Tuesday, June 9, 2020

‘அமரகவி’ தஞ்சை ராமையா தாஸ் 106-ம் பிறந்த தினம்: ஒரு பள்ளி ஆசிரியர் பாடலாசிரியர் ஆன கதை!


Hindu Tamil
அமரகவி’ தஞ்சை ராமையா தாஸ் 106-ம் பிறந்த தினம்: ஒரு பள்ளி ஆசிரியர் பாடலாசிரியர் ஆன கதை!


காலவோட்டத்தில் மாறாத கலையோ பண்பாடோ இருக்க முடியாது. திரையிசையும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இன்றைய திரையிசை எல்லாவிதங்களிலும் மாறிப்போய்விட்டாலும், 50 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பல பாடல்கள் இன்றைய தலைமுறையைக் கவர்ந்துகொள்வதுதான் ஆச்சரியம்! அப்படியொரு பாடல் ‘கண்ணாலே பேசிப்.. பேசிக்.. கொல்லாதே..’. 1960-ல் வெளியான ‘அடுத்த வீட்டுப்பெண்’ படத்துக்காக ‘அமரகவி’ தஞ்சை ராமையா தாஸ் எழுதிய பாடல்.

அந்தப் படத்தின் கதாநாயகி அஞ்சலிதேவி சொந்தமாகத் தயாரித்த ‘ரொமாண்டிக் காமெடி’ வகைத் திரைப்படம் அது. திரையுலகில் புகழின் உச்சியில் இருந்தபோது, தஞ்சை ராமையா தாஸ் வசனம், பாடல்கள் எழுதிய படம். அதில், அடுத்த வீட்டுப்பெண்ணாக இருக்கும் அஞ்சலி தேவியின் மனத்தை வெல்வதற்காக, பாடத் தெரியாத கதாநாயகன் டி.ஆர்.ராமச்சந்திரன் ஒரு வேடிக்கையான தந்திரத்தைக் கையாள்வார். ‘வாத்திய கோஷ்டி’ நடத்தும் பாடகர் கே.ஏ.தங்கவேலுவை அழைத்து வந்து, அவரைத் தனது அறைக்குள் ஒளித்துவைத்து இந்தப் பாடலைப் பாடச் செய்வார். ஆனால், தான் பாடுவதுபோல, தனது முட்டைக் கண்களை உருட்டியபடி, வாயை மட்டும் ராமச்சந்திரன் அசைப்பார்.

அந்தக் காட்சியில் நிரம்பி வழிந்த காதல் நகைச்சுவையால் திரையரங்கம் தெறித்தது. அந்தப் பாடல் காட்சியில் நடிகர்களின் பகீரத நடிப்பு முயற்சிக்குக் கிடைத்த வரவேற்புக்கு இணையாக, ஆதி நாராயண ராவ் இசையில், பி.பி. ஸ்ரீனிவாஸ் குரலில், ராமையா தாஸின் வரிகளில் இழைந்த காதலின் கிறக்கம் ரசிகர்களைச் சொக்க வைத்தது.

அன்றைக்கு மட்டுமல்ல; இன்றைய தலைமுறையினரை விதவிதமான ‘கவர் வெர்சன்’களை உருவாக்க வைத்துவிட்டது! இந்தப் பாடல் இடம்பெறாத சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளும் இல்லை. ரசனைக்குரிய தற்காலத்தின் இசையமைப்பாளர் ஒருவர், இப்பாடலை அதிக சிரச்சேதம் செய்யாமல் ரீமிக்ஸ் செய்ய, அதுவும் 40 ஆண்டுகள் கழித்து மெகா ஹிட் அடித்துவிட்டது. தஞ்சை ராமையா தாஸ் எழுதிய ஓராயிரத்துக்கும் அதிகமான திரைப்பாடல்களில் இன்றைக்கும் ஒலித்துக்கொண்டிருக்கும் பல பாடல்களை இப்படி உதாரணம் காட்டிக்கொண்டே செல்லமுடியும். அத்தனை அமரத்துவம் வாய்ந்த பாடல்களை எழுதியதால்தானோ என்னவோ அவரை ‘அமரகவி’ என்ற பட்டம் தேடி வந்து ஒட்டிக்கொண்டது.

