Sunday, March 1, 2020

30 ஆயிரம் மருத்துவமனைகளுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப அரசு முடிவு

Updated : பிப் 29, 2020 23:47 | Added : பிப் 29, 2020 23:37

சென்னை:தமிழகத்தில் பதிவு உரிமம் கோரி விண்ணப்பிக்காத, 30 ஆயிரம் மருத்துவமனைகள், கிளினிக்குகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி, நடவடிக்கை எடுக்க, மருத்துவச் சேவைகள் இயக்கம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில், 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளும், கிளினிக்குகளும் உள்ளன. இவை, பதிவு உரிமம் பெறுவதும், ஐந்தாண்டுக்கு ஒருமுறை புதுப்பிப்பதும் கட்டாயம்.இதுவரை, சென்னையில், 2,000 உட்பட, மாநிலம் முழுவதும், 36 ஆயிரத்து, 598 மருத்துவமனைகள் மட்டுமே, பதிவு உரிமம் கோரி, மருத்துவச் சேவைகள் இயக்ககத்தில் விண்ணப்பித்துள்ளன. பதிவு உரிமம் கோரியவற்றில், 7,000க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.இதில், 500 மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் சரியாக இருப்பதால், அவற்றுக்கு, ஓரிரு வாரங்களில், பதிவு உரிமம் வழங்கப்பட உள்ளது. போதிய உள்கட்டமைப்பு இல்லாத மருத்துவமனைகளில், அவற்றை மேம்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பதிவு உரிமம் கோரி விண்ணப்பிக்காமல், தமிழகத்தில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், கிளினிக்குகள் செயல்படுவது தெரிய வந்துள்ளன.இந்த மருத்துவமனைகள், பதிவு உரிமம் கோரி விண்ணப்பிக்காதது குறித்து, 15 நாட்களில் பதிலளிக்கும்படி, 'நோட்டீஸ்' அனுப்ப, மருத்துவச் சேவைகள் இயக்ககம் முடிவு செய்துள்ளது. இவற்றையும் பொருட்படுத்தாவிட்டால், சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, மருத்துவச் சேவைகள் இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024