நல்ல சமயமிது, நழுவ விடாதீர்!
By சா. பன்னீர்செல்வம் | Published on : 06th April 2019 01:47 AM |
dinamani
திமுக முதன்முறையாகத் தேர்தல் களம் கண்ட 1957-இல், கார்டு அரையணா, கவர் ஓரணா, பட்டாளச் செலவு குறைந்தால் என விளம்பரப்படுத்தியவர்கள் திமுக-வினர். 1952-57 எனும் முதலாவது ஐந்தாண்டுத் திட்டத்துக்கான மொத்த மதிப்பீடு ரூ.2,500 கோடி. அதில் ராணுவத்துக்கான ஒதுக்கீடு ரூ.200 கோடி. திமுக ஆட்சிக்கு வந்தால் ராணுவத்துக்கான ஒதுக்கீட்டைக் குறைத்து அதன் வழியாக அஞ்சலட்டை மூன்று பைசாவுக்கும் அஞ்சலுறை ஆறு பைசாவுக்கும் கிடைக்கச் செய்வோம் என்பதுதான் திமுக எழுப்பிய முழக்கத்தின் பொருள்.
மாநிலக் கட்சியான திமுக, தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகள் என அனைத்தையும் கைப்பற்றினாலும் மத்திய அரசின் அதிகாரத்துக்குரிய ராணுவச் செலவு, அஞ்சலட்டை, அஞ்சலுறை ஆகியவற்றின் விலையைக் குறைக்க முடியுமா எனச் சிந்திக்கத் தெரியாதவர்களாகத் தமிழக வாக்காளர்களை எடை போட்ட கட்சிதான் திமுக.
1967 தேர்தல் அறிக்கையில் ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்னும் வண்ணமயமான வாக்குறுதியை திமுக-வினர் வழங்கினர். மக்களும் அதை நம்பி வாக்களித்தனர். தேர்தல் முடிந்து ஆட்சியைக் கைப்பற்றியோர் மூன்று படி லட்சியம்; ஒரு படி நிச்சயம் எனக் கூறி தாங்கள் அளித்த வாக்குறுதியைச் செல்லாததாக்கி விட்டார்கள்.
மேலும் தேர்தலின்போது, பக்தவத்சலம் அண்ணாச்சி பருப்பு விலை என்னாச்சு? கக்கன் அண்ணாச்சி கருப்பட்டி விலை என்னாச்சு என முழக்கமிட்டனர். அதாவது காங்கிரஸ் ஆட்சியில் அனைத்துப் பொருள்களின் விலையும் கூடிக் கொண்டிருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்துப் பொருள்களின் விலையையும் மிகவும் குறைத்து விடுவோம் என்பதுதான் அந்த முழக்கத்தின் பொருள்.
1966-இல் ஒருநாள். முரசொலிப் பத்திரிகையின் முதல் பக்கத்தில் எட்டுப் பத்தித் தலைப்புச் செய்தியாக, திமுக ஆட்சிக்கு வந்தால் அண்ணா போடும் முதல் கையெழுத்து விலைவாசியைக் குறைக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும் என்றிருந்தது. ஆனால், அண்ணா மட்டுமல்ல, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என எந்த முதல்வரும் அப்படியொரு கையெழுத்தை இன்றளவும் போடவில்லை. போட முடியாது. அதாவது, விலைவாசி என்பது முதலமைச்சர் போடக்கூடிய ஒரு கையெழுத்தால் குறையக் கூடியதல்ல என்பதைப் புரிந்துகொள்ள முடியாதவர்களாக தமிழக மக்களை எடை போட்டு அரசியல் நடத்தியவர் கருணாநிதி.
அறுபதாண்டுகளுக்குப் பிறகும் அதே மனப்பான்மையில்தான் இன்றைய திமுக தலைமையும் இருக்கிறது. தற்போது நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் கல்வியைப் பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டுமென அதிமுக தொடர்ந்து வலியுறுத்தும் எனவும், இந்திய நாட்டின் அலுவல் மொழிகளில் ஒன்றாகத் தமிழையும் அறிவித்திட வேண்டுமென மத்திய அரசை அ.தி.மு.க வலியுறுத்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில், மத்தியில் இணை ஆட்சிமொழியாக தமிழை அங்கீகரிக்கத் தேவையான சட்டத்திருத்தங்கள் செய்யப்படும் எனவும் கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரப்படும் எனவுமாக அமைந்திருக்கிறது.