குழப்பத்தை ஏற்படுத்தும் கவிஞர்கள் மூவர்

அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் ஆறு புகழ்பெற்ற பாடலாசிரியர்கள் தோன்றினார்கள். பாடலாசிரியராக பாபநாசம் சிவனின் பங்களிப்பு என்பது இசையாக்கம், சாஸ்த்ரீய சங்கீதம், அவரது சம்ஸ்கிருதத் தமிழ் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்று. கவி. கா.மு.ஷெரீஃப், உவமைக் கவிஞர் சுரதா ஆகிய இருவரும் குறைவான படங்களுக்கு எழுதியவர்கள் என்றாலும், அவர்களது பல பாடல்கள் நீடித்த வாழ்வைக் கொண்டிருக்கின்றன. இம்மூவருக்கும் அப்பால், பெரும்புகழ் எய்திய மேலும் மற்ற மூன்று பாடலாசிரியர்களிடம் சில ஒற்றுமைகளும் சாதனைத் தடங்களும் உண்டு.

தமிழ் சினிமாவில் 1940-களிலேயே தனது பயணத்தைத் தொடங்கிய தஞ்சை ராமையா தாஸ், 60-களில் நுழைந்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், 50-களில் எழுதத் தொடங்கிய மருதகாசி ஆகிய மூவரும் உழைக்கும் மக்களின் நிலையிலிருந்து ஜனநாயகப்படுத்தப்பட்ட எளிய மொழியில் புகழ்பெற்ற பாடல்களை எழுதியிருக்கிறார்கள். இவர்கள் எழுதிய பல பாடல்களை மாற்றி மாற்றித் தவறாகக் குறிப்பிடும் நிலை இருப்பதற்கு, இவர்கள் மக்களின் கவிஞர்களாக, பாடலாசிரியர்களாக இருந்திருப்பதும் ஒரு காரணம். ஆனால், தஞ்சை ராமையா தாஸ், திரைப்பாடலின் பலவித வகைமையில் செய்து காட்டிய முழுமைக்கு அவரே முன்னோடியாகத் திகழ்கிறார்.

முதல் படமும் முத்திரைப் பாடல்களும்

முதன்முதலில் மாடர்ன் தியேட்டர்ஸுக்காக ‘மாரியம்மன்’ (1947) என்ற படத்துக்குக் கதை, வசனம், பாடல்களை எழுதினார். ஆனால், அந்தப் படம் உருவாகி வந்த வேகத்தை முந்திக்கொண்டது, அதே நிறுவனத்துக்கு அவர் இரண்டாவதாக பாடல் எழுதிய '1000 தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி’. அப்படம் அதே ஆண்டில் முன்னதாக வெளியாகிவிட்டது.

அந்தப் படத்தில், ஜி.ராமநாதன் இசையில், காளி என் ரத்னத்துக்கு ஜோடியாக நடித்த சி.டி. ராஜகாந்தம், பாடிய அந்தப் நகைச்சுவைப் பாடல் ‘வச்சேன்னா வச்சதுதான் புள்ளி’. அதேபோன்ற பாடல்களையே எழுதும்படி ராமையா தாஸை நச்சரிக்கத் தொடங்கியது திரையுலகம். நகைச்சுவைப் பாடலாசிரியர் என்று முத்திரை குத்திவிட்டார்களே என்றெல்லாம் பேனாவை வீசிவிட்டு ஓடிவிட வில்லை அவர். நகைச்சுவைப் பாடல்களே சாமானிய மக்களின் பொழுதுபோக்கு ரசனைக்கு ஊட்டம் தருபவை என்ற வெகுஜன ரசனையின் நாடித்துடிப்பை

அறிந்து வைத்திருந்தார் நாடக வாத்தியரான ராமையா தாஸ். அதனால்தான், ‘ஊசிப்பட்டாசே வேடிக்கையாய் தீ வச்சாலே வெடி டபார்.. டபார்..’, ‘சொக்கா போட்ட நவாபு.. செல்லாதுங்க ஜவாபு..’, ‘மாப்பிள்ளை டோய்.. மாப்பிள்ளை டோய்..’, ‘கல்யாண சமையல் சாதம்’, ‘ஜாலிலோ ஜிம்கானா’ என ஜிகினா வார்த்தைகளைப் பயன்படுத்தி பாடல்களை எழுதிக் குவித்த முன்னோடி ஆனார். ஜிகினா வார்த்தைகளை பயன்படுத்தினாலும் அவற்றிலும் தரமான நகைச்சுவைப் பாடல்களாக அவை அமைந்ததுடன், இத்தகைய பாடல்களை எழுதித்தர புகழின் உச்சியில் இருந்தபோது கூட அவர் தயங்கவில்லை. அதேநேரம் சந்தம் விளையாடும் உயர்ந்த தமிழில் எழுதக் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் உச்சபட்ச சாதனைகளை நிகழ்த்திச் சென்றுவிட்டார்.

