Tuesday, September 25, 2018


டிக். டிக்.. டிக்...

Published : 18 Sep 2018 11:46 IST

சதீஷ் கிருஷ்ணமூர்த்தி




‘டைமே இல்ல’ என்று புலம்புவரா நீங்கள்? ‘24 மணி நேரம் பத்தல’ என்று புகார் கூறுபவரா? ’ஓயாம ஓடியும் முடிக்க முடியல’ என்று அலுத்துக்கொள்பவரா? டைம் இருந்தால் வாங்களேன். ‘நேரம்’ பற்றிக் கொஞ்ச நேரம் பேசுவோம்!

24 மணி நேரம் போதாதா?

ஏதோ மற்றவர்களுக்கு 24 மணி நேரத்துக்கு மேல் இருப்பதுபோலவும் தங்களுக்குக் குறைவாக இருப்பது போலவும் பலர் நினைக்கிறார்கள். அவர்களுக்கு இருக்கும் அதே 24 மணி நேரத்தில் நினைத்துப் பார்க்க முடியாத சாதனை புரிந்தவர்களின் வாழ்வே அவர்களுக்கான பதில். நேரம் நம்மைக் கட்டுப்படுத்தக் கூடாது.

அது நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இது புரியாமல், ‘சொல்வது ஈசி, செய்து பார்த்தால்தானே கஷ்டம் தெரியும்’ என்று சொல்கிறோம். நாம் நேரத்துக்கு அடிமைபட்டுக் கிடக்கிறோம். செய்யவேண்டியதைச் செய்ய நேரமில்லை என்று புலம்புகிறோம். நேரத்தை நமக்குச் சரியாகப் பயன்படுத்தத் தெரியவில்லை. எது முக்கியம் என்ற தெளிவின்மையே நேரமின்மைக்கான அடிப்படை காரணம் என்ற புரிதல் நமக்கு இருப்பதில்லை.

மொழியை மாற்றுங்கள்

நேரமின்மையைக் களைய முதலில் உங்கள் மொழியை மாற்றுங்கள் என்கிறார் லாரா வேண்டர்காம். உடம்பை செக்கப் செய்துகொள்ள நேரமில்லை என்று நீங்கள் நினைத்தால், ‘க்ளினிக் போக நேரமில்லை’ என்று சொல்வதற்கு பதில் ’என் ஆரோக்கியம் இப்போது முக்கியமில்லை’ என்று சொல்லிப் பாருங்கள்.

நினைப்பதற்கே அதிர்ச்சியாக இருக்கிறதல்லவா. அதுதான் விஷயம். மொழியை மாற்றும்போது நேரத்தின் முக்கியத்துவத்தைத் தானாகவே உணர்வீர்கள் என்கிறார் லாரா. இவர் எழுதிய புத்தகத்தின் தலைப்பு ‘You Have More Time Than You Think’.

பழக்கத்தை மாற்றுங்கள்

வாழ்க்கையிலும் பணியிலும் சிலவற்றைத் தினமும் நீங்கள் செய்தே ஆக வேண்டும். அதற்கு நேரத்தைச் செலவழித்தே தீர வேண்டும். உதாரணத்துக்கு, உங்கள் குழந்தையைப் பள்ளிக்குக் கொண்டு செல்லும் நேரம், ஆபீஸில் வாராந்திர மீட்டிங். அவற்றுக்கான நேரம் உங்கள் ஆதிக்கத்துக்கு உட்பட்டதல்ல.

அதை நீங்கள் மாற்றவும் முடியாது. ஆனால், உங்களால் மாற்ற முடிந்த விஷயங்களுக்கு நீங்கள் செலழிக்கும் நேரத்தை நீங்கள் மாற்ற முயற்சிக்கலாமே. உதாரணத்துக்குக் காலை வாக்கிங் செல்ல நேரமில்லை என்பதைக் காலை ஒரு மணி நேரம் முன்னதாக எழுவதன் மூலம் சாத்தியமாக்குவது.


மனநிலையை மாற்றுங்கள்

நேரம் பற்றி நினைப்பதையும் அதை அணுகும் விதத்தையும் மாற்றினால், நேரம் தானாக அதிகரிக்கும் என்கிறார் லாரா. 24 மணி நேரம் போதவில்லை என்று நமக்குத் தோன்றுகிறதா? 24 மணி நேரம் குறைவாகத் தோன்றுகிறதா? காலை எழுந்து அன்று என்ன செய்வது என்று திட்டமிடுவதை விடுத்து அந்த வாரம் என்ன செய்வது என்று திட்டமிட்டுப் பாருங்கள். அப்பொழுது 168 மணி நேரம் உங்களுக்குக் கிடைக்கும்.

