Sunday, September 16, 2018


சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானியின் இரத்தத்தில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக மதுபானம் - விமானச் சேவை ரத்து 


16/9/2018 8:56

விமானியின் இரத்தத்தில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக மதுபானம் இருந்ததால் ஆஸ்திரேலியாவிலிருந்து நியூசிலந்திற்குச் செல்லவிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானச்சேவை ரத்து செய்யப்பட்டது.

உள்ளூர் நேரப்படி நேற்று (செப்டம்பர் 16) காலை 7 மணிக்கு SQ247 விமானச்சேவை மெல்பர்னிலிர்ந்து (Melbourne) கிளம்பவிருந்தது.

பிற்பகல் 12.20 மணிக்கு அது வெலிங்டனைச் (Wellington) சென்றடையவிருந்தது.

ஆஸ்திரேலிய சிவில் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு ஆணையம், விமான ஊழியர்களிடம் திடீர் இரத்தப் பரிசோதனை நடத்துவது வழக்கம். அந்தவகையில், SQ247 விமானச்சேவையின் ஊழியர்கள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அப்போது விமானியின் இரத்தத்தில் மதுபான அளவு அனுமதிக்கப்பட்டதைவிட கூடுதலாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த விமானத்தின் இருவழிச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.

விசாரணைகள் தொடரும் வேளையில் அந்த விமானி தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பயணிகள் தங்கள் அதிருப்தியைச் சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். விமானச்சேவை ரத்து செய்யப்பட்டது குறித்துத் தாமதமாகத் தகவல் அளிக்கப்பட்டதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பாதிக்கப்பட்ட பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.



No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024