Sunday, March 1, 2020

பிரமாண்டம்! ராமநாதபுரத்தில்ரூ. 345 கோடியில் மருத்துவக்கல்லூரி....இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் இ.பி.எஸ்.,

Added : மார் 01, 2020 00:16

சென்னை:ராமநாதபுரத்தில், 345 கோடி ரூபாய்; விருதுநகரில், 380 கோடி ரூபாய் செலவில், புதிதாக, இரு அரசு மருத்துவக் கல்லுாரிகள், பிரமாண்டமாக கட்டப்பட உள்ளன. இக்கல்லுாரிகளுக்கு, இன்று முதல்வர் இ.பி.எஸ்., அடிக்கல் நாட்டுகிறார்.

தமிழகத்தில், மருத்துவக் கல்லுாரி இல்லாத மாவட்டங்களில், அரசு மருத்துவக் கல்லுாரிகள் துவங்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, அனுமதி கோரி, மத்திய அரசிடம் தமிழக அரசு விண்ணப்பித்தது. அதை பரிசீலனை செய்த மத்திய அரசு, 2019 அக்., 23ல், ஒரே நேரத்தில், ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகள் துவங்கவும்; அதே மாதம், 27ம் தேதி, மேலும் மூன்று அரசு மருத்துவக் கல்லுாரிகள் துவங்கவும், தமிழகத்திற்கு அனுமதி அளித்தது.

அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு, அரியலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், அரசு மருத்துவக் கல்லுாரிகள் துவங்க, மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டது. ஒரே நிதியாண்டில், 11 புதிய அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கு அனுமதி பெற்றது, தமிழக அரசின் சாதனையாக அமைந்தது. இக்கல்லுாரிகளை துவங்க, மத்திய அரசு, 2,145 கோடி ரூபாய்; மாநில அரசு, 1,430 கோடி ரூபாய் வழங்க உள்ளன.கடந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்ட, ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், நாகப்பட்டினம், திருவள்ளூர், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கு, முதல்வர் நேரில் சென்று, அடிக்கல் நாட்ட உள்ளார். 

அதன்படி, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், இன்று காலை, 10:00 மணிக்கு நடக்கும் பிரமாண்ட விழாவில், 345 கோடி ரூபாயில் கட்டப்பட உள்ள, புதிய மருத்துவக் கல்லுாரிக்கு, முதல்வர் அடிக்கல் நாட்டு கிறார். இன்று மாலை, 3:00 மணிக்கு, விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் விழாவில், 380 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும், அம்மாவட்டத்துக்கான புதிய அரசு மருத்துவக் கல்லுாரிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.மேலும், புதிய திட்டப் பணிகளையும், முடிவுற்ற பணிகளையும் துவக்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளையும், முதல்வர் வழங்குகிறார்.

இக்கல்லுாரியில், வரும் கல்வியாண்டு முதல், 150 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது.இவ்விழாவிற்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், தலைமை வகிக்க உள்ளார். வரும், 4ம் தேதி, கிருஷ்ணகிரி; 5ம் தேதி நாமக்கல்; 7ம் தேதி நாகப்பட்டினம் மருத்துவக் கல்லுாரிகளுக்கு, முதல்வர் அடிக்கல் நாட்ட உள்ளார். கரூரில், 5ம் தேதி மாலை, ஏற்கனவே கட்டப் பட்ட புதிய மருத்துவக் கல்லுாரியை முதல்வர் திறந்து வைக்கிறார்.

திருவாரூரில், 7ம் தேதி மாலை, விவசாயிகள் நடத்தும் பாராட்டு விழா வில் பங்கேற்கிறார்.

எம்.பி.பி.எஸ்.,இடங்கள் அதிகரிக்கும்புதிதாக, 12 அரசு மருத்துவக் கல்லுாரிகள் துவக்கப்பட உள்ளதால், தமிழகத்தில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். தமிழகத்தில், தற்போது, 24 அரசு மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. அவற்றில், 3,350 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன.புதிதாக அனுமதி அளிக்கப்பட்டுள்ள, 11 அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் கரூர் அரசு மருத்துவ கல்லுாரியில், தலா, 150 எம்.பி.பி.எஸ்., சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, மருத்துவம் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை, 5,150 ஆக அதிகரிக்கும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024