போலி சான்றிதழ் விவகாரம்; அரசு டாக்டர்களுக்கு, 'சம்மன்'
Added : செப் 25, 2018 03:57
கோவை : போலி சான்றிதழ் விவகாரத்தில், அரசு டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர், விசாரணைக்கு ஆஜராக, கோவை அரசு மருத்துவமனைக்கு, போலீஸ், 'சம்மன்' அனுப்பியது.
போதை ஊசிகளை கடத்தி விற்றதாக, கோவையைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில், முகமது ஷிகாப்புக்கு வலிப்பு நோய் உள்ளதாக கூறி, ஜாமினில் விடுவிக்க தாக்கல் செய்த மனுவுடன், மருத்துவச் சான்றிதழ் இணைக்கப்பட்டது. அச்சான்றிதழ் போலி என தெரிந்ததால், தனியார் டாக்டர் ராமகிருஷ்ணன், அரசு டாக்டர்கள் உஷா, மன்சூர், மருத்துவமனை ஊழியர் பீர் முகமது, வக்கீல் ஜக்காரியா, முகமது ஷிகாப் சகோதரர் முகமது ஷாகித் ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டது.
அரசு மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர், விசாரணைக்கு ஆஜராக, மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து, கோவை அரசு மருத்துவமனைக்கு, சம்மன் அனுப்பப்பட்டது.
அரசு மருத்துவமனை அதிகாரிகள் கூறியதாவது: வழக்கு தொடர்பாக விசாரிப்பதற்காக, டாக்டர்கள் இன்று ஆஜராகும்படி, போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர். மருத்துவமனை ஊழியர், தலைமறைவாக உள்ளார். டாக்டர் மன்சூர், மருத்துவ விடுமுறையில் உள்ளார். டாக்டர் உஷாவும் விடுமுறையில் இருக்கிறார்.
இவர்களது விடுப்பு ரத்து செய்யப்பட்டு, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியரது முகவரி, மொபைல் எண்களும் வழங்கப்பட்டுள்ளன. போலீசார், சம்மன் குறித்து, டாக்டர்கள், ஊழியருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment