Saturday, October 19, 2019


நீட் ஆள்மாறாட்டத்தால் காலியான இடங்களுக்கு மாறுதல் கேட்ட தனியார் மருத்துவ மாணவர்கள் மனுக்கள் தள்ளுபடி


மதுரை

நீட் ஆள்மாறாட்டத்தால் தேனி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஏற்பட்டுள்ள 2 எம்பிபிஎஸ் சீட்களை கேட்டு தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் தாக்கல் செய்த மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


தேனி அரசு மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த சென்னையை சேர்ந்த உதித்சூர்யா, தருமபுரி அரசு மருத்துவமனையில் எம்பிபிஎஸ் சேர்ந்த இர்பான் ஆகியோர் நீள் தேர்வில் ஆள்மாறாட்ட செய்ய வழக்கில் சிக்கினர். இதனால் இவ்விரு இடங்கள் காலியாக உள்ளன.

இந்நிலையில் மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் சேர்ந்துள்ள கோவில்பட்டியைச் சேர்ந்த சாணக்கியா, யாமினி ஆகியோர் தேனி, தருமபுரி அரசு மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள எம்பிபிஎஸ் இடங்களில் தங்களுக்கு இடமாறுதல் வழங்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர், மருத்துவ மாணவர் சேர்க்கையை ஆகஸ்ட். 31-க்குள் முடிக்க வேண்டும். பிரச்சினைகள் எழுந்தால் செப். 30 வரை சேர்க்கை நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த கால அவகாசத்துக்குப் பிறகு எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு உத்தரவிடுவது உச்ச நீதிமன்ற உத்தரவை மீறுவதாகும். எனவே மனுதாரர்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024