Sunday, March 1, 2020

பிரமாண்டம்! ராமநாதபுரத்தில்ரூ. 345 கோடியில் மருத்துவக்கல்லூரி....இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் இ.பி.எஸ்.,

Added : மார் 01, 2020 00:16

சென்னை:ராமநாதபுரத்தில், 345 கோடி ரூபாய்; விருதுநகரில், 380 கோடி ரூபாய் செலவில், புதிதாக, இரு அரசு மருத்துவக் கல்லுாரிகள், பிரமாண்டமாக கட்டப்பட உள்ளன. இக்கல்லுாரிகளுக்கு, இன்று முதல்வர் இ.பி.எஸ்., அடிக்கல் நாட்டுகிறார்.

தமிழகத்தில், மருத்துவக் கல்லுாரி இல்லாத மாவட்டங்களில், அரசு மருத்துவக் கல்லுாரிகள் துவங்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, அனுமதி கோரி, மத்திய அரசிடம் தமிழக அரசு விண்ணப்பித்தது. அதை பரிசீலனை செய்த மத்திய அரசு, 2019 அக்., 23ல், ஒரே நேரத்தில், ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகள் துவங்கவும்; அதே மாதம், 27ம் தேதி, மேலும் மூன்று அரசு மருத்துவக் கல்லுாரிகள் துவங்கவும், தமிழகத்திற்கு அனுமதி அளித்தது.

அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு, அரியலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், அரசு மருத்துவக் கல்லுாரிகள் துவங்க, மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டது. ஒரே நிதியாண்டில், 11 புதிய அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கு அனுமதி பெற்றது, தமிழக அரசின் சாதனையாக அமைந்தது. இக்கல்லுாரிகளை துவங்க, மத்திய அரசு, 2,145 கோடி ரூபாய்; மாநில அரசு, 1,430 கோடி ரூபாய் வழங்க உள்ளன.கடந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்ட, ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், நாகப்பட்டினம், திருவள்ளூர், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கு, முதல்வர் நேரில் சென்று, அடிக்கல் நாட்ட உள்ளார். 

அதன்படி, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், இன்று காலை, 10:00 மணிக்கு நடக்கும் பிரமாண்ட விழாவில், 345 கோடி ரூபாயில் கட்டப்பட உள்ள, புதிய மருத்துவக் கல்லுாரிக்கு, முதல்வர் அடிக்கல் நாட்டு கிறார். இன்று மாலை, 3:00 மணிக்கு, விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் விழாவில், 380 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும், அம்மாவட்டத்துக்கான புதிய அரசு மருத்துவக் கல்லுாரிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.மேலும், புதிய திட்டப் பணிகளையும், முடிவுற்ற பணிகளையும் துவக்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளையும், முதல்வர் வழங்குகிறார்.

இக்கல்லுாரியில், வரும் கல்வியாண்டு முதல், 150 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது.இவ்விழாவிற்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், தலைமை வகிக்க உள்ளார். வரும், 4ம் தேதி, கிருஷ்ணகிரி; 5ம் தேதி நாமக்கல்; 7ம் தேதி நாகப்பட்டினம் மருத்துவக் கல்லுாரிகளுக்கு, முதல்வர் அடிக்கல் நாட்ட உள்ளார். கரூரில், 5ம் தேதி மாலை, ஏற்கனவே கட்டப் பட்ட புதிய மருத்துவக் கல்லுாரியை முதல்வர் திறந்து வைக்கிறார்.

திருவாரூரில், 7ம் தேதி மாலை, விவசாயிகள் நடத்தும் பாராட்டு விழா வில் பங்கேற்கிறார்.

எம்.பி.பி.எஸ்.,இடங்கள் அதிகரிக்கும்புதிதாக, 12 அரசு மருத்துவக் கல்லுாரிகள் துவக்கப்பட உள்ளதால், தமிழகத்தில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். தமிழகத்தில், தற்போது, 24 அரசு மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. அவற்றில், 3,350 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன.புதிதாக அனுமதி அளிக்கப்பட்டுள்ள, 11 அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் கரூர் அரசு மருத்துவ கல்லுாரியில், தலா, 150 எம்.பி.பி.எஸ்., சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, மருத்துவம் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை, 5,150 ஆக அதிகரிக்கும்.
மின் சிக்கனம் அவசியம் வெயிலால் கட்டணம் எகிறும்

Added : பிப் 29, 2020 23:52

வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வீடுகளில், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வில்லை எனில், அதிக மின் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் உருவாகும்.

தமிழக மின் வாரியம், 2 கோடி வீடுகளுக்கு, 100 யூனிட் இலவசமாகவும்; 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்குகிறது. அதற்கு மேல் மின்சாரம் சென்றால், முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும். இலவசம் மற்றும் மானிய மின்சாரத்திற்காக, மின் வாரியத்திற்கு ஏற்படும் செலவை, தமிழக அரசு மானியமாக வழங்கு கிறது. கோடை காலத்தில், வீடுகளில் வழக்கத்தை விட, மின் பயன்பாடு அதிகம் இருக்கும். மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, 'ஸ்டேடிக்' என்ற, மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. அதில், முந்தைய மீட்டர்கள் போல இல்லாமல், மின் பயன்பாடு துல்லியமாக பதிவாகிறது. உதாரணமாக, 'சுவிட்ச் ஆன்' செய்து விட்டு, 'டிவி'யை இயக்கவில்லை என்றாலும், அதற்கான மின் பயன்பாடு, மீட்டரில் பதிவாகும்.மேலும், மின் ஊழியர்களும், குறித்த காலத்தில், மின் பயன்பாட்டை கணக்கெடுக்க வருவதில்லை. இதனால், வீடுகளில் மின்சாரத்தை சிக்கனமாகவும், கவனமாகவும் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதன் வாயிலாக, அதிக மின் கட்டணத்தில் இருந்து தப்பிக்கலாம். இல்லையெனில், வழக்கத்தை விட, மின் கட்டணம் அதிகம் வந்து விட்டதாக கூறி, மின் வாரிய அலுவலகங்களுக்கு அலைய வேண்டி இருக்கும். - நமது நிருபர் -

30 ஆயிரம் மருத்துவமனைகளுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப அரசு முடிவு

Updated : பிப் 29, 2020 23:47 | Added : பிப் 29, 2020 23:37

சென்னை:தமிழகத்தில் பதிவு உரிமம் கோரி விண்ணப்பிக்காத, 30 ஆயிரம் மருத்துவமனைகள், கிளினிக்குகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி, நடவடிக்கை எடுக்க, மருத்துவச் சேவைகள் இயக்கம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில், 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளும், கிளினிக்குகளும் உள்ளன. இவை, பதிவு உரிமம் பெறுவதும், ஐந்தாண்டுக்கு ஒருமுறை புதுப்பிப்பதும் கட்டாயம்.இதுவரை, சென்னையில், 2,000 உட்பட, மாநிலம் முழுவதும், 36 ஆயிரத்து, 598 மருத்துவமனைகள் மட்டுமே, பதிவு உரிமம் கோரி, மருத்துவச் சேவைகள் இயக்ககத்தில் விண்ணப்பித்துள்ளன. பதிவு உரிமம் கோரியவற்றில், 7,000க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.இதில், 500 மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் சரியாக இருப்பதால், அவற்றுக்கு, ஓரிரு வாரங்களில், பதிவு உரிமம் வழங்கப்பட உள்ளது. போதிய உள்கட்டமைப்பு இல்லாத மருத்துவமனைகளில், அவற்றை மேம்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பதிவு உரிமம் கோரி விண்ணப்பிக்காமல், தமிழகத்தில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், கிளினிக்குகள் செயல்படுவது தெரிய வந்துள்ளன.இந்த மருத்துவமனைகள், பதிவு உரிமம் கோரி விண்ணப்பிக்காதது குறித்து, 15 நாட்களில் பதிலளிக்கும்படி, 'நோட்டீஸ்' அனுப்ப, மருத்துவச் சேவைகள் இயக்ககம் முடிவு செய்துள்ளது. இவற்றையும் பொருட்படுத்தாவிட்டால், சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, மருத்துவச் சேவைகள் இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தர்பூசணி விளைச்சல் அமோகம்: கிலோ ரூ. 10 க்கு விற்பனை

