Sunday, September 16, 2018

வியர்வை வடிவில் வெளியேறும் ரத்தம்! - கிருஷ்ணகிரி அர்ச்சனாவுக்கு என்ன நேர்ந்தது?

ஜெ.நிவேதா

``ஐந்து நாள்கள் தொடர் கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளுக்குப் பிறகே, அவளுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என எங்களால் உறுதியாக தெரிவிக்க முடியும்" குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகநாதபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி அர்ச்சனாவுக்கு உடலிலிருந்து வியர்வை வடிவில் ரத்தம் வெளியேறும் பிரச்னை இருப்பதாகச் சொல்லப்பட்டது. உள்ளூர் மருத்துவர்களால் ரத்தம் வெளியேறுவதற்கான காரணத்தைக் கண்டறியமுடியாததால் சென்னை குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார் அர்ச்சனா.



அர்ச்சனாவின் தற்போதைய நிலை குறித்து, அவரின் தந்தை நாகராஜிடம் பேசினோம். ``ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒருதடவை அர்ச்சனாவுக்கு வியர்வை வெளியேறுறமாதிரி காது, கண், மூக்கு பகுதிகளைச் சுற்றி ரத்தம் வெளிவந்துச்சு. சில தனியார் மருத்துவமனையில காண்பிச்சோம். ஆனா, என்ன பிரச்னைன்னு கண்டுபிடிக்க முடியலை. எங்க மாவட்ட ஆட்சியர் பரிந்துரைப்படி, சென்னை குழந்தைகள் நல மருத்துவமனையில அர்ச்சனாவை புதன்கிழமை அட்மிட் பண்ணோம். அன்னைக்கு எந்தப் பிரச்னையும் இல்லாம நல்லாதான் போச்சு. அடுத்தநாள் வியாழக்கிழமை இரவுல மட்டும், பதினேழு முறை கண், காது, மூக்கு, கைன்னு உடம்போட எல்லா பக்கமுமிருந்து ரத்தம் வந்துகிட்டே இருந்துச்சு. வெள்ளிக்கிழமை காலையிலும் சிலதடவை ரத்தம் வந்துச்சு.

`இப்படி ரத்தம் வெளிவரதுனால, பாப்பாவோட உடம்புல எந்தப் பாதிப்பும் ஏற்படலை, அதனால பயப்படாதீங்க'ன்னு டாக்டர்லாம் சொல்லியிருக்காங்க. ஒருகட்டத்துல, 'ரத்தம் வந்தா நீங்களே துடைச்சுவிட்டுக்கோங்க'னு சொல்லிட்டு போய்ட்டாங்க. அவளும், ரொம்ப நார்மலா இருக்கா. நல்லா விளையாடுறா, சாப்பிடறா, தூங்குறா... இன்னைக்கு (சனிக்கிழமை) காலையிலருந்து ரத்தப் பரிசோதனை, ஸ்கேன், மூளைக்கான பரிசோதனைகள்னு சொல்லி நிறைய பரிசோதனைகள் செஞ்சாங்க. குழந்தைக்கு மட்டுமில்லாம, எனக்கு, என் மனைவிக்கு, எங்களோட மற்ற இரண்டு மகள்களுக்கும் பரிசோதனைகள் செஞ்சாங்க. எல்லாமே நார்மல்னு சொல்லிட்டாங்க. இப்பதான், ஓரளவுக்கு திருப்தியா இருக்கு. திங்கள்கிழமையும் ஏதோவொரு பரிசோதனை இருக்காம். எல்லாம் முடிஞ்சபிறகு, ரிப்போர்ட்டை பார்த்துட்டு, `பாப்பாக்கு வந்திருக்கிறது என்ன நோய்'னு உறுதியா சொல்லறதா சொல்லியிருக்காங்க. ஒவ்வொரு முறை அவ உடம்புல இருந்து ரத்தம் வரும்போதும், எங்களுக்கு உயிரே போய்டுது. ஒரே ஒரு ஆறுதல் அவளுக்கு வலி, சோர்வு, ரத்த எண்ணிக்கை குறைவுன்னு எந்தப் பிரச்னையும் இல்லை. திங்கள்கிழமைக்காக காத்திருக்கோம்" என்கிறார் ஏக்கத்துடன்.

   அர்ச்சனாவின் நிலை குறித்து குழந்தைகள் நல மருத்துவமனையின் இயக்குநர் அரசர் சீராலரிடம் பேசினோம். ``அர்ச்சனா இப்போது கண்காணிப்பில் (Observation) இருக்கிறாள். ஐந்து நாள்கள் தொடர் கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளுக்குப் பிறகே, அவளுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து எங்களால் உறுதியாக தெரிவிக்க முடியும். சிலருக்கு வியர்வை வெவ்வேறு நிறத்தில் வெளிவரும். க்ரோம்ஹிட்ரோஸிஸ் (Chromhidrosis) என்ற பிரச்னையாக இது இருக்குமோ என்றும் பரிசோதிக்கிறோம். 'த்ரோபாஸ்டினியா' (Thrombasthenia) என்ற பாதிப்பாக இது இருக்கலாம் என கிருஷ்ணகிரியில் சிகிச்சை செய்த சிலர் தெரிவித்துள்ளார்கள். எனவே, அதற்கான பரிசோதனைகளையும் செய்ய இருக்கிறோம். அனைத்துப் பரிசோதனைகளும் முடிந்த பிறகு, அடுத்த வார தொடக்கத்தில் என்ன பாதிப்பு என்று உறுதிசெய்யப்படும்" என்றார்.


No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024