Thursday, January 17, 2019


வடலூரில் 21ம் தேதி தைப்பூச ஜோதி தரிசன விழா

Added : ஜன 16, 2019 22:24

வடலுார்: வடலுாரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், 148வது தைப்பூச ஜோதி தரிசன விழா, 21ம் தேதி நடக்கிறது.கடலுார் மாவட்டம், வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசன விழா, விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு, 148வது தைப்பூச ஜோதி தரிசன விழா, 21ம் தேதி நடைபெறுகிறது.

விழாவையொட்டி, 20ம் தேதி காலை, 5:00 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி அகவற் பாராயணம், 7:30 மணிக்கு தருமசாலை, வள்ளலார் பிறந்த மருதுார், வள்ளலார் தண்ணீரில் விளக்கேற்றிய கருங்குழி ஆகிய இடங்களில் சன்மார்க்கக் கொடியேற்றுதல் நடைபெறும். காலை, 10:00 மணிக்கு பார்வதிபுரம் கிராமவாசிகள் சார்பில், ஞானசபையில் சன்மார்க்க கொடியேற்றம், இரவு, 7:00 மணிக்கு திரு அருட்பா கருத்தரங்கம் நடைபெறும்.தொடர்ந்து, 21ம் தேதி புதன்கிழமை தைப்பூச ஜோதி தரிசனத்தையொட்டி, காலை, 6:00 மணி, 10:00 மணி, மதியம், 1:00 மணி, இரவு, 7:00 மணி, 10:00 மணி; மறுநாள், 22ம் தேதி காலை, 5:30 மணிக்கு என, ஆறு காலங்கள் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.பின், 11:00 மணிக்கு தருமசாலை பிரசங்கமேடையில் சன்மார்க்கக் கருத்தரங்கம் நடைபெறும். அதை தொடர்ந்து, 23ல் வள்ளலார் சித்தி பெற்ற சித்தி வளாகத்தில் திருஅறை தரிசனம் நடைபெறும்.அன்று காலை, 10:00 மணிக்கு வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பேழை அலங்கரிக்கப்படும். வள்ளலார் நடந்து சென்ற பாதை வழியாக எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு வள்ளலார் சித்தி பெற்ற அறை முன் வைத்து மாலை, 6:00 மணி வரை திருஅறை தரிசனம் நடைபெறும்.
சுங்க கட்டணம் ரத்து: ஆணையம் கைவிரிப்பு

Added : ஜன 16, 2019 22:10

'பண்டிகை காலங்களில், தமிழக சுங்கச் சாவடிகளில் கட்டணம் ரத்து செய்வதற்கு வாய்ப்பில்லை' என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்து உள்ளது.சங்கராந்தி விழாவை ஒட்டி, தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில், கட்டணம் ரத்து செய்வதாக, அம்மாநில அரசின் தலைமை செயலர் அறிவித்துள்ளார். ஆந்திராவிலும், சுங்க கட்டணம் ரத்து செய்யப்படுவதாக, அறிவிக்கப்பட்டது.

பொங்கல் பண்டிகையை ஒட்டி, சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர், சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதனால், 13ம் தேதி முதல், சென்னை - திருச்சி, சென்னை - பெங்களூரு, சென்னை - கோல்கட்டா, சென்னை - திருப்பதி, சென்னை பைபாஸ் தேசிய நெடுஞ்சாலைகளில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.சுங்க கட்டணம் செலுத்த, மணிக்கணக்கில் வாகனங்கள் காத்திருந்தன. இதனால், குறித்த நேரத்தில் ஊர் செல்ல முடியாமல், பலரும் பாதிக்கப்பட்டனர். பண்டிகை முடிந்து, நாளை முதல் பலரும், சென்னை திரும்பவுள்ளனர்; கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களை பின்பற்றி, இங்கும் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. ஆனால், தமிழக சுங்கச் சாவடிகளில், கட்டணம் ரத்து செய்வதற்கு வாய்ப்பில்லை என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, ஆணைய தமிழகப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழக சுங்கச் சாவடிகளை, ஒப்பந்த அடிப்படையில், தனியார் நிறுவனங்கள் இயக்கி வருகின்றன. இதற்காக, பல்வேறு நிபந்தனைகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே, இங்கு கட்டணம் ரத்து செய்வதற்கு, தலைமை செயலருக்கு அதிகாரம் இல்லை.ஒருவேளை, அரசு விரும்பினால், அன்றைய வசூலை, சுங்கச் சாவடி நிர்வாகங்களிடம் செலுத்தி, வாகனங்களுக்கு இலவச அனுமதியை பெற்று தர முடியும். இதே பாணியை பின்பற்றி தான், கேரள மாநிலத்தில், சில சுங்கச் சாவடிகளை, அம்மாநில அரசு மூடியுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.