Added : பிப் 29, 2020 23:40

சென்னை:தமிழகத்தில் தர்பூசணி பழங்களின் விளைச்சல் அதி கரித்துள்ளதால், கிலோ, 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில், தர் பூசணி பழங்கள் பயிரிடப் படுகின்றன. முன்னர் கோடைக்காலத்தில் மட்டுமே கிடைத்து வந்த தர்பூசணி, தற்போது, ஆண்டு முழுவதும் விளைகிறது. கோடைக்காலம் துவங்க உள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், தர்பூசணி விளைச்சல் களைக்கட்ட துவங்கியுள்ளது. அங்கு அறுவடை செய்யப்பட்டும் தர்பூசணி பழங்கள், லாரிகள், டிராக்டர் கள் வாயிலாக, சென்னை கோயம்பேடு உள்பட, மாநிலம் முழுவதும் உள்ள மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்கு வருகின்றன. விவசாயிகள், சாலை ஓரங்களில் வாகனங்களிலும், பிளாட்பாரங்களிலும் வைத்து, தர்பூசணி பழங்களை விற்பனை செய்ய துவங்கி உள்ளனர். சென்னையில், கிலோ தர்பூசணி, 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதன்படி, பெரிய அளவிலான ஒரு பழம், 50 ரூபாய்க்கு கிடைக்கிறது. இவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்று, சுவைக்க துவங்கி உள்ளனர்.
போவோமா திண்டுக்கல்

Added : பிப் 29, 2020 23:15


வெளிநாடு செல்ல ஆசைப்படலாம்; தப்பில்லை. ஆனால், காசு வேணுமே! குழந்தைகளை திருப்தி செய்யவும், நம் புத்துணர்ச்சிக்காகவும் வௌியூர் செல்வது நல்லதாச்சே. கையும் கடிக்காமல், மகிழ்ச்சியையும் கொடுக்க, நம் தமிழகத்திலேயே இருக்கிறது சொர்க்க பூமிகள்!

திண்டுக்கல் நகரம், வெங்காயம் மற்றும் நிலக்கடலையின் மொத்த விற்பனைச் சந்தையாகத் திகழ்கிறது. தமிழகத்தின் முக்கிய கோடை வாழிடமான, 'மலைகளின் இளவரசி' என்று அழைக்கப்படும் கொடைக்கானல் இம்மாவட்டத்தில் தான் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில், 2,133 மீட்டர் உயரத்தில், இது அமைந்துள்ளது. பாலார், பொரந்தலார், வரதமாநதி, பாபப்பாலார், மருமமாநதி ஆகியவை இங்குள்ள அணைகளாகும். இந்த மாவட்டத்தில் நிலக்கோட்டை பித்தளைப் பாத்திரங்களும், நகைகளும் பெயர் பெற்றவை. மலர் வகைகளும், திராட்சை பழங்களும் மிகுதியாகப் பயிரிடப்படுகின்றன.வெண்ணெய் வியாபாரமும் இங்கு செழிப்பாக நடைபெறுகிறது. வத்தலகுண்டு உருளைக்கிழங்கு சிறப்பான சந்தையாகும். ஒரு காலத்தில் திண்டுக்கல் பூட்டுக்கும், தோல் பொருட்களுக்கும் மிகவும் புகழ்பெற்ற இடம்.பரப்பளவு 7,469 சதுர கி.மீமக்கள் தொகை34,72,578(2011)எஸ்.டி.டி., குறியீடு04342

அபிராமி அம்மன் கோவில்

திண்டுக்கல் பஸ் நிலையத்திலிருந்து, திண்டுக்கல் - தேனி வழியாக கோட்டரக்கரா நெடுஞ்சாலை அபிராமி அம்மன் கோவிலை, 6 நிமிடத்தில் சென்றடையலாம். தொலைவு: 1.4 கி.மீட்டர்திண்டுக்கல் நகரின் மையத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. அபிராமி அம்மனுக்கு வைக்கப்படும் நவராத்திரி கொலு, இங்கு மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் குடிகொண்டுள்ள ஞானாம்பிகை அம்மனுக்கு லட்சார்ச்சனை செய்வர். ஆடி வெள்ளிக்கிழமையின் போது, அபிராமி அம்மன் பூப்பல்லக்கில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