ஆனால், அகில இந்தியாவுக்குமான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் பள்ளிக் கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறது. பாஜகவின் நிலைப்பாடு தெரியவில்லை. திமுக, அதிமுக இரண்டும் ஏற்கெனவே மத்தியில் ஆளும் கூட்டணி அரசில் இடம்பெற்றிருந்த காலங்களில் மேற்கொண்ட முயற்சி என்ன? ஒரே ஒரு முறையாவது இவை பற்றிய தீர்மானங்களை நாடாளுமன்றத்தில் முன்மொழிந்து, அவை தொடர்பான விவாதங்கள் நடைபெறச் செய்திருக்கிறார்களா? தமிழை மட்டும் மத்திய இணை ஆட்சி மொழியாக்க திராவிடச் சகோதரர்களே உடன்படமாட்டார்கள். மற்றவர்கள் எப்படி ஒப்புக்கொள்வார்கள்?
இதிலே கொடுமை என்னவென்றால், தமிழகத்தில் அனைத்து நிலைகளிலும் தமிழை பயிற்று மொழியாக்குதல் குறித்து இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் ஒரு வார்த்தைகூட இல்லை. தமிழ்நாட்டில் மழலையர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரையும் ஆங்கிலப் பயிற்று மொழியை வலுப்படுத்திக் கொண்டு மத்தியில் தமிழை ஆட்சிமொழியாக்குவோம் என்பது போலித்தனத்தின் உச்சம். உதட்டளவு உத்தரவாதம்.
மூன்று படியும் விலைவாசிக் குறைப்பும் சாத்தியப்படாது என்பது மக்களுக்குத் தெளிவாகிவிட்டதால், இலவசமாக தொலைக்காட்சி, மிக்ஸி, கிரைண்டர், எரிவாயு அடுப்பு எனப் பட்டியல் நீள்கிறது. அத்துடன் கடன் தள்ளுபடியும் சேர்ந்து கொண்டது. தற்போது ரொக்கப் பணம் என்பதும் சேர்ந்து கொள்கிறது. சட்டப்படி லஞ்சம் வாங்குதல் மட்டுமல்ல, லஞ்சம் கொடுப்பதும் குற்றமாகும். பணமோ, பொருளோ கொடுத்து வாக்கு கேட்பதும் குற்றம்.
எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் இன்னின்ன பொருள்கள் இலவசமாகத் தருவோம். இவ்வளவு பணம் தருவோம் என்பது லஞ்சம் ஆகாதது எப்படி? சொந்தப் பணத்தைக் கொடுப்பது லஞ்சம். அரசுப் பணத்தைக் கொடுப்பது லஞ்சமில்லை என்பது என்ன நியாயம்? மக்கள் கொடுக்கும் வரிப் பணத்தை மக்களுக்காகச் செலவிடுதல் முறைதானே எனலாம். பசியோடிருக்கும் ஒருவனுக்கு உண்பதற்கான மீனைக் கொடுப்பதை விடவும் அவனுக்கு மீன்பிடிக்கும் தொழிலைக் கற்றுக் கொடுப்பது மேலானது என்பது ஜப்பானியப் பழமொழி. விவசாயத்தை லாபகரமாக்கும் வகையில் விவசாய இடுபொருள்கள் நியாயமான விலையில் கிடைக்கச் செய்தல், விவசாய விளைபொருள்களுக்கு லாபகரமான விலை கிடைக்கச் செய்தல் வாழ்வாதாரமாகும். வருவாய்க்கு வழியின்றித் தவிக்கும் எளியோர்க்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் என்பவற்றால் மக்கள் தமது சுய வருமானத்தில் வாழும்படியாகச் செய்தலே லஞ்சமல்லாத ஆக்கப்பூர்வமான மக்கள்நலப் பணியாகும்.
