Sunday, September 16, 2018


மனசு போல வாழ்க்கை 23: லயிப்பதே மனதின் சிக்கலுக்கு சிகிச்சை!

Published : 25 Aug 2015 12:06 IST

டாக்டர். ஆர். கார்த்திகேயன்

 



மன வளம்தான் மண் வளத்தை தீர்மானிக்கிறது. இயற்கையை வணங்கும் மனம் இயற்கையோடு இசைந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும். இயற்கையைப் பயன்படுத்த நினைக்கும் மனம் இயற்கையை விலக்கி செயற்கையான வாழ்க்கையை நாடிச்செல்லும். காடுகள் அழிந்ததும் கட்டடங்கள் பெருகியதும் மனிதரின் மன மாற்றங்களினால்தானே!

மன விகாரம்

புற உலகில் நீங்கள் காணும் மாற்றங்கள் யாவும் அக உலகில் நிகழ்ந்த மாற்றங்களினால்தான். நீங்கள் பார்க்கும் அனைத்தும் நீங்கள் உருவாக்கியவை. அல்லது பிறர் உருவாக்கும்போது நீங்கள் சம்மதம் தெரிவித்தவை. நேரடியாகவோ மறைமுகமாகவோ உங்கள் பங்கு உள்ளதை உணருங்கள். அதனால் எதையும் குறை சொல்வதில் பயன் இல்லை.

“எல்லாம் மோசம்; எதுவும் சரியில்லை” என்று சொல்வதும் ஒரு மன விகாரம்தான். உலகில் அனைத்தும் உள்ளது. எதைப் பார்ப்பது, என்ன செய்வது என்பதெல்லாம் நம்மிடம்தானே உள்ளது?

மாற்றி யோசி

என் நண்பர் ஒருவர் இளையராஜாவின் தீவிர ரசிகர், என்னைப் போலவே. இளையராஜாவின் அதிகம் பிரபலமாகாத அற்புத பாடல்கள் நிறைய உள்ளன என்று ஒருநாள் பேசினோம். பின் ஒரு 20, 25 பாடல்களை பட்டியல் போட ஆரம்பித்தோம். ஒரு பத்து நிமிடத்தில் இளையராஜாவின் இசை சாம்ராஜ்யத்தில் முழுவதுமாக நனைந்தோம். எல்லாம் கற்பனையில் தான். எல்லா பாடல்களையும் கேட்ட திருப்தி.

அவர் ஒரு பிரச்சினை பற்றி விவாதிக்க வந்தவர் அவர் எழுந்து போகும்போதும் அந்தப் பிரச்சினை எள்ளளவும் குறைவில்லை. ஆனாலும் உற்சாகமாக கிளம்பிப்போனார் அவர். இது தான் மனதின் செயல்பாடு.

மிக மோசமான மன நிலையிலும் எண்ணத்தை திசை திருப்பி ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடியும். உற்சாகப்படுத்திக்கொள்ள முடியும். மாற்றி யோசிக்க முடியும். முயற்சிதான் முக்கியம். பிரச்சினை முடிந்த பின்தான் ஆறுதல் கிடைக்க வேண்டும் என்றால் இந்த உலகில் யார் நிம்மதியாக நடமாட முடியும்? அப்படியே ஒரு பிரச்சினை முடிந்தாலும் அடுத்தது வராமல் போய்விடுமா என்ன?

இசையும் கவிதையும் ஓவியமும் விளையாட்டும் மனிதனை எந்த நேரத்திலும் இளக வைக்க உதவுகின்றன. மனம் ஒன்றிச் செய்யும் எந்த செயலும் மனக்கவலையிலிருந்து விடுதலை அளிக்கக் கூடியவை. இதை இப்படிக் கூட புரிந்துகொள்ளலாம்: மனக் கவலையிலிருந்து விடுதலை பெற ஏதாவது ஒரு செயலை மனம் ஒன்றிச் செய்தாலே போதும்! இதைத் தான் ‘mindfulness’ என்று புத்த மதம் சொல்கிறது. மனம் லயித்துச் செய்யும் காரியம் மனதின் சிக்கலுக்கு சிகிச்சை!

உழைப்பின் பயன்

ஒரு பிரச்சினை மனதை எதிர்மறையாகக் குவிக்கிறது. அதைச் சிதறடிக்க ஒரு சிறு நேர்மறை விஷயம் போதும். ஒரு குழந்தையின் சிரிப்போ, நகைச்சுவை துணுக்கோ, அந்நியரின் அர்த்தமற்ற செய்கையோ கூட போதும். அது பிரச்சினையிலிருந்து உங்கள் மனதை நொடிப்பொழுதில் வெளியே கொண்டு வந்து விடும்.