சிறியதாய் தொடங்குங்கள்

தினம் உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லையா? வாரத்துக்கு ஒரு முறை உடற்பயிற்சி செய்யத் தொடங்குங்கள். சில வாரங்களுக்குப் பின் அதை இரண்டு முறையாகக் கூட்டும் வழியைத் தேடுங்கள். ருசி கண்ட பூனைபோல் உங்கள் மனம் அதற்கு எப்படியாவது நேரத்தைக் கண்டெடுக்கும். அதே போல் ஆபீஸில் மீட்டிங்குகளைத் திட்டமிட்டதற்கு பத்து பதினைந்து நிமிடங்கள் முன்னதாக முடிக்க முடியுமா என்று முயற்சித்துப் பாருங்கள்.

மாற்றி யோசியுங்கள்

ஆபீஸ் மீட்டிங்கில் உட்கார்ந்து தான் பேச வேண்டும் என்றில்லையே. முடிந்தால் நின்றுகொண்டு பேசுங்கள். உட்கார்ந்து காலாட்டிக்கொண்டு பேசும்போது தான் மீட்டிங் டைம் வளர்கிறது. மீட்டிங்குகளை நின்றுகொண்டு நடத்திப் பாருங்கள். அது படக்கென்று முடிவுற்று உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கும். நேரத்தை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே நம் வாழ்க்கை அமைகிறது. உங்களது நேரத்தை நீங்கள் மதித்தால் மட்டுமே மற்றவர்கள் உங்கள் நேரத்தை மதிப்பார்கள்.

கரும்பலகைக்குக் அப்பால்... 01 - தலையாட்ட கற்றுத் தருவதா கல்வி?

Published : 18 Sep 2018 11:47 IST

ரெ.சிவா
 



‘குணமா வாயில சொல்லணும். திட்டாம, அடிக்காம வாயில சொல்லணும்!’

கண்ணீருடன் திடமாகச் சொல்லும் குழந்தையின் பேச்சு சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது.

பெரியவர்கள் தன்னை எப்படி நடத்த வேண்டும் என்பதை எளிமையாக அந்தக் குழந்தை சொல்கிறது. சேட்டை செய்வது தப்பு என்பதையும் குழந்தை உணர்ந்திருக்கிறது. இங்கு சேட்டை என்று நாம் எதைச் சொல்கிறோம்?

சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடாக நடப்பது குழந்தைகளா, பெரியவர்களா?

மனத்தில் தோன்றுவதைத் தயங்காமல் வெளிப்படுத்தும் குழந்தைகள் ஏன் வாய்மூடிப் போகிறார்கள்?

எங்கே சிக்கல்?

கடும் சொற்களை அனைவரும் பேசிக்கொண்டு ‘இனிய உளவாக இன்னாத கூறல்’ என்று படிப்பதால் என்ன பயன்? 1,330 குறளையும் மனப்பாடம் செய்துவிட்டால் போதுமா! இரண்டாயிரம் ஆண்டுகளாகச் சொல்லிவந்த நீதிபோதனைகளால் என்ன பயன்?

பெண்குழந்தைகள் மீது பாலியல் அத்துமீறல் நிகழ்த்தப்படும்போதெல்லாம் அவர்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்கிறோம். நல்ல தொடுதல், தவறான தொடுதல் குறித்து எடுத்துச் சொல்கிறோம். ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனியான பள்ளிகள் அல்லது தனித்தனியான பாதைகள். சட்டங்களைக் கடுமையாக்குகிறோம். அது மட்டும் போதுமா? பாலினச் சமத்துவத்தை எப்படிச் சொல்லித்தருவது?

வாழ்வியல் திறன்கள், பாகுபாடுகள்

இல்லாத சமூகம், மனிதப் பண்புகள் போன்றவற்றை எவ்வாறு குழந்தைகளுக்குச் சொல்லித்தருவது?

எல்லோரும் நீதி சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ‘இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே’ என்று கட்டளைகள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. மணிக்கணக்காக அறிவுரை சொல்லிக்கொண்டே இருக்கிறோம். நீதியை, பண்புகளை வெறும் பேச்சிலிருந்து எவ்வாறு நடைமுறைக்குக் கொண்டுவருவது?

எது கல்வி?

சென்ற மாதம் பத்தாம் வகுப்புக்கு இடைப்பருவத் தேர்வு நடைபெற்றது. தமிழ் இரண்டாம் தாளில் கட்டுரை வினா.

‘சிறுதுளி பெருவெள்ளம் – சிறுசேமிப்பின் அவசியம் - சேமிக்கும் வழி முறைகள் – சிறுசேமிப்பின் பயன்கள் – மாணவர் பங்கு’ என்று குறிப்புகளைக் கொடுத்திருந்தார்கள். கட்டுரை எழுதியிருந்த பலரும் மழை நீர் சேகரிப்பு பற்றியே எழுதியிருந்தனர். எவ்வாறு இது நிகழ்ந்தது? முதல் குறிப்பை வாசித்தபின் அவ்வாறு முடிவு செய்திருக்கின்றனர். கடிதம், கட்டுரை, துணைப்பாடம் என்று அனைத்தையுமே கேள்வி பதிலாகவே மனப்பாடம் செய்கின்றனர். அவர்கள் படித்தது வரவில்லை என்றால் வினாத்தாள் கடினம் என்ற குற்றச்சாட்டு வேறு.

பாடம் நடத்தினோம். அடிக்கடி தேர்வுகள் வைத்தோம். பொதுத்தேர்வில் நிறைய மதிப்பெண்கள் பெற்றார்கள். இப்படி அறிவின் பெயரால் செய்திகளைத் திணித்துக்கொண்டே இருப்பதா கல்வி? ‘உடன்படவும் ஒத்துப்போகவும் தலையாட்டவும் கற்றுத் தருவதா கல்வி?

அறம் செய்யப் பழகுதல்!

‘மறுத்தல் ஓர் அடிப்படைத் திறன். பேதங்களை, பிளவுகளை, அதிகாரத்தின் பொய்களை மறுத்து உள்ளம் உரம் பெற்றுத் தலைநிமிர்ந்து நிற்பதற்கான சிந்தனைகளை விதைக்கும் கல்வியே வேண்டும்’ என்கிறார் பேராசிரியர் ச. மாடசாமி.

மனிதப் பண்புகளை வளர்க்கும் செயல்பாடுகளில் உடனடி விளைவு கிடைக்காமல் போகலாம். ஆனால், செயல்பாடுகள் தொடரும்போது காலப்போக்கில் மாற்றங்கள் நிகழும்.

குழந்தைகளின் தேடல் மிகுந்த ஆர்வமான மெல்லிய குரல்களைக் கேட்கும் காதுகளே ஆசிரியருக்குத் தேவை. அந்த மென்மையான குரல்களை வளர்த்தெடுக்க என்ன செய்யலாம்?

கலந்துரையாடல்களை உருவாக்க வேண்டும். தனது மனத்தில் எழும் கேள்விகளை, எண்ணங்களைப் பயமின்றிப் பகிர்ந்துகொள்ளும் சூழலை உருவாக்க வேண்டும். நற்பண்புகளைப் பழகும் சூழல் பள்ளிக்குள் உருவாக வேண்டும்.

கலந்துரையாடலின் தொடக்கப் புள்ளியாக ஆசிரியருக்கும் குழந்தைகளுக்கும் இடையே இறுகிக் கிடக்கும் பயத்தின் சுவர்களைத் தகர்க்கச் செய்ய வேண்டியது என்ன?

மனதோடு பேசும் குறும்படங்கள்

காட்சி ஊடகங்களின் காலம் இது. திரைப்படங்கள், தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்களில் அனைவரும் மூழ்கிக் கிடக்கிறோம்.

கூடிப் பேசிச் சிரிப்பதிலிருந்து பார்த்துச் சிரிப்பதாக மாறிவிட்டது நகைச்சுவை. பால்புட்டியைப் போலவே பெரும்பாலான குழந்தைகளின் கைகளில் செல்பேசி திணிக்கப்படுகிறது.

எல்லாவற்றையும் நாம் செய்துவிட்டுக் குழந்தைகளைக் காட்சி ஊடகங்கள் கெடுக்கின்றன என்கிறோம். அத்தனை எளிதாகக் காட்சி ஊடகங்கள் தீமையைப் புகுத்த முடியும் என்றால் எளிதாக நன்மையைக் கொடுக்கவும் முடியும்தானே!

குறைந்த நேரம், சிறந்த கதைக்களம், வலிமையான காட்சியமைப்பு மூலம் கலந்துரையாடலை உருவாக்கும் குறும்படங்கள் ஏராளமாக உள்ளன.

குறும்படங்களைத் திரையிடல், அது குறித்துக் கலந்துரையாடுதல், தொடர்ந்த செயல்பாடுகள் மூலம் குழந்தைகளிடையே இயல்பாக மனிதப் பண்புகளை வளர்க்க முயலலாம்.

இவ்வாறு ஒரு வகுப்பறையின் இறுக்கத்தைப் போக்கி, கதவுகளைச் சிறகுகளாக்கிக் கலகல வகுப்பறையாக மாற்றும் முயற்சிகள்தாம் இத்தொடரில் இடம்பெறவுள்ளன. தாங்கள் பார்த்த குறும்படம் குறித்து ஆசிரியரும் குழந்தைகளும் மனந்திறந்து கலந்துரையாடுவார்கள்.

-

கட்டுரையாளர், பள்ளி ஆசிரியர் தொடர்புக்கு: artsiva13@gmail.com

அச்சம் தரும் ஆகாயப் பயணம்!


