Friday, March 8, 2019

உலகம் போற்றும் பெண்மை!
By அ. அரவிந்தன் | Published on : 08th March 2019 03:05 AM |

ஒரு காலத்தில் ஆண் குழந்தைகள் மீதான மோகத்தால், பெண் குழந்தைகள் பிறந்ததும் அதற்குக் கள்ளிப்பால் ஊற்றி அதை பிஞ்சிலேயே இரக்கமின்றி, வேரறுக்கும் படுபாதகச் செயல்கள் நாடு முழுவதும் அரங்கேறின. பெண் குழந்தைகளால் குடும்பத்துக்குக் கூடுதல் சுமை ஏற்படும் என்ற அவநம்பிக்கை காரணமாக இதுபோன்ற செயல்கள் கோலோச்சத் தொடங்கின. 

இடைக்கால இந்திய வரலாற்றில் பல சமூக சீர்திருத்தவாதிகளின் தளராத முயற்சியால் பெண் சிசுக் கொலை கட்டுப்பாட்டுக்குள் வந்தது. குறிப்பாக, பெண் சிசுக் கொலையை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, தொட்டில் குழந்தை திட்டம் கடந்த 1992-ஆம் ஆண்டில் பிற மாநிலங்களுக்கு எல்லாம் முன்னோடியாக தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் சேலம் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், 2001-ஆம் ஆண்டில் மதுரை, தேனி, திண்டுக்கல், தருமபுரி என பிற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ், பெண் குழந்தைகள் பிறந்ததும் அவர்களைச் சுமையாகக் கருதும் பெற்றோர், ஆங்காங்கே அரசு மருத்துவமனைகள், ஆதரவற்ற இல்லங்கள், ஆரம்ப சுகாதார மையங்களில் வைக்கப்பட்டிருந்த தொட்டில்களில் அந்தக் குழந்தைகளை போட்டு விட்டுச் செல்ல வழிவகை செய்யப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் கடந்த 2001-ஆம் ஆண்டில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 942 பெண் குழந்தைகள் என இருந்த பாலின விகிதம், 2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, 946-ஆக உயர்ந்தது தெரியவந்தது. 

இது ஒருபுறமிருக்க, தற்போது ஒருசில தனியார் மருத்துவமனைகளில், பாலினம் கண்டறியும் சோதனை மூலம் பெண் சிசுக் கொலை நவீன வடிவம் எடுத்திருப்பதை மறுப்பதற்கில்லை. இதைத் தடுக்க மத்திய அரசு கடுமையான சட்டத்தை நிறைவேற்றினாலும், ஆங்காங்கே அத்திப்பூத்தாற்போல் நடைபெறும் ஒரு சில நிகழ்வுகள் அவ்வப்போது வெளிச்சத்துக்கு வந்த வண்ணம்தான் உள்ளன. தனியார் மருத்துவமனைகளில் இதுபோன்ற சட்டவிரோத கருக்கலைப்புகள் மூலம் ஆண்டுக்கு ரூ.1,000 கோடி வரை வருவாய் ஈட்டப்படுவதாகக் கூறப்படுகிறது.
இன்றைய நவநாகரிக உலகில் துரித உணவுப் பழக்கம், உயிரணு உற்பத்தியைப் பாதிக்கும் தவறான பழக்கவழக்கங்கள், போதைப் பொருள்கள் உள்ளிட்ட காரணங்களால் திருமணமாகி பல ஆண்டுகள் கடந்தும், மகப்பேறு என்னும் மகத்தான நிலையை எட்ட இயலாத தம்பதிகள், ஆதரவற்ற குழந்தைகளின் இல்லங்களை நாடி, குழந்தைகளைத் தத்தெடுக்கும் முறை பெருகி வருகிறது. அதிலும், ஆண் குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகளைத் தத்தெடுப்பதில் முனைப்புக் காட்டி வருவது ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது.

