கரும்பலகைக்குக் அப்பால்... 01 - தலையாட்ட கற்றுத் தருவதா கல்வி?
Published : 18 Sep 2018 11:47 IST
ரெ.சிவா
‘குணமா வாயில சொல்லணும். திட்டாம, அடிக்காம வாயில சொல்லணும்!’
கண்ணீருடன் திடமாகச் சொல்லும் குழந்தையின் பேச்சு சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது.
பெரியவர்கள் தன்னை எப்படி நடத்த வேண்டும் என்பதை எளிமையாக அந்தக் குழந்தை சொல்கிறது. சேட்டை செய்வது தப்பு என்பதையும் குழந்தை உணர்ந்திருக்கிறது. இங்கு சேட்டை என்று நாம் எதைச் சொல்கிறோம்?
சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடாக நடப்பது குழந்தைகளா, பெரியவர்களா?
மனத்தில் தோன்றுவதைத் தயங்காமல் வெளிப்படுத்தும் குழந்தைகள் ஏன் வாய்மூடிப் போகிறார்கள்?
எங்கே சிக்கல்?
கடும் சொற்களை அனைவரும் பேசிக்கொண்டு ‘இனிய உளவாக இன்னாத கூறல்’ என்று படிப்பதால் என்ன பயன்? 1,330 குறளையும் மனப்பாடம் செய்துவிட்டால் போதுமா! இரண்டாயிரம் ஆண்டுகளாகச் சொல்லிவந்த நீதிபோதனைகளால் என்ன பயன்?
பெண்குழந்தைகள் மீது பாலியல் அத்துமீறல் நிகழ்த்தப்படும்போதெல்லாம் அவர்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்கிறோம். நல்ல தொடுதல், தவறான தொடுதல் குறித்து எடுத்துச் சொல்கிறோம். ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனியான பள்ளிகள் அல்லது தனித்தனியான பாதைகள். சட்டங்களைக் கடுமையாக்குகிறோம். அது மட்டும் போதுமா? பாலினச் சமத்துவத்தை எப்படிச் சொல்லித்தருவது?
வாழ்வியல் திறன்கள், பாகுபாடுகள்
இல்லாத சமூகம், மனிதப் பண்புகள் போன்றவற்றை எவ்வாறு குழந்தைகளுக்குச் சொல்லித்தருவது?
எல்லோரும் நீதி சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ‘இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே’ என்று கட்டளைகள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. மணிக்கணக்காக அறிவுரை சொல்லிக்கொண்டே இருக்கிறோம். நீதியை, பண்புகளை வெறும் பேச்சிலிருந்து எவ்வாறு நடைமுறைக்குக் கொண்டுவருவது?
எது கல்வி?
சென்ற மாதம் பத்தாம் வகுப்புக்கு இடைப்பருவத் தேர்வு நடைபெற்றது. தமிழ் இரண்டாம் தாளில் கட்டுரை வினா.
‘சிறுதுளி பெருவெள்ளம் – சிறுசேமிப்பின் அவசியம் - சேமிக்கும் வழி முறைகள் – சிறுசேமிப்பின் பயன்கள் – மாணவர் பங்கு’ என்று குறிப்புகளைக் கொடுத்திருந்தார்கள். கட்டுரை எழுதியிருந்த பலரும் மழை நீர் சேகரிப்பு பற்றியே எழுதியிருந்தனர். எவ்வாறு இது நிகழ்ந்தது? முதல் குறிப்பை வாசித்தபின் அவ்வாறு முடிவு செய்திருக்கின்றனர். கடிதம், கட்டுரை, துணைப்பாடம் என்று அனைத்தையுமே கேள்வி பதிலாகவே மனப்பாடம் செய்கின்றனர். அவர்கள் படித்தது வரவில்லை என்றால் வினாத்தாள் கடினம் என்ற குற்றச்சாட்டு வேறு.
பாடம் நடத்தினோம். அடிக்கடி தேர்வுகள் வைத்தோம். பொதுத்தேர்வில் நிறைய மதிப்பெண்கள் பெற்றார்கள். இப்படி அறிவின் பெயரால் செய்திகளைத் திணித்துக்கொண்டே இருப்பதா கல்வி? ‘உடன்படவும் ஒத்துப்போகவும் தலையாட்டவும் கற்றுத் தருவதா கல்வி?
அறம் செய்யப் பழகுதல்!
‘மறுத்தல் ஓர் அடிப்படைத் திறன். பேதங்களை, பிளவுகளை, அதிகாரத்தின் பொய்களை மறுத்து உள்ளம் உரம் பெற்றுத் தலைநிமிர்ந்து நிற்பதற்கான சிந்தனைகளை விதைக்கும் கல்வியே வேண்டும்’ என்கிறார் பேராசிரியர் ச. மாடசாமி.
மனிதப் பண்புகளை வளர்க்கும் செயல்பாடுகளில் உடனடி விளைவு கிடைக்காமல் போகலாம். ஆனால், செயல்பாடுகள் தொடரும்போது காலப்போக்கில் மாற்றங்கள் நிகழும்.
குழந்தைகளின் தேடல் மிகுந்த ஆர்வமான மெல்லிய குரல்களைக் கேட்கும் காதுகளே ஆசிரியருக்குத் தேவை. அந்த மென்மையான குரல்களை வளர்த்தெடுக்க என்ன செய்யலாம்?
கலந்துரையாடல்களை உருவாக்க வேண்டும். தனது மனத்தில் எழும் கேள்விகளை, எண்ணங்களைப் பயமின்றிப் பகிர்ந்துகொள்ளும் சூழலை உருவாக்க வேண்டும். நற்பண்புகளைப் பழகும் சூழல் பள்ளிக்குள் உருவாக வேண்டும்.
கலந்துரையாடலின் தொடக்கப் புள்ளியாக ஆசிரியருக்கும் குழந்தைகளுக்கும் இடையே இறுகிக் கிடக்கும் பயத்தின் சுவர்களைத் தகர்க்கச் செய்ய வேண்டியது என்ன?
மனதோடு பேசும் குறும்படங்கள்
காட்சி ஊடகங்களின் காலம் இது. திரைப்படங்கள், தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்களில் அனைவரும் மூழ்கிக் கிடக்கிறோம்.
கூடிப் பேசிச் சிரிப்பதிலிருந்து பார்த்துச் சிரிப்பதாக மாறிவிட்டது நகைச்சுவை. பால்புட்டியைப் போலவே பெரும்பாலான குழந்தைகளின் கைகளில் செல்பேசி திணிக்கப்படுகிறது.
எல்லாவற்றையும் நாம் செய்துவிட்டுக் குழந்தைகளைக் காட்சி ஊடகங்கள் கெடுக்கின்றன என்கிறோம். அத்தனை எளிதாகக் காட்சி ஊடகங்கள் தீமையைப் புகுத்த முடியும் என்றால் எளிதாக நன்மையைக் கொடுக்கவும் முடியும்தானே!
குறைந்த நேரம், சிறந்த கதைக்களம், வலிமையான காட்சியமைப்பு மூலம் கலந்துரையாடலை உருவாக்கும் குறும்படங்கள் ஏராளமாக உள்ளன.
குறும்படங்களைத் திரையிடல், அது குறித்துக் கலந்துரையாடுதல், தொடர்ந்த செயல்பாடுகள் மூலம் குழந்தைகளிடையே இயல்பாக மனிதப் பண்புகளை வளர்க்க முயலலாம்.
இவ்வாறு ஒரு வகுப்பறையின் இறுக்கத்தைப் போக்கி, கதவுகளைச் சிறகுகளாக்கிக் கலகல வகுப்பறையாக மாற்றும் முயற்சிகள்தாம் இத்தொடரில் இடம்பெறவுள்ளன. தாங்கள் பார்த்த குறும்படம் குறித்து ஆசிரியரும் குழந்தைகளும் மனந்திறந்து கலந்துரையாடுவார்கள்.
-
கட்டுரையாளர், பள்ளி ஆசிரியர் தொடர்புக்கு: artsiva13@gmail.com
No comments:
Post a Comment