Thursday, March 14, 2019


காதல் திருமணம் செய்தவர்களுக்கு ரேஷன் கார்டு தர புது நிபந்தனை

Added : மார் 14, 2019 03:24

'காதல் திருமணம் செய்தவர்கள், பெற்றோரின் ரேஷன் கார்டில் இருந்து, தங்கள் பெயரை நீக்க, 100 ரூபாய் முத்திரை தாளில், உறுதிமொழி பத்திரம் வழங்க வேண்டும்' என, உணவு வழங்கல் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில், புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவரின் பெயர், வேறு கார்டில் இருக்கக்கூடாது. காதல் திருமணம் செய்தவர்கள், புதியகார்டுக்கு விண்ணப்பிக்கின்றனர். அதற்கு, பெயர் நீக்கல் சான்று அவசியம். அவர்களின் பெயரை கார்டில் இருந்து நீக்க, பெற்றோர் அனுமதிப்பதில்லை.இதனால், பாதிக்கப்படுவோர், சென்னை, உணவு வழங்கல் துறை தலைமை அலுவலகத்தில் புகார் அளிக்கின்றனர்.
அங்குள்ள அதிகாரிகள், பயனாளியின் பெயரை கார்டில் இருந்து நீக்கும்படி, சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு கடிதம் அனுப்புவர். அங்குள்ள அதிகாரி, பதிவேட்டில் பெயரை நீக்கி, தலைமை அலுவலகத்திற்கு அனுப்புவார். பின், பெயர் நீக்கல் சான்று வழங்கப்படும்.அதை, புதிய கார்டு விண்ணப்பத்துடன் சமர்ப்பித்து, கார்டு பெறலாம். இதற்கு, காலதாமதமாவதால், காதல் திருமணம் செய்வோர், ரேஷன் கார்டு பெற சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:திருமணத்தின் போது, ஆணுக்கு, 21; பெண்ணுக்கு, 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். இந்த தம்பதிக்கு, பெற்றோர் விருப்பத்துடன் அல்லது விருப்பமின்றி, தங்களின் குடும்ப ரேஷன் கார்டில் இருந்து, பெயரை நீக்கிக் கொள்ள உரிமை உள்ளது.காதல் திருமணம் செய்தவர்கள், அவரவர் பெற்றோரின் கார்டில் இருந்து, தங்களது பெயரை நீக்கி கொள்ள, 100 ரூபாய் மதிப்புள்ள முத்திரை தாளில், 'சட்ட நடவடிக்கைக்கு பொறுப்பாவோம்' என, கையொப்பமிட்ட உறுதி மொழி பத்திரம் அளிக்க வேண்டும்.
இந்த பத்திரம், திருமண பதிவு சான்று ஆகியவற்றை, பெயர் நீக்க கோரும் மனுவுடன், தங்கள் பகுதி உணவு வழங்கல் அதிகாரிகளிடம் தர வேண்டும். இவற்றை செயல்படுத்த, தங்கள் கீழ் பணிபரியும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்குமாறு, மாவட்ட வழங்கல் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 01.10.2024