By ஆசிரியர் | Published on : 24th September 2018 01:56 AM |

கடந்த வியாழக்கிழமை மும்பையிலிருந்து ஜெய்ப்பூருக்குக் கிளம்பியது ஜெட் ஏர்வேஸின் ஃப்ளைட் 697 விமானம். 171 பயணிகளுடன் கிளம்பிய அந்த விமானம் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களில், சுமார் 10,000 அடி உயரத்தில் அபாய ஒலி கேட்கத் தொடங்கியது. அதற்குள் பயணிகள் பலருக்கும் தலைசுற்றல், காது வலி, மூக்கிலிருந்தும், காதுகளிலிருந்தும் ரத்தம் ஒழுகுதல் என்று பிரச்னைகள் எழத்தொடங்கின. ஐந்து பயணிகள் திடீரென்று தங்களது காதுகளிலிருந்தும் மூக்கிலிருந்தும் ரத்தம் கொட்டத் தொடங்கியதைப் பார்த்து பயந்துபோய் அலறத் தொடங்கினார்கள். பயணிகளின் ஓலமும் அபாய ஒலியும் விமான ஓட்டிகளைத் திடுக்கிட வைத்தன.

பிரச்னை அதிகரித்த பிறகுதான், பயணிகள் பகுதியின் குளிர்சாதனக் கருவிகளை இயக்க மறந்துவிட்டது விமான ஓட்டிகளுக்குத் தெரிந்தது. அதனால், பயணிகள் பகுதியில் அழுத்தம் அதிகரித்து அது பயணிகளை பாதித்திருக்கிறது என்பது தெரிந்தபோது, பயந்துபோய் விமானத்தை அவசர அவசரமாக மீண்டும் மும்பை விமான நிலையத்திற்கே திருப்பி இருக்கிறார்கள். பயணிகள் மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர்.
கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி, நியூயார்க்கிலிருந்து 370 பயணிகளுடன் தில்லிக்குக் கிளம்பியது ஏர் இந்தியா விமானம். விமானத்தளத்திலிருந்து கிளம்பிப் பறக்கத் தொடங்கிய சில விநாடிகளில் பல்வேறு இயந்திரங்கள் இயங்காதது கண்டுபிடிக்கப்பட்டு, அவசர அவசரமாக நியூஜெர்சி விமான நிலையத்தில் பாதுகாப்புடன் இறக்கப்பட்டது. நல்ல வேளையாக, பிரச்னை இல்லாமல் ஓடுபாதையில் விமானம் இறங்கியது பயணிகள் செய்த புண்ணியம் என்றுதான் கூற வேண்டும். இதுபோன்று பறக்கும்போது ஏற்படும் இயந்திரக் கோளாறுகளால் இண்டிகோ, கோஏர் விமானங்களும் சமீப காலங்களில் பிரச்னைகளை எதிர்கொண்டிருக்கின்றன.

விமானப் போக்குவரத்துத் துறை மிக வேகமாக வளரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. விமானங்களும், விமான நிலையங்களும், விமானப் பயணிகளும் அதிகரித்திருக்கும் அளவுக்கு விமானத்தின் பாதுகாப்பு அம்சங்களும், விமான நிலையங்களின் தொழில்நுட்பக் கட்டமைப்பு வசதிகளும் அதிகரிக்கவில்லை. அதனால்தான், பல்வேறு பிரச்னைகளையும், கோளாறுகளையும் விமானங்கள் தொடர்ந்து சந்தித்து வருகின்றன.
கடந்த ஓராண்டில், வானிலும் சரி, தரையிறங்கும் நேரத்திலும் சரி, விமானங்கள் ஒன்றோடொன்று மோதுகிற அளவில் நெருங்கிய சம்பவங்கள் ஏராளம் உண்டு. வானில் பறக்கத் தொடங்கிய பிறகு இயந்திரக் கோளாறு ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்டது எப்படி என்பதையும், அடிப்படைப் பணியான விமானத்தின் குளிர்சாதன இயந்திரங்களை ஜெட் ஏர்வேஸ் விமானிகள் முடுக்கிவிடாமல் இருந்தது ஏன் என்பதையும் நினைத்துப் பார்க்கவோ, அதற்குக் காரணம் தேடவோ முடியவில்லை. விமானப் பணியாளர்களின் கவனக் குறைவுக்குப் பணிச்சுமை காரணமான சோர்வு, மெத்தனப் போக்கு, போதுமான பயிற்சி இல்லாமை உள்ளிட்டவை வெளிப்படையான காரணங்கள்.

இந்தியாவைப் பொருத்தவரை, விமானப் பயணிகளின் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மிக அதிகமான பயணிகளைக் கவர்ந்திழுக்கும் வியாபாரப் போட்டியில் விமான சேவை நிறுவனங்கள் ஈடுபட்டிருக்கின்றன.

அதிக விமானங்களை இயக்குவது, போதுமான பயிற்சி இல்லாத விமானப் பணியாளர்களை அதிக அளவில் வேலையில் சேர்த்துக் கொள்வது, விமான நிலையங்களில் மிகக்குறைந்த நேரம் மட்டுமே தங்கள் விமானம் தரையில் இருக்கும்படிப் பார்த்துக் கொள்வது ஆகியவை விமான சேவை நிறுவனங்களின் முன்னுரிமை ஆகிவிட்டன.

விமான நிலையங்களில் விமானங்கள் நிறுத்தப்படும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் இந்திய விமான நிலைய ஆணையத்திற்குக் கட்டணம் செலுத்தியாக வேண்டும் என்பதால், தரையிறங்கிய விமானங்களை எவ்வளவு விரைவில் மீண்டும் பறப்பதற்குத் தயாராக்குவது என்பதில்தான் அவை கவனம் செலுத்துகின்றனவே தவிர, விமானத்தின் பாதுகாப்பிலோ, இயந்திரங்களின் முறையான செயல்பாடுகளிலோ முழுமையான கவனத்தைச் செலுத்துவதில்லை. அதன் விளைவுதான் பறக்கும்போது ஏற்படும் இயந்திரக் கோளாறுகள்.

விமான சேவை நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பதிலும், தேர்ச்சி பெற்றவர்களைப் பணியிலமர்த்துவதிலும் கவனம் செலுத்தாமல், செலவுகளைக் குறைப்பதில்தான் கவனம் செலுத்துகின்றன. தங்களது நிறுவனங்களின் லாபத்தை முன்னிலைப்படுத்தி, இதுபோன்ற அடிப்படை அம்சங்களை வளர்ச்சிக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கருதும் போக்குதான் அதற்குக் காரணம்.

விமானப் போக்குவரத்து அமைச்சகமும், விமானப் போக்குவரத்து ஆணையரும் இதுபோன்ற செயல்பாடுகள் குறித்து முறையான விசாரணைகள் நடத்தி, தவறு செய்யும் விமானப் பணியாளர்கள் தண்டிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். முறையான பயிற்சி இல்லாமை, பாதுகாப்புக் குறைபாடு ஆகியவற்றுக்கு விமான சேவை நிறுவனங்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்க வேண்டும்.
விசாரணையும் நடவடிக்கையும் கால வரம்புடன் நடத்தப்பட வேண்டும். விசாரணை வெளிப்படையாக நடத்தப்பட்டு, அதுகுறித்துப் பொதுவெளியில் விவரங்கள் தெரிவிக்கப்பட வேண்டும். ஆனால், இந்திய விமானத் துறையில் நடைபெறும் தவறுகள் விசாரிக்கப்படுகின்றனவே தவிர, எந்தவொரு விபத்தின் விசாரணை அறிக்கையும் பொதுவெளியில் வெளியிடப்படுவதில்லை. என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்களா என்பதும் வெளியில் தெரிவதில்லை. குறைந்த செலவில் விமானப் பயணம் என்பதற்காக பாதுகாப்பில்லாத விமானப் பயணம் ஏற்புடையதல்ல!

பெண்களும் பணி வாய்ப்பும்

By பா. ராஜா | Published on : 25th September 2018 01:36 AM |

 பெண்கள் பள்ளிப் படிப்போடு நின்றுவிட்ட காலம் போய், ஆராய்ச்சிப் படிப்பு வரை பயின்று, உயர்நிலையை அடைந்து வருகின்றனர்; குடும்ப நிர்வாகத்தையும் மேற்கொண்டு வருகின்றனர். அரசு நிறுவனமோ, தனியார் நிறுவனமோ அனைத்திலும் ஆண் பணியாளர்களைவிட பெண் பணியாளர்களே அதிகம். நிர்வாகங்களும், பெண் பணியாளர்களால் பிரச்னை ஏதும் ஏற்படாது என்பதால், பெண் பணியாளர்களையே அதிகம் பணியமர்த்துவதிலும் ஆர்வம் காட்டுகின்றன. அப்படி இருந்தும், பெண்களுக்குப் பணியிடங்களில் பணி வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. அதை மெய்ப்பிக்கும் விதமாக, பல்வேறு பணியிடங்களிலும் பணிபுரியும் பெண் பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

முன்பு மொத்தப் பணியாளர்கள் எண்ணிக்கையில் 30 சதவிகிதமாக இருந்த பெண் பணியாளர்கள், கடந்த ஓராண்டில் சுமார் 25 சதவிகிதமாகக் குறைந்துள்ளனர் என்று மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சந்தோஷ்குமார்