துாய அந்தோணியார் திருக்கோவில்

திண்டுக்கல் பஸ் நிலையத்திலிருந்து, ராஜாக்காப்பட்டி - திண்டுக்கல் கலெக்டர் ஆபீஸ் - தாடிக்கொம்பு வழியாக மாறம்பாடி துாய அந்தோணியார் திருக்கோவிலுக்கு, 31 நிமிடத்தில் செல்லலாம். தொலைவு: 22.2 கி.மீ.,இந்தியாவில் உள்ள புகழ் பெற்ற கோவில்களில் இதுவும் ஒன்று. இது புனித அந்தோணியாரின் ஆசிபெற்றது. மாறம்பாடியில் உள்ள இக்கோவில், 300 ஆண்டுகள் பழமை உடையது. துாய துறவியான அந்தோணியாரின் திருநாட்களாக ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 16, 17, 18 ஆகிய நாட்கள் கொண்டாடப்படுகின்றன. இந்த மூன்று நாட்களில் மட்டும், இரண்டு லட்சம் மக்கள் வந்து கூடுகின்றனர்.இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் அந்தோணியாருக்கு எழுப்பப்பட்டுள்ள மிகப்பெரிய திருக்கோவில் இதுவேயாகும். வெளிநாடுகளிலிருந்து எண்ணற்ற அடியவர்கள் இங்கு வந்து, அவரது அருள் பெற்றுச் செல்கின்றனர்; அற்புதங்கள் நடைபெறுவதையும் கண்டு களிக்கின்றனர். இதில் வியக்கத்தக்க செய்தி என்னவெனில், வேற்றுச் சமயத்தவரும் விரும்பி வந்து, அவரை வழிபட்டுச் செல்கின்றனர்.

திண்டுக்கல் கோட்டை

திண்டுக்கல் பஸ் நிலையத்திலிருந்து, திண்டுக்கல் - தேனி, கோட்டரக்கரா நெடுஞ்சாலை வழியாக, முத்தபுகுபட்டி கோட்டையை, 12 நிமிடத்தில் அடையலாம். தொலைவு: 2.8 கி.மீ.,திண்டுக்கல்லில் உள்ள மலைக்குன்று, ஒரு கோணத்தில் பார்த்தால், தலையணைத் திண்டு போல காட்சியளிக்கிறது. இதனாலேயே இந்நகரத்திற்குத் திண்டுக்கல் எனப்பெயர் வந்தது என்று சொல்லப்படுகிறது. இம்மலை மீது, 280 அடி உயரத்தில் அமைந்துள்ள கோட்டை இது. மதுரையை ஆண்ட முத்துகிருஷ்ண நாயக்கர், கி.பி., 1605ல் இந்தக் கோட்டையைக் கட்ட ஆரம்பித்தார். பின், ஆட்சிக்கு வந்த திருமலை நாயக்கர், கி.பி., 1623ல் துவங்கி, கி.பி., 1659ல் கோட்டையின் முழுப்பகுதியையும் நிறைவு செய்தார். அடுத்து, கி.பி., 1755ல் ஹைதர் அலி, தன் மனைவி பகருன்னிசாவையும், 5 வயது மகன் திப்புவையும் இங்கு தான் ஆங்கிலேயர்களுக்குத் தெரியாமல் மறைத்து வைத்தார். கி.பி., 1784 முதல், கி.பி., 1790 வரை, இக்கோட்டை, மாவீரன் திப்பு சுல்தானின் அதிகாரத்தின் கீழ் வந்தபோது, சையத் இப்ராகிம் என்ற அதிகாரியிடம் கட்டளையிட்டு, இக்கோட்டையின் மதில்களைச் சீரமைத்துப் பலப்படுத்தியதாகவும் ஒரு வரலாறு உண்டு. மைசூர் போரில், 1790ல் மாவீரன் திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்ட பின், ஆங்கிலேயப் படைகள் இக்கோட்டையைக் கைப்பற்றின.