இந்தியாவில் கடந்த 2015-2018-ஆம் ஆண்டுகள் வரையிலான கணக்கெடுப்பின்படி, ஆதரவற்ற இல்லங்களில் வசித்து வந்த 11,649 குழந்தைகள், இதுபோன்ற தம்பதிகளால் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில், குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், ஆண் குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதே ஆகும். அதிலும், நகர்ப்புறங்களில் வசிக்கும் தம்பதியினர், இல்லாள் இல்லாத இல்லம் பாழ் என்ற பொன்மொழிக்கேற்ப பெண் குழந்தைகளின் மகத்துவத்தை அனுபவ ரீதியாக உணர்ந்து கொண்டமையால், அவர்களுக்கே முன்னுரிமை அளிக்கின்றனர். 

இந்த 3 ஆண்டு காலகட்டத்தில் தத்தெடுக்கப்பட்ட 11,649 குழந்தைகளில் 6,962 பேர் பெண் குழந்தைகள்; ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை 4,687-ஆக உள்ளது. குறிப்பாக, 2015-16-இல் தத்தெடுக்கப்பட்ட 3,011 குழந்தைகளில் 1,855 பேர் பெண் குழந்தைகள். இதேபோன்று, 2016-17-ஆம் ஆண்டு காலகட்டத்தில் தத்தெடுக்கப்பட்ட 3,210 குழந்தைகளில் 1,915 பேர் பெண் குழந்தைகள். இவைதவிர, 2017-18, 2018-19 காலகட்டங்களில் தத்தெடுக்கப்பட்ட 3,276 மற்றும் 2,152 குழந்தைகளில் முறையே 1,943 மற்றும் 1,249 பேர் பெண் குழந்தைகளே ஆவர்.

ஒட்டுமொத்தமாக, குழந்தைகள் தத்தெடுப்பு விகிதாசாரத்தில், ஏறத்தாழ 60 சதவீத இடத்தை பெண் குழந்தைகள் ஆக்கிரமித்துள்ளனர். அதிலும், குறிப்பாக கடல்கடந்து வசிக்கும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ.), நமது நாட்டின் கலாசார, பாரம்பரிய விழுமியங்களின் மீது நாட்டம் கொண்ட அயல்நாட்டுத் தம்பதியினர் ஆகியோரால் தத்தெடுக்கப்பட்ட பெண் குழந்தைகளின் விகிதம், உள்நாட்டைக் காட்டிலும் அதிகமாக 69 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் சட்டப்பூர்வமாக வெளிநாடுகளுக்குத் தத்துக் கொடுக்கப்பட்ட 2,310 குழந்தைகளில், 1,594 பேர் பெண் குழந்தைகள் என மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நல அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதன் மூலம் சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான மக்களின் பார்வையில் எதிர்பார்ப்பையும் கடந்து மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பது தெளிவாகிறது.

சமூகத்தில் ஆண்களுக்கு நிகராக பல்வேறு துறைகளில் பெண்கள் நிகழ்த்திவரும் சாதனைகளே இதுபோன்ற மாற்றங்களுக்கு வித்திடுகின்றன. இதன் மூலம், பெற்றோரால் கைவிடப்பட்ட கள்ளம் கபடமில்லாத பச்சிளங்குழந்தைகள், குடும்பம் என்னும் நல்லறத்தில் காலடி எடுத்துவைத்து, எதிர்கால வாழ்க்கையைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள இந்த வாய்ப்புகள் உதவி புரிகின்றன. 

மேலும், தாயின் அரவணைப்புக்காக ஏங்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு இதன் மூலம் நல்ல விடிவுகாலம் ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது. அதேசமயம், சமூகத்தில் நிலவும் சட்டவிரோத செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு, அவர்களின் எதிர்காலச் சூழல் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள வேண்டியது அவசியம். ஒட்டுமொத்தத்தில் உலகம் எனும் ஓவியம், பெண்மையினால் மேன்மேலும் எழில் பெறட்டும்!

No comments:

Post a Comment

NEWS TODAY 01.10.2024