உதாரணத்துக்கு அரசியல், சமூக விமர்சனத்தை, 'மலைக்கள்ளன்' படத்துக்காக எழுதிய ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..’ பாடல் சவுக்கைச் சுழற்றும் கோபத்துடன் பளிச்சென்று சொல்லும். மணமாகிச்செல்லும் எல்லாப் பெண்களுக்கும் அண்ணன்கள் அறிவுரைகூறி அனுப்பும் தொனியில், பேச்சுவழக்குச் சொற்கள் இருக்குமாறு எழுதிய ‘புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே.. தங்கச்சிகண்ணே..!’ (பானை பிடித்தவள் பாக்கியசாலி) பாடல், இன்றைக்கும் கிராமப்புறத் திருமண வீடுகளில் ஒலித்துக்கொண்டுதானிருக்கிறது. ‘குலேபகாவலி’யில் இடம்பெற்ற ‘மயக்கும் மாலை பொழுதே நீ போ.. போ..’ இயற்கையுடன் பின்னிப் பிணைத்த காதலின் ஆற்றாமையைக் கடத்தும் பாடல்.

அதேபோல், காதலின் வசீகரத்தை எடுத்துக்காட்டிய எண்ணற்றப் பாடல்களை எழுதிய தஞ்சை ராமையா தாஸ், தனக்கு இசையும் நன்கு தெரியும் என்பதைச் சொல்லும் இணையற்றப் பாடல்களை எழுதினார். அவற்றில், ‘தேசுலாவுதே தேன்மலராலே’ (மணாளனே மங்கையின் பாக்கியம்) ஓர் அமுத கானம். காதலுக்கான இவரது கானப் பட்டியல் காதுகள் கொள்ளாமல் நிரம்பி வழிந்துகொண்டிருக்கிறது. ராமையா தாஸை மாடர்ன் தியேட்டர்ஸ் அறிமுகப்படுத்தினாலும் ஒரு கட்டத்தில் விஜயா - வாஹினி ஸ்டுடியோவின் படங்களுக்கு ஆஸ்தான கதை, வசனப் பாடலாசிரியர் ஆன பின்பே காதல் பாடல்களில் தனியிடம் பிடித்தார்.


நாடக ஆசிரியர் ஆன பள்ளி ஆசிரியர்


1914 ஜூன் 5 அன்று தஞ்சாவூரின் மானம்பூச்சாவடியில் பிறந்து அங்குள்ள புனித பீட்டர் பள்ளியில் கல்வி பயின்றார். பின்னர் தஞ்சை கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் சேர்ந்து புலவர் பட்டம் பெற்றார். தஞ்சை ஆட்டு மந்தைத் தெருவில் உள்ள அரசுத் தொடக்கப்பள்ளியில் ஆசியராகப் பணிக்குச் சேர்ந்தார். ஆனால், மூன்று ஆண்டுகளுக்குப் பின் ஆசிரியர் பணியிலிருந்து

விலகி, ஜெயலட்சுமி கானசபா என்ற பெயரில் தனது நாடகக் குழுவைத் தொடங்கினார். ஐந்தே வருடங்களில் அவரது குழு தமிழகம் முழுவதும் புகழ்பெற்றது. அவரது ‘மச்சரேகை’என்ற நாடகம் புகழ்பெற்று விளங்கியது. சேலத்தில் தஞ்சை ராமையா தாஸின் நாடகக்குழு முகாமிட்டு அந்த நாடகத்தை நடத்தி வந்தது. அதன் பாடல்களைப் பற்றிக் கேள்விப்பட்ட மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர். சுந்தரம், அந்த நாடகத்தைக் காண மாறுவேடத்தில் சென்று பார்த்துத் திரும்பினார்.