கங்குவார் தெரிவித்துள்ளார். நாட்டில் பணிபுரிவோர்-வேலையில்லாதோர் குறித்து ஆண்டுதோறும் ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிடப்படுகிறது. இந்த ஆய்வில், 2015-16-ஆம் நிதியாண்டில் 29.6 சதவிகிதமாக இருந்த பெண் பணியாளர்கள் எண்ணிக்கை 2016-17-ஆம் நிதியாண்டில் 25.8 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. அதிகபட்சமாக, ஹிமாசலத்தில் ஓராண்டில் சுமார் 45 சதவிகித அளவுக்கு பெண்கள் பணியிலிருந்து விலகியுள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் ஓராண்டில் 18 சதவிகித அளவுக்கு பெண்கள் பணியிலிருந்து விலகியுள்ளனர். இந்தப் பெண் பணியாளர்கள் எதற்காக பணியைத் துறந்தனர் என்ற காரணம் முழுமையாகத் தெரியவில்லை என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் அதிக அளவில் பெண் பணியாளர்களை நியமிக்கும் நடவடிக்கையிலும் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மாறாக, நாகாலாந்து, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பெண் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு அரசுகள் செயல்படுத்தி வரும் பல்வேறு வேலைவாய்ப்புத் திட்டங்களே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பெண் பணியாளர்கள் எண்ணிக்கையில் மிசோரம் முதலிடத்திலும், ஜம்மு-காஷ்மீர் கடைசி இடத்திலும் உள்ளன.
இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பல நாடுகளிலும் பெண் பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்த சரிவு இப்போது ஏற்பட்டதல்ல, கடந்த 20 ஆண்டுகளாகவே பெண் பணியாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இந்தியாவில் 2007-இல் 33.34 சதவிகிதமாக இருந்த பெண் பணியாளர்களின் எண்ணிக்கை 2010-இல் 28.58 சதவிகிதமாகவும், 2014-இல் 26.69 சதவிகிதமாகவும், 2016-இல் 26.91 சதவிகிதமாகவும் குறைந்துள்ளது. இந்தியாவில், விவசாயப் பணி, பொருள் உற்பத்தி, வர்த்தகம், சேவைத் துறை, சுரங்கத் தொழில், கட்டுமானம், போக்குவரத்து என பல்வேறு துறைகளிலும் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரேசில், ரஷியா, நேபாளம், சீனா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் பெண் பணியாளர்களின் எண்ணிக்கை 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக உள்ளது. பெண்கள் அன்பு, கருணை கொண்டவர்கள். அனைவரையும் அரவணைத்துச் செல்பவர்கள். தற்போது, குழந்தைப் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு ஆகியவை பெரிய அளவில் தொழிலாக வளர்ந்து வருகிறது. வீடுகளில் இதை ஊதியமில்லாத் தொழிலாக பெண்கள் மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும், இந்தப் பராமரிப்பு சேவைத் தொழிலுக்கு வளமான எதிர்காலம் உள்ளது என்று பன்னாட்டு தொழிலாளர் நல அமைப்பு தெரிவித்துள்ளது.

2030-இல் குழந்தை, முதியோர் பராமரிப்புப் பணிகளில் பன்னாட்டு அளவில் சுமார் 27 கோடி பேர் ஈடுபடுவர் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. குழந்தைகள், முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதே இதற்குக் காரணமாகும். இந்நிலையில், பெண் பணியாளர்களின் தேவை அதிகமாகவே உள்ளது.

பெண்கள், கல்வி, வேலைவாய்ப்பில் தங்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், பல்வேறு வேலைவாய்ப்புத் திட்டங்களை மானிய உதவியுடன் மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. இவற்றில் ஒரு திட்டம்தான் தேசிய கிராமப்புற வாழ்வாதாரத் திட்டம் (தீனதயாள் அந்த்யோதயா யோஜனா). பெண்கள் திட்டங்களைத் தொடங்கி, வருவாய் ஈட்டுவதற்கு இத்திட்டம் வழிவகை செய்கிறது. ஆயினும், இத் திட்டத்தின்கீழ் பெண்கள் தொழில்களைத் தொடங்கினாலும், அவர்களுக்கு போதிய வருவாய் கிடைக்கவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், பெண்கள் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள இத்தகைய திட்டங்கள் பெரிதும் உதவியாக இருக்கின்றன என்று அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம், பெண்கள் தங்களது வருவாயைப் பெருக்கி, கடன் பிரச்னையில் இருந்து விடுபடுகின்றனர் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இடையே ஏற்படும் கசப்பான அனுபவங்கள் அவர்கள் ஈடுபட்டு வரும் தொழில் திட்டத்தைப் பாதியில் விடத் தூண்டுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
பணி வாய்ப்புப் பெற்று, பொருள் ஈட்டுவதற்குத்தான் கல்வி என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். இதைக் கருத்தில் கொண்டே, ஏராளமான இளைஞர்களும் இளம்பெண்களும் உயர் பட்டப் படிப்புகளை முடித்துவிட்டு, பணி வாய்ப்பு இல்லாமல், கிடைத்த பணிகளைச் செய்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஏற்கெனவே பணியில் இருக்கும் பெண்களும் பணி விலகிச் செல்கின்றனர் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. பெண்கள் பணி விலகிச் செல்வதற்கான காரணத்தை உடனே கண்டறிந்து, அதற்குத் தீர்வு காண வேண்டும்.
பெரும்பாக்கம் கு.மா.வா., வீடுகளில் பரவுது மர்ம காய்ச்சல்!'சுகாதாரம்னா என்ன'ன்னு கேட்கும் மக்கள்

Updated : செப் 24, 2018 22:29 | Added : செப் 24, 2018 22:27





பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், துப்புரவு, சுகாதார பணிகள் சரியாக இல்லாததால், மக்கள் மர்ம காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இப்பகுதி மக்கள், ஊராட்சிக்கு வரி செலுத்தி வரும் நிலையில், மாநகராட்சி துப்புரவு பணி செய்வதால், பணி சரியாக நடக்காமல் இருப்பதாக தெரியவந்துள்ளது.

குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்களை, மாநகராட்சியுடன் இணைத்தால் தான் பிரச்னை தீரும் என, கோரிக்கை எழுந்துள்ளது.பொருளாதாரத்தில் நலிவடைந்து, வீடுகளின்றி, அரசு புறம்போக்கு நிலங்கள், ஏரி, கால்வாய், ஆற்றங்கரை பகுதிகளை ஆக்கிரமித்து, குடிசை அமைத்தவர்களுக்கு, மாற்று இடம் வழங்க, தமிழக அரசு முடிவு செய்தது.

இதன்படி, குடிசை மாற்று வாரியம் மூலம், பெரும்பாக்கத்தில், 200 ஏக்கர் பரப்பளவில், 1,200 கோடி ரூபாயில், 20 ஆயிரத்து, 376 வீடுகளுடன் கூடிய, மெகா மறுகுடியமர்வு திட்டம், 2009ல் துவங்கப்பட்டது.இதன்படி, 2015- - 16ல், தெற்கு பகுதியில் உள்ள, 6,000 வீடுகளில், பயோமெட்ரிக் முறையில் கணக்கெடுத்த பயனாளிகள், மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு பகுதியில், 2017- - 18ல், 3,000 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு, பள்ளி, கல்லுாரி, மருத்துவமனை, சமுதாயக்கூடம், பேருந்து நிலையம், வணிக வளாகம், ரேஷன் கடை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.பள்ளி, வணிக வளாகம் கட்டும் பணி, நிலுவையில் உள்ளது. அனைத்து வசதிகள் இருந்தும், துப்புரவு, சுகாதார பணியில், போதிய கவனம் செலுத்தாததால், நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது.
பிரச்னைகள்

 இங்குள்ள அனைத்து வீடுகளிலும், மறுகுடியமர்வு வரும்போது, குடிசை மாற்று வாரிய பகுதியில் மட்டும், மக்கள் தொகை ஒரு லட்சத்தை தாண்டும். இது, ஒரு நகராட்சியின் மக்கள் தொகை. இந்த குடியிருப்புகள், காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்பாக்கம் ஊராட்சி எல்லையில் உள்ளது. அங்குள்ள, 23 ஊழியர்களை கொண்டு, ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட, குடிசை மாற்று வாரிய மக்களுக்காக சேவை வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மறுகுடியமர்வு செய்ய துவங்கியபோது, துப்புரவு மற்றும் சுகாதார பணியை, மாநகராட்சி செய்ய முடிவு செய்யப்பட்டது. அதுவும், 2015ல், குடிசை மாற்று வாரிய உயர் அதிகாரிகளின், வாய்மொழி உத்தரவில், மாநகராட்சி இந்த பணியை செய்ய துவங்கியது. சோழிங்கநல்லுார் மண்டலத்தில் உள்ள, 200வது வார்டில் உள்ள, துப்புரவு ஊழியர்கள் மூலம், இந்த பணி நடக்கிறது. நாள் ஒன்றுக்கு, 6 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. ஆனால், முழுமையான துப்புரவுபணி நடைபெற வில்லை. மலேரியா ஊழியர்கள் குறைவாக உள்ளதால், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளுக்கு, சுகாதார பணி மேற்கொள்ள முடியவில்லை. இதனால், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. சுற்றி உள்ள, வடிகால், கால்வாயில் கழிவுநீர் அதிகமாக தேங்கி உள்ளதால், தொற்று நோய் பரவி வருகிறது. கடந்த இரண்டு மாதமாக, 25க்கும் மேற்பட்டோர், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இணைப்பு என்னாச்சு? முழுமையான சேவை வழங்க, பெரும்பாக்கம் ஊராட்சி எல்லையில் உள்ள, 200 ஏக்கர் பரப்பளவில் கட்டிய குடியிருப்புகள் மற்றும் அதை சார்ந்த சேவை துறைகளை, சென்னை மாநகராட்சியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான கோப்புகள், தலைமை செயலகத்தில் துாங்கிக் கொண்டிருக்கின்றன. வீடு, பள்ளி, கல்லுாரி என, அனைத்து வசதிகளையும் செய்து, சுகாதாரத்தில் கவனம் செலுத்தாமல் நோய் பாதிப்பு அதிகரித்தால், மொத்த திட்டமும் கேள்விக்குறியாகி விடும். நிலைமையை உணர்ந்து, சென்னை மாநகராட்சியுடன் இணைத்து, முழு சேவை வழங்க வேண்டும் என, அங்கு வசிப்பவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

போதுமான வசதிகள் இருந்தும், கொசு தொல்லை தாங்க முடியவில்லை. திறந்தவெளியில் கிடக்கும் பொருட்களில், தண்ணீர் தேங்கி கொசு அதிகரித்துள்ளது. ஊராட்சியில் வரி கட்டுகிறோம்; சேவை தருவதில்லை. குடிசை மாற்று வாரிய அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. துப்புரவு பணியும், மேலோட்டமாக தான் நடக்கிறது.மறுகுடியமர்வு செய்யப்பட்ட மக்கள்ஒரு கோடி ரூபாய்குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள், மாநகராட்சியுடன் இணைந்தால், சோழிங்கநல்லுார் மண்டலத்திற்கு, 1 கோடி ரூபாய்க்கு மேல், கூடுதல் வரி வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஆட்சியாளர்களுக்கு பயந்து, வாய்மொழி உத்தரவில் குப்பை அள்ளி வருகிறோம். இதனால், 200வது வார்டு பணிகள் பாதிக்கப்படுகின்றன. ஆட்கள் அதிகரிக்கும் போது, பிரச்னை அதிகரிக்கும். உரிய உத்தரவு பிறப்பித்து, கூடுதல் ஊழியர்களை நியமித்தால் தான் நிலைமை சீராகும்.மாநகராட்சி அதிகாரிகள்

கட்டமைப்புகள் செய்து கொடுக்கத் தான் எங்களுக்கு உத்தரவு. இதர சேவைகளை, உள்ளாட்சி அமைப்பு தான் செய்ய வேண்டும். மாநகராட்சியுடன் இணைந்தால் தான், துப்புரவு, சுகாதார பிரச்னைக்கு விடிவு கிடைக்கும்.குடிசை மாற்று வாரிய அதிகாரிகள்

வரி ஊராட்சிக்குமறுகுடியமர்வு செய்யப்பட்ட, ஒவ்வொரு வீட்டு உரிமையாளரும், பெரும்பாக்கம் ஊராட்சியில், 330 ரூபாய் வீட்டு வரி கட்டி வருகின்றனர். ஊராட்சியில் இருந்து, எந்த அடிப்படை சேவையும் கிடைக்காமல், வரி மட்டும் கட்டுவதால், மக்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.-- நமது நிருபர்- -
மனைவியரை கைவிடும் என்.ஆர்.ஐ.,க்கள்

Added : செப் 25, 2018 06:35




புதுடில்லி: என்.ஆர்.ஐ., எனப்படும், வெளிநாடு வாழ் இந்தியர்கள், தங்கள் மனைவியரை கைவிடும் சம்பவங்கள், கவலை அளிப்பதாக, டில்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இது தொடர்பாக, மத்திய அமைச்சகங்களிடம், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, கருத்து கேட்டுள்ளார்.

போலி சான்றிதழ் விவகாரம்; அரசு டாக்டர்களுக்கு, 'சம்மன்'

Added : செப் 25, 2018 03:57

கோவை : போலி சான்றிதழ் விவகாரத்தில், அரசு டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர், விசாரணைக்கு ஆஜராக, கோவை அரசு மருத்துவமனைக்கு, போலீஸ், 'சம்மன்' அனுப்பியது.

போதை ஊசிகளை கடத்தி விற்றதாக, கோவையைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில், முகமது ஷிகாப்புக்கு வலிப்பு நோய் உள்ளதாக கூறி, ஜாமினில் விடுவிக்க தாக்கல் செய்த மனுவுடன், மருத்துவச் சான்றிதழ் இணைக்கப்பட்டது. அச்சான்றிதழ் போலி என தெரிந்ததால், தனியார் டாக்டர் ராமகிருஷ்ணன், அரசு டாக்டர்கள் உஷா, மன்சூர், மருத்துவமனை ஊழியர் பீர் முகமது, வக்கீல் ஜக்காரியா, முகமது ஷிகாப் சகோதரர் முகமது ஷாகித் ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டது.

அரசு மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர், விசாரணைக்கு ஆஜராக, மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து, கோவை அரசு மருத்துவமனைக்கு, சம்மன் அனுப்பப்பட்டது.

அரசு மருத்துவமனை அதிகாரிகள் கூறியதாவது: வழக்கு தொடர்பாக விசாரிப்பதற்காக, டாக்டர்கள் இன்று ஆஜராகும்படி, போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர். மருத்துவமனை ஊழியர், தலைமறைவாக உள்ளார். டாக்டர் மன்சூர், மருத்துவ விடுமுறையில் உள்ளார். டாக்டர் உஷாவும் விடுமுறையில் இருக்கிறார்.

இவர்களது விடுப்பு ரத்து செய்யப்பட்டு, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியரது முகவரி, மொபைல் எண்களும் வழங்கப்பட்டுள்ளன. போலீசார், சம்மன் குறித்து, டாக்டர்கள், ஊழியருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்!

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்! Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு தமிழக...