உலக தர வரிசை பட்டியலில் இந்திய பல்கலைக் கழகங்கள்

Added : ஜன 17, 2019 07:09 |



புதுடில்லி: உலகளவில் சிறந்த பல்கலைக் கழகங்களுக்கான தர வரிசை பட்டியலில், நம் நாட்டைச் சேர்ந்த, 25 பல்கலைக் கழகங்கள் இடம் பெற்றுள்ளன.

பிரிட்டனின் லண்டனில் உள்ள, 'டைம்ஸ் ஹையர் எஜுகேஷன் எமர்ஜிங் எகானமீஸ்' என்ற சர்வதேச நிறுவனம், உலகம் முழுவதும் உள்ள, 43 நாடுகளைச் சேர்ந்த, 450 பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பட்டியலில், மிகச் சிறந்த, 200 பல்கலைக் கழகங்கள் வரிசையில், சீன பல்கலைக்கழகங்கள், முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளன. நம் நாட்டைச் சேர்ந்த, 25 பல்கலைக் கழகங்கள், இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

பெங்களூரில் இருக்கும், இந்திய அறிவியல் கழகம், 14வது இடத்தையும், மும்பை, ஐ.ஐ.டி., 27வது இடத்தையும் பெற்றுள்ளன. மத்திய பிரதேச மாநிலம், இந்துாரில் உள்ள, ஐ.ஐ.டி., 61வது இடத்திலும், 'ஜே.எஸ்.எஸ்., அகாடமி ஆப் ஹையர் எஜுகேஷன் அண்டு ரிசர்ச்' நிறுவனம், 64வது இடத்திலும் உள்ளன. ரூர்க்கி, ஐ.ஐ.டி., 'டாப்' - 40ல், 35வது இடத்தில் உள்ளது.

இதுகுறித்து, 'டைம்ஸ் ஹையர் எஜுகேஷன் எமர்ஜிங் எகானமிஸ்' நிறுவனத்தைச் சேர்ந்த, எல்லி போத்வெல் கூறியதாவது: இந்திய நிறுவனங்கள், வளர்ந்து வரும் நிலையில் மட்டுமல்லாமல், உலகளவில் வெற்றிக்கான மகத்தான ஆற்றலை பெற்று உள்ளன. இந்த ஆண்டுக்கான பட்டியலில், இந்தியநிறுவனங்கள் கற்பித்தலில் திறம்பட செயல்பட்டு உள்ளன. ஆனால், சர்வதேச கண்ணோட்டத்தின் அடிப்படையில், உலகளாவிய சராசரிக்கு பின்னால் உள்ளன.

இதை வலுப்படுத்துவதன் மூலம், உயர் கல்விக்கான, நாட்டின் நற்பெயரை உலகளவில் மேலும் உயர்த்தவும், முக்கிய ஆராய்ச்சி ஒத்துழைப்பை ஊக்குவிப்பதுடன், சர்வதேச மாணவர்களை ஈர்க்கவும் உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.475 கோடி மது பொங்கலுக்கு விற்பனை

Added : ஜன 17, 2019 04:13




சென்னை: பொங்கலை முன்னிட்டு, 'டாஸ்மாக்' கடைகளில், 475 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகள் விற்பனையாகி உள்ளன.

தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனத்திற்கு, 4,800 மது கடைகள் உள்ளன. இவற்றில், சராசரியாக தினமும், 80 கோடி ரூபாய் மதிப்பிலான, பீர் மற்றும் மது வகைகள் விற்பனையாகின்றன. இது, வார விடுமுறை, தீபாவளி, ஆங்கில புத்தாண்டு உள்ளிட்ட விசேஷ தினங்களில், 100 கோடி ரூபாயை தாண்டுகிறது.

பொங்கலை முன்னிட்டு, சனிக்கிழமை முதல் நாளை(ஜன.,18) வரை, அரசு விடுமுறை. அதில், நேற்று(17ம் தேதி) மட்டும், டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை. தொடர் விடுமுறையால், மது விற்பனை அதிகம் இருக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, 12ல் இருந்து, 15ம் தேதி வரை, 475 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகள் விற்பனையாகி உள்ளன.

டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தொடர் விடுமுறையால், மது கடைகளில், 12ம் தேதி, 105 கோடி ரூபாய்; 13ல், 120 கோடி ரூபாய்; 14ல், 110 கோடி ரூபாய்; 15ம் தேதி, 140 கோடி ரூபாய்க்கு, மது விற்பனையாகி உள்ளதாக, மாவட்ட மேலாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.
பல்கலை பேராசிரியர் நீக்கம்

Added : ஜன 17, 2019 04:47




கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலம், ஜாதவ்பூர் பல்கலையில் பேராசிரியராக பணியாற்றியர், கனக் சந்திர சர்க்கார், இவர், 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில், 'பெண்களின் கன்னித்தன்மை சீலிடப்பட்ட பாட்டில், அல்லது சீலிடப்பட்ட பாக்கெட் போன்று இருக்க வேண்டும்' என, பதிவிட்டிருந்தார். இது பெரும்சர்ச்சையை ஏற்படுத்தியது; மகளிர் அமைப்புகளும், மாணவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, அவரை, பல்கலை நிர்வாகம், பணிநீக்கம் செய்துள்ளது.
எம்.ஜி.ஆர்., நாணயம் இன்று வெளியீடு

Added : ஜன 17, 2019 05:27 |




சென்னை: எம்.ஜி.ஆரின், 102வது பிறந்த தினத்தை ஒட்டி, அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை, சென்னையில் இன்று(ஜன.,17) முதல்வர் பழனிசாமி வெளியிடுகிறார்.

எம்.ஜி.ஆர்., பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில், சென்னை, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை வளாகத்தில் உள்ள, அவரது சிலைக்கு கீழ், அலங்கரித்து வைக்கப்படும் உருவப்படத்திற்கு, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர், மலர் துாவி மரியாதை செலுத்துகின்றனர். எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா நினைவாக, அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை, முதல்வர் வெளியிடுகிறார்.
தலையங்கம்

வருமானவரி கட்டுபவர்கள் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரா?



கடந்த வாரத்தில் மத்திய அரசாங்கம் யாரும் எதிர்பார்க்காத வகையில் பொதுப்பிரிவினருக்கும் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையிலான மசோதாவை மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தாக்கல் செய்து நிறைவேற்றி, இப்போது ஜனாதிபதி ஒப்புதலை பெற்று சட்டமாகவும் ஆகிவிட்டது.