வெகுவிரைவில் அவர் ராமையாதாஸை அழைத்துக்கொண்டார். சேலத்தில் ராமையாதாஸ் முதல்முறை முகாமிட்டபோது அவரைச் சந்தித்தார் நாகு என்ற இளைஞர். அவரைத் தனது குழுவுடன் சேர்த்துக் கொண்டதுடன் பள்ளியே சென்றறியாத அவருக்குத் தமிழ் பயிற்றுவைத்து தனது நாடகங்களில் வில்லனாக நடிக்கவைத்து உயர்த்தினார். அவர்தான் அக்கம்மாபேட்டை பரமசிவம் நாகராஜன் எனும் ஏ.பி. நாகராஜனாக பின்னர் திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டினார்.

அதேபோல் தெலுங்கில் வெற்றிபெறும் படங்களைத் தமிழில் மொழிமாற்றி, அவற்றுக்கு வசனமும் பாடல்களும் எழுதும் கலையில் முன்னோடியாக விளங்கியவரும் தஞ்சைராமையாதாஸ் தான். திருவாரூரிலிருந்து தன்னிடம்வந்துசேர்ந்த யேசுதாஸ் என்ற இளைஞருக்குக் கதை, வசனக் கலையைக் கற்றுக் கொடுத்ததுடன் பல படங்களில் எழுதவைத்து மொழிமாற்று சினிமா கலையையும் கற்றுக் கொடுத்தார். அவர்தான் பின்னாளில் சாதனைகள் பல படைத்த கதாசிரியர் ஆரூர்தாஸ்.


தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in

படங்கள் உதவி:ஞானம்


ஜூலை 15-ம் தேதி வாக்கில் தமிழகத்தில் 3,30,000 பேருக்கு கரோனா; எம்ஜிஆர் பல்கலை. அரசுக்கு அறிக்கை அளித்திருப்பது உண்மையா? - தினகரன் கேள்வி


ஜூலை 15-ம் தேதி வாக்கில் தமிழகத்தில் 3,30,000 பேருக்கு கரோனா; எம்ஜிஆர் பல்கலை. அரசுக்கு அறிக்கை அளித்திருப்பது உண்மையா? - தினகரன் கேள்வி


கரோனா பாதிப்பு பற்றி எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அரசுக்கு அறிக்கை அளித்திருப்பது உண்மையா என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (ஜூன் 9) வெளியிட்ட அறிக்கை:

"தமிழகத்தில் அடுத்தடுத்த மாதங்களில் கரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும் என்று எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அளித்திருப்பதாகக் கூறப்படும் அறிக்கையை தமிழக அரசு அதிகாரபூர்வமாக வெளியிட வேண்டும். அதனடிப்படையில் அரசு மேற்கொண்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பது பற்றியும் மக்களுக்கு விளக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

சென்னையிலுள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ நிபுணர்கள் கரோனா பாதிப்பின் வீரியம் குறித்து ஆய்வு மேற்கொண்டு தமிழக அரசுக்கு அறிக்கை அளித்திருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவருகின்றன.

அந்த அறிக்கையில் 'ஜூலை 15 ஆம் தேதி வாக்கில் தமிழகத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் பேர் கரோனாவால் பாதிக்கப்படுவார்கள். இதில் சென்னையில் மட்டுமே 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிப்புக்கு ஆளாவார்கள். இவர்களில் சென்னையைச் சேர்ந்த 1,654 பேர் உட்பட தமிழகம் முழுவதும் பலியாவோர் எண்ணிக்கை 1,949 ஆக இருக்கும். மேலும், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கரோனாவின் பாதிப்பு மிக மோசமானதாக இருக்கும்' என்றெல்லாம் தெரிவிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இப்படியோர் அறிக்கை அளிக்கப்பட்டிருப்பது உண்மை எனில் அதனை தமிழக அரசு அதிகாரபூர்வமாக வெளியிடாமல் இருப்பது ஏன் என்று புரியவில்லை. அதோடு அந்த அறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன என்பதையும் மக்களுக்கு விளக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது.