ஒரு கணவனும் மனைவியும் பெரிதாக சண்டை போட்டுக் கொண்டிருக்க, அழைப்பு மணி கேட்கிறது. கணவன் முகத்தை சரி செய்து கொண்டு போய் பார்க்கிறான். அடுத்த வீட்டு தம்பதி பொழுது போகாமல், அரட்டை அடிக்க இங்கு உரிமையாக கதவைத் தட்டுகிறார்கள். முகம் கழுவி வந்த மனைவி பிரமாதமாக உபசரிக்கிறாள். கணவனும் எதுவும் நடக்காதது போல மிக உற்சாகமாக நடந்து கொள்கிறான். சில நிமிடங்களில் சமூக உறவுகளுக்காக சொந்த சோகம் கிடப்பில் போடப்படுகிறது. இதுதான் நிஜம்.

இதில் இன்னொரு உண்மையும் பொதிந்துள்ளது. சமூக உறவுகள் நிறைய உள்ளவர்களுக்கு சொந்த சோகங்களை கையாள்வது எளிமையாகிறது. அதே போல உடல் உழைப்பு அதிகம் இருந்தாலும் மன உளைச்சல் அதிகம் தங்காது.

சந்தோஷமாக நடி

ஒரு இந்திப் படத்தில் வந்த உரையாடல் இது.

“நான் என் கணவனை பிரிய முடிவு செய்து பெட்டியைக் கட்டி வைத்து விட்டு அவனிடம் சொல்லிவிட்டுப் போகத் தயாராக இருந்தேன்”

“அப்புறம் என்னாயிற்று?”

“அவன் வருவதற்குள் தூங்கிப்போய்விட்டேன். மறு நாள் எழுகையில் மனம் மாறிவிட்டது!”

இப்படித்தான் பல தீவிர முடிவுகள் கூட அற்பக் காரணங்களால் கலைக்க கூடியவை. கோபத்தில், பயத்தில், அவசரத்தில் நாம் எடுக்க நினைக்கும் முடிவுகளைச் சற்று தள்ளிப் போட்டால் பக்குவமான முடிவுகள் எடுக்க முடியும்.

சரியான மன நிலையில் இல்லாத போது முடிவுகள் எடுக்காமல் இருப்பது புத்திசாலித்தனம். அந்த மன நிலையிலிருந்து தற்காலிகமாக வெளியே வர எடுக்கும் முயற்சிகள் கூட நல்ல பலன் தரும்.

சந்தோஷமாக இருக்க வழி சந்தோஷமாக இருப்பது போல நடிப்பது கூடத்தான். Fake it till you Make it!

பெரும் பிரச்சினையா? அதே எண்ணமாக இருக்கிறதா? ஏதாவது செய்ய முடியுமா என்று பாருங்கள். முடிந்தால் செய்யுங்கள். செய்வதற்கு எதுவுமில்லை; என்ன நடக்கப்போகிறது என்று பார்ப்பது மட்டும்தான் வேலை என்றால் முதலில் மனதை திசை திருப்புங்கள்.

மனமும் நிலா போலதான்

பெரிதாக எதுவும் செய்ய முடியாவிட்டாலும் பிடித்ததைச் செய்யுங்கள். பழைய அலமாரியை சுத்தம் செய்யுங்கள். முடி வெட்டிக்கொள்ளுங்கள். நிறைய நேரம் நிதானமாக குளியுங்கள். வண்டி ஓட்டும் போது பாட்டு பாடிக்கொண்டே செல்லுங்கள். காமெடி சீன் பாருங்கள். நீண்ட நாட்கள் பேசாத நண்பரிடம் பேசுங்கள். யூ டியூப் அல்லது டெட் வீடியோ பாருங்கள். தனி வாகனத்தில் செல்வோர் பொது வாகனத்தில் சென்று வாருங்கள். சுடோகு போடுங்கள். இது வரை செய்யாத ஏதாவது செய்யப்பாருங்கள். மனம் மாறும்.

மதி என்றால் நிலா என்றும் பொருள். மனம் என்றும் பொருள். மனமும் நிலா போலத்தான். வளரும். தேயும். முழுதாக இருக்கும். ஒன்றுமில்லாமல் போகும். ஒரு நாள் இருப்பது போல மறு நாள் இருப்பதில்லை. இந்த நிலையில்லாத தன்மையை புரிந்து கொண்டால் விதியை மதியால் வெல்வது சாத்தியமே!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com


No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024