Thursday, January 17, 2019

சுங்க கட்டணம் ரத்து: ஆணையம் கைவிரிப்பு

Added : ஜன 16, 2019 22:10

'பண்டிகை காலங்களில், தமிழக சுங்கச் சாவடிகளில் கட்டணம் ரத்து செய்வதற்கு வாய்ப்பில்லை' என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்து உள்ளது.சங்கராந்தி விழாவை ஒட்டி, தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில், கட்டணம் ரத்து செய்வதாக, அம்மாநில அரசின் தலைமை செயலர் அறிவித்துள்ளார். ஆந்திராவிலும், சுங்க கட்டணம் ரத்து செய்யப்படுவதாக, அறிவிக்கப்பட்டது.

பொங்கல் பண்டிகையை ஒட்டி, சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர், சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதனால், 13ம் தேதி முதல், சென்னை - திருச்சி, சென்னை - பெங்களூரு, சென்னை - கோல்கட்டா, சென்னை - திருப்பதி, சென்னை பைபாஸ் தேசிய நெடுஞ்சாலைகளில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.சுங்க கட்டணம் செலுத்த, மணிக்கணக்கில் வாகனங்கள் காத்திருந்தன. இதனால், குறித்த நேரத்தில் ஊர் செல்ல முடியாமல், பலரும் பாதிக்கப்பட்டனர். பண்டிகை முடிந்து, நாளை முதல் பலரும், சென்னை திரும்பவுள்ளனர்; கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களை பின்பற்றி, இங்கும் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. ஆனால், தமிழக சுங்கச் சாவடிகளில், கட்டணம் ரத்து செய்வதற்கு வாய்ப்பில்லை என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, ஆணைய தமிழகப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழக சுங்கச் சாவடிகளை, ஒப்பந்த அடிப்படையில், தனியார் நிறுவனங்கள் இயக்கி வருகின்றன. இதற்காக, பல்வேறு நிபந்தனைகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே, இங்கு கட்டணம் ரத்து செய்வதற்கு, தலைமை செயலருக்கு அதிகாரம் இல்லை.ஒருவேளை, அரசு விரும்பினால், அன்றைய வசூலை, சுங்கச் சாவடி நிர்வாகங்களிடம் செலுத்தி, வாகனங்களுக்கு இலவச அனுமதியை பெற்று தர முடியும். இதே பாணியை பின்பற்றி தான், கேரள மாநிலத்தில், சில சுங்கச் சாவடிகளை, அம்மாநில அரசு மூடியுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.


No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024