ஏற்கெனவே கரோனா பாதிப்பில் இந்திய அளவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அப்படியிருந்தும் ஆளுமைமிக்க ஆட்சித்தலைமை இல்லாததால், அதிகாரிகளுக்குள் ஈகோ யுத்தம், ஒருங்கிணைப்பு இன்றி தடுமாறும் அரசு எந்திரம் என கரோனாவைத் தடுப்பதில் தோல்விகளைச் சந்தித்து வரும் நிலையில், ஆட்சியாளர்கள் இப்போதாவது விழித்துக்கொள்வது அவசியம்.

பாதிப்பு ஆயிரங்களில் இருக்கும் போதே அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. தனியார் மருத்துவமனைகளையும் அரசால் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய முடியவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பே சென்னை மாநகராட்சியின் வசம் ஒப்படைக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகள், திருமண மண்டபங்களை எப்படி பயன்படுத்துவது என்ற திட்டமோ, அதற்கான செயல்பாடுகளோ அரசிடம் இருப்பதாகவும் தெரியவில்லை.

செப்டம்பர், அக்டோபரில் மழைக்காலம் என்பதால் அப்போது கரோனா உச்சத்திற்குப் போனால் என்ன செய்வது என்று யோசித்து, அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதிலும் சென்னையில் வடிகால்களைச் சரி செய்தல் உள்ளிட்ட பணிகளை இப்போதே செய்தால்தான் மழைக்காலப் பாதிப்புகளோடு சேர்த்து கரோனா பாதிப்புகளையும் எதிர்கொள்ள முடியும்.

எனவே, மருத்துவப்பல்கலைக்கழக அறிக்கையை வெளியிட்டு, முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைப்பற்றி தமிழக ஆட்சியாளர்கள் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இதன் மூலம், ஒரு வேளை ஆளுமையற்ற தமிழக அரசால் எதுவுமே செய்ய முடியாவிட்டால் மக்களாவது தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள முயற்சிப்பார்கள் அல்லவா?"

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அரசுப் போக்குவரத்து கழகத்தில் ரூ.1624.78 கோடி பணப்பலன் பாக்கி: ஓராண்டாக காத்திருக்கும் 6221 தொழிலாளர்கள்


அரசுப் போக்குவரத்து கழகத்தில் ரூ.1624.78 கோடி பணப்பலன் பாக்கி: ஓராண்டாக காத்திருக்கும் 6221 தொழிலாளர்கள் 


தமிழகம் முழுவதும் அரசுப் போக்குவரத்து கழகத்தில் ஓராண்டுக்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள ரூ.1624.78 கோடி பணப்பலன்கள் எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் 6221 தொழிலாளர்கள் காத்திருக்கின்றனர்.

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி 2019 ஏப்ரல் மாதம் முதல் பணி ஓய்வு, விருப்ப ஓய்வு மற்றும் பணிக்காலத்தில் இறந்த தொழிலாளர்கள் என 6221 பேருக்குரிய வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு பணம் மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்பு பணம் ஆகியன ஓய்வு பெற்று கடந்த ஓராண்டாக வழங்கப்படாமல் உள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், அரசு விரைவு போக்குவரத்து கழகம், அரசு போக்குவரத்து கழகம் மதுரை, சேலம், விழுப்புரம், கும்பகோணம், நெல்லை, கோவை கோட்டங்களில் வருங்கால வைப்பு நிதி ரூ.447.70 கோடி, பணிக்கொடை ரூ.491.23 கோடி, ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை ரூ.401.79 கோடி, விடுப்பு ஊதியம் ரூ.284.06 கோடி என மொத்தம் ரூ.1624.78 கோடி பாக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஓய்வுகால பணப்பலன்களை தொழிலாளர்களுக்க உடனடியாக வழங்க நடவடிககை எடுக்குமாறு தொமுச பொதுச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான எம்.சண்முகம், தமிழக போக்குவரத்துறை முதன்மை செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இது குறித்து தொமுச பொருளாளர் நடராஜன் கூறுகையில், கரோனா ஊரடங்கால் ஓய்வூதியர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு சேர வேண்டிய அனைத்து ஓய்வூதிய பணப்பலன்களையும் தமிழக அரசும், போக்குவரத்து கழகங்களும் தாமதம் இல்லாமல் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அரசுப் போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனம்மாநில இணைப் பொதுச் செயலாளர் எஸ்.சம்பத் கூறுகையில், வருங்கால வைப்பு நிதி சட்டம் மற்றும் பணிக்கொடை பட்டுவாடாச் சட்டத்தின் கீழ் பணி ஓய்வு / தன்விருப்ப ஓய்வு / இறப்பு போன்ற காரணங்களால் பணிமுடிவடையும் தொழிலாளர்களுக்கு ஓய்வு பெற்றதிலிருந்து ஒரு மாத காலத்திற்குள் பணி முடிவு பலன்களை வழங்க வேண்டும்.

அதன்படி ஏப்ரல் 2019 முதல் ஏப்ரல் 2020 வரையிலான நிலுவைகளை தீர்வு செய்ய அரசும் கழக நிர்வாகங்களும் முன்வரவேண்டும் என்றார்.

திருவாரூரில்மேலும் 6 பேருக்கு கொரோனாபாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு

திருவாரூரில்  மேலும் 6 பேருக்கு கொரோனாபாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் 64 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

பதிவு: ஜூன் 09, 2020 05:04 AM

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் 64 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் நேற்று திருவாரூர் சிவம் நகரை சேர்ந்த 64 வயதுடைய ஒரு தனியார் தொலைக்காட்சி நிருபருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. 

இதேபோல் திருவாரூர் புலிவலம் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுவன், அதே பகுதியை சேர்ந்த 70 வயது மூதாட்டி, வடுவூர் தென்பாதியை சேர்ந்த 47 வயதுடைய ஒருவர், கூத்தாநல்லூர் தாலுகா வேர்குடியை சேர்ந்த 37 வயது வாலிபர், குடவாசல் செல்லூரை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 5 பேருக்கும் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து 6 பேரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதனால் திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது. இதில் 44 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று மேலும் ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனால் 25 பேர் மட்டுமே திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

'ஆன்லைன்' வகுப்பு ஆரம்பம் 'லேப்டாப்'களுக்கு தட்டுப்பாடு


'ஆன்லைன்' வகுப்பு ஆரம்பம் 'லேப்டாப்'களுக்கு தட்டுப்பாடு

Added : ஜூன் 08, 2020 22:39

பெரும்பாலான தனியார் பள்ளிகளில், 'ஆன்லைன்' வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. இதனால், 'லேப்டாப்'களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மார்ச், 24 முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில், செப்டம்பர் மாதம் தான், பள்ளிகள் திறக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதனால், பெரும்பாலான தனியார் பள்ளிகள், ஆறு முதல், பிளஸ் 2 வரை ஆன்லைன் வகுப்புகளை துவங்கியுள்ளன. ஜூம் மற்றும் கூகுள் மீட் உள்ளிட்ட செயலிகள் மூலம் பாடம் நடத்தப்படுகிறது.

இதற்கு, லேப்டாப், மைக்குடன் கூடிய ஹெட்போன் உள்ளிட்டவை வாங்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இதனால், பலரும் லேப்டாப் வாங்க, கடைகளுக்கு படையெடுக்கின்றனர். லேப்டாப் விற்பனையாளர்கள் கூறியதாவது:சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து, லேப்டாப்கள் வர அனுமதிக்கப்படவில்லை.

மேலும், அங்கு உற்பத்தி குறைந்ததாலும், உலகம் முழுதும் தட்டுப்பாடு உருவாகியுள்ளது.ஏற்கனவே வாங்கி வைத்திருந்த லேப்டாப்களே, தற்போது விற்பனையாகி வருகின்றன. இதுவும், இரு மாதங்களுக்கு முன் இருந்ததை விட, 2,000 ரூபாய் அதிகரித்து விற்கப்படுகிறது. ஆனாலும், தேவைக்கேற்ப இல்லாததால், தட்டுப்பாடு உருவாகியுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்
- நமது நிருபர் -.

