவன் (அவள்)தானே?!' எனச் சிலாகித்து சில நிமிடம் உரையாடிப் பிரிந்தவுடன், அன்றைய இரவின் சாளரங்கள் முழுக்க தொலைந்த நினைவுகளின் பனிக்காற்று நிறைந்து கண்கலங்கும்தானே. மகிழ்ச்சியும் அழுகையும் ஒருசேர ஆக்கிரமிக்கும் வாழ்வின் உன்னதமான தருணங்களில் ஒன்றல்லவா அது. வாழ்வில் சரிபாதிக்கும்மேலாகக் கடந்துவிட்ட நபர் ஒருவர், தன்னுடைய 5 வயதிலிருந்து 10 வயது வரை நண்பராக இருந்து பிரிந்த ஒருவரை 60 வருடம் கழித்துச் சந்தித்திருக்கிறார்.



சென்னையின் முதியோர் இல்லம் ஒன்றில் நடந்த சம்பவம் அது. பெற்றோர்களாகிவிட்ட தங்கள் பிள்ளைகளால் அனுப்பப்படும் பணத்தில் தங்களின் எஞ்சிய காலத்தை அசைபோடும் தாய்-தந்தையர்களால் அந்த இல்லம் நிறைந்திருக்கிறது. தனிமையும் கடந்து வந்த வாழ்வு பற்றிய நினைவுகளும்தான் முதியோர் இல்லவாசிகளின் சொத்து. ஏதாவதொரு பத்திரிகையை அசைபோட்டபடி தொடங்குகிறது அவர்களது நாள். பத்திரிகை படிக்கும் பழக்கமில்லாதவர்கள் புதிதாக அந்தப் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்கிறார்கள் அல்லது பத்திரிகைகளில் தென்படும் படங்களைப் பார்த்தபடி பக்கங்களைக் கடக்கிறார்கள். அவர்களின் மூன்று வேளை உணவுகூட ஏதோ மாத்திரை விழுங்குவதற்கான முன்னேற்பாடாக மட்டுமே மாறிப்போனது. உடன் இருப்பவர்களிடம் தங்களின் சொந்தக் கதையை மாறி மாறிப் பகிர்ந்துகொள்கின்றனர். அதன்பொருட்டு ஒருவரின் கதை மற்றவருக்கும் மனப்பாடமாகிவிடுகிறது. பக்கத்து அப்பார்ட்மென்டில் எங்கேயாவது குழந்தைகள் சிரிக்கும் சத்தம் கேட்டால், விமானத்தைப் பார்க்கும் தென்கோடிக் கிராமத்து சிறுவன்போல பரவசமாகிறார்கள். அப்படி தனது வாழ்நாளைக் கழித்து வந்தவர், புதிதாக வந்த ஒரு முதியவரிடம் தன் கதையைக் கூறியிருக்கிறார். அவருடன் ஏற்பட்ட ஏதோ இனம்புரியாத ஓர் இணக்கம் அவரிடம் தொடர்ந்து கதைக்கவைத்திருக்கிறது.



இருவரும் தங்கள் கதைகளைப் பேசியதில் இருவரின் உரையாடலிலும் ஒரே கிராமத்தின் புழுதிவாசம் நிறைந்திருந்ததை உணர்ந்தனர். சிறுவயதில் உற்ற நண்பர்களாக ஊருணிகளில் மீன் பிடித்துத் திரிந்த சித்திரம் அவர்கள் கண்களில் கண்ணீராய்க் கசிந்தன. மீசை முளைக்காத வயதில் கடைசியாகச் சந்தித்த நண்பனின் நரையைப் பார்த்துக் கிண்டலும் கேலியுமாக முகச்சுருக்கங்களுக்கு மத்தியில் புன்னகை அமர்ந்துகொண்டது. அன்பு, பாசம் என எதுமின்றி மாதாமாதம் இ.எம்.ஐ கட்டுவதைப்போல் வந்து சந்தித்துவிட்டு `பிளாஸ்டிக்' புன்னகையோடு கடந்துபோகும் உறவுகள் சூழ வாழும் மனிதருக்கு அந்த நண்பனின் உள்ளங்கை கடத்திய வெப்பம் அவரின் வாழ்நாள் நிம்மதியை மீட்டுக்கொடுத்தது.



இருவரும் தங்கள் தினங்களை நிறைவாகக் கடப்பார்கள் என்ற ஆசுவாசம் அவர்களின் முகத்தில் தெரிந்தது. அந்த முதியோர் இல்லத்தில் பலரின் முகத்திலும் ஏதோ ஒரு நிறைவின்மை தென்பட்டது. ஒரு நாளில் நாம் சந்திக்கும் பலரின் முகங்களின் அதே போன்றதொரு நிம்மதியற்றிருப்பதைப் பார்க்க முடியும். மனதின் சுவர்களில் படிந்திருக்கும் தீரா சோகங்களின் வெளிப்பாடுதான் முகத்தில் நிம்மதியின்மையைக் கொடுக்கும். மனதுக்கு நெருக்கமான யாரிடமாவது பகிராத வரை அவை மனதை அழுத்தி வருத்திக்கொண்டேதான் இருக்கும். முதியவர்களுக்கு இந்த நிலை இன்னும் கொடுமையானதாக அமையும்.

இப்போதும் நமக்கு மனதில் ஏதாவது குழப்பங்கள் வரும்போது, நாம் முதலில் அழைப்பது நமக்கு நெருக்கமான நண்பரைத்தானே. அதுபோலவே சிறுவயதில் நம் நண்பனிடமே பகிர்ந்திருப்போம். அந்த நண்பனிடம் இப்போது நாம் பகிர சொற்கள் உண்டுதானே.

சிங்கப்பூர் - திருச்சி அன்றாட நேரடி விமானச் சேவை - வரும் ஞாயிறன்று தொடங்குகிறது IndiGo 


12/9/2018 12:03 Update: 12/9/2018 14:04


சிங்கப்பூர், திருச்சி ஆகிய நகர்களுக்கு இடையே நேரடி விமானச் சேவையை IndiGo விமான நிறுவனம் இம்மாதம் 16ஆம் தேதியிலிருந்து தொடங்கவுள்ளது.

அன்றாடம் சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு அது சேவை வழங்கும். சிங்கப்பூரிலிருந்து பிற்பகல் 2 மணி அளவில் திருச்சிக்கு Indigo விமானம் புறப்படும்.

இந்திய நேரப்படி பிற்பகல் 3.55 மணி அளவில் விமானம் அங்கு சென்றடையும். இந்திய நேரப்படி மாலை 6.40 மணி அளவில் திருச்சியிலிருந்து புறப்படும் விமானம், சிங்கப்பூருக்குப் பின்னிரவு 1.45 மணி அளவில் வந்து சேரும்.

மேல் விவரங்களுக்கு Indigo இணையத்தளத்தை நாடலாம்.



சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானியின் இரத்தத்தில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக மதுபானம் - விமானச் சேவை ரத்து 


16/9/2018 8:56

விமானியின் இரத்தத்தில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக மதுபானம் இருந்ததால் ஆஸ்திரேலியாவிலிருந்து நியூசிலந்திற்குச் செல்லவிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானச்சேவை ரத்து செய்யப்பட்டது.

உள்ளூர் நேரப்படி நேற்று (செப்டம்பர் 16) காலை 7 மணிக்கு SQ247 விமானச்சேவை மெல்பர்னிலிர்ந்து (Melbourne) கிளம்பவிருந்தது.

பிற்பகல் 12.20 மணிக்கு அது வெலிங்டனைச் (Wellington) சென்றடையவிருந்தது.

ஆஸ்திரேலிய சிவில் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு ஆணையம், விமான ஊழியர்களிடம் திடீர் இரத்தப் பரிசோதனை நடத்துவது வழக்கம். அந்தவகையில், SQ247 விமானச்சேவையின் ஊழியர்கள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அப்போது விமானியின் இரத்தத்தில் மதுபான அளவு அனுமதிக்கப்பட்டதைவிட கூடுதலாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த விமானத்தின் இருவழிச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.

விசாரணைகள் தொடரும் வேளையில் அந்த விமானி தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பயணிகள் தங்கள் அதிருப்தியைச் சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். விமானச்சேவை ரத்து செய்யப்பட்டது குறித்துத் தாமதமாகத் தகவல் அளிக்கப்பட்டதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பாதிக்கப்பட்ட பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.



NEWS TODAY 01.07.2026