Sunday, March 1, 2020

போவோமா திண்டுக்கல்

Added : பிப் 29, 2020 23:15


வெளிநாடு செல்ல ஆசைப்படலாம்; தப்பில்லை. ஆனால், காசு வேணுமே! குழந்தைகளை திருப்தி செய்யவும், நம் புத்துணர்ச்சிக்காகவும் வௌியூர் செல்வது நல்லதாச்சே. கையும் கடிக்காமல், மகிழ்ச்சியையும் கொடுக்க, நம் தமிழகத்திலேயே இருக்கிறது சொர்க்க பூமிகள்!

திண்டுக்கல் நகரம், வெங்காயம் மற்றும் நிலக்கடலையின் மொத்த விற்பனைச் சந்தையாகத் திகழ்கிறது. தமிழகத்தின் முக்கிய கோடை வாழிடமான, 'மலைகளின் இளவரசி' என்று அழைக்கப்படும் கொடைக்கானல் இம்மாவட்டத்தில் தான் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில், 2,133 மீட்டர் உயரத்தில், இது அமைந்துள்ளது. பாலார், பொரந்தலார், வரதமாநதி, பாபப்பாலார், மருமமாநதி ஆகியவை இங்குள்ள அணைகளாகும். இந்த மாவட்டத்தில் நிலக்கோட்டை பித்தளைப் பாத்திரங்களும், நகைகளும் பெயர் பெற்றவை. மலர் வகைகளும், திராட்சை பழங்களும் மிகுதியாகப் பயிரிடப்படுகின்றன.வெண்ணெய் வியாபாரமும் இங்கு செழிப்பாக நடைபெறுகிறது. வத்தலகுண்டு உருளைக்கிழங்கு சிறப்பான சந்தையாகும். ஒரு காலத்தில் திண்டுக்கல் பூட்டுக்கும், தோல் பொருட்களுக்கும் மிகவும் புகழ்பெற்ற இடம்.பரப்பளவு 7,469 சதுர கி.மீமக்கள் தொகை34,72,578(2011)எஸ்.டி.டி., குறியீடு04342

அபிராமி அம்மன் கோவில்

திண்டுக்கல் பஸ் நிலையத்திலிருந்து, திண்டுக்கல் - தேனி வழியாக கோட்டரக்கரா நெடுஞ்சாலை அபிராமி அம்மன் கோவிலை, 6 நிமிடத்தில் சென்றடையலாம். தொலைவு: 1.4 கி.மீட்டர்திண்டுக்கல் நகரின் மையத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. அபிராமி அம்மனுக்கு வைக்கப்படும் நவராத்திரி கொலு, இங்கு மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் குடிகொண்டுள்ள ஞானாம்பிகை அம்மனுக்கு லட்சார்ச்சனை செய்வர். ஆடி வெள்ளிக்கிழமையின் போது, அபிராமி அம்மன் பூப்பல்லக்கில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

துாய அந்தோணியார் திருக்கோவில்

திண்டுக்கல் பஸ் நிலையத்திலிருந்து, ராஜாக்காப்பட்டி - திண்டுக்கல் கலெக்டர் ஆபீஸ் - தாடிக்கொம்பு வழியாக மாறம்பாடி துாய அந்தோணியார் திருக்கோவிலுக்கு, 31 நிமிடத்தில் செல்லலாம். தொலைவு: 22.2 கி.மீ.,இந்தியாவில் உள்ள புகழ் பெற்ற கோவில்களில் இதுவும் ஒன்று. இது புனித அந்தோணியாரின் ஆசிபெற்றது. மாறம்பாடியில் உள்ள இக்கோவில், 300 ஆண்டுகள் பழமை உடையது. துாய துறவியான அந்தோணியாரின் திருநாட்களாக ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 16, 17, 18 ஆகிய நாட்கள் கொண்டாடப்படுகின்றன. இந்த மூன்று நாட்களில் மட்டும், இரண்டு லட்சம் மக்கள் வந்து கூடுகின்றனர்.இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் அந்தோணியாருக்கு எழுப்பப்பட்டுள்ள மிகப்பெரிய திருக்கோவில் இதுவேயாகும். வெளிநாடுகளிலிருந்து எண்ணற்ற அடியவர்கள் இங்கு வந்து, அவரது அருள் பெற்றுச் செல்கின்றனர்; அற்புதங்கள் நடைபெறுவதையும் கண்டு களிக்கின்றனர். இதில் வியக்கத்தக்க செய்தி என்னவெனில், வேற்றுச் சமயத்தவரும் விரும்பி வந்து, அவரை வழிபட்டுச் செல்கின்றனர்.

திண்டுக்கல் கோட்டை

திண்டுக்கல் பஸ் நிலையத்திலிருந்து, திண்டுக்கல் - தேனி, கோட்டரக்கரா நெடுஞ்சாலை வழியாக, முத்தபுகுபட்டி கோட்டையை, 12 நிமிடத்தில் அடையலாம். தொலைவு: 2.8 கி.மீ.,திண்டுக்கல்லில் உள்ள மலைக்குன்று, ஒரு கோணத்தில் பார்த்தால், தலையணைத் திண்டு போல காட்சியளிக்கிறது. இதனாலேயே இந்நகரத்திற்குத் திண்டுக்கல் எனப்பெயர் வந்தது என்று சொல்லப்படுகிறது. இம்மலை மீது, 280 அடி உயரத்தில் அமைந்துள்ள கோட்டை இது. மதுரையை ஆண்ட முத்துகிருஷ்ண நாயக்கர், கி.பி., 1605ல் இந்தக் கோட்டையைக் கட்ட ஆரம்பித்தார். பின், ஆட்சிக்கு வந்த திருமலை நாயக்கர், கி.பி., 1623ல் துவங்கி, கி.பி., 1659ல் கோட்டையின் முழுப்பகுதியையும் நிறைவு செய்தார். அடுத்து, கி.பி., 1755ல் ஹைதர் அலி, தன் மனைவி பகருன்னிசாவையும், 5 வயது மகன் திப்புவையும் இங்கு தான் ஆங்கிலேயர்களுக்குத் தெரியாமல் மறைத்து வைத்தார். கி.பி., 1784 முதல், கி.பி., 1790 வரை, இக்கோட்டை, மாவீரன் திப்பு சுல்தானின் அதிகாரத்தின் கீழ் வந்தபோது, சையத் இப்ராகிம் என்ற அதிகாரியிடம் கட்டளையிட்டு, இக்கோட்டையின் மதில்களைச் சீரமைத்துப் பலப்படுத்தியதாகவும் ஒரு வரலாறு உண்டு. மைசூர் போரில், 1790ல் மாவீரன் திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்ட பின், ஆங்கிலேயப் படைகள் இக்கோட்டையைக் கைப்பற்றின.

தாடிக்கொம்பு -பெருமாள் கோவில்

திண்டுக்கல்லிலிருந்து கரூர் செல்லும் சாலையில் இக்கோவில், 5 கி.மீ., தொலைவில் உள்ளது. சித்திரை மாதத்தில் இந்த அழகர் பெருமாளுக்கு, 12 நாட்கள் சிறப்புப் பூஜை உண்டு. சித்ரா பவுர்ணமி அன்று அழகர் பெருமாள் தரிசனம் தந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

செயின்ட் ஜான் தேவாலயம்

ஏ.எம்.சி., சாலையிலிருந்து, திண்டுக்கல் - தேனி வழியாக கோட்டரக்கரா நெடுஞ்சாலை செயின்ட் ஜான், தேவாலயத்தை, 6 நிமிடத்தில் சென்றடையலாம். தொலைவு: 500 மீட்டர்தாமஸ் பெர்னாண்டோ என்ற ஆங்கிலேயரால் இத்தேவாலயம், 125 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. ஜனவரி மாதக்கடைசி வெள்ளியன்று துவங்கும் இவ்வாலயத் திருவிழா தொடர்ந்து, 15 நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது.கடந்த, 1866-ல் துவங்கிய இவ்வாலயப்பணி, 1872ல் நிறைவு பெற்றது. மற்ற தேவாலயங்களுக்கெல்லாம் தலைமையான இந்த செயின்ட் ஜான் தேவாலயம் மிகப்புகழ் பெற்றதாகும்.

காவடி

நீண்ட மூங்கில் கழியொன்றின் இரு முனைகளிலும் பாத்திரங்களைத் தொங்கவிட்டு அவற்றை மலராலும், மணிகளாலும் அழகுபடுத்தியிருப்பர். அந்தப் பாத்திரங்களில் அரிசி, பால், பன்னீர் ஆகியவற்றை நிரப்பி, மேள தாளம் முழங்கப் பாடியும், ஆடியும் சென்று முருகன் திருவடிகளில் காணிக்கையாகச் செலுத்துவர். இவை, பால் காவடி என்றும் பன்னீர்க் காவடி என்றும் அழைக்கப்பெறும். நுாற்றுக்கணக்கான மைல்கள் தூரம், கால்நடையாகவே நடந்து சென்று காவடி செலுத்துவர். மூங்கில் குச்சிகளை வளைத்துக் கட்டி மலர்களால் அலங்கரித்துத் தோள்களில் சுமந்து செல்வர். இது ஒரு வகையான காவடி. முருகன் திருத்தலங்களில் தான், காவடி எடுத்து பக்தர்கள் ஆடிப்பாடும் காட்சியைக் காணலாம்.காவடியை நேர்த்திக் கடனாகவே பக்தர்கள் நேர்ந்து, முருகன் திருவடிகளில் காணிக்கையாக்குகின்றனர். காவடி எடுத்துச் செல்லும் போது, பக்தர்கள் பாடும் பாட்டு, 'காவடிச்சித்து' என்று அழைக்கப்பெறும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024