தாடிக்கொம்பு -பெருமாள் கோவில்

திண்டுக்கல்லிலிருந்து கரூர் செல்லும் சாலையில் இக்கோவில், 5 கி.மீ., தொலைவில் உள்ளது. சித்திரை மாதத்தில் இந்த அழகர் பெருமாளுக்கு, 12 நாட்கள் சிறப்புப் பூஜை உண்டு. சித்ரா பவுர்ணமி அன்று அழகர் பெருமாள் தரிசனம் தந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

செயின்ட் ஜான் தேவாலயம்

ஏ.எம்.சி., சாலையிலிருந்து, திண்டுக்கல் - தேனி வழியாக கோட்டரக்கரா நெடுஞ்சாலை செயின்ட் ஜான், தேவாலயத்தை, 6 நிமிடத்தில் சென்றடையலாம். தொலைவு: 500 மீட்டர்தாமஸ் பெர்னாண்டோ என்ற ஆங்கிலேயரால் இத்தேவாலயம், 125 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. ஜனவரி மாதக்கடைசி வெள்ளியன்று துவங்கும் இவ்வாலயத் திருவிழா தொடர்ந்து, 15 நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது.கடந்த, 1866-ல் துவங்கிய இவ்வாலயப்பணி, 1872ல் நிறைவு பெற்றது. மற்ற தேவாலயங்களுக்கெல்லாம் தலைமையான இந்த செயின்ட் ஜான் தேவாலயம் மிகப்புகழ் பெற்றதாகும்.

காவடி

நீண்ட மூங்கில் கழியொன்றின் இரு முனைகளிலும் பாத்திரங்களைத் தொங்கவிட்டு அவற்றை மலராலும், மணிகளாலும் அழகுபடுத்தியிருப்பர். அந்தப் பாத்திரங்களில் அரிசி, பால், பன்னீர் ஆகியவற்றை நிரப்பி, மேள தாளம் முழங்கப் பாடியும், ஆடியும் சென்று முருகன் திருவடிகளில் காணிக்கையாகச் செலுத்துவர். இவை, பால் காவடி என்றும் பன்னீர்க் காவடி என்றும் அழைக்கப்பெறும். நுாற்றுக்கணக்கான மைல்கள் தூரம், கால்நடையாகவே நடந்து சென்று காவடி செலுத்துவர். மூங்கில் குச்சிகளை வளைத்துக் கட்டி மலர்களால் அலங்கரித்துத் தோள்களில் சுமந்து செல்வர். இது ஒரு வகையான காவடி. முருகன் திருத்தலங்களில் தான், காவடி எடுத்து பக்தர்கள் ஆடிப்பாடும் காட்சியைக் காணலாம்.காவடியை நேர்த்திக் கடனாகவே பக்தர்கள் நேர்ந்து, முருகன் திருவடிகளில் காணிக்கையாக்குகின்றனர். காவடி எடுத்துச் செல்லும் போது, பக்தர்கள் பாடும் பாட்டு, 'காவடிச்சித்து' என்று அழைக்கப்பெறும்.
வெளிநாடு தான்; ஆனால் விசா வேண்டாம்