ஜனவரி 17 2019, 04:00

கடந்த வாரத்தில் மத்திய அரசாங்கம் யாரும் எதிர்பார்க்காத வகையில் பொதுப்பிரிவினருக்கும் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையிலான மசோதாவை மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தாக்கல் செய்து நிறைவேற்றி, இப்போது ஜனாதிபதி ஒப்புதலை பெற்று சட்டமாகவும் ஆகிவிட்டது. ஏற்கனவே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசாங்கத்தில் 15 சதவீத இடஒதுக்கீடும், மலைவாழ் மக்களுக்கு 7.5 சதவீதமும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதமும், ஆக மொத்தம் 49.5 சதவீத இடஒதுக்கீடு இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டின் பல்வேறு தீர்ப்புகளில் இடஒதுக்கீடு என்பது வருமானத்தை மட்டும் அடிப்படையாக வைத்து வழங்கப்படுவதில்லை. சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கியவர்களுக்குத்தான் வழங்கப்படுகிறது என்று அறிவித்திருந்தாலும், பொதுப்பட்டியலில் அதாவது உயர் சாதியினர் அடங்கிய பிரிவில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்காக இப்போது 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த இடஒதுக்கீட்டுக்கு தகுதியாக ஆண்டுக்கு குடும்ப வருமானம் ரூ.8 லட்சத்துக்கு குறைவாக இருக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால் மாதவருமானம் ரூ.66,666 பெறுகிறவர்களெல்லாம் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினராகவே கருதப்படுகிறார்கள். நமது மக்கள்தொகையில் குறைந்தபட்சம் 95 சதவீத மக்களாவது இந்த பட்டியலில்தான் வருவார்கள். இதுதவிர, 5 ஏக்கருக்கு கீழ் விவசாய நிலம் வைத்திருப்பவர்களும் இந்த இடஒதுக்கீட்டின் பலனை அடைய தகுதியுடையவர்கள் ஆவார்கள். மக்கள்தொகையில் 86 சதவீதம் பேர் இந்தக் கணக்கில்தான் இருக்கிறார்கள். மேலும், 1,000 சதுரடிக்கு குறைவான வீடு வைத்திருப்பவர்களும் இந்த இட ஒதுக்கீட்டின் பயனை அடைவார்கள். இந்தியாவில் உள்ள மொத்த வீடுகளில், குறைந்தது 80 சதவீத வீடுகள், 500 சதுரடிக்கும் கீழான வீடுகள்தான். இந்த இடஒதுக்கீட்டு கணக்குப்படி, ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு குறைவாக இருப்பவர்கள் பொருளாதாரத்தில் நலிந்தவர்கள் என்றால், இதில் பெரும்பாலானவர்கள் வருமான வரி கட்டுபவர்களாகத்தான் இருப்பார்கள்.

ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கு மேல் ரூ.5 லட்சம்வரை உள்ளவர்கள் 5 சதவீதம் வருமான வரி கட்டவேண்டும். ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம்வரை வருமானம் பெறுபவர்கள் 20 சதவீதம் வருமான வரி கட்டவேண்டும். ஆக, 20 சதவீத வரி கட்டுபவர்கள் எல்லோரும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினராக கருதப்பட்டு 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்களாக ஆகிவிடுகின்றனர். ஆனால், ரிசர்வ் வங்கி மற்றும் பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு கீழ் உள்ளவர்கள் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினராகவும், ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சம்வரை வருமானம் உள்ளவர்கள் குறைந்த வருவாய் பிரிவினராகவும் கருதப்படுகிறார்கள். தமிழக முதல்–அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் பலனை அடைபவர்களின் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரமாக இருக்கிறது. மத்திய, மாநில அரசுகளின் எந்த நலத்திட்டத்தின் பலனை அடைவதற்கும் குறைந்தபட்ச ஆண்டு வருமான வரம்பு ரூ.8 லட்சம் கிடையாது. ஆனால், மத்திய அரசாங்கத்தில் இப்போது ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு குறைவாக உள்ளவர்கள் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினராக கருதப்பட்டு, இடஒதுக்கீட்டுக்கு தகுதியுடையவர்கள் என்றால், வருமானவரி செலுத்துபவர்கள் உள்பட மத்திய–மாநில அரசுகளின் அனைத்து நலஉதவி திட்டங்களிலும் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம்தான் தகுதிக்கு அடிப்படையாக கருதப்படுமா? என்பதுதான் மக்களிடம் இப்போது உள்ள கேள்வி.

NEWS TODAY 26.08.2026