மதுரைக்கு வருமா 'எய்ம்ஸ்'; கிடைக்குமா உயர் சிகிச்சை :
முட்டுக்கட்டை போடுகிறதா தமிழக அரசு
dinamalar 25.09.2018
மதுரை:மதுரையில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை துவக்க மத்திய அரசு கேட்ட நிபந்தனைகளை நிறைவேற்ற மாநில அரசு அக்கறை செலுத்தாமல் முட்டுக்கட்டை போடுவதாக புகார் எழுந்துள்ளது. மதுரைக்கு வருமா எய்ம்ஸ், தருமா உயர் சிகிச்சை என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.
மதுரை தோப்பூரில் இம்மருத்துவமனை துவங்கும் அறிவிப்பு மூன்று மாதங்களுக்கு முன் வெளியானது. அரசு நிலம் 200ஏக்கரில் மருத்துவமனை, டாக்டர்கள், ஊழியர்கள் குடியிருப்பு கட்ட முடிவு செய்து எச்.எல்.எல்., நிறுவனம் தர ஆய்வுக்காக மண் எடுத்து நாக்பூர் அனுப்பியது. இந்திய மருத்துவ கவுன்சில், மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 1.6 கி.மீ., துாரமுள்ள பெட்ரோல் குழாய் பகுதியில் கட்டுமான பணிக்கு தடையில்லா சான்று வழங்கியது.இதற்கு பிறகும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அறிவிப்பை அரசிதழில் மத்திய அரசு வெளியிடவில்லை. இதற்கான காரணத்தை அறிந்து நிவர்த்தி செய்யும் பணியில் தமிழக அரசு இறங்காமல் சுணக்கம் காட்டுகிறது.
மாநில அரசு முட்டுக்கட்டை
இங்கு கட்டுமான பணியை துவக்க 200 ஏக்கர் அரசு நிலத்தை எய்ம்ஸ் மருத்துவமனை பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய வேண்டும். மதுரை துாத்துக்குடி நான்கு வழிச்சாலை - தோப்பூருக்கு இணைப்பு சாலை அமைக்க வேண்டும். தடையில்லா மின்சாரம் கிடைக்க 20 மெகாவாட் திறனுள்ள துணை மின்நிலையம் அமைக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளை நிறைவேற்றித்தர மத்திய அரசு, மாநில அரசிடம் கோரியது.இவற்றை நிறைவேற்ற மாநில அரசு அக்கறை காட்டாததால், மத்திய அரசு அரசாணை வெளியிடவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.தோப்பூர் மருத்துவ மனைக்காக தேர்வான இடத்தில் கழிவுகளை கொட்டி வருகின்றனர்.
நிலம் தேர்வு அரசாணை
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்: எய்ம்ஸ் துவக்க தேவையான நிலம், இணைப்பு சாலை, மின்வசதி எங்கிருந்து பெறப்படும், ரயில்வே ஸ்டேஷன் இணைப்பு சாலை, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் தடையில்லா சான்று உட்பட அனைத்து ஆவணங்களையும் சுகாதாரத்துறை மூலம் மத்திய அரசிடம் ஒப்படைத்து விட்டோம். முதல்வர் பழனிசாமியும் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துகிறார். நிலம் தேர்வு செய்ததற்கான அரசாணை கூட வெளியானதால் மத்திய அரசுக்கு முதல்வர் நன்றி கூறியுள்ளார். எய்ம்ஸ் வருவதற்கு முழுமூச்சாக செயல்படுகிறோம்.
'எய்ம்ஸ்' உறுதி
சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்: எய்ம்ஸ்க்கு ஒதுக்கிய 200 ஏக்கரை சர்வே செய்து, மண் ஆய்வும் நடத்தி விட்டனர். கட்டுமான பணிக்காக 1,500 கோடி ரூபாய் ஒதுக்குவது குறித்து, மத்தியநிதித்துறையின் ஒப்புதலுக்கு ஆவணங்கள் உள்ளன. மத்திய அமைச்சரவையில் அனுமதி பெற்று நிதி ஒதுக்கிய பின் கட்டுமான பணி துவங்கும். மதுரைக்கு எய்ம்ஸ் உறுதி. அதில் மாற்றமில்லை.மாநில அரசுக்கு
அக்கறையில்லைவி.எஸ்., மணிமாறன், ஒருங்கிணைப்பாளர், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மக்கள் இயக்கம்:மத்திய அரசு, எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அறிவிப்பு வெளியிட்டதும், அமைச்சர்கள் உட்பட பலர் தடபுடலாக பொதுக் கூட்டங்களில் பேசினர். அதற்கு பின் மாநில அரசு இம்மருத்துவமனையை துவக்க செய்வதில் அக்கறை காட்டவில்லை. இத்திட்டம் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது. செப்.,15 பிரதமர் அடிக்கல் நாட்டுவார் என்றனர். மத்திய அரசு நிபந்தனைகளை நிறைவேற்றாமல் தமிழக அரசே முட்டுக்கட்டை போடுவதாக உள்ளது. அறிவிப்பு வெளியாகி 3 மாதங்களுக்கு மேலாகியும் பூர்வாங்க பணிகள் கூட துவக்காததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.முனைப்பு காட்டாத மாநில அரசுஸ்ரீநிவாசன், மாநில செயலர், பா.ஜ.,: மதுரையில் எய்ம்ஸ் அமையும் என மத்திய அரசு அறிவித்தவுடன் பா.ஜ., சார்பில் மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மூலம் அரசிதழில் வெளியிட வலியுறுத்தி வருகிறோம். மத்திய அரசு நிபந்தனைகளான இணைப்பு ரோடு, நில ஒப்படைப்பு, மின்வசதி குறித்து எந்த பணிகளையும் மாநில அரசு தோப்பூரில் மேற்கொள்ளவில்லை. சுகாதார அமைச்சர் டில்லி சென்று மத்திய அரசிடம் பேசி அரசிதழில் வெளியிட வைத்து நகல் பெற்று வர வேண்டியது தானே. இவர்கள் பதவியை காப்பாற்றிக் கொள்ளவே நேரம் சரியாகி விடுகிறது. பிறகு எப்படி எய்ம்ஸ் திட்டங்களுக்கு உதவ முடியும்.
No comments:
Post a Comment