பெண்களும் பணி வாய்ப்பும்
By பா. ராஜா | Published on : 25th September 2018 01:36 AM |
பெண்கள் பள்ளிப் படிப்போடு நின்றுவிட்ட காலம் போய், ஆராய்ச்சிப் படிப்பு வரை பயின்று, உயர்நிலையை அடைந்து வருகின்றனர்; குடும்ப நிர்வாகத்தையும் மேற்கொண்டு வருகின்றனர். அரசு நிறுவனமோ, தனியார் நிறுவனமோ அனைத்திலும் ஆண் பணியாளர்களைவிட பெண் பணியாளர்களே அதிகம். நிர்வாகங்களும், பெண் பணியாளர்களால் பிரச்னை ஏதும் ஏற்படாது என்பதால், பெண் பணியாளர்களையே அதிகம் பணியமர்த்துவதிலும் ஆர்வம் காட்டுகின்றன. அப்படி இருந்தும், பெண்களுக்குப் பணியிடங்களில் பணி வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. அதை மெய்ப்பிக்கும் விதமாக, பல்வேறு பணியிடங்களிலும் பணிபுரியும் பெண் பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
முன்பு மொத்தப் பணியாளர்கள் எண்ணிக்கையில் 30 சதவிகிதமாக இருந்த பெண் பணியாளர்கள், கடந்த ஓராண்டில் சுமார் 25 சதவிகிதமாகக் குறைந்துள்ளனர் என்று மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சந்தோஷ்குமார்
கங்குவார் தெரிவித்துள்ளார். நாட்டில் பணிபுரிவோர்-வேலையில்லாதோர் குறித்து ஆண்டுதோறும் ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிடப்படுகிறது. இந்த ஆய்வில், 2015-16-ஆம் நிதியாண்டில் 29.6 சதவிகிதமாக இருந்த பெண் பணியாளர்கள் எண்ணிக்கை 2016-17-ஆம் நிதியாண்டில் 25.8 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. அதிகபட்சமாக, ஹிமாசலத்தில் ஓராண்டில் சுமார் 45 சதவிகித அளவுக்கு பெண்கள் பணியிலிருந்து விலகியுள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் ஓராண்டில் 18 சதவிகித அளவுக்கு பெண்கள் பணியிலிருந்து விலகியுள்ளனர். இந்தப் பெண் பணியாளர்கள் எதற்காக பணியைத் துறந்தனர் என்ற காரணம் முழுமையாகத் தெரியவில்லை என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் அதிக அளவில் பெண் பணியாளர்களை நியமிக்கும் நடவடிக்கையிலும் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மாறாக, நாகாலாந்து, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பெண் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு அரசுகள் செயல்படுத்தி வரும் பல்வேறு வேலைவாய்ப்புத் திட்டங்களே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பெண் பணியாளர்கள் எண்ணிக்கையில் மிசோரம் முதலிடத்திலும், ஜம்மு-காஷ்மீர் கடைசி இடத்திலும் உள்ளன.
இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பல நாடுகளிலும் பெண் பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்த சரிவு இப்போது ஏற்பட்டதல்ல, கடந்த 20 ஆண்டுகளாகவே பெண் பணியாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இந்தியாவில் 2007-இல் 33.34 சதவிகிதமாக இருந்த பெண் பணியாளர்களின் எண்ணிக்கை 2010-இல் 28.58 சதவிகிதமாகவும், 2014-இல் 26.69 சதவிகிதமாகவும், 2016-இல் 26.91 சதவிகிதமாகவும் குறைந்துள்ளது. இந்தியாவில், விவசாயப் பணி, பொருள் உற்பத்தி, வர்த்தகம், சேவைத் துறை, சுரங்கத் தொழில், கட்டுமானம், போக்குவரத்து என பல்வேறு துறைகளிலும் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரேசில், ரஷியா, நேபாளம், சீனா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் பெண் பணியாளர்களின் எண்ணிக்கை 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக உள்ளது. பெண்கள் அன்பு, கருணை கொண்டவர்கள். அனைவரையும் அரவணைத்துச் செல்பவர்கள். தற்போது, குழந்தைப் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு ஆகியவை பெரிய அளவில் தொழிலாக வளர்ந்து வருகிறது. வீடுகளில் இதை ஊதியமில்லாத் தொழிலாக பெண்கள் மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும், இந்தப் பராமரிப்பு சேவைத் தொழிலுக்கு வளமான எதிர்காலம் உள்ளது என்று பன்னாட்டு தொழிலாளர் நல அமைப்பு தெரிவித்துள்ளது.
2030-இல் குழந்தை, முதியோர் பராமரிப்புப் பணிகளில் பன்னாட்டு அளவில் சுமார் 27 கோடி பேர் ஈடுபடுவர் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. குழந்தைகள், முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதே இதற்குக் காரணமாகும். இந்நிலையில், பெண் பணியாளர்களின் தேவை அதிகமாகவே உள்ளது.
பெண்கள், கல்வி, வேலைவாய்ப்பில் தங்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், பல்வேறு வேலைவாய்ப்புத் திட்டங்களை மானிய உதவியுடன் மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. இவற்றில் ஒரு திட்டம்தான் தேசிய கிராமப்புற வாழ்வாதாரத் திட்டம் (தீனதயாள் அந்த்யோதயா யோஜனா). பெண்கள் திட்டங்களைத் தொடங்கி, வருவாய் ஈட்டுவதற்கு இத்திட்டம் வழிவகை செய்கிறது. ஆயினும், இத் திட்டத்தின்கீழ் பெண்கள் தொழில்களைத் தொடங்கினாலும், அவர்களுக்கு போதிய வருவாய் கிடைக்கவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால், பெண்கள் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள இத்தகைய திட்டங்கள் பெரிதும் உதவியாக இருக்கின்றன என்று அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம், பெண்கள் தங்களது வருவாயைப் பெருக்கி, கடன் பிரச்னையில் இருந்து விடுபடுகின்றனர் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இடையே ஏற்படும் கசப்பான அனுபவங்கள் அவர்கள் ஈடுபட்டு வரும் தொழில் திட்டத்தைப் பாதியில் விடத் தூண்டுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
பணி வாய்ப்புப் பெற்று, பொருள் ஈட்டுவதற்குத்தான் கல்வி என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். இதைக் கருத்தில் கொண்டே, ஏராளமான இளைஞர்களும் இளம்பெண்களும் உயர் பட்டப் படிப்புகளை முடித்துவிட்டு, பணி வாய்ப்பு இல்லாமல், கிடைத்த பணிகளைச் செய்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஏற்கெனவே பணியில் இருக்கும் பெண்களும் பணி விலகிச் செல்கின்றனர் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. பெண்கள் பணி விலகிச் செல்வதற்கான காரணத்தை உடனே கண்டறிந்து, அதற்குத் தீர்வு காண வேண்டும்.
No comments:
Post a Comment