ஓய்வு வயது நீட்டிப்பு சலுகை பேராசிரியை வழக்கு தள்ளுபடி


ஓய்வு வயது நீட்டிப்பு சலுகை பேராசிரியை வழக்கு தள்ளுபடி

Added : ஜூன் 08, 2020 23:09

மதுரை; தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை, தங்களுக்கும் நீட்டிக்கக் கோரி, பேராசிரியை தாக்கல் செய்த வழக்கை, உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

தென்காசி, குற்றாலம் பராசக்தி பெண்கள் கல்லுாரி, உதவி பேராசிரியை ஈஸ்வரி தாக்கல் செய்த மனு:ஏப்., 30ல், ஓய்வு வயதை அடைந்தேன். மாணவர்களின் நலன் கருதி, மே 31 வரை, மறு பணியமர்வு செய்யப்பட்டேன். ஓய்வு பெற மற்றும் ஓய்வு பலன்களை வழங்க, எவ்வித உத்தரவும், இதுவரை பிறப்பிக்கப்படவில்லை.அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை, 58லிருந்து, 59 ஆக உயர்த்தி, தமிழக அரசு, மே 7ல் அரசாணை பிறப்பித்தது.

இதன்படி, மே 31ல் ஓய்வு பெறுவோர், மேலும் ஓராண்டு பணியில் நீட்டிப்பர்.ஓய்வு வயது நீட்டிப்பு தேதியை நிர்ணயிக்க, அரசுக்கு அதிகாரம் இல்லை. அரசாணையால், எங்களை போன்ற ஆசிரியர்களுக்கு பாகுபாடு காட்டப்பட்டுள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும்.எனக்கும் பணி நீட்டிப்பு சலுகை வழங்க உத்தரவிட வேண்டும். அதுவரை, என்னை பணியிலிருந்து விடுவிக்க, இடைக்கால தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு, கோரியிருந்தார்.

இதுபோல் பல மனுக்கள் தாக்கலாகின.நீதிபதி சி.வி. கார்த்திகேயன் உத்தரவு:ஓய்வு வயதை அடைந்ததும், தொழிலாளி மற்றும் நிர்வாகம் இடையே, உறவு முடிவுக்கு வந்து விடுகிறது. மறு பணியமர்வு மற்றும் பணி நீட்டிப்பிற்கு இடையே வேறுபாடு உள்ளது.மறு பணியமர்வை காரணமாக கொண்டு, ஓய்வு வயது நீட்டிப்பு சலுகை கோர முடியாது. மனுதாரர்களுக்கு, குறித்த கால அவகாசத்திற்குள் ஓய்வு கால பணப் பலன்களை அரசு வழங்க வேண்டும். மனுக்களை தள்ளுபடி செய்கிறேன்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு? அரசு பரிசீலனை


நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு? அரசு பரிசீலனை

Updated : ஜூன் 09, 2020 04:32 | Added : ஜூன் 09, 2020 04:30

சென்னை : சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில், கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த, ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கும்படி அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். இதுகுறித்து, அரசு பரிசீலித்து வருகிறது.

தமிழகத்தில், பெரும்பாலான மாவட்டங்களில், கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது. ஆனால், சென்னையில் பாதிப்பு குறைவதாக இல்லை. தினமும், 1,000த்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.சென்னையை ஒட்டிய, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும், தொற்று பரவல் அதிகமாக உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அரசின் விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை; ஊரடங்கு என்பது பெயரளவுக்கே உள்ளது. கார், ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் அதிகமாக செல்கின்றன. பல இடங்களில், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.கடைகளுக்கு செல்வோரில், பெரும்பாலானோர் முகக் கவசம் அணிவதில்லை; சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில்லை. இது நோய் பரவல் அதிகரிப்பதற்கு, முக்கிய காரணம்.

சென்னையில், பாதிப்பு உள்ளவரை மட்டுமே, பரிசோதனைக்கு அழைத்து செல்கின்றனர். குடும்பத்தினர், அவரை சுற்றி உள்ளோரையும் அழைத்து சென்று, பரிசோதனைக்கு உட்படுத்துவது இல்லை. அவர்கள், இஷ்டம் போல வெளியிடங்களுக்கு சென்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவரின் வீட்டில், 'நோட்டீஸ்' ஒட்டப்படுகிறது; வேறு தடுப்பு நடவடிக்கைகள் சரியாக மேற்கொள்ளப்படுவது இல்லை. மக்களும் ஒத்துழைக்காததால், கொரோனா பாதிப்பு அடங்க மறுக்கிறது. எனவே, நோய் பரவலை தடுக்க, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில், ஒரு வாரம் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என, அரசுக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

இதுபற்றி, அரசு பரிசீலித்து வருவதால், முழு ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

NEWS TODAY 26.08.2026