அதற்கு மாறாக, எங்களுக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்தினால் அரசு செலவில் இன்னின்ன பொருள்களை வழங்குவோம். இவ்வளவு பணமாகவும் தருவோம் எனல் லஞ்சமாகாது என்பது சட்டபூர்வமான மோசடியன்றி வேறல்ல. இதைவிடவும் மோசமான ஒன்றை முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். அது தற்போது அனைத்திந்தியப் பெருநோயாகப் பரவியிருக்கிறது. அதாவது, அனைத்து விவசாயிகளின் அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்தல் ஆகும். வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துதல் என்பது மனிதனின் அடிப்படையான நாணயத் தன்மையாகும். அந்த நாணயத் தன்மையை அழிப்பதன் மூலம் ஒருவரை மனிதத்தன்மையற்றவனாக்குதலை மக்கள்நல அரசே செய்யலாமா?
கடனைத் தள்ளுபடி செய்யலாம். கனமழை, வெள்ளம், வறட்சி என ஏதேனுமொரு காரணத்தால் விவசாயம் பாதிக்கப்பட்டால், பாதிக்கப்பட்டோருக்கு பாதிப்புக்கேற்ற அளவில் இழப்பீடு வழங்கலாம். இழப்பீடு என்னும் முறையில் அவர்களின் கடன்களைத் தள்ளுபடி செய்யலாம். அதை விடுத்து, அனைத்து விவசாயிகளுக்கும் அனைத்துக் கடன்களும் தள்ளுபடி என்பது ஒட்டுமொத்த சமூக மனப்பான்மையைச் சீரழித்தலன்றி வேறல்ல.
விவசாயமல்லாத வேறு காரணங்களுக்காக, அதாவது வீடு கட்டுதல், திருமணம் செய்தல், சுய தொழில் தொடங்குதல் என்னும் முறையில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அவதிப்படுவோருக்கு என்ன வழி? இன்னொன்று, அனைத்து விவசாயிகளுக்கும் அனைத்துக் கடன்களும் தள்ளுபடி என்பதால், கடன் தள்ளுபடியை எதிர்பார்த்து விவசாயத்தின் பெயரால் அரசு வங்கியில் குறைவான வட்டிக்குக் கடன் வாங்கி, அதனைக் கூடுதல் வட்டிக்கு விடுதல் வேறு வகையில் கூடுதல் வருவாய்க்கான தொழில் செய்தல் என்றிருப்போர்க்கும் கடன் தள்ளுபடியாதல் என்ன நியாயம்? குறைவான வட்டிக்குக் கடன் வாங்கி, அது கொண்டு கூடுதல் வருவாய் ஈட்டுதல் தவறல்ல. அவர்களுக்கும் கடன் தள்ளுபடியாதல் என்ன நியாயம் என்பதே கேள்வி.
இப்படியாக அவசியமற்ற இலவசங்களுக்கும் கடன் தள்ளுபடிக்குமான செலவு எவ்வாறு ஈடுகட்டப்படுகிறது? டாஸ்மாக் வியாபாரத்தின் வழி ஈடுகட்டப்படுகிறது. அரசின் மதுபான விற்பனை காரணமாக சம்பாதிக்கின்ற ஆண்கள் மட்டுமல்ல, சம்பாத்தியம் இல்லாத ஆண்கள், சிறுவர் என அனைவரும் குடிகாரர்களாகிறார்கள். அதன் விளைவுதான், நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் கொடுமை முதலிய குற்றச் செயல்கள் ஆகும். குற்றச் செயல்கள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.
இலவசங்கள், கடன் தள்ளுபடி எனவும், அவற்றுக்காக மதுவிற்பனை என்பதும், அதன் விளைவாகக் கூடுதலாகின்ற குற்றச் செயல்கள் எனவும் ஒட்டுமொத்த சமூகச் சீரழிவுக்கும் வழி வகுத்தவர்கள் யார்? அவர்களை மீண்டும் தலையெடுக்க விடலாமா என்பது பற்றி நிதானமாகச் சிந்தித்துச் செயல்பட வேண்டிய நேரமிது. குறிப்பாக, இலவசங்களை எண்ணி பெண்கள் மயங்காமல், வருங்கால தலைமுறையினர் நன்மக்களாக வாழ வேண்டிய அவசியத்தை மனதில் கொண்டு செயல்பட வேண்டிய நேரமிது. நல்ல சமயம் இது. நழுவ விடலாமா? கட்டுரையாளர்:
தலைமையாசிரியர் (ஓய்வு)
No comments:
Post a Comment