Added : பிப் 29, 2020 23:09




கடல் அலைகள் தாலாட்ட, கடற்காற்று உங்கள் நாசிகளில் கடலின் வாசனைகளை நிரப்ப, பனை மரங்கள் சூழ உங்கள் நாள் ஆரம்பித்தால் எப்படி இருக்கும். அத்தகைய அழகான தீவு தான், 'ரீ யூனியன் ஐலண்ட்!'
யுனெஸ்கோவால், உலக பாரம்பரிய பூமி என்று சான்றிதழ் பெற்ற, ஐரோப்பிய நாடான பிரான்ஸ் கட்டுப்பாட்டில் உள்ள, ரீ யூனியன் ஐலண்ட் தீவு, மொரீஷியஸ் நாட்டிலிருந்து, 210 கி.மீ., தொலைவில் உள்ளது. இந்தியர்களுக்கு இங்கு செல்ல விசா தேவையில்லை என்பது கூடுதல் தகவல்.இரண்டரை லட்சம் இந்தியர்கள் வாழும் இந்த தீவில், இறங்கிய நிமிடத்திலிருந்து நீங்கள் அதன் வெவ்வேறு கலாசாரத்தை அனுபவிக்கலாம். அழகிய உப்பங்கழிகள் நிறைந்த ரீ யூனியன் தீவில், மரகத பச்சை நிறக் கடலில், 30 கி.மீ., துாரத்திற்கு, பவளப் பாறைகள் அமைந்துள்ளன. இந்த தீவு, 1,000 கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த தீவை நடந்து சென்றோ, குதிரை மேலோ அல்லது பைக்குகளிலோ நம் வசதிக்கேற்ப சில மணி நேரங்களிலோ அல்லது சில நாட்கள் தங்கியோ சுற்றிப் பார்க்கலாம். இத்தீவை சுற்றி, 31 விடுதிகள் உள்ளன. இவை அனைத்தும், இயற்கை சூழ்நிலையிலேயே அமைந்துள்ளன.பல நீர்வீழ்ச்சிகள், நதிகள் மற்றும் உப்பங்கழிகள் உள்ளன. இவற்றில் படகுகள், ஆழ்கடல் நீச்சல் மூலம் பல சாகச விளையாட்டுகளை மேற்கொள்ளலாம். ரீ யூனியன் தீவில் பல தமிழ் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் சீன கோவில்களும் உள்ளன. இங்கு, பல நாட்டவர்களின் பண்டிகைகளும் பெருமளவில் கொண்டாடப்படுகின்றன.

என்ன சாப்பிடலாம்?

எல்லா உணவும் அரிசி சார்ந்தே உள்ளன. இந்திய சீன உணவுகள், கறி மற்றும் மீன் உணவுகள், தக்காளி, பூண்டு, மஞ்சள், வெங்காயம் போட்டு தயாரிக்கப்படுகின்றன. கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை மது வகையும் பரிமாறப்படுகிறது. இதை நேரடியாகவோ அல்லது சர்க்கரை மற்றும் தேனுடனோ கலந்து தருகின்றனர். இங்கு சில எரிமலைகளும் இருக்கின்றன. அவற்றை சிறிய விமானங்கள் மூலமாகவோ, ஹெலிகாப்டர் மூலமாகவோ பார்வையிடலாம். இத்தீவு, 3,000 ஆண்டுகளுக்கு முன் கடலுக்குள் ஒரு எரிமலை வெடித்ததிலிருந்து உருவாகியது. எரிமலைகளை சுற்றி, மலைகளும், வளங்களும், விளை நிலங்களும், நீர்வீழ்ச்சிகளும் உருவாகின. இதன் தென் பகுதியில் எரிமலையில் ஆன கரிய நிற மணற்பரப்பை கொண்ட கடற்கரையை காணலாம். உலகின் அழகிய கோல்ப் மைதானங்களும் இங்குள்ளன.

எப்படி செல்லலாம்?

சென்னையிலிருந்து, ஏர் ஆஸ்ட்ரல் நிறுவனத்தின் வாரமிருமுறை விமானத்தில் டில்லி அல்லது மும்பை சென்று, அங்கிருந்து ரீ யூனியன் சென்றடையலாம்.

பாதுகாப்பு

இந்த தீவில் வசிப்பவர்கள் தீவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்பவர்களை மரியாதையுடனும், பாசத்துடனும் நடத்துகின்றனர். திருட்டு பயம் அறவே கிடையாது.

