Sunday, September 16, 2018


நம் முதல் நண்பன்... இன்னும் நம்முடன் நட்போடு இருக்கிறாரா?!

சக்தி தமிழ்ச்செல்வன்

இப்போதும் நமக்கு மனதில் ஏதாவது குழப்பங்கள் வரும் போது, நாம் முதலில் அழைப்பது நமக்கு நெருக்கமான நண்பருக்கு தானே.



தனிமை நிரம்பிய
ஆண்களின்
பிற்பகுதி வாழ்க்கையில்
நண்பர்கள் தருகிற
வெளிச்சத்தை
வேறு யாராலும் தர முடிவதில்லை!

- வண்ணதாசன்.

உங்கள் வாழ்வின் சிறுபிராயத்தில் அறிமுகமான உங்களின் முதல் நண்பனை/தோழியை உங்களுக்கு நினைவிருக்கிறதா? எந்தக் கனவுகளும், எதிர்பார்ப்புகளும், வாழ்வு குறித்த பயமுமற்ற அந்தச் சிறுவயதில் உங்களின் எல்லா முழுமுதற் சேட்டைகளிலும் உடனிருந்த அந்த நண்பன், இப்போது உங்களுடன் தொடர்பில் இருக்கிறாரா? சிலருக்கு தொடர்பில் இருக்கலாம். பலருக்கும் அந்த நண்பனின் பெயர் சட்டென நினைவில் வராமலிருக்கலாம்.




சமூக வலைதளங்களின் சாத்தியங்கள் அதிகமாகிவிட்ட இந்தக் காலகட்டத்திலும், அவரை உங்களால் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கலாம். அந்த நண்பரைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாமல்கூடபோயிருக்கலாம். காலத்தின் பயணத்தில் பின்னோக்கி விரையும் மரங்களைப்போல பல உறவுகள் கணநேரத்தில் மறைந்துவிடும் துர்ப்பாக்கியமான காலமிது.

பால்யத்தில் தொடங்கிய உறவுகளின் கண்ணி, காலத்தால் அறுபடாமல் பத்திரப்படுத்திவைத்திருக்கும் வரம்பெற்ற பாக்கியவான்கள் வெகுசிலரே. சக்கரம் கட்டிக்கொண்டு காலம் விரைகையில் யதேர்சையாக `ஹேய்... நீ அவன் (அவள்)தானே?!' எனச் சிலாகித்து சில நிமிடம் உரையாடிப் பிரிந்தவுடன், அன்றைய இரவின் சாளரங்கள் முழுக்க தொலைந்த நினைவுகளின் பனிக்காற்று நிறைந்து கண்கலங்கும்தானே. மகிழ்ச்சியும் அழுகையும் ஒருசேர ஆக்கிரமிக்கும் வாழ்வின் உன்னதமான தருணங்களில் ஒன்றல்லவா அது. வாழ்வில் சரிபாதிக்கும்மேலாகக் கடந்துவிட்ட நபர் ஒருவர், தன்னுடைய 5 வயதிலிருந்து 10 வயது வரை நண்பராக இருந்து பிரிந்த ஒருவரை 60 வருடம் கழித்துச் சந்தித்திருக்கிறார்.



சென்னையின் முதியோர் இல்லம் ஒன்றில் நடந்த சம்பவம் அது. பெற்றோர்களாகிவிட்ட தங்கள் பிள்ளைகளால் அனுப்பப்படும் பணத்தில் தங்களின் எஞ்சிய காலத்தை அசைபோடும் தாய்-தந்தையர்களால் அந்த இல்லம் நிறைந்திருக்கிறது. தனிமையும் கடந்து வந்த வாழ்வு பற்றிய நினைவுகளும்தான் முதியோர் இல்லவாசிகளின் சொத்து. ஏதாவதொரு பத்திரிகையை அசைபோட்டபடி தொடங்குகிறது அவர்களது நாள். பத்திரிகை படிக்கும் பழக்கமில்லாதவர்கள் புதிதாக அந்தப் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்கிறார்கள் அல்லது பத்திரிகைகளில் தென்படும் படங்களைப் பார்த்தபடி பக்கங்களைக் கடக்கிறார்கள். அவர்களின் மூன்று வேளை உணவுகூட ஏதோ மாத்திரை விழுங்குவதற்கான முன்னேற்பாடாக மட்டுமே மாறிப்போனது. உடன் இருப்பவர்களிடம் தங்களின் சொந்தக் கதையை மாறி மாறிப் பகிர்ந்துகொள்கின்றனர். அதன்பொருட்டு ஒருவரின் கதை மற்றவருக்கும் மனப்பாடமாகிவிடுகிறது. பக்கத்து அப்பார்ட்மென்டில் எங்கேயாவது குழந்தைகள் சிரிக்கும் சத்தம் கேட்டால், விமானத்தைப் பார்க்கும் தென்கோடிக் கிராமத்து சிறுவன்போல பரவசமாகிறார்கள். அப்படி தனது வாழ்நாளைக் கழித்து வந்தவர், புதிதாக வந்த ஒரு முதியவரிடம் தன் கதையைக் கூறியிருக்கிறார். அவருடன் ஏற்பட்ட ஏதோ இனம்புரியாத ஓர் இணக்கம் அவரிடம் தொடர்ந்து கதைக்கவைத்திருக்கிறது.



இருவரும் தங்கள் கதைகளைப் பேசியதில் இருவரின் உரையாடலிலும் ஒரே கிராமத்தின் புழுதிவாசம் நிறைந்திருந்ததை உணர்ந்தனர். சிறுவயதில் உற்ற நண்பர்களாக ஊருணிகளில் மீன் பிடித்துத் திரிந்த சித்திரம் அவர்கள் கண்களில் கண்ணீராய்க் கசிந்தன. மீசை முளைக்காத வயதில் கடைசியாகச் சந்தித்த நண்பனின் நரையைப் பார்த்துக் கிண்டலும் கேலியுமாக முகச்சுருக்கங்களுக்கு மத்தியில் புன்னகை அமர்ந்துகொண்டது. அன்பு, பாசம் என எதுமின்றி மாதாமாதம் இ.எம்.ஐ கட்டுவதைப்போல் வந்து சந்தித்துவிட்டு `பிளாஸ்டிக்' புன்னகையோடு கடந்துபோகும் உறவுகள் சூழ வாழும் மனிதருக்கு அந்த நண்பனின் உள்ளங்கை கடத்திய வெப்பம் அவரின் வாழ்நாள் நிம்மதியை மீட்டுக்கொடுத்தது.



இருவரும் தங்கள் தினங்களை நிறைவாகக் கடப்பார்கள் என்ற ஆசுவாசம் அவர்களின் முகத்தில் தெரிந்தது. அந்த முதியோர் இல்லத்தில் பலரின் முகத்திலும் ஏதோ ஒரு நிறைவின்மை தென்பட்டது. ஒரு நாளில் நாம் சந்திக்கும் பலரின் முகங்களின் அதே போன்றதொரு நிம்மதியற்றிருப்பதைப் பார்க்க முடியும். மனதின் சுவர்களில் படிந்திருக்கும் தீரா சோகங்களின் வெளிப்பாடுதான் முகத்தில் நிம்மதியின்மையைக் கொடுக்கும். மனதுக்கு நெருக்கமான யாரிடமாவது பகிராத வரை அவை மனதை அழுத்தி வருத்திக்கொண்டேதான் இருக்கும். முதியவர்களுக்கு இந்த நிலை இன்னும் கொடுமையானதாக அமையும்.

இப்போதும் நமக்கு மனதில் ஏதாவது குழப்பங்கள் வரும்போது, நாம் முதலில் அழைப்பது நமக்கு நெருக்கமான நண்பரைத்தானே. அதுபோலவே சிறுவயதில் நம் நண்பனிடமே பகிர்ந்திருப்போம். அந்த நண்பனிடம் இப்போது நாம் பகிர சொற்கள் உண்டுதானே.

No comments:

Post a Comment

NEWS TODAY 14,11,2024