Wednesday, October 30, 2019

நீட் ஆள்மாறாட்டம்: 2 மாணவர்களுக்கு ஜாமீன்; தந்தைகளின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி- உயர் நீதிமன்றம் உத்தரவு 

மதுரை 30.10.2019

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் 2 மாணவர்களுக்கு ஜாமீன் வழங்கியும் அவர்கள் தந்தைகளின் ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்தும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த பிரவீன், அவரது தந்தை சரவணன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில், "2016-ல் 12 ஆம் வகுப்பு முடித்த நிலையில், சென்னை பிரீஸ்ட் கல்லூரியில் மருத்துவக் கல்வியில் சேர்ந்தேன். பின்னர் மருத்துவக்கல்வி நடத்த பிரீஸ்ட் கல்லூரிக்கு அங்கீகாரம் இல்லை என்பதால் நீட் தேர்வு எழுதி 130 மதிப்பெண்கள் பெற்றேன்.

அரசு மருத்துவக்கல்லூரியில் சேர இந்த மதிப்பெண்கள் போதுமானவை என்றாலும், விருப்பத்தின் பேரில் தனியார் கல்லூரி ஒன்றில் 22 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை பதிவுக்கட்டணமாக செலுத்தி பயின்று வருகிறேன். இந்த நிலையில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக எவ்விதமான ஆதாரமும் இன்றி காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை ஏற்கெனவே கீழமை நீதிமன்றங்கள் ரத்து செய்துவிட்டன. ஆகவே இந்த வழக்கில் இருவருக்கும் ஜாமீன் வழங்க உத்தரவிட வேண்டும்," என பிரவீன் கூறியிருந்தார்.

இதே போல் சென்னையைச் சேர்ந்த டேவிஸ், அவரது மகன் ராகுல் டேவிஸ் ஆகியோரும் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில், "நீட் தேர்வில் 125 மதிப்பெண்கள் பெற்ற நிலையில், எனக்குப் பதிலாக வேறு ஒருவர் லக்னோவில் தேர்வெழுதியதாகவும் அதனடிப்படையில் மருத்துவக் கல்வியில் சேர்ந்ததாகவும் கூறி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நீட் ஆள்மாறாட்டம் தொடர்பான புரோக்கர் வேதாச்சலம், ரசித் பாய் தொடர்பாக விசாரித்து அவர்களைக் கைது செய்யாமல், எங்களைக் கைது செய்துள்ளனர். இந்த முறைகேட்டுக்கும் எங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ஆகவே, எங்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்," என ராகுல் டேவிஸ் கூறியிருந்தார்.

இந்த வழக்குகளை இன்று (அக்.30) விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "இந்த வழக்கில் மாணவர்கள் முக்கியக் குற்றவாளிகள் அல்ல. அவர்களின் தந்தையரின் தூண்டுதலின் பேரிலேயே தவறு நடைபெற்றுள்ளது. ஆகவே, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கப்படுகிறது" என உத்தரவிட்டார்.

ஆனால், வழக்கின் விசாரணையை கருத்தில் கொண்டு தந்தையர்களின் ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024