உடல் நலம்

கொசுக்கள் உள்ளதால், அதற்கான பாதுகாப்பு அவசியம். பலவகை மருந்துகளும், மருந்து கடைகளில் கிடைக்கின்றன. வெயில் அதிகம் என்பதால், அதற்காக பாதுகாப்புகளுடன் பயணிக்க வேண்டும். மெல்லிய கதர் ஆடைகள், கறுப்பு கண்ணாடிகள், தொப்பிகள் தேவைப்படுகின்றன. வெயிலுக்கான களிம்புகளும், கிரீம்களும் தேவைப்படும்.
சீதோஷ்ண நிலை

மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை குளிர் காலம் என்பதால், 20 டிகிரி வரை செல்கிறது. மலைகளில், 4 டிகிரி வரை கூட செல்லலாம். அங்கு, பனி படர்ந்து காணப்படுகிறது.இத்தீவிற்கு செல்ல விதிமுறைகள்ரீயூனியன் தீவு, பிரான்ஸ் நாட்டின் ஒரு பகுதியாக கருதப்பட்டாலும், இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு, 15 நாட்கள் வரை தங்குவதற்கு விசா தேவையில்லை.

உள்நாட்டு பயணங்கள்

நாமே ஓட்டிச் செல்லும் வாடகை கார்களே பெரும்பாலும் உபயோகப் படுத்தப்படுகின்றன. நம் ஊரை போலவே வலது பக்கம் ஓட்டக்கூடிய கார்களே உள்ளன. இந்த கார்களை வாடகைக்கு எடுக்க, சர்வதேச ஓட்டுனர் உரிமம் அல்லது பிரான்ஸ் நாட்டின் ஓட்டுனர் உரிமம் தேவைப்படும். இந்தியாவுக்கும், ரீ யூனியன் தீவிற்குமான நேர வித்தியாசம் நம் நாட்டிலிருந்து ஒன்றரை மணி நேரம் பின்னால் உள்ளது. ரீ யூனியன் தீவில் நேரம் காலை, 8:00 என்றால், இந்தியாவில், காலை, 9:30.நாணயம் மற்றும் வங்கி சேவைகள்பிரான்ஸ் நாட்டின் ஒரு பகுதியாகவும், ஐரோப்பியாவின் ஒரு பகுதியாகவும் இருப்பதால், 'யூரோ' நாணயங்கள் உபயோகப்படுகின்றன. விசா, மாஸ்டர் கார்டு, டைனர்ஸ் கார்டு, யூரோ கார்டு மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டுகளை உபயோகிக்கலாம்.
இதே நாளில் அன்று

Updated : பிப் 29, 2020 21:50 | Added : பிப் 29, 2020 21:48

மார்ச் 1, 1910

எம்.கே.தியாகராஜ பாகவதர்: நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில், கிருஷ்ணமூர்த்தி --- மாணிக்கத்தம்மாள் தம்பதிக்கு, 1910, மார்ச் 1ல் பிறந்தார். கர்நாடக இசையை, முறையாக கற்றுத் தேர்ந்த இவர், 1926ல், திருச்சி, பொன்மலையில்,பவளக்கொடிஎன்ற நாடகத்தில், அர்ஜுனனாக நடித்தார். அது, 1934ல், திரைப்படமாக வெளியாகி, வெற்றி பெற்றது. அதில் இடம் பெற்றிருந்த, 55 பாடல்களில், 22 பாடல்களை, தியாகராஜ பாகவதர் பாடியிருந்தார்.இவர் நடித்த,நவீன சாரங்கதாரா, சத்தியசீலன், சிந்தாமணி, அம்பிகாபதி, திருநீலகண்டர், அசோக் குமார், சிவகவி, ஹரிதாஸ்ஆகியவை, வெற்றிப் படங்களாக அமைந்தன.ஹரிதாஸ்படத்தில் இடம் பெற்ற, 'மன்மத லீலையை...' என்ற பாடல் பிரபலமானது. லட்சுமிகாந்தன் என்பவர் கொலை வழக்கில், பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் கைது செய்யப்பட்டனர். பின், வழக்கில் இருந்து, இருவரும் விடுவிக்கப்பட்டனர். சிறையிலிருந்து வெளி வந்ததும், இவர் நடித்த,ராஜமுக்தி, அமரகவிஉள்ளிட்ட படங்கள், சரிவர ஓடவில்லை. 1959, நவ., 1ல் காலமானார்.அவர் பிறந்த தினம் இன்று.

NEWS TODAY 06.12.2025