ஓய்வு வயது நீட்டிப்பு சலுகை பேராசிரியை வழக்கு தள்ளுபடி
Added : ஜூன் 08, 2020 23:09
மதுரை; தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை, தங்களுக்கும் நீட்டிக்கக் கோரி, பேராசிரியை தாக்கல் செய்த வழக்கை, உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
தென்காசி, குற்றாலம் பராசக்தி பெண்கள் கல்லுாரி, உதவி பேராசிரியை ஈஸ்வரி தாக்கல் செய்த மனு:ஏப்., 30ல், ஓய்வு வயதை அடைந்தேன். மாணவர்களின் நலன் கருதி, மே 31 வரை, மறு பணியமர்வு செய்யப்பட்டேன். ஓய்வு பெற மற்றும் ஓய்வு பலன்களை வழங்க, எவ்வித உத்தரவும், இதுவரை பிறப்பிக்கப்படவில்லை.அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை, 58லிருந்து, 59 ஆக உயர்த்தி, தமிழக அரசு, மே 7ல் அரசாணை பிறப்பித்தது.
இதன்படி, மே 31ல் ஓய்வு பெறுவோர், மேலும் ஓராண்டு பணியில் நீட்டிப்பர்.ஓய்வு வயது நீட்டிப்பு தேதியை நிர்ணயிக்க, அரசுக்கு அதிகாரம் இல்லை. அரசாணையால், எங்களை போன்ற ஆசிரியர்களுக்கு பாகுபாடு காட்டப்பட்டுள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும்.எனக்கும் பணி நீட்டிப்பு சலுகை வழங்க உத்தரவிட வேண்டும். அதுவரை, என்னை பணியிலிருந்து விடுவிக்க, இடைக்கால தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு, கோரியிருந்தார்.
இதுபோல் பல மனுக்கள் தாக்கலாகின.நீதிபதி சி.வி. கார்த்திகேயன் உத்தரவு:ஓய்வு வயதை அடைந்ததும், தொழிலாளி மற்றும் நிர்வாகம் இடையே, உறவு முடிவுக்கு வந்து விடுகிறது. மறு பணியமர்வு மற்றும் பணி நீட்டிப்பிற்கு இடையே வேறுபாடு உள்ளது.மறு பணியமர்வை காரணமாக கொண்டு, ஓய்வு வயது நீட்டிப்பு சலுகை கோர முடியாது. மனுதாரர்களுக்கு, குறித்த கால அவகாசத்திற்குள் ஓய்வு கால பணப் பலன்களை அரசு வழங்க வேண்டும். மனுக்களை தள்ளுபடி செய